தூய்மையைப் பற்றி ஆண்டாண்டு காலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது.தும்பை மலரைப் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக சொல்லுவார்கள். வாழ்கின்ற வீடு கூடாக இருந்தாலும் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்பார்கள்.
கந்தையானாலும் கசக்கிக்கட்டு என்று உடை தூய்மையுடன் இருக்க வேண்டுமென்று ஓதி உணர்த்தினார்கள். உடலில் இயற்கையாகவே வியர்வையால் சேரும் உடல் அழுக்குகளை அகற்ற பல்வேறு வழிமுறைகளை உருவாக்கி உடல் தூய்மையை உறுதி செய்தார்கள்.
அரப்பு, சீயக்காய், கண்மாயின் கரம்பை மண் ஆகியவற்றால் உடல் அழுக்கை உருக்கி அடித்தார்கள். ஆதிநாட்களில் வேப்பங்குச்சி, கருவேலங்குச்சி, நாயுருவி வேர்களால் பல்லை சுத்தப்படுத்தி பலமுள்ளதாக ஆக்கினார்கள்.
உடல் அழுக்குகளில் ஒரு கடவுளை உருவாக்கினார்கள் என்பதற்கு ஒரு புராணம் சான்றாக சாட்சியமளிக்கிறது. ஆம் மூலமுதல் கடவுள் என்று வைதிகர்களால் வணங்கப்படும் வினாயகர் ஒரு அழுக்கு உருண்டையில் உருவானதாக வினாயக புராணத்தில் விளக்கப்படுகிறது.
வினாயகரின் தாய் எனச் சொல்லப்படும் பார்வதி ஒரு நாள் தடாகத்தில் நீந்தி குளிக்க விரும்பினார், ஆனால் காவலுக்கு தனது உடலில் இருந்த அழுக்கை திரட்டி ஓர் உருவத்தை உருவாக்கித் தடாக கரையில் காவலுக்கு வைத்துவிட்டு குளிக்கத் தொடங்கினார். அப்போது அங்கு வந்தார் பார்வதியின் கணவர் பகவான் பரவசிவம், தண்ணீரில் நீந்தும் தனது சக தர்மினியின் அழகை காணத் துடித்தார். காவலுக்கு நின்ற பிள்ளை, யாரெனத் தெரியாது தடுத்தான். என்னைத் தடுக்க இவன் யார் என்று வாளெடுத்து அந்தப் பிள்ளையின் தலையை வெட்டி வீசினார். அப்போது குளித்தெழுந்து வெளிவந்தார் பார்வதி. தன் பிள்ளை தன் தணவரால் வெட்டி வீசப்பட்டதை அறிந்து வேதனையடைந்தார், வெம்பி அழுதார்.
ஈசனின் இதயம் இளகி, வெட்டிய தலையைத் தேடினார், கிடைக்கவில்லை. தன் துணைவியின் சோகம் தீர்க்க அங்கு மேய்ந்து கொண்டிருந்து வெள்ளை யானையின் தலையை வெட்டி தலையற்ற அந்தப் பிள்ளையுடன் பொருத்தினார். அந்த அழுக்கில் உருவான கடவுளின் உருவத்தை சாணத்தில் செய்து வணங்குவது இங்குள்ள பக்தர்களின் வழக்கமாகும்.
சாணத்தை சாமியாக, கடவுளாக, வாழ்விற்கு வழிகாட்டும் தத்துவமாக கருதி கைகட்டி, வாய்பொத்தி நின்றால் உயர் அறிவின் நுட்பங்களால் உலகை வளப்படுத்தும் விஞ்ஞானம் எப்படி இங்கே தழைத்துச் செழிக்க முடியும்?
உடல் அழுக்கு உமையவளை பாதித்ததா என்று தெரியவில்லை. ஆனால் நாளும் குளிக்காமல் கெட்ட நாற்றத்தில் வாழ்பவர்களை, படை, சொறி சிரங்கு, பத்து என்று தொற்று நோய்கள் பற்றி பரலோகம் போனவர்கள் இங்கே பலகோடிகள் உண்டு.
உடல் தூய்மையைப் பேண வாரத்தில் இரு நாட்கள் எண்ணைக் குளிப்பு என்றும் ஆண்டுக்கு ஒரு முறை எண்ணை தேய்த்துக் குளிக்க ஒரு விழா எடுத்தும் உடலும் இடமும் தூய்மையற்று நோய்களின் இருப்பிடமானது இங்கேதான் என்பது இதயத்தைத வேதனைப் படுத்துகிறது.
தண்ணீர் தேங்கி நிற்கும் கோவில் தெப்பங் குளங்களில் குளிப்பதென்பது ஆண்டவனின் அருள் பெரும் வழி என்று அறிவுறுத்தியதால் நோய்களின் தாயாகமாயிற்று இந்த நாடு.
சுற்றுச் சூழலைப் பற்றி பெரிய அளவுக்கு பேசப்படும் நாளில் கூட ஓடுகின்ற கங்கை நதியைக் கூட மதவாதிகள் சீக்குப் பிடித்த ஆறாக ஆக்கி வருகின்றனர்.
தூய்மையின் நிலை பற்றி தெளிவாகப் பேசுவோர் எல்லாம் மனத்தூய்மையுடன் வாழ்கிறார்களா என்றால் பேரளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும். சமூகத்தில் உள்ள துறைகள் எதுவாயினும் அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை அலசி ஆராய்ந்தால் தூய்மை என்பது தொலை தூரக் காட்சியாகவே தென்படும். உழுபவனைத் தவிர உண்மையாய் உழைப்பவனைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் வாழ்க்கைக்கு பொருளீட்டும் வகையில் தூய்மைற்றவர்களாகவே திகழக் காணலாம்.
இலாபநோக்கில் செயல்படுவதே வாழ்க்கை முறையான பின்னர், தூய்மையோடு உறவாடி துன்பத்தை ஏற்க முனைவார்களா? ஆகவே எல்லாரிடத்திலும் வணிகத் தன்மை மேலோங்கி தூய்மைத் தொடர்பற்று இருப்பதைக் காணமுடியும்.
அதுமட்டுமின்றி இங்குள்ள புராணம், இதிகாசம் கலை, மொழி, காவியங்கள் இலங்கியங்கள் கதைகள் ஆகியவற்றால் போதிக்கப்பட்ட உணர்வுகளின் அன்றாட இயக்கங்கள் அனைத்தும் தூய்மையின் தூரத்து உறவாகவே உள்ளது.
உளத் தூய்மையற்ற நிலையை ஒரு முறை தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அருமையாக விளக்கினார். பூட்டுத் தயாரிக்கும் வணிகன் வானமுட்டும் மாளிகையும் படகுக்காரும் கொண்டவானாக ஆனதற்கு காரணம் உளத்தூய்மை இழந்து நம்பிக்கையற்ற நிலையடைந்தது தான் என்றார்.
பாசமுள்ள குடும்பத்திலேயே ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பெட்டிகள் அதற்கு பூட்டுகள் தன் கையில் வைத்திருக்கும் பைக்குக்கு கூட பூட்டு சாவி ஆண்டவனின் கோவிலுக்கு அங்கங்கே பூட்டுகள் மனத்தூய்மையற்ற உள்ளங்களால் தானே பூட்டு தயாரிப்பவன் கோடிக்கு அதிபதியானான்.
உளத் தூய்மையை நமது வள்ளுவன் இப்படிக் கூறினான்.
கனவிலும் இன்னாது மன்னோ மனம்வேறு
சொல்வேறு பட்டோர் தொடர்பு
மனமும் சொல்லும் வேறுபட்டவரை கனவில் கூட நினைக்காதே என்றார்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று வள்ளலார் மேலும் வலியுறுத்தினார்.
அய்யம் விட்டு உண் என்று அறிவுறுத்தி உளத்தூய்மையின் உயர்வைச் சொன்னார் அறிவரசி அவ்வைப் பெருமாட்டி.
உள்ளம் தூய்மையின் ஒளியைப் பெறுமேயானால்,
தூய்மையின் மணத்தை மனம் பெறுமானால், புறத்தூய்மை தெளிச்சி பெறும், புதுக்கோலம் கொள்ளும்.
No comments:
Post a Comment