Friday, 16 September 2016

முகநூல் நண்பர்களுக்கு

முகநூல் நண்பர்களுக்கு
பேரன்புடையீர் வணக்கம். நலம்சூழ நல்வாழ்த்துக்கள்.
பெரியார் விருதுகளை, பெரியார் தி.மு.க., தி.மு.க இணையதள பணிக்குழு, மக்கள் ஜனநாயகம் மற்றும் பல அமைப்புகளின் தனி மனிதர்களின் படைப்புகளை முகங்களை  மற்றும் சில செல்லப் பெயர்களும் சிந்தையில் பதிந்து மகிழ்வூட்டிக் கொண்டிருக்கிறது. இதில் பெரியார் விருது என்பது என்னை பெரிதும் ஆட்கொண்டது. முகநூலில் விழிவிரித்துப் பார்க்கின்ற வாய்ப்பு என் மகன் வழங்கிய அலைபேசி வழியாகக் கிடைத்தது. அதில் என்னில் இணைந்த நண்பர்களின் படங்களையும் அவர்கள் படைத்ததையும் பார்க்க முடிந்த போது பரவச உணர்வுகள் பற்றிப் படர்ந்து அந்தப் பாசமிகு உடன் பிறப்புகளை உள்ளத்தின் உயர்வான இடத்தில் உறைய வைத்துக் கொண்டேன்.
நீதிக்கட்சியின் நிலைகளில் சில பெரியாரின் நெஞ்சைத் தொட்டதால் அவர் காங்கிரசில் இருந்து விலகினார். உழைத்துப் பாடுபட்டு காங்கிரசை மக்களின் உள்ளத்தில் பதியவைத்த பெரியாரின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கவில்லை. காரணம் அது ஆரியமாயைக்குள் கிடந்த பார்ப்பனத் தலைமைக்கு பயந்து கிடந்தது.
இயல்பிலேயே நெஞ்சத் தூய்மை கொண்ட பெரியார் நீதிக்கட்சியின் பார்ப்பனல்லாதார் அவர்களுக்கான சமூக நீதிக்கான கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு ஆகியவற்றை வெகுவேகமாக பரப்பும் நிலையை மேற்கொண்டார். அது மட்டுமல்ல பார்ப்பனல்லாதாரின் இழப்புக்கும் தாழ்வுக்கும் காரணமே பார்ப்பனர்களின் பாதக கொள்கையான பிறவிச் சாதிமுறையை ஏற்றதனால்தான் இத்தகைய இழிவுகளை சந்திக்க நேர்ந்தது என்று கருதி மேற்கண்டவற்றோடு இதையும் இணைத்துக் கொண்டார். சாதிய முறைகளை ஏற்று சுயமரியாதையை இழந்ததற்குக் காரணம் பகுத்தறிவில் ஏற்பட்ட பாழ் நிலையே காரணம் என்றுகண்டறிந்த பெரியார் 1925ல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி பகுத்தறிவு நிலையை பக்கத்தில் வைத்துக் கொண்டு மேற்கண்ட பிறவிச் சாதி முறையை சுயமரியாதையை இழந்த நிலையை கல்வி கற்று தெரிவதாலேயேதான் வளம்பெறும், வலிமைபெறும் என்று மேற்கண்டவற்றுக் கெதிரான கடவுள், மதம், சாத்திரங்களை தோலுரித்துக் காட்டி துணிந்து நின்று நாத்திக உணர்வுகளை நாட்டில் பரப்பினர்.
ஒற்றை மனிதராக இயக்கத்தைத் தொடங்கிய அவர் பின்னால், மெல்ல மெல்ல வந்து பலரும் இணைந்து இன்று பெரிய ஓர் ஆலமரமாக வளர்ந்து படர்ந்து இருக்கிறது.
படிப்பை முடித்த மாணவனாக அவருக்கு உயர்ந்த பதவிகளை பெற்றிருக்க வேண்டிய சூழலில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரின் கொள்கைகளை சாதனைகளைச் சொல்லும் தூதுவராக தொண்டாரக விரும்புகிறேன் என்று சொல்லி பல ஆண்டுகள் அவருடன் காடு மேடு,  பட்டி தொட்டி, சிற்றூர் பேரூர் என இமயம்வரை அவருடன் சென்று மக்களின் மனதில் உள்ள மாசுகளை அகற்ற அந்த மக்களின் எதிர்ப்புக்கிடையே பெரியாரின் கொள்கைகளை அனைவரின் நெருஞ்சிலே பதியவைத்தார்.
இறுதிநாள் வரை தன்னை தலைவர் என்று அழைக்காத நினைக்காத அண்ணா அவர்கள் தான் கண்ட திமுகவை பெரியார் விழுதாகவே இந்த மண்ணில் பதியவைத்தார். அறிவியல் மொழி என்று பெரியாரால் போற்றப்பட்ட தமிழை தன் இயக்கத்தின் இதயமாய் பொறித்து வைத்தார். தமிழின் செழுமைகளை குருதியோட்டமாக சுழலவைத்தார்.
அண்ணாவின் வியப்பூட்டும் உழைப்பும் பிற ஆற்றலும் இங்குள்ள அனைத்து அமைப்புகளும் மக்களும் பெரியாரின் விழுதுகளாகவே அந்த ஆலமரத்தின் எல்லாப் பகுதிகளிலும் நிலத்தில் பதிய வேண்டும் என்பதுதான்.
தாழ்ந்த தமிழகம் தலைநிமிர பெரியார் கண்ட கொள்கையும் கோட்பாடும் முக்கியம் என்று கருத்தை அத்துடன் சங்ககால அறிவார்ந்த இலக்கிய சூழலும் இன்றைய அறிவிப்பு தந்த - தருகின்ற புதுமைப் பயனும் தமிழகத்தை தழுவி உலகளாவிய நிலைக்கு சான்றுகளாக உயர்த்த வேண்டும் என்று விரும்பி பல நிலைகளால் ஒளி மிகுந்த உணர்வுகளை உருவாக்கினார். இளைஞர்களை ஊக்குவித்து இலட்சிய வரலாற்றை உருவாக்கு முறைகளை திரட்டி தந்தார்.
அவரின் ஆற்றல் மிக்க தம்பியாக அவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தின் தலைவர்கள் அவர் கண்ட ஆட்சியின் முதல்வராக ஒவ்வொரு வினாடிதோறும் தன் முன்னோர்களை மறக்காத நிலையில் ஓய்வின்றி உழைக்கின்ற உழைத்துவரும் கலைஞரும் கூட பெரியார் விழுதுதான். அதுமட்டும் அல்ல அண்ணா வழிநின்று உழைத்த தம்பியரில் சிலர் உளுத்துப் போனாலும் இன்றுவரை இயக்கத்தில் இணைந்திருப்பவர்கள் அனைவருமே பெரியாரின் விழுதுகள் தான்.
என்றாலும்கூட என்னுடைய நெடுநாள் வலியுறுத்தலே தி.மு.கவின் எல்லாம அமைப்புகளும் அணிகளும் கருத்துக்களும் பெரியார் விழுதுகளாகவே விளங்கவேண்டும் என்றும் விரும்புவதுதான்.
ஆரியர்களை நம்பி நமது கொள்கைகளை இதயத்திலிருந்து அறவே அகற்றிவிட்டு தமிழ் செழுமைகளை மனதில் ஊன்றி விதைத்து பயிராக்கி பயன்காண மற்றவர்களும் உதவ வேண்டும் என்றும் விரும்புகிறேன் முகநூல் வலைத்தள தோழர்களை வேண்டுகிறேன்.
ஏனெனில் ஆரியச் சிந்தனைகளை அறவே அகற்றாது போனால் தொற்று கிருமிகளைப் போல் பற்றிக் கொண்டு உணர்வுகளை உரம்பெற விடாது நிலைத்துவிடும் ஆக உள்ள உறுதியோடு உண்மைத் தன்மையோடு உறுதி நிறைந்த மனதோடு ஆரியத் தொடர்புகளை அறவே அறுத்துவிடும் துணிவைப் பெற வேண்டுகிறேன். மொத்தமாக முடியவில்லை என்றால் சிறுசிறுக சிந்தையை விட்டு வெளியேறும் நிலையை மேற்கொள்ள வேண்டுகிறேன். பெரியார் விழுதுகளும் திமுக அணிகளும் தன்னை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டுகிறேன். அவர்களை தங்கள் வழிக்கு அழைத்துவர மென்மையும் அன்பையும் அருகில் வைத்து கொண்டு முயல வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment