புரிதல் வேண்டும்
அறிவுலகமும் ஆய்வுலகமும் போற்றிப் புகழும் அறிவாளர் திரு. எம்.எஸ்.எஸ். பாண்டியன்
அவர்கள் ஒரு தமிழர். தமிழ்நாட்டின் வரலாற்றைத் தெளிவாய் உணர்ந்தவர்.
விபரம் தெரிந்த நாளிலிருந்து திராவிட இயக்கத்தின் எல்லாச் செய்கைகளையும் இதயத்தில்
பதிவு செய்தவர்.
உலகில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக ஒளிர்ந்தபோது, தான் பிறந்த தமிழ்
மண்ணின் நிலைகளை நெஞ்சில் கொண்டு சில நூல்களையும் வேறுபல அறிவுநலம் பேசும் நூல்களையும்
படைத்தப் பாண்டியன் அவர்கள் புதுவடிவில் ஒரு நூலை நமக்கு வழங்கியிருக்கிறார்.
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் எனும் எம்.ஜி.இராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்.)
உணர்வுகளின் உள்நோக்கத்தை மிகத் தெளிவாகப் படம் பிடித்திருக்கிறார்.
ஏறக்குறைய இருநூறு பக்கங்களில் மறுக்கவியலாத சான்றுகளோடு தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
மிக இளவயதிலிருந்தே எம்.ஜி.ஆரின் வெறிகொண்ட இரசிகனாக இருந்த என்னைப் போன்றவர்கள்
திராவிட இயக்கச் சிந்தனைகள் சாதனைகளை உள்வாங்கி உணர்ந்திருந்த காரணத்தால் பாண்டியன்
குறிப்பிடும் அவர்பற்றிய கேடுகளை உணர்ந்தே இருந்தோம். ஆயினும் அவர் தி.மு.க.வில் இருப்பதால்
அவரிடம் இருந்து ஒதுங்கவும் முடியவில்லை. ஆனால் தி.மு.க. வில் இருந்து நீங்கியபோது
நெஞ்சம் மகிழ்ந்து ஆடிப்பாடி, ஆர்ப்பரித்து, இலட்சியத் தோழர்களை ஆரத்தழுவிக் கொண்டோம்.
எம்.ஜி.ஆர். மறைந்த அய்ந்து ஆண்டிற்குப் பின் ஆங்கிலத்தில் வெளிவந்த இந்தநூல்,
எழுதிய திரு. பாண்டியன் மறைவுக்குப்பின் தமிழில் வெளிவந்திருக்கிறது.
இந்த நூல் முழுவதையும் படித்த போது பழைய நினைவுகள் நெஞ்சைத் தாலாட்டியது. அதே நேரம்
ஒரு தவறான மனிதனை தி.மு.க. வளர்த்து விட்டதே என்ற பழைய வருத்தமும் மனதை வருத்தியது.
இந்த நூலின் மய்யம் என்பது சுருக்கமானது. எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலம்தான் தமிழகத்திற்கு
இருண்ட காலம் என்கிறார் பாண்டியன்.
ஆயிரமாண்டு இடைக்கால இருண்ட காலத்தை மாற்ற இயக்கம் கண்டு போராடி மாற்றத்தை மறுமலர்ச்சியை
திராவிட இயக்கப் போராளிகளின் முயற்சியால் முளைத்து வரும் நாளில் எம்.ஜி.ஆரால் மீண்டும்
ஓர் இருண்ட காலத்தை தொடங்கி வைத்து இன்றுவரை வெளிச்சம் பரவாமல் தடுப்பதைக் காண்பது
மனதிற்கு வேதனையளிக்கிறது.
இராமச்சந்தர் என்ற பெயர் வடநாட்டான் போல் இருக்கின்றதென்று இராமச்சந்திரன் என்று
வைக்கச் சொன்னவர் நடிப்பிசைப் புலவர் திரு.கே.ஆர். இராமசாமி அவர்கள். தமிழக ஆட்சியைப்
பிடித்து தந்தை பெரியாரின் கொள்கைகளை சட்டமாக்கத் துடித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் திரையில்
புகழ் கொண்ட எம்.ஜி.ஆரை மக்களின் வாக்குப்பெற
எம்.ஜி.ஆரை இதயக்கனி என்றார். ஆனால் எம்.ஜி.ஆர் அண்ணாவை பெரிதும் மதித்தார்
இல்லை. அண்ணாவின் தலைமையில் இயங்கும் இவர் என்தலைவர் காமராசர் என்றார். அண்ணா வழங்கிய
மேல்சபை உறுப்பினர் பதவியை உதறி எறிந்தார்.
ஆனால் அதே அண்ணா பெயரோடு தி.மு.க.வையும் இணைத்து கட்சித் தொடங்கி தி.மு.க கொடியில்
அண்ணா படத்தைப் பொறித்து தமிழ் மக்களை ஏமாற்றி அண்ணா படைத்த செழுமைகளைச் சிதைத்தார்,
சீரழித்தார், சிதறடித்தார். தொடர்ந்து செய்வதற்கு ஜெயலலிதாவையும் நியமித்து விட்டு
மறைந்து விட்டார்.
இவர் குலத்தால் மேனன், மேனன் என்பவர்கள் நம்பூதிரிக்கும் நாயருக்கும் பிறந்த முதல்
பிள்ளை என்கிறது கேரளா சாதிய வரலாறு.
நம்பூதிரி என்பது ஆரியக் குலம். ஆரியக்குலத்தில் பிறந்த இவர் திராவிட இயக்கத்தில்
இணைந்து அடுத்துக் கெடுக்கும் நிலையில் வெற்றியும் பெற்று விட்டார். தமிழர்களை அடிமையாக்கி
ஆடல் மங்கை ஆரியமாலா ஜெயலலிதாவும் தொடர்ந்து அவலங்களை உருவாக்கி வருகிறார்.
தி.மு.கவில் இவரை இணைத்தது குற்றம், வளர்த்தது அதைவிட பெருங்குற்றம். இவர் பெயரில்
மன்றங்கள் அமைத்தது மகா குற்றம். அதிலும் தங்க வாள் தந்து தமிழர்களின் தாழ்வுக்கான
நிலையை ஏற்படுத்தியது மாபெரும் குற்றம் என்கிறார்கள் நடுநிலை கொண்ட நல்லறிவாளர்கள்.
ஏழைகளின் தோழனாக எழுச்சியின் நாயகனாக வாய்மை தூய்மையின் வழிகாட்டியாக வள்ளல் தன்மை
கொண்டவராக திராவிட இயக்கப்பற்றாளராகவும் வர்ணிக்கப்படும் இவர் திட்டமிட்டு சினிமாவிலும்
வெளியிலும் முகபாவங்களிலும் நடித்தாரே தவிர உள்ளத்தில் இவற்றிற்கு எதிரானவராகவே இருந்தார்
என்பதை பாண்டியனின் நூலின் சில குறிப்புகள் நமக்கு உணர்த்துகிறது.
அதன் அடிப்படையில் நூலின் பின் அட்டையில் மிளிரும் பாரதி கிருஷ்ணகுமார்.
ப.திருமாவேலன் இருவரும் கூறுகின்ற கருத்துகள் நூலைப் படிப்போரின் மனதில் பதிந்தால்
மக்கள் திலகம் என்ற மயக்கம் தீர்க்கும் மருந்தாக மாறும்.
No comments:
Post a Comment