Saturday, 5 September 2015

ஏழாம் அறிவு
கருத்துக்கள் பலவற்றையும், கண் கவர் காட்சிகளையும் மக்களின் உள்ளத்தில் பதிவு செய்யும் வகையில் பல்லாண்டுகளாக திரைப்படங்கள் பங்கெடுத்து வருவதைப் பார்க்க முடிகின்றது.
ஏடுகள், இதழ்கள், நூல்கள், இன்ன பிற ஊடகங்களைக் காட்டிலும் ஒளிரும் திரைப்படங்கள் நிறைந்து மக்களின் மனத்தில் இடம்பெற்று விடுவதைக் காணலாம்.
நாளெல்லாம் வெளிவரும் திரைப்படங்கள் நல்லதையே விளைவிக்கிறது என்று சொல்ல முடியாது என்றாலும், எப்போதாவது நல்லவையும் நிகழ்கிறது என்று ஓரளவு நிறைவு கொள்ள முடிகிறது.
ஆயிரம் பொருள்களுக்கு மேல் கண்டளித்து உலகை அகமகிழச் செய்த அமெரிக்காவின் மாமேதை தாமசு ஆஸ்வா எடிசனின் அரும்படைப்பு இந்த திரைப்படக் கருவியாகும்.
நாடுகள் தோறும் பல்லாயிரம் படங்கள் வெளி வந்து மக்கள் மனங்களில் பல்வேறு உணர்வுகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.
கலை, மொழி, கல்வி, பாவியம்,வரலாறு, அறிவியல் தொழில்நுட்பம் இன்ன பிற செய்திகளை வகை பிரித்து வாரி வழங்கும் வல்லமையைப் பெற்று வருகிறது திரைப்படத் துறை.
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என்றும் மக்களின் கனவுகளில், நெஞ்ச நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கிறது.
ஹாலிவுட்டின் சார்லி சாப்ளின், பாலிவுட்டின் சாந்தாராம், கோலிவுட்டின் கலைவாணர் ஆகியோரும் நெஞ்சில் நினைக்கத்தக்கவர்கள்.
தமிழகத்தில் திரைப்படத் துறையில் திருப்பு முனையை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா, அண்ணாவைத் தொடர்ந்து கலைஞர் உள்ளிட்ட நிறைய பேர் திரைப்படத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்தினர்.
புராண இதிகாசப் புனைவுகளை புகழ்பாடி வந்த திரைத்துறை பல புதிய வடிவங்களையும் தந்து மகிழ்விக்கிறது.
தற்போது வெளிவந்து அருஞ்செயல் (சாதனை) களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஏழாம் அறிவு திரைப்படம் ஓரிரு நல்ல செய்திகளைச் சொல்லி நம் கருத்தி(சிந்தை)ல் இடம் பெற்றிருக்கிறது.
தமிழரின் பாதுகாப்புக் கலையையும் மருத்துவ முறையையும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சீனத்தில் பரப்பிய புத்தரின் வழி நின்ற போதிதருமரை இங்குள்ள தமிழர்களிடம் தாக்கம் கொள்ள வைக்கின்ற அருமையான முயற்சி என்றே இந்தப் படத்தை பாராட்டலாம்.
நூற்றாண்டு கால திராவிட இயக்க பரப்புரைக்கு பின்னும், தம் இனம், மொழி, பண்பாடு, வாழ்வியற் செழுமைகளை இனம் கொள்ள இயலாமல் ஆரியத்தின் அடிமையாய் ஆழ்ந்து கிடக்கும் தமிழனிடம் இந்த ஏழாம் அறிவு சிறு தூண்டலை நிகழ்த்தினால் அதிலே நமக்கு நிறைவைத் தரும்.
நல்ல முயற்சி என்று நம்மை நினைக்க வைத்த இந்தப் படத்தில் இரண்டொரு சொற்றொடர்கள் நம்மை சினம் கொள்ள வைக்கிறது.
பரிந்துரையும், இட ஒதுக்கீடும் (கீஞுஞிணிட்ட்ஞுணஞீச்tடிணிண, கீஞுண்ஞுணூதிச்டிணிண) தான் திறமையாளர்களை வெளிநாடுகளுக்கு ஓட வைக்கிறது என்று வரும் சொற்றொடர் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களை உள்ளம் குமுறச் செய்யாதா?
அதுவும் இட ஒதுக்கீட்டில் கல்வி சுற்று உயர்ந்த இயக்குநரும், இடஒதுக்கீட்டின் காவல் அரணான ஓர் இயக்கத்தைச் சார்ந்த, தயாரிப்பாளரும் இதைச் சொல்வது வேதனையை விதைக்கிறது. ஆரியத் தாக்கம் இன்றளவும் எங்கும் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று ஆகும்.
மூலிகையின் ஆற்றலை அறிந்து அதை மருந்தாக மாற்றி நோய் நீக்குவது உடலில் உள்ள நரம்புகளின் இயல்வை உணர்ந்து அதை இயக்கி நலிவு நீக்கி உடல் நலம் பெறச் செய்யும் மருத்துவம் ஆகியவை தமிழன் தோன்றிய காலத்திலிருந்தே நிலை பெற்ற ஒன்றாகும்.
சிலம்பம், வர்வம் என்பது தமிழக கிராமங்களில் இன்றும் அரிதாக உயிர் வாழக் காணலாம். தொடு வர்வம், மெய்தீண்டா வர்வம், நோக்கு வர்வம், முடக்கு வர்வம் என்றெல்லாம் இருந்த மண் இந்த தமிழ் மண். அதில் ஒன்றிரண்டை இந்த ஏழாம் அறிவில் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.
இருப்பினும் இந்த படத்திற்கான வரவேற்பு தமிழனை உலகம் உற்றுப் பார்க்கிற இடத்திற்கு உயிர்த்தியிருக்கிறது என்பது மட்டும் உண்மையாகும்.
திரைப்படக் கலைஞர்களின் வாழ்வியல் ஒழுக்கமும், நிலையும், அந்த கலைஞர்கள் சிலரால் தமிழ் நிலம் பட்ட பின்னடைவும்,வேதனையும் அவர்களின் அரசியல் நுழைவால் விளைந்த அவலமும், அருவருப்பம், பண்பாட்டுச் சிதைவும், பாழ் நிலையும் பலவாறு எண்ணிப் பார்க்க வேண்டியது ஆகும்.



கல்லூரிகள் சோலையாகட்டும்
கல்லூரிகள், உயர்கல்வி பெறுகின்ற (கலா சாலை) கல்விக்கூடம் என்கிறார்கள். இளங்கலை, முதுகலை ஆராய்ச்சிக் கல்வி என்றெல்லாம் பயிற்சி தருகின்ற ஆய்வுக்கூடம் என்கிறார்கள். நாட்டு வளம் கூட்டுகின்ற நல்லறிஞர்களைத் தோற்றுவிக்கின்ற அறிவுக்கூடம் என்றும் அறைகின்றார்கள்.
துறைதோறும் ஆற்றலாளர்களை ஆக்குகின்ற அருமைமிகு கலைத்தோட்டம் என்கிறார்கள். மருத்துவர்களை, பொறியாளர்களை, அறிவுசால் அறிஞர்களை ஆற்றல்மிகு வடிவமைப்பாளர்களை அனைத்தும் போதிக்கும் ஆசான்களை படைத்தளிக்கும் பல்கலைக் கழகத்தின் கிளை என்று கல்லூரிகளைக் கூறுகிறார்கள்.
கல்லூரிக்குள் நுழைந்து வெளிவரும் போது பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.டி, எம்.சி.ஏ., எம்.பி.ஏ. என்றெல்லாம் பட்டங்களை தன் பெயருக்கு பின்னால் பெருமிதத்துடன் போட்டுக் கொள்ளும் நிலை காண்கிறார்கள்.
பெருமையும், பாரம்பரியமும் மிக்க இந்தியாவில் பல்லாயிரம் இரண்டொருவருக்கே கிடைத்தது. அதுகூட வாழ்க்கையை முன்நடத்திச் செல்லும் கல்வியாக இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளையர்கள் தந்த கல்வி அதுவும் அவர்களது மொழியில் வழங்கிய கல்வியில் தான், வேதம் தவழ்ந்து பூரித்த புகழ்மிகு புனித நாட்டின் புதல்வர்கள் புதுவாழ்வு கண்டார்கள்.
ஐரோப்பியர்கள் வழங்கிய ஆற்றல்மிகு செய்திகளும், கருத்துகளுமே இங்கு கல்விப் பொருளாக முன்வைக்கப் பெற்று இன்றுவரை கற்றவர்களுக்கு களிப்பூட்டும் வழிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
அனைத்துவகைக் கல்வி நுட்பங்களும் ஆங்கிலத்திலேயே வழங்கி சிந்தனைக்கூடம் முழுவதும் அடிமையாகி அன்னிய மொழியிடமே அடிமைப்பட்டுக் கிடக்கிறது. வாழ்க்கை, வளர்ச்சிக்கு வளத்திற்கு வழிகாட்டிய அந்த கல்வி இன்றுவரை இந்திய மக்களுக்கு 12 விழுக்காடு தான் கிடைக்கிறது. 350 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருக்கிறதாம் எல்லாரும் கல்லூரிக்கு செல்லவேண்டுமென்றால், ஏறத்தாழ மூன்றாயிரம் நான்காயிரம் பல்கலைக்கழகங்கள் வேண்டுமாம்.
இந்த முன்னூற்று ஐம்பது பல்கலைக் கழகங்களில் ஒன்றுகூட உலகத் தரத்திற்கு இணையாக இல்லையாம். காவியங்களும், கலைகளும் சான்றோர்கள் ஆசி வழங்கினாலேயே அனைத்தும் நிகழும் என்கிற கதைகள் உலவும் நாட்டில் கல்லூரி காணாதவர்களின் விழுக்காடு எண்பத்தி எட்டாகும்.
அந்த கல்லூரிக்குள் சென்று வருபவர்களின் சிந்தையை ஆய்ந்து பார்த்தால் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. கல்லூரி கல்வியின் அடிப்படையில் கற்றவனின் மனமும், நடப்பும் இருப்பதில்லை. புதுமைச் செய்திகளே கிடைக்காத தீவுப் பகுதியில் வாழ்பவர் போன்ற மனநிலையிலேயே படித்து பட்டம் பெற்றவர்கள் இருக்கக் கண்டு இதயம் அழுவதைக் காணலாம்.
மருத்துவக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்த முதுநிலை ஆராய்ச்சியில் உருவான மருந்துகளையும், முறைகளையும் கடைப்பிடித்து கடமையைச் செய்யும் மருத்துவர்களின் நிலை நமது நெஞ்சில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இல்லை.
விஞ்ஞானம் தந்த வியத்தகு நிலைகளை மக்களிடம் முடிந்தவரை விளக்கிச் சொல்ல வேண்டிய மருத்துவரின் நடைமுறைச் சிந்தனை நாட்டுப்புற வடிவிலேயே இருக்கக் காணலாம்.
மதம் சார்ந்த மாசுகள் நிறைந்த கதைப் பாத்திரங்களில் மனதை பதிய வைத்து மற்றவர்களுக்கும் அதை நிலைநிறுத்தச் சொல்கிறார்கள். மருத்துவர்களுடைய அறையைப் பார்த்தால் மருத்துவத்தை வழங்கிய மாமேதைகளின் படங்கள் இருக்காது. மாறாக சடையில் ஒன்று இடையில் ஒன்று என இரு பெண்களிடம் ஈடுபாடு கொண்டவனையும் அவனைப் போல பலப்பல பெண்களின் பால் இச்சைக் கொண்டவர்கள் படங்கள் இருக்கக் காணலாம்.
பதினெட்டு, இருபது ஆண்டுகள், கல்லூரி தந்த வாழ்க்கை முறையை அணுகாமல் இளமையில் விவரம் தெரியாத நாள்களில் பதிய வைத்த மதவாத கருத்துகளில் மனதை பதிய வைத்து வாழ்வது கற்றவர்களுக்கு அழகாகுமா?
இந்த நாடு ஒரு வித்தியாசமான நாடு என்றார் மாசற்ற சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் சொல்லிவிட்டு விளக்கமும் தந்தார்.
சூசூகல்வி கற்றால் முட்டாள்தனம் ஒழியும் என்று கருதினேன். ஆனால் கற்றவன் இங்கே இரட்டை முட்டாளாக இருக்கிறான். அறிவியல் வளர்ந்தால் மூடநம்பிக்கை ஒழியும் என்று கருதினேன். ஆனால் அறிவியலையும் மூடநம்பிக்கையோடு இணைத்துப் பார்க்கிறான். கலப்பு மணம் செய்தால் சாதி ஒழியும் என்று நினைத்தேன். ஆனால் கலப்புமணம் செய்தவன் எல்லாம் தனிச்சாதியாகி விட்டான்” என்றார். இதில் வேதனை என்னவென்றால் கல்லூரி சென்று பட்டம் பெற்றவர்கள் தான் இதில் முழுமையும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
இந்திய அளவில் இன்னும் நாற்பது விழுக்காடு பள்ளிகளை காணாதவர்களாகவே இருக்கிறார்கள். கற்றவர்கள் அதிலும் கல்லூரியில் கற்றவர்களில் சில விதிவிலக்குகளை தவிர மற்றவர்கள் மடமையில் குளித்து மகிழ்ச்சி கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். இங்கே உருவாகும் ஆசிரியரின் மனோபாவம் ஆக்கம் நிறைந்ததாக அறிவு சார்ந்ததாக இல்லை.
ஆங்கில வழக்கல்வி அடிமைகளை தோற்றுவிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதையும் விட்டுவிட்டால் அறிவியலைத் தரும் மொழிகளோ அந்த மொழியில் முறையோ இருப்பதாத் தெரியவில்லை.
பன்னிரண்டு விழுக்காடு கல்லூரியில் படித்தவர்கள் எண்பத்தெட்டு விழுக்காட்டினரோடு வாழ்கின்ற போது பெரும்பான்மை விழுக்காடே வெற்றிபெற நேரிடும். அதாவது படித்தவரை மற்றவர் பாழ்படுத்தும் நிலை நேரிடலாம்.
பல்லாயிரம் ஆண்டு பழைமைத்தன்மை இங்குள்ளோரை எளிதில் விட்டுவிடாது என்பதற்கோர் எடுத்துக்காட்டு அறிவியல் வழியில் கல்வி கற்று மருத்துவாரக, பொறியாளராக உருவாகி வெளிநாட்டில் வாழும் நிலைபெற்றோர் அவர்களுக்கு வாழ்வழித்த அறிவியலோடு உறைந்து வாழ்வது அர்த்தமற்ற ஆதாரமற்ற அறிவாய்வு நிலைகாணாத பல்வேறு உணர்வுகள் அவர்களின் உள்ளத்தை ஆளுமை செய்வதை அவர்சென்ற இடத்திலும் காட்டுகின்ற பல்வேறு காட்சிகள் நமக்கு உணர்த்துகிறது.
கல்வி என்பது அதுவும் கல்லூரிக் கல்வி என்பது அறிவு சார்ந்ததாக ஆய்வு சாரந்ததாகவே இருக்கும் இருக்க வேண்டும். கல்லூரி செல்பவர்களின் மாற்றம் என்பது நடை, உடைகளில் மட்டுமல்லாது மனதிலும், நடைமுறையிலும் மாற்றம் கொண்டதாக ஏற்றம் கொண்டதாக இருக்க வேண்டும். எதிரில் ஒளிர்கின்ற ஏந்திழையிடம் மட்டுமல்லாது கல்லூரி தரும் அறிவியல் உணர்வுகளின் ஈர்ப்பும், ரசிப்பும் இருக்க வேண்டும்.
பயன்படாத பழைமையில் பயணிப்பதை விட்டுவிட்டு பயன்மிகு புதிய பாதையில் நடந்திய உறுதிகொள்வதுதான் படித்தவர்களுக்கு அழகாகும்.
பள்ளிகள், பாடசாலைகள், அதனால் விளைந்த நன்மைகள் என்று எந்த ஆதாரமும் இல்லாத இந்த நாட்டில் ஐரோப்பியர்களால் உருவான கல்வியின் பயனால் களிப்புறும் வாழ்வைப் பெற்றிருக்கிறோம். அதுவும் குறைந்த விழுக்காட்டினரே பெற்றிருக்கிறோம். பெருகிவரும் மக்களுக்கு கல்வி வழங்க தூய தொண்டாற்ற வேண்டியிருக்கிறது.
கல்வி நிலையங்கள் தூய நிலைபெற போராட வேண்டியிருக்கிறது. கல்வி அடிமை நிலையிலிருந்து அறிஞர்களை விடுவிக்க வேண்டியிருக்கிறது. கல்வி கொள்ளையர்களின் கைச்சிறையிலிருந்து கல்விக் கூடங்களை மக்களின் நலன்காக்கும் அறச்சாலையாக்க வேண்டியிருக்கிறது.
ஏனெனில், இங்கே கல்வி என்பது வணிகமயமாக்கப்பட்டு விட்டது. வணிகத்தில் கொள்லை லாபம் பார்த்த கொடுமையாளர்கள் எல்லாம் கல்வியின் காவலர்களாகி விட்டார்கள்.
பத்துக்குப்பத்து வட்டி வாங்கியவனெல்லாம் பள்ளியில் தாளாளராகி விட்டார்கள். சாராயம் விற்ற குற்றவாளிகள் எல்லாம் சர்வகலாசாலை வேந்தராகி விட்டார்கள். கஞ்சி வணிகம் செய்தோரெல்லாம் கல்வித் தந்தையாகி விட்டார்கள்.  பொய் சொல்லியே பிழைப்பு நடத்தியவனெல்லாம் கல்வி நிலைய புரவலராகி வடிட்õரக்ள் இவர்களிடம் ஆசிரியரும், பேராசிரியரும், அறிவாளிகளும் அடிமையாகி கைகட்டி வாய்பொத்தி நிற்கும் நிலை காண்கிறோம்.
தொண்டாகக் கருதவேண்டிய கல்வி தொல்லையாகிப் போனது. சூழ்நிலைக்கேற்ப கொள்ளை இலாபம் அடிப்போர் கல்வி நிலையங்களில் தங்கள் கைவரிசை காட்டும் நிலை  காண்கிறோம்.
கல்லூரி என்பது வெறும் சொற்பயிற்சி பெறும் நினைவுக்கூடம் ஆகாமல் புதுப்புதுக் கருவிகளைக் கண்டறியும் கலைவளர் சோலையாக்க முனைவீர் என் வேண்டுகிறாம்.



பல்கலைக்கழகங்களின் பார்வைக்கு
பல்கலைக் கழகம் என்பது உயர் கல்வியை ஆய்வின் உச்சம் வரை அழைத்துச் சென்று மாணவர்களை உலகின் உயர் மனிதர்களாக ஆக்குகின்ற உன்னதமான கலைக்கோட்டம் என்பதை உலகம் மிக நன்றாக அறியும்.
அந்த அறிவுசேர் நிலையங்கள் இன்று உலகம் முழுவதும் பரவி பயனளிக்கிறது என்பது நாம் மகிழ்கின்ற ஒன்று ஆகும்.
ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு பகுதிகளில் அந்தந்த மண் வாசனையோடு அடுத்த நாடுகளின் உறவுகளோடும் பல்வேறு துறைகளின் பாடங்களை நடத்தும் பாடசாலைகளாகவும் திகழ்ந்திடக் காண்கிறோம்.
மேலும், ஆராய்ச்சித் துறைகளில் பலவேறு ஆய்வுகளை நடத்தி ஆக்கமிகு நிலைகளை உருவாக்கியதால்தான் உலகம் என்றும் காணாத வாழ்க்கையில் வளங்களைப் பெற்று மனித குலம் வானமளவு வளர்த்திருக்கக் காண்கிறோம்.
மருத்துவ விஞ்ஞானம், வேதியியல் விஞ்ஞானம், பொறியியலில் பலவேறு துறைகள் ஆகியவை வானளாவ  வளர்ந்து வியத்தகு நிலைகாட்டி மகிழ்விக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம் பல்கலைக் கழகப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழங்கள் ஆயிரத்தில் ஒன்று என்ற நிலையில் இல்லையென்று ஏடுகளில், இதழ்களில் வெடிக்கின்றபோது, இங்குள்ள பல்கலைக் கழகங்கள் கடமை தவறியதோ எனும் எண்ணம் இதயத்தில் தோன்றுகிறது.
தமிழ் சார்ந்த சிந்து வெளி நாகரிகங்கள் வாழ்ந்த மொகஞ்சதாரோ, அரப்பாவை உலகில் உள்ள பலவேறு பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்தபோது, சென்னை பல்கலைக்கழகம் கண்மூடி உறங்கியது எனும் குற்றச்சாற்றை முன்னர் பலர் கூறியது உண்டு.
அது மொகஞ்சதாரோ, அரப்பாவில் பதினெட்டு (18) மேடுகளில் இரண்டுதான் அகழ்ந்து எடுக்கப்பட்டு என்றும், மற்றவையும் அகழ்ந்தால் மேலும் எண்ணற்ற தகவல்கள் கிடைக்கும் என்றும், தமிழ்நாட்டில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றிய பின் அந்த இனிய கலைக்கூடம் கூட சிந்துவெளியின் எஞ்சிய சிறப்புகளை வெளிக் கொணர முயற்சிக்கவில்லை எனும் புகார்கள் நிறையவே இருக்கின்றன.
சூரிய வெப்பம் மிக நிறைய கிடைக்கின்ற இங்கு - அது பற்றிய ஆய்வுகளும் செய்முறைப் பயிற்சிகளும் பல்கலைக் கழகங்களால் தொட்டுக்கூட பார்க்கப்படவில்லை என்று பலர் வருந்துகிறார்கள்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் காற்றாலை மின்சாரம் பற்றிய பட்டப் படிப்பு தொடங்குவதாக வந்த செய்தி நம்மை மகிழ்விப்பது போல சூரிய ஆற்றல் மின்சாரம் பற்றிய படிப்பும், ஆய்வு நிலைகளையும் மற்ற பல்கலைக் கழகங்கள் மேற்கொண்டால் மகிழ்வின் எல்லை மேலும் நீளும் அல்லவா?
குறைந்த மக்கள் எண்ணிக்கை கொண்ட சப்பானில் 2000 க்கும் மேல் பல்கலைக்கழகங்கள் உண்டு என்கிறார்கள். ஆனால் நூறு (100) கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இங்கு நானாறு (400) க்கும் குறைவான பல்கலைக் கழகங்கள் உள்ளன என்பதும், அதுவும் உலகத்தரத்தில் ஒன்றுகூட இல்லை என்பதும் நாம் எங்கே நிற்கிறோம் என்று உள்ளம் வருந்துகிறது.
தமிழகத்தில் 1960க்கு முன்னர் இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. இன்று இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்த கல்லூரிகள் ஆயிரத்தைத் தாண்டி நீண்டு வரும் நிலை  காண்கிறோம். படிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு பல இலட்சங்களாகப் பெருகி வருகின்றன.
ஆயினும் மக்கள் கூட்டத்தில் படர்ந்த மாசுகள் அகன்றதாகத் தெரியவில்லை. மாண்புகள் வளர்ந்து சிறந்ததாக மணக்கும் காட்சிகளைக் காண முடியவில்லை. கற்றவர்கள் மத்தியில் சுவைக்கு உதவாத எண்ணங்களும், காட்சிகளும், கசப்பூட்டும் உணர்வுகளும் மாறியதாக மறைந்ததாக அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
ஆறு ஆண்டுகளில் தொடங்கி ஏறக்குறைய இருபது ஆண்டுகளில் பெறுகின்ற கல்வி, படிப்பறிவு பெற்றவனின் மனதில் உள்ள களையை, குறையைக் களைய முடியவில்லை. அறிவியல் சான்று தராத கருத்துகள் செய்திகளால் தன்னை சிறைப்படுத்திக் கொள்ளும் நிலைதான் இங்கு நீடிக்கிறது.
படிக்காதவன், பாமரன் அவன் என்றால் பலவித நம்பிக்கைகளை பதியம் போட்டு வளர்க்கலாம். நெட்டுரு செய்யலாம். படித்தவன் அதுவும் பல்கலைக் கழகம் வரை கல்வி கற்றவன் அறிவியலுக்கு மாறான ஆய்வு நெறிகளைத் தாண்டி ஆராய்ச்சி உணர்வுகளுக்கு எதிர்த்திசையில் செல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
வெள்ளையர் காலத்தில் உருவான சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முத்திரை பதித்த நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்திருக்கின்றன.
இராமச்சந்திர தீட்சதரின் சூசூதமிழர் தோற்றமும் பரவலும்” எனும் அருமையான கட்டுரை இங்கேதான் வழங்கப்பட்டது. பரிதிமாற் கலைஞரின் - பூரணலிங்கம் பிள்ளையின் தமிழ்ச் செம்மொழி எனும் சிந்தனை இங்குதான் கருத்துருப் பெற்றது. இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் இருந்திருக்கலாம்.
நீதிக் கட்சித் தலைவர்களின் முயற்சியால் இங்கு பல்வேறு பள்ளிகளும், கல்லூரிகளும் நிறையவே தோற்றுவிக்கப்பட்டன. அதன் பட்டியல் நீளும், அதில் குறிப்பிடத்தக்கது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
தமிழர்களுக்கு உயர் கல்வி வழங்க வேண்டுமெனும் தலையாய நோக்கத்துடனேயே அது தொடங்கப்பட்டது. ஆனால், சென்னைப் பல்கலைக் கழகத்தில் மிகச் சிறுபான்மையினருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வாய்ப்புகள் வழங்கப்பட்டதால் தமிழர்களுக்கு கல்வி பெருமளவு தரப்பட்டது. அதற்கு பிறகுதான் பார்ப்பனர் அல்லாதாரின் கல்வி முன்னேறத் தொடங்கியது. தமிழரின் உயர்வும், தமிழிசையின் செழிப்பும், வளர்ப்பும் வெளியே தெரிந்தது.
இன்று பலவேறு துறைத் தொடர்புடைய நிறைய பல்கலைக் கழகங்களோடு பல நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களும் உருவெடுத்து விட்டன.
ஆயினும், மனக் கருத்துகளிலும் உளவியல் நிலையிலும் பெரிய மாற்றம் கண்டிருக்கிறதா? இருந்தால் அதை பல்கலைக்கழகங்கள் ஆய்ந்து அதன் விளைவை அளவை விளக்கி வெளியிட்டிருக்கிறார்களா?
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் மன்றங்கள் நடத்திய நிகழ்வுகளில் பேரறிஞர் அண்ணா அவர்கள் சூசூஏ, தாழ்ந்த தமிழகமே” சூசூஆற்றோரம்” எனும் தலைப்புகளில் ஆற்றிய உரைகள் தமிழரின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் பயன்பட்டதோடு அந்தப் பல்கலைக் கழகத்திற்கும் புகழ் முத்திரை சூட்டியது.
இன்றுள்ள பல்கலைக்கழகங்கள் அந்த நிலையில் இருக்கிறதா? இருந்தால் மக்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறதா?
ஒவ்வொரு துறைக்கும் உரிய பல்கலைக் கழகங்கள் இங்கே இயங்குவது சரிதான். ஆனால் அந்த கல்விக் கூடங்கள் வாழ்கின்ற பகுதியின் மண் வாசனை, மொழி வழங்கும் பகுதியின் மண் வாசனை, மொழி வழங்கும் கருத்துக்கள், வாழ்வியல் கூறுகள், பழக்க கருத்துகள், வாழ்வியல் கூறுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் நிறை குறைகளை ஆய்ந்து அவர்களுக்கு நேர்வழி காட்டுவது என்பது அந்தக் கல்விக் கூடங்களின் கடமையாக வேண்டும். ஏனெனில், அங்கிருந்துதானே மாணவர்கள் வருகிறார்கள்.
கடந்த கால மாணவர்களைப் போன்று பொது நலனில் அக்கறையும் எழுச்சியும் இல்லை என்றும், பிழைப்பு மனோபாவத்துடன்தான் பாடங்கள் போதிக்கப்படுகிறதென்றும் ஏடுகளிலும், இதழ்களிலும் படிக்கின்றபோது இதயம் வலிக்கவே செய்கிறது.

அதுமட்டுமன்றி தான் பயிலும் கல்விக் கூடத்தின் பெருமை அங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு தெரியவில்லை என்பது இதயப் புண்ணை மேலும் குத்துவதாகவே இருக்கின்றது.

No comments:

Post a Comment