25. பேசுகின்ற பேரழகே!
போர் மறவர் வழி வந்த புலிப் போத்தே
புதுமைக்கு ஓளியூட்டும் பொன் நிலவே!
சீரிளமைத் திறம் வியக்கும் செந்தமிழே!
சிந்தையெல்லாம் நிறைந்திருக்கும் சீர்மனமே!
செம்மொழித் தமிழின் செழுமைச் சிகரமே!
செம்மாந்த நடைபயிலும் செருகளச் சீயமே!
புதுக்கருத்தை அள்ளிவரும் பொருட் செறிவே!
வாழ்க பல்லாண்டு வரலாற்று முடிதரித்து!
முத்தமிழிழே சித்திரமே முழு மதியே!
முக்கால் ஆண்டு உனக்கு நடந்த போது
முத்தான தமிழ் மொழி சொல்லெடுத்து
அப்பா என்று அழைத்த போது - எங்கள்
அகம் எல்லாம் மகிழ்ச்சி அலைவீசியது!
அம்மா என்று அடுத்து நீ மொழிந்த போறு
அங்கமெல்லாம் அன்பின்வலை போர்த்தியது!
தங்கமான தமிழ் எடுத்து தத்தையின் இதழ்விரித்து!
தாத்தா பாட்டி என்று எம்மை அழைத்துவிடும்
பொன்னாளை நினைத்து மனம் பூரிக்கிறது
அப்பா அம்மா எனும் அழகிய சொற்களின்
பின் அடுக்கடுக்காய்
ஆயிரம் பல்லாயிரம்
அனைத்து வகை சொற்களையும்
அள்ளி வழங்க வேண்டும் அறிவூட்டும் நிலை தோன்ற!
பிறக்கின்ற போது பிற உயிர்கள் அழுவதில்லை
மனிதன் மட்டுமே வாய் திறந்து அழுகிறான்
கண்மணி எழிலே காரணம் என்ன தெரியுõ?
மொழி பேசப்போகிறான் என்பதற்கு
முன்னோடி தான் அந்த அழுகை!
மொழி தோன்றிய பின்னேதான் மனிதக்குலம்
முன்னேறியது என்று முன்னமே உனக்கு
மொழிந்திருக்கிறேன் மகிழ்ந்திருக்கிறேன்!
செம்பவள வாய்திறந்து நீ
செந்தமிழை சிந்திய போது
சிந்தையெல்லாம் மிகுந்து மேனி
சிலிர்த்து பூரித்து வந்திருக்கிறது!
பேசிய உன் பேச்சுக் கேட்டு
பேச்சுலகில் சிறந்திருந்த
பேராளர்கள் உள்ளத்தில்
பெருமைமுகம் காட்டி நின்றனர்
உலகம் தோன்றிய நாளிலிருந்து
உணர்ச்சிபூட்டி பேசியவர்கள்
உலகம் முழுவதும் ஒரு கோடி இருந்தனர்
உரிமைக்கு போராட ஊமைகளை
ஊக்குவித்து பேசவைத்து போராடினர்
அரசியல், கலை, அறிவியல் வாழ்வியல்
அனைத்தையும் விளக்கிப் பேசினர்
உயிர்களின் ஒவ்வொரு அசைவும்!
உரைத்து உணர வைத்து தெளிவூட்டினர்.
உடலின் இயக்கத்தையும் மாற்றத்தையும்
உலகோர்க்குச் சொல்லி உவகையூட்டினர்!
பேசப்பேச மனிதனின் பேரறிவு
பெருகி துறைகள் பல வளர்ந்தது
ஈராயிரம் ஆண்டு முன்னர்
ரோமாபுரியில் ஒரு மாமேதை
சண்ட மாருதம் செய்தான்
சிந்தனையைத் தூண்டுகின்ற
சீராளன் சிசரோவை தம்
சிந்தை மகிழ்ந்து வாழ்த்திடுவர்
அரசியல் கல்வி வாழ்வியல் என
ஆயிரமாயிரம் அருமைத் தத்துவத்தை
அள்ளியிறைத்து உலகுக்கு
அறிவூட்டினான்
யுத்தகளப் பிரசங்கம் என்று
கிரேக்க ரோமானியத்தின்
போர்த்தளபதிகளின் போர்ப் பேச்சை
வண்ணமேற்றி காட்டுகிறார்
வரலாற்று எழுத்தாளர் வெ.சாமிநாத சர்மா!
பாம்பே சல்லாவின் பண்பட்ட முழக்கத்தை
பார் உணர பறை சாட்டுகிறார்.
கிரேக்கப் போர் தளபதிகளின்
கீர்த்தி சொல்லி வாழ்த்துகிறார்
செல்லும் (வழி) யெல்லாம் ரோம் என்று
சீர்நடை போட்டு எதிகலை சிதறடித்த
சீர்மறவன் ஜுலியஸ் சீசரின் திறத்தை
சிந்தை மகிழ எழுதி மகிழ்கிறான்
சேக்ஸ்பியர்
சென்றேன் கண்டேன் வென்றேன் என்று
சீசரின் வெற்றியை சிகரத்தில் வைக்கிறான்
ஆற்றலாளன் மார்க் அந்தோணியின்
ஆற்றல் நிறைப்படைப் பேச்சால்
ஆர்ப்பரித்த படை வீரந்தனை
அருமையாய் எழுதுகிறார் அருமைச் சர்மா
அகஸ்டஸ் சீசரின் ஆற்றலையும் அள்ளித்தந்து
அங்கமெல்லாம் சூடேற்றுகிறார்
கெய்சரின் போர்வெறிப் பேச்சு
முதல் உலகப் போரை உருவாக்கியது
சிறு குதிரைப் படை மூலம் குவலயத்தை
தனக்கருகில் கொண்டு வர ஆற்றல்மிகு
அலக்சாண்டரின் பேச்சு அடிப்படையானது.
சிறுவனென இகழ்ந்தார்கள் எதிரிகளை என
இதயம் கொதிக்கிறது அவர்களை நான்
வெல்லாது போவேனேயானால்
மாங்குடி மருதன் என்னை பாடாதொழிக என
சூளுரைத்தான் பாண்டியன் நெடுஞ்செழியன்
எதிரிகளை தூள் தூளாக்கி சூளுரையை நிறைவேற்றினான்
வெஞ்சினப் பேச்சு வெற்றியை தந்தது
நான்கரையடி உயரமுள்ள நெப்போலியன்
குதிரைமீதமர்ந்து நடைபோட்டு
குருதியில் வீரமூட்டும் பேச்சால்
சூடேறிய பிரஞ்சுவீரர்கள்
அய்ரோப்பாவை இருபதாண்டுகள்
அனல்மூட்டி அடிமைப்படுத்தினர்
இனியவனாய் வளர்ந்து வந்த
ஹிட்லர் எனும் செர்மானியனின்
இயல்பான இடி முழக்கப் பேச்சு
இதயத்தில் வெறியேற்ற இரும்பு மனிதனாக்கியது.
இரண்டாவது உலகப் போர் தொடங்கியது
உலகை தன் உள்ளங்கைக்குள்
கொண்டுவரத்துடித்தான்
உரைகளால் வீரர்களுக்கு உரமூட்டினான்
ஆயினும் உலகைவிட்டு ஒழிந்தே
போனான்
மதவாதிகள் பேசினதால்
மடமையே விளைந்தது
மாசுமனம் படைத்தோர் பேசினர்
மக்களை மாய்த்து அழித்தது
மாமேதைகள் பேசினர்
வளர்மாற்றங்கள் தோன்றியது
விஞ்ஞானிகள் பேசினர்.
வாழ்வில் வளம் வானைத் தொட்டது.
ஊமைகள் பேசினர்.
உண்மையின் மீது போர்தொடுத்தது
நல்லோர் பலர் பேசினர்
நாடு நலம்பெற்று மகிழ்ந்தது
ஊராரும் உலகோரும் பேசினர்
உண்மையும் பொய்யும்
நன்மையும் தீமையும்
நாளும் நாளும் நடைபோடுகிறது
நாடாள பேசச் சொல்லும்
பாராளுமன்றத்தினரில்
நலம் தர பேசுகின்ற
நல்லவர்களும் உண்டு
நாளும் நாளும் நஞ்சுக்கொடியை
நட்டுவைத்து நாசம் செய்வோருமுண்டு
தாய் பேசும் தாலாட்டு மொழி
தந்தை காட்டும் பாசமொழி
உறவுகள் கூறும் உற்சாக மொழி
நண்பர்கள் கூறுகின்ற நேசமொழி
மதலை பேசும் மழலை மொழி
மனம் திறந்து பேசும் மாசற்ற மொழி
ஆசைகொண்ட பருவத்தில் பேசும்
அகமகிழும் இன்பக் காதல் மொழி
இதயமுள்ளோர் வழங்கும் வாஞ்சைமொழி
இனிதானோர் பேசுகின்ற இசை மொழி
இதயமற்றோர் பேசுகின்ற வசைமொழி
கிளிப் பேச்சு கிள்ளை மொழி
தத்தைகள் பேசுகின்ற செல்லமொழி என
கவிஞர்கள் கனிச்சுவை யூட்டுவர்
பெண்கள் கூடிப் பேசினால்
பிரச்சனைகள் தோன்றுமென்பர்
புத்தர் பேசினார் புண்ணான கொள்கைகள்
புதைந்து இங்கே புதுமைகள் தோன்றியது
இத்தாலிக் கொடுமையர்களை
எதிர்த்து ஏசுமகான் பேசினார்
இஸ்ரேலியர்களின் வாழ்க்கை வேதமானது.
தீமைகளை அழிக்கும் தியாகத்தை வலியுறுத்தி
நபிகள் பேசினார். நாடுகள் பல அந்த
நல்லவர் காட்டிய வழியில் பயனிக்கின்றன!
உத்தமர் காந்தி பேசினார்.
புதியதோர் முறை ஒன்று
உறங்கிய இந்தியாவை விழித்தெழச் செய்தது
விலை அதிகமின்றி விடுதலை வாங்கித் தந்தார்!
தந்தை பெரியார் பேசினார்
தமிழர் நிலை தலை நிமிர்ந்தது!
அடிமைகள் எழுந்து உரிமை பெற்றனர்
சாதிமதம் தலை சாய்ந்தது
ஆதிக்க வாதிகள் அடங்கினர்.
அறிஞருள் அறிஞர் அண்ணா பேசினார்
ஆயிரமாயிரம் இளைஞர்கள்
ஆற்றலாளர் ஆகி உயர்ந்தனர்
எழுத்தாளர் பேச்சாளர் இலக்கியவாதியென
ஏராளமாய் பெருகி வளர்ந்தனர்
அனைத்து வகை செய்திகளையும்
அள்ளியிறைத்து அறிவூட்டினார்.
அனைத்துலக கருத்துகளையும்
அறிவார்ந்த தத்துவங்களையும் நமது
அறிவிலேற்றி தெளிவூட்டினார்
பகுத்தறிவு பண்பாடு சமத்துவமென
பல்துறை பொருள்தந்து பயன் கூட்டினார்
கன்னல் தமிழ் சுவையெடுத்து கலைஞர்
பேசினார்
கலைமணம் காற்றில் கலந்து பரந்தது.
கவிதை தமிழ் நமது வீட்டில் நிறைந்தது.
கடின இலக்கியங்கள் கனிசுவையானது
நாவலர் நெடுஞ்செழியன் பேசினார்
நல்ல தமிழும் குறளும் நாட்டில்
தவழ்ந்தது!
பேராசிரியர் அன்பழகன் பேசினார்
தமிழின் பெருமைகள் தலைநிமிர்ந்தது.
தேவர் திருமகன் பேசினார்
திரண்டிருந்த தமிழர் கூட்டம்
அவர் உரைக்குத் தக்கவாறு
உருமாறி தினவெடுத்த தீரர்களாயினர்
சொல்வளம் குறித்து வள்ளுவன்
சொன்னத பொன்போன்ற குறள்மொழிகள்
சோர்வகற்றும் ஊட்டச்சத்து என்பேன்
சொல்வல்லன், சோர்விலன் அஞ்சுதன்
அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அறிது
இனிய உளவாக இன்னா கூறல்
கனியிருந்தப்ப
காய் கவர்ந்தற்று
சொல்லுக சொல்லை பிறிதொருசொல்
அச்சொல்லை வெல்லும் திறனறிந்து
இதுபோன்ற இன்னும் பலகுறள்
சொல்லும்
சொல்வன்மையால் உலகை
வென்றவருண்டு
குறள் வழங்கும் சொல்வன்மையால்
குன்றேறி புகழடைந்தோரும் உண்டு!
தமிழ்த் தென்றல் திரு வி க பேசினார்
தமிழ் தண்ணிலவின் குளிரானது!
பெண்ணினம் பெருமையுற்றது!
தொழிலாளர் தோள் உயர்த்தினர்!
திமுக தோழர்கள் பேசினர்
திசையெங்கும் தமிழ் மணம் கமழ்ந்தது
பொதுவுடமைச் சிந்தனை
பொன்னொளி வீசியது
பகுத்தறிவு நெறியில் இளைஞர்களை
பற்று வைத்து பயன் விளையச் செய்தது
அறிவுலகச் செய்திகளில் அலை பரவியது!
மாவீரர் நாளில் பிரபாகரனின்
பேச்சை உள்வாங்கி இனம் காக்க
உயிர்தரும் வீரர்களை போற்றுவோம்
அறிவியல் பூத்த இந்த உலகில்
அணுவில் புதுமைகள் நிகழும் நாளில்
அடிமையாய் நடத்தப்பட்ட
ஆதிநாள் நாகரிக இனத்திலிருந்து
அரிமாவென ஓர் இளைஞன் பேசினான்
ஆர்த்தெழுந்து போரிடும் ஆற்றலை
அருமைத் தமிழ் இளைஞர்கள் பெற்றனர்
ஆணோடு பெண்ணும் பாயும் வேங்கையாயினர்
சங்ககால உணர்வில் சற்றும் சோராமல்
சாவை விரும்பி போரிட்டனர்
அறநெறியை அணுவும் மறக்காமல்
போர் நெறியைச் சற்றும் புறந்தள்ளாமல்
போரிட்ட ஈழத்துப் புலிகளை வாழ்த்துவோம்.
நான் படித்த நூல்களின் பொருட்செறிவை
புத்துலகம் கண்ட புதுமனிதன் எனும் பெயரில்
நூலாக உருவாக்கி வெளியிட்டேன்
உலகை சுற்றி வந்து விண்வெளியில்
பறக்கின் விஞ்ஞான மனிதனைப் படைத்து
பனுவலாக வெளியிட்டு பரவசமடைந்தேன்
நாடறிந்த பேச்சாளர் நல்ல எழுத்தாளர்
ஆழ்ந்த படிப்பறிவு திருவிளக்கு
மொழிப்போர்களில் அரசியல் சட்டங்களை
எரித்துச் சிறை சென்ற தியாக மறவன்!
நாவரசு கா.காளிமுத்து அவர்கள்
அந்த நூலை வெளியிட்டு ஆய்வுரை நிகழ்த்தினார்
ஏற்றம் தரும் பொருள் சொல்லி எழுச்சியுரையாற்றினார்
அரைமணி நேரத்தில் ஆயிரம் செய்தி சொன்னார்
நூலின் நுழைபுலத்தை நுட்பமாச் சொன்னார்
நல்ல நூலுக்கான நன்னூல்
இலக்கணம் ஆன
பத்துவகை சூத்திரம் இது என்று புகழ்ந்தார்
பாத்தமிழின் சாரதி பாரதியைக் காட்டினார்
பாரதிதாசனின் பாடலைப் பாடினார்
உவமைக்கவிஞர் சுரதாவின்
உயர்வைச் சொன்னார்
அண்ணாவின் இயல்புகளை, உழைப்பை மிக
அழகாகவே படம் பிடித்துணர்த்தினார்.
கலைஞரின் கலை உள்ளத்தைச் சொன்னார்
கவிதை ஆற்றலை வியத்துரைத்தார்
கழகத்தின் உழைப்பால் தமிழ்பரவிய நிலை சொன்னார்
தமிழின் சொல்வளச் சிறப்பை உயர்வை
நம் இதயத்தில் பதிய வைத்தார்
கடலில் செல்லும் மரக்கலங்களுக்கும்
கலங்கரை விளக்கத்திற்கும்
உள்ள உறவை சுவைபடவே சொன்னார்
கரை என்றால் அழை என்றொரு
தமிழில் பொருளுண்டு என்று சொல்லி
கலங்கரை விளக்கு கலத்தை அழைக்கின்றதென்று
எடுத்துச் சொல்லி இன்பத் தமிழை
நம் இதயத்தில் பதித்து வைத்தார்
பேசுதல் என்பதற்கு தமிழில் உள்ள
தனித்தனி உணர்வு கொண்டு சொற்கூட்டத்தை
தொடராய்ச் சொல்லி நமை சொக்க வைத்தார்
பேசுதல் சொல்லுதல் பகர்தல்
ஓதுதல் உளறுதல் குளறுதல்
கதைத்தல் கத்துதல் கதறுதல்
பொழிதல் மொழிதல் நவில்தல்
முனகுதல் முழங்குதல் சாற்றுதல்
விளம்புதல் வில்லுதல் விளத்தல்
அறைதல் பறைதல் சாடுதல்
கொஞ்சுதல் கெஞ்சுதல் குலவிடுதல்
கூறுதல் குழைதல் செப்புதல்
இயம்புதல் பிதற்றுதல் இசைத்தல்
போற்றுதல் புலத்தல் களறுதல்
கரைதல் கூவுதல் அழைத்தல்
என்று இது போல் இன்னும் சொன்னார்
எழிலே கலையே எங்கள் உறவே
அப்பா - அம்மா என்றழைத்த இனிய நாவில்
இலக்கியங்கள் தவழ வேண்டும்
இயலிசை கூத்து எழில் நலம் பெற வேண்டும்
கலை அறிவியல் கல்விச் செல்வங்கள்
உன் நாவில் களி நடம் புரிய வேண்டும்
உலக மன்றங்களில் உனதறிவு
ஒளி வீசித் திகழ வேண்டும்
தாய்த்தமிழும் தன்மான உணர்வும்
தழைத்தோங்கி செழிக்க வேண்டும்.
வளர்ந்து வரும் புது உலகு உன்னால்
மேலும் புதுவகை வளம் பெற வேண்டும்
பூமி செழித்திட நாளும் நீ புதுக்கோலம் பூண வேண்டும்
அண்ணாவாக பேச வேண்டும்
அழகுத் தமிழ் உலகை ஆள வேண்டும்
இந்த தாத்தாவின் எதிர்பார்ப்பு
தண்ணீரில் எழுத்தாகாமல்
தங்கத்தில் பதித்திடுவாய் என
எண்ணிப் பார்க்கிறேன்
இதயம் மகிழ்கிறது வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு.
நெஞ்சில் ஊஞ்சலாடும் மதிமலரே!
நிலவு முகிழ்த்த நேரத்தில் நீ பிறந்தாய்
மலர் மலர்ந்த வேளையிலே நீ மலர்ந்தாய்!
மாசற்ற மகளிர்குல விளக்காக
மாண்புகள் சிறந்து திகழ வேண்டும்
என்று விரும்பும் இந்தத் தாத்தா
புகழ்பெற்ற பூ மலர்களை மாலையாக்கி
மகிழ்வோடு உன்னிடம் தருகின்றேன்
ஆமாம் எங்கள் அருமைப் பேத்தியே
எல்லா நாட்டு மங்கையரையும்
எடுத்துக்காட்ட முயல்கிறேன்.
அறிஞர் அண்ணா மனித குலத்தின் அறிவுமகுடம்
அன்பு நிலமாய் விளங்கிய அருளாளர் அன்னை மனம்
அரசியலில் ஆயிரம் புதுமை செய்தவர்
அன்றாட காய்ச்சிகளின் பிரதிநிதி ஆனவர்
ஏழைகளின் நெஞ்சில் இறைவனானார்.
இளைஞர்களின் எழுச்சிமுரசானார்
மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று அவர்
ஏழைக்கு இடர் என்றால் எரிமலையானார்
பேச்சுலகில் பெருமைக்குரியவர்
நாத இசை கொட்டும் அவரது நாவன்மை
கீதமழை பொழிந்து நம்மை கிறுகிறுக்கச் செய்யும்
வேதங்கள் அவர் பேச்சால் வெகுண்டோடும்
விதண்டா வாதங்கள் வேரறுந்து விடும்!
விரல் காட்டி எழுத்துலகிகில் விந்தைகளைச் செய்தவர்!
எழுத்தில் புதுநடை காட்டி இதயங்களைச் நெய்தவர்!
கதை சிறுகதை தொடர்கதை நாவல் என்பதோடு
கடிதம் எழுதுவதை ஒரு காவியமாக்கினார்!
நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி
சிலநாடகங்களில் நடிக்கவும் செய்தார்
அவர் எழுதிய அருமையான நாடகங்கள்
சிவாஜி கண்ட இந்துராஜ்யம் சந்திரோதயம்
நீதி தேவன் மயக்கம் ஆகியவற்றில் நடித்தார்
சிவாஜி மராட்டிய விடுதலைக்காக போராடியவன்!
மலை எலி என்று பாராட்டப்பட்டவன்!
போரில் புலியான அவன் புகழ்மிகு வெற்றி பெற்றான்.
புரந்தம் கல்யாண் என்று பல கோட்டைகளை
தகர்த்து தவிடு பொடியாக்கினான்
விருந்துக்கு அழைத்து கொல்ல முயன்ற
அப்சல்கானை கட்டியணைத்து கடினமான
புலிநகத்தால் கொன்ற புத்திசாலி
மாபெரும் வீரன் சிவாஜி மராட்டிய
அரசை உருவாக்கினான்
மகுடம் சூட்ட நல்லநாள் பார்க்க
வேதியர்களை வரச் சொன்னான்
வேதியர்கள் வந்தார்கள் வேதத்தின்
விதிகளைச் சொன்னார்கள்
பிறவியில் நீ சூத்திரன் ஆகவே
முடிசூடும் தகுதி உனக்கில்லை என்று
குண்டொன்றைப் போட்டனர்
வீரத்தில் மராட்டிய மண்ணை மீட்ட
மாவீரனுக்கு மகுடம் சூட தகுயில்லையா?
ஆமாம் என்றனர் வேதியர்கள்
பிறவியல் சத்திரிய இனமே இராசாவாக
முடியும் என்று விளக்கினர். வேதியர்கள்
வீரம் காட்டிய வீரனை வேதம் வீழ்த்தியது
ஆற்றல்மிகு அண்ணா சிவாஜியின்
மனச்சாட்சியை நண்பனாக மாற்றி
சந்திரமோகன் எனப் பெயரிட்டு
வேதத்தின் விதிக்கு வீரன்நீ
கட்டுப்பட வேண்டாம் என்று வாதிடச் செய்தார்
மனச்சாட்சியும் மன்னன் சிவாஜியும்
வாதம் செய்யும் காட்சி நாடகத்தின்
மாட்சியை விளக்குவதாக இருக்கும்.
அடிமைப்பட்ட மண்ணில் அன்னியர்கள்
ஆண்டபோது வேதம் இந்த விதியைக் காட்டவில்லை
மண்ணின் மைந்தனுக்கு மட்டும் வேத விதி சரிதானா?
வீரநண்பனே இந்த வேலையற்ற
வேதியர்களுக்கு அடிமையாகி விடாதே
என்று சந்திரமோகன் கேட்ட போது
சிவாஜியின் மனக் கலக்கமும் வேதனையும்
நம்மை வியப்பிலாழ்த்திவிடும்
வேதியர்களின் ஆதிக்கமே மக்களிடம்
மண்டிக் கிடக்கிற நிலையில்
அவர்களை மீறுவது அறிவுடையாகாது
அவர்களின் ஆதரவோடு தான்
இம்மண்டலத்தை ஆளவேண்டும்.
அவர்களின் ஆலோசனையைக் கேட்போம்
வேதியர்களை அழைத்து வேறென்ன
செய்வதென்று கேட்டான் சிவாஜி
சூத்திரனை சத்திரியனாக்கும் வித்தைகற்ற
விவேகி ஒருவர் இருக்கின்றார்
கங்கைக் கரையில் யாக யோகியாக
காகப்பட்டர் இருக்கிறார் அவரை
அழைத்து உன்னை சத்திரியனாக்குகிறோம்
வேதியரின் சதிக்கு சிவாஜி உடன்பட்டான்
காகப்பட்டர் வந்தார் யாகம் வளர்த்தார்
தங்கத்தில் பசு செய்து வேதியர்க்கு கொடுக்கச் சொன்னார்
கொடுத்தான் சிவாஜி யாக குண்டத்தின் முன்
சிவாஜியை அமரவைத்து நீர் தெளித்து
சத்திரியனாக்கி முடிசூட்டினார்
இந்த அருமையான நாடகத்தின் மூலமே
விழுப்புரம் சின்னையா கணேசன்
சிவாஜி கணேசனாக உயர்ந்தார்
பின்னாளில் பேஷ்வாக்களில் பிடியில்
மராட்டியம் சிக்கி சீரழிந்து அடிமையானது;
ஆயினும் அந்த ஆற்றல்மிகு பெரு வீரன்
சிவாஜியை பெற்று வளர்த்து வீரனாக்கிய
சிவாஜியின் தாய் ஜீஜீபாயை மறக்கமுடியாது
சீர்படவே வாழ்ந்துவரும்
பகுத்தறிவுக் குடும்பத்தின்
பண்பாடும் புது மலரென வாழ்க!
சிந்தனையாளர் வழியில்
அண்ணாவின் இன்னொரு நாடகம்
நீதிதேவன் மயக்கம் என்ற
நெஞ்சைவிட்டு நீங்காத காவியம்
கம்பரசம் எழுதி கம்பனின்
கழிசடைபாக்களை படம் பிடித்த
அண்ணாவின் அருமையான
அறிவார்ந்த நாடகம் இது
இரக்கம் எனும் பொருளிலா அரக்கன் என்று
கம்பர் தன் இராம காதையில் எழுதினார்
சொக்கவைக்கும் சொல்லாற்றல் கொண்ட
கம்பரின் காப்பியத்தை படித்த அண்ணா
அறிவுக்கு முரணான செய்திகளை கம்பர்
எழுதியதை எதிர்த்து இனமான உணர்வோடு
கம்பரசம் தீட்டி கலைமணக்கச் செய்தார்
இராவணனை இரக்கமற்ற அர்க்கன் என
இயம்புவது சரிதானா என்று வினா எழுப்பி
இரக்கம் என்றால் என்னவென்று
அடுக்கடுக்கான ஆய்வுச் செய்திகளைச் சொன்னார்
அதுமட்டுமல்ல உளவியல் ரீதியாக
உண்மைகளை எடுத்து விளக்கினார்
இராவணன் கனிந்த பக்தி கொண்டவன்
இசைவல்லுனன் வீணைக்கொடி வேந்தன்
வீரன் வேல்விழி மங்கையரின் விருப்புக்குரியவன்
நட்சத்திரக் கூட்டத்தில் நிலவென
நீந்தி வரும் பேரழகுச் சீராளன்
இமயத்தைப் பெயர்த்தெடுத்து
கைலாயத்தை ஆட்டம் காண வைத்தவன்
இசைமீட்டி இறைவனை தன்
இருப்பிடத்திற்கு அழைத்து வரம் பெற்றவன்
பத்துத்திசையிலும் புகழ்படைத்தோன் என
பாவலர்களால் பாடப் பெற்றவன்
ஆற்றல்மிகு அந்தமாமனிதனை
இரக்கமெனும் பொருளிலா அரக்கனென
இழித்துரைத்த கம்பன்மீது நீதிமன்றத்தில்
வழக்கு கொடுப்பதாக தீட்டினார் அண்ணா
நீதிதேவன் மயக்கம் நாடகத்தை
குற்றக் கூண்டின் கம்பனை நிறுத்தி
குறுக்கு விசாரனை செய்தார் இராவணன்
இராவணின் கேள்விக் கணைகளால்
கூனிக்குறுகி நின்றார் கம்பர்
கோழை இராமனை வீரன் என்றீர்
கர்ப்பிணிச் சீதையை காட்டில் விட்ட
இராமனை சீலன் என சிறப்பித்துப் பாடினீர்
என் மனைவி வண்டார் குழலியை
மண்டோதரி என்று மாற்றி எழுதினீர்
என் தங்கை முத்துநகையை
சூர்பநகை என்றீர்
பெண்ணின் மார்பறுத்து மூக்கறுத்த
மானபங்கப்படுத்திய மூர்க்கர்களை
மாவீரர்களென்று மனம் களித்தீர்
கோடுதாண்டி போன பெண்ணை
குலமங்கை என்று குதூகளித்தீர்
விரும்பியே தன்னை இந்திரனுக்கு
தந்த அகலிகைக்கு சாப விமோசனம்
தந்ததாக பராட்டுகளை பகன்றீர்
சீதையை தனிமாளிகையில் தங்கவைத்து
தம்பியின் மகளை உபசரிக்க சொன்ன
என்னை இரக்கமற்றவன் என்றீர்
இதுபோல அந்த நாடகத்தில் நிறைய
விளக்க தரும் காட்சிகள் நெஞ்சையள்ளும்
நீதிதேவனே என்வாதங்களை
வரிசையாய் நிறுத்தி வைத்து
நியாயத்தை வழங்குவீர் என்றான்
இரக்கமெனும் பொருளிலா அரக்கன் என
என்னைச் சொன்ன கம்பருக்கு
கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்
உளமாறப் பொய் சொன்ன கம்பரின்
வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டுமென்றார்.
நீதிதேவன் நெடுநேரம் அமைதியாயிருந்தார்
அப்போது நீதிதேவனின் ஆலோசகர்களான
விசுவாமித்திரன் பரசுஇராமன்
சேக்கிழார் மற்றம் சில முனிவர்கள்
இராவணனை இரக்கமற்றவன் என
கம்பர் கூறியது சரிதான் என்றனர்.
இதைக்கேட்டு விழிகள் சிவக்க
வினாக்களை தொடுத்தான்
தந்தை சொன்னார் என்பதற்காக
தாயின் தலையை வெட்டி எறிந்த
பரசுராமரா இரக்கத்தைப் பேசுவது?
கண்ணால் கதைபேசி காதலித்த பெண்ணை
கைக்குழந்தையோடு கை விட்டவர்
மேனகையையும் குழந்தையையும்
வேதனைக்குள்ளாக்கிய விசுவாமித்திரர்
இரக்கத்தைப் பற்றி பேசலாமா வெட்கன் என்றான்!
போர்களால் நாட்டை வறுமைக்குள்ளாக்கியவர்
மீண்டும் படையெடுத்துச் சென்ற நேரத்தில்
பசித்த மக்கள் களஞ்சியத்து நெல்லை
எடுத்து வந்து புசித்தார்கள் என்பதற்காக
கைக்குழந்தை உள்பட கணக்கற்றோரை
கொன்று குவித்த கோட்புலி எனும் சேக்கிழார்
இரக்கத்தைப் பேசுகிறார் என்ன விந்தை?
இதுபோன்ற கேள்விகளை தொடுத்தான்
இராவணனின் நியாயமான கேள்விகளை
நேரில் கேட்டநீதி தேவன் வியப்புடன்
இராவணனையும் மற்றவர்களையும் பார்த்தான்
என்ன நினைத்தாரோ மன்றத்தில் மயங்கி விழுந்தான்
அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்
நெஞ்சினை அள்ளுவதாக அமைந்திருந்தது.
திராவிட இயக்கக் கொள்கைகளைக் சொல்லும்
இதுபோன்ற நாடகங்களில் அண்ணாவும்
அவரது கழகத் தம்பியர்களும் நடித்தனர்
அந்த அருமை மிகு அண்ணாவின்
அருமைத்தாய் பங்காரு அம்மையார்
அவரை வளர்த்த சிற்றன்னை இராசமணி அம்மாள்
உயிர் நிறைந்த திருவே
உளம் மகிழும் அருளே
உண்மைப் புகழ்ச் சிறப்பே
உவகைக்குளிர் நிலவே
நீடுவாழ் நெஞ்ச வாழ்த்துக்கள்.
கிரேக்கம் கீர்த்திமிக்க நாடு
ஆதிகாலத்தில் இருந்தே
அறிஞர்களும் வீரர்களும்
தோன்றிப் புகழ் படைத்த மண்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
தினவெடுத்ததோள் கொண்டோர்
போர்களத்தில் வீரம் கொண்டோர்
நிறைந்த நேசமிகு பூமி
ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும்
அங்கு நடந்த வண்ணமே இருந்தது
கலைகளும் காட்சிகளும் நாளும்
அரங்கேற்றிய வண்ணம் இருந்தது
மேற்கு நாடுகளின் தாய்மண்ணாய்
விளங்கி விந்தைபுரிந்த நாடு
மத்திய தரை நாடுகளில்
முதலிடம் பிடித்தநாடும் கூட
தொழிற்புரட்சிதோன்றி உலகம்
செழிப்படைவதற்கு கிரேக்கச்
சிந்தனைகளே அடிப்படையாகும்.
வாதப்பிரதிவாதங்கள் வரலாறு
நெடுகிலும் நிகழ்தேறிய பூமி
வீரர்களை மட்டுமே பெறுவேன்
என மகளிர் சூளுரத்த மண் கிரேக்கம்.
அறிவுலகமுன்னோடிகள்
அவதரித்த மண் கிரேக்கமண்
கிப்பாகிரிட்டீஸ், பிதாகரஸ்
ஹெரொட்டோடோட்டஸ் சாக்ரடீஸ்
பிளோட்டோ அரிஸ்டாட்டிலை
உலகிற்கு தந்தவள் கிரேக்கத்தாய்
அய்ரோப்பாவின் தாயகம் என்று
அழைக்கபடும் நாடு கிரேக்கம்
ஏதன்ஸ் ஸ்பார்ட்டாட்ராய்
என நகரநாகரிகம் அரும்பியமண்!
ஆர்க்மிடீஸ் போன்ற விஞ்ஞானிகளையும்
விவேகிகளை வழங்கியதும் கிரேக்கம் தான்
தமிழ் வடமொழி இலத்தீன் கிரேக்கம்
பெர்சியம் சீனம் போன்ற அய்ந்தாறு மொழிகள் தான்
உலகின் ஆதி மொழிகளாகும்.
கிரேக்கத்தின் ஒருபகுதி மாஜிடோனியா
மாஜிடோனியாவின் மன்னன் பிலிப்
மகா அலக்சாண்டரின் தந்தை
பிலிப்பின் பெயராலேயே பிலிப்பைன்ஸ்
எனும் நாட்டின் பெயர் அழைக்கப்படுகிறது.
மகா அலக்சாண்டரின் பெயராலேயேதான்
எகிப்தில் உள்ள அலக்சாண்டிய நகர் விளங்குகிறது.
மாமன்னன் பிலிப்பின் மனைவி ஒலிம்பியா
ஒப்பற்றப் பேரழகி அறவின் பெருமாட்டி
அரசியல்கலை அறிந்த அற்புதப்பெண்
பிலிப்புடன் வாழ்ந்த ஒலிம்பியா
ஆற்றல்மிகு அலக்சாண்டரைப் பெற்றாள்
விலங்கியல் தெரிந்த விந்தைமிகு ஒலிம்பியா
ஒரு மலைப்பாம்பு உடல்சுற்ற
மஞ்சத்தில் படுத்திருந்தாள் இதை
பார்த்த பிலிப் பயந்து போனான்
மலைப்பாம்புடன் படுத்திருந்த தனது
மனைவியைப் பிரிந்து விட்டான்
மற்றொரு பெண்மீது காதல் கொண்டான்
பின்னர் ஒரு நாள் மன்னன் பிலிப்
கொல்லப்பட்டான் அதற்கு காரணங்கள்
பல சொன்னாலும் ஒலிம்பியாவும்
ஒரு காரணம் எனவ தந்தி பரவியது
தன் மகனுக்கு போட்டியாக வேறு
வாரிசு வரக்கூடாது என்று எண்ணினாள்
உலகவரலாறு எத்தனையோ
வகையில் பெண்களை பெருமைப் படுத்துகிறது
தாய்மொழி தாய்நாடு என்றெல்லாம்
பெயர் வைத்து பெருமிதம் கொள்கிறது
ஆயினும் ஒலிம்பியா போன்றவர்களே
உலகில் வாழ்ந்திருக்கிறார்கள்
மகா அலக்சாண்டரை பெற்று வளர்த்த
பெரு வீரனாக்கியவர் தான் ஒலிம்பியா.
இந்த ஒலிம்பியாவின் பெயர் தந்த
ஒலிம்யாத் தெய்வம் வாழ்வதாக
நம்புகின்ற ஒலிம்பஸ் மலை அடிவாரத்தில்தான்
கிரேக்க மக்கள் தங்கள் திறமைகளை
வெளிப்படுத்தி வெற்றி காண்பார்கள்
ஆடல்பாடல் விளையாட்டுகள் மற்றும்
கலை, மொழி, காவிய கவிதை ஆகியவற்றை
இந்த ஒலிம்பஸ் மலை அடிவாரத்தில்தான்
ஆண்டுக்கு ஒருமுறை வந்து அரங்கேற்றுவார்கள்
இன்றைய ஒலிம்பிக் போட்டிகள்கூட
இந்த ஒலிம்பஸ் மலையின் அல்லது
ஓலிம்பியா தெய்வத்தின் பெயராலேதான்
உலகெங்கும் நடத்தப்படுகின்றது.
கிரேக்க இலக்கியங்களான இலியட், ஒடிசியை
குருட்டுப் பிச்சைக்காரன் ஹோமர்
இங்கேதான் அரங்கேற்றினான்
அருமைத்தாய் ஒலிம்பியாவின்
அன்பான வளர்ப்பிலேதான்
அகிலத்தைவெல்லும் ஆற்றலினை
அலெக்சாண்டர் கைவரப் பெற்றான்
மிகச்சிறிய குதிரைப் படை மூலம் மிக
நீண்ட தொலைவில் இருந்த இந்தியாவின்
சீலம் நதிக்கரைவரை வெற்றிகண்ட
அலக்சாண்டரை பெற்று வளர்த்த
அருமைத்தாய் ஒலிம்பியாவை வாழ்த்தலாமா?
பத்தினிப் பெண் பெருமை பேசும்
பழந்தமிழ் இலக்கியங்கள்
வழிகாட்டும் வாழ்வு நெறியில்
வரலாறு சமைத்த இனத்தின்
வாசமிகு பூந்தென்றலாய்
வந்துதித்த திருமகளே வாழ்க!
கிளியோபாத்ரா
எகிப்திய அரசு குலத்தில் பிறந்த எழிலரசி, இளவரசி
ஈடில்லா அழகுடன் விளங்கிய பேரழகி
இருதம்பியரை மணந்து கொண்டான்
அடுத்துவந்த ரோமாபுரிச் சீசர் மீதும் அந்தோணி மீதும்
அளவற்ற நேசம் கொண்டாள் கிளியோ
தமிழ்நாட்டு முத்துக்களால் தன்னை அலங்கரித்தாள்
அதுபோலவே சாலமன் மனைவி ஷீபாவும்
தமிழ்நாட்டு முத்துக்களை அணிந்திருந்ததாகவும்
சேரத்து யானைத்தந்தங்களால் ஆன
மஞ்சத்தில் துஞ்சியதாகவும் வரலாறு பேசுகிறது.
டாவின்சியின் ஓவியத்தில் ஏசுவின் தாய் மனைவி, மகள்
மோனலிசாவை மறந்திட இயலாது
கன்னிமேரியை கருணைத் தெய்வமாகவே
பலகோடி பேர் தொழுது வணங்குகின்றனர்.
ஏசுவின் இனிய காதலிதான்
மகதலேனா எனும் பெண்னென்று
லிமார்டோடாவின்சியின்
ஓவியம் சொல்வதா எழுத்தாளன்
ஒருவர் இனிய நூலென்றை எழுதினார்
டாவின்சிகோட் என்று பெயரிட்டார்
டாவின்சிகோட் திரைப்படமாகவும் வந்து
ஏசுவின் மனைவியையும் மகனையும்
உலக மக்களுக்கு தெரிவித்தனர்
அறிநெறிக் கொள்கைள் பூத்த தமிழ் நிலத்தில்
ஆற்றல் நிறை எங்கள் அன்புச் செல்வன்
இதயமாறன் அவரது இணை மைதிலியின்
காதலின் செல்வமாய் மலர்ந்த கலைமலரே வாழ்க!
தமிழ்க்காவியத் தலைவிகள்
மனித வாழ்வில் அறிவு வளர்ந்து வரும் நாளில்
பண்பாட்டுச் செறிவுகள் படர்ந்து மலரும்
கலைமனமும் அறிவு நுட்பம் கொண்டவர்கள்
தலைமுறை தோறும் தமது வெளிப்பாடுகளை
படைப்புகளாக பலவித நிலைகளில் ஒருவர்
கலை, கவிதை, காவியங்கள் ஓவியங்கள்
அறநெறி கூறும் அருமையான கட்டுரைகள்
உள்ளிருக்கும் உணர்வுகளை வெளிக்காட்டும்
உடலசைவுகள், நளினம், நாடகங்கள்
கதை, கவிதை, காதல், வீரம், அச்சம், நாணம்,
கருணை, உவகை என எண்வகைசுவையின்
வெளிப்பாடுகள் காணலாம்.