Thursday, 7 July 2016

மறக்க முடியாத நடிகர் திலகம்

மறக்க முடியாத நடிகர் திலகம்
1973ம் ஆண்டு மத்தியில் பம்பாய் (மும்பை) சண்முகானந்தா சபா கேண்டீனில் வேலை செய்த கொண்டிருந்தபோது பட்டிக்காடா? பட்டணமா? என்ற படத்திற்காக பிலிம்பேர் வழங்கும் பரிசைப் பெறுவதற்காக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களும் நடிகை செல்வி ஜெயலலிதா ஜெயராமன் அவர்களும் வருவதாக இருந்தது.
கேண்டீன் உரிமையாளரும் பணியாளர்களும் எங்கள் இராசபாளையத்தைச் சேர்ந்தவர்கள். சிவாஜி வந்தபோது நாங்கள் அனைவரும் வரவேற்க வாசலில் நின்றிருந்தோம்.
காரிலிருந்து அவர் இறங்கியவுடன் ஏற்கனவே நான் எழுதி வைத்திருந்த கடிதக் கவரை அவரிடம் தந்தேன், அதை அவர் பெற்றுக் கொண்டார். கடிதத்தில் சில செய்திகளுக்கு விளக்கம் கேட்டிருந்தேன், அதை கீழே தருகிறேன்.
திரைப்படங்களில் நடிகர் நடிகைகள் காதல் காட்சிகள் ரொமாண்டிங் சீன்களில், கன்னத்தோடு கன்னத்தை ஒட்டுகிறார்கள், காதைக் கடிக்கிறார்கள், கட்டிப்பிடித்து இறுக அணைக்கிறார்கள், இடுப்பை கட்டிப் பிடிக்கிறார்கள், கிள்ளி விளையாடுகிறார்கள், முகத்தை வருடி மகிழ்கிறார்கள். நடிகையின் மார்பகத்தின் மீது முகத்தை வைத்து படுக்கிறார்கள். ஒருவரோடு ஒருவர் உருண்டு புரளுகிறார்கள். இதையெல்லாம்விட காலோடு கால் பின்னுகிறார்கள். இதையெல்லாம் நடிப்பு என்கிறார்கள்.
இதெல்லாம் ஆண் பெண் உடல் சார்ந்த உறவுகளாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் நடிப்பு என்றால் உண்மை என்பது என்ன? நடிகர்களும் நடிகைகளும் நடிப்புத் துறையில் இல்லாதவர்களை மணக்க நேர்ந்தால் அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும், இயங்கும். அவருக்குப் பிறக்கின்ற பிள்ளைகள் இந்தக் காட்சியைக் கண்டால் என்ன நினைப்பார்கள், குலம் மகள் நாணம் பண்பாட்டு அறங்கள் எப்படி எண்ணப்படும்? விளக்குங்கள் என்று கேட்டு எழுதியிருந்தேன்.
நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்து காரில் ஏறும்போது வழியனுப்பக் காத்திருந்தபோது என்னை அருகில் அழைத்தார். காருக்குள் அமர்ந்து கொண்டு தம்பி நாங்கள் மக்களை மகிழ்விப்பர்கள் அதைத்தவிர வேறெதையும் நினைக்காதவர்கள். எங்களை எப்படி விமர்சனம் செய்தாலும் அது உண்மையென்றாலும் இல்லையென்றாலும் அதை தாங்கக் கூடியவர்கள், தாங்குவோம், தாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இதை நினைக்கின்றபோது உண்மையில் உள்ளம் மகிழ்கிறது. உண்மையை உள்ளபடியே ஒத்துக் கொண்ட அவர் உள்ளத்தை நினைக்கின்ற போதெல்லாம் நெஞ்சம் இனிக்கின்றது.

ஆனால் இதையெல்லாம் தாண்டி நடிகர் நடிகைகள் நாட்டின் அறம் போதிக்கிறார்கள், ஆட்சி நடத்துகிறார்கள், மக்களின் வாழ்வுச் சிறப்புகளுக்கு வழி கூறுகிறார்கள். இன்னும் சொல்வதென்றால் சர்வ ரோக நிவாரணி என்று நெஞ்சை நிமிர்த்துகிறார்கள். திரையுலகை அறிந்தவர்கள் அந்தந்த துறையின் நிறை குறைகளை அறிந்து மக்கள் தரும் ஆதரவும் மதிப்பும் சரியா என விளக்குவது நாட்டின் ஒழுக்க கொள்கையை பின்பற்றுவோரின் கடமையாகும், கடமையாக வேண்டும்.

No comments:

Post a Comment