Thursday, 3 March 2016

மாசில்லா நலம் சூழ மருத்துவர்களை வாழ்த்துவோம்!

மாசில்லா நலம் சூழ மருத்துவர்களை வாழ்த்துவோம்!
உயிரினம் தோன்றி வளர்ந்து வாழ்ந்து
சிறக்கின்ற நாட்களில் உடல் மன
ஊனங்கள் ஏற்படக் காண்கிறோம்
இருவேறு நிலை கொண்ட இயற்கையின்
பரிணாம வளர்ச்சியில் கூட எத்தனையோ
இடர்பாடுகள் தோன்றக் காண்கிறோம்
நீரும் நெருப்பும் சூடும் குளிரும்
பனியும் வெய்யிலும் அளவுகளால்
நன்மையும் கேடும் செய்கிறது
இயற்கையின் இயக்கத்தை எண்ணினால்
அழகும் நஞ்சும் அமுதும் விடமும்
முள்ளும் மலரும் ஓரிடத்தில் காணலாம்
நீரில் நனைந்தவை காய்ந்து போனால்
கடுமையாகி காயப்படுத்துகிறது
காயந்தமுள் நீரில் நனைந்து நெகிழ்ந்து விடுகிறது
அளவான இயக்கத்தில் அனைத்தும்
அழகுடன் நலமளிக்கிறது
அளவு கூடினால் அழிவைச் சந்தித்து
அலங்கோலம் ஆகிறது.
தென்றல் காற்று தேகத்தைத் தழுவி
மகிழ்வோடு உறவாடுகிறது
தேன்மழைச் சிறுதூரலும் சாரலும்
மெல்லியை உணர்வை மேலோங்க வைக்கிறது
பேய் மழையும் பெருங்காற்றும்
கோடை வெப்பமும் கொடுந்தீயும்
பேரழிவைச் சந்தித்து கேடாகிறது
ஆயினும் மனித அறிவு மகத்தான
இயற்கையை எதிர்த்து மனிதகுலம்
பன்னெடுங்காலப் போராட்டத்தில்
பாதுகாப்பைப் பலப்படுத்தி பக்குவமாய்
பயணித்து வருவதைக் காணலாம்
விலங்குகள் வாழும் காடுகளில் கூட
மருத்துவம் வாழ்வதை காணலாம்
பாம்புடன் கீரி சண்டையிட்டபின்
மூலிகைச் செடியின்மீது புரளுமாம்
அம்மை நோயை கொண்டு வந்தவரை
மாரியம்மன் என்றார்கள் அந்த அம்மை நோயை
அறவே ஒழித்தவர்கள் மருத்துவர்கள்
இதில் யார் உயர்ந்தவர்கள் மாரியா? மருத்துவரா?
மூளை வளர்ச்சியுற்று மொழி தோன்றி சிந்தனை
முனைகள் பலவான போது ஆய்வுகள்
ஆங்காங்கே தோன்றி செயல்கள் பல
அரங்கேறிக் கொண்டிருந்தன!
தலைவலி காய்ச்சல் மூட்டுவலி
முதுகுவலி கண்நோய்கள் என
பல்வேறு சிக்கல்களுக்கு மனிதர்கள்
தீர்வு பெற முயன்று சிலமுறைகளை வகுத்தனர்
தாவரங்களில் நோய் நீக்கும்
தன்மை இருப்பதாக கருதினர்
இலைகளின் வழியாக ஒரு மருத்துவம்
பட்டைகளின் மூலம் ஒரு மருத்துவம்
கொட்டைகள் வேர்களிலும் மருத்துவம் என
முன்னோர் பல முறைகள் கண்டனர்
ஆயுர்வேதம், சித்தா, யுனானி என
பெயரிட்டு பயன்படுத்தினர்
செர்மானிய ஹானிமன் ஹோமியோபதி எனும்
புதுமருத்துவத்தை உருவாக்கினார்
உணவே மருந்தென்றும்
மருந்தே உணவென்றும்
வாழ்ந்த சமுதாயம் ஒன்று
உலகில் வாழ்ந்தது அதுதான்
இனிய தமிழ்ச் சமுதாயமாகும்
ஆயினும் எத்தனையோ முறைகள்
மருத்துவத்தில் எழுச்சியுடன் தோன்றியது
நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் என்ற
வள்ளுவன் மொழி நடந்த மருத்துவம் அது
நோய்கள் தோன்றுவதற்கான காரணிகள்
அதன் அடித்தளம் எது என்பதையெல்லாம்
அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
ஆய்ந்து பார்த்தனர். ஆதினாள் மனிதர்கள்
உடல்நலம் மனநலம் ஆகியவற்றில்
உரிய கவனம் கொண்டு வாழ்ந்தவர்கள்
லிபியர்களும் பின் எகிப்தியர்களும் என்று
சாக்ரடீசுக்கு முன் வாழ்ந்த மாமேதை
ஹெரட்டோ டோட்டஸ் எழுதி வைத்தார்
அதுவும் கிமு மூவாயிரத்து அய்நூறிலே
வாழ்ந்ததாக குறிப்பிட்டார் டோட்டஸ்
மேலும் அர்த்தமற்றதை நம்பாதீர் என அறிவுறுத்தினார்
ஆயிரம் மருத்துவ முறைகள் இருந்தாலும்
அலோபதி எனும் இன்று எளிதாய் விளங்கும்
அற்புத மருத்துவத்தின் தொடக்கம்
கிமு மூவாயிரத்திற்கு முன்னரே எகிப்தில்
தோன்றியதாக வரலாறு உரைக்கிறது
எட்வின் ஸ்மித்தின் பாப்பிரஸ் எனும்
எழுத்து ஆவணம் கிமு மூவாயிரத்தில்
கிடைத்தது என்று மருத்துவ வரலாறு
மகிழ்வுடன் உறுதிப்படுத்துகிறது
கிமு இரண்டாயிரத்தில் அறுவை
எகிப்தில் இனிதாய் நடந்ததாம்
எகிப்தின் மூன்றாம் தலைமுறை
மன்னர்களுக்கு இமோடப் என்பார் ஸ்நைடஸ் நகரில்
மருத்துவம் பார்த்ததாக எகிப்திய மருத்துவக் குறிப்புகள்
இயம்புவது இதயத்தை மகிழ்விக்கிறது
நோயாளிகளை உற்றுநோக்கும் முறை
இங்குதான் உருவானதாம்
ஸ்நைடஸ் எனும் நகரில் முதல் மருத்துவப்
பள்ளி உருவானதாகவும் உரைக்கிறது வரலாறு
மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க
மாமேதையாக கிப்பாகிரிட்டீஸ்
வானளாவ புகழப் படுகிறார்
மரபுவழி நோய், காற்றில் வரும் நோய்
தொற்று நோய் சூழலியல் நோய் என
நாலுவகையான நோய்களைக்
கண்டறிந்து சொன்னவர் கிப்பாகிரிட்டிஸ்
எகிப்திய மருத்துவ வரலாற்றை
எழுதியவர் கிரேக்கத்துக் கிப்பாகிரிட்டீசும்
அவர் வழிநடந்தவர்களும்தானாம்
இதயநோய் நுரையீரல் நோய்களை
கண்டுபிடித்த கிப்பாக்கிரிட்டீஸ்
நவீன மருத்தவத்தின் தந்தையாகக்
தரணியெங்கும் போற்றப்படுகிறார்.
எழுபது நோய்களை பின்னர் இனம் பிரித்து
காட்டினார் இனியவர் கிப்பாகிரிட்டீஸ்
பிளேட்டோவின் பிரதான மாணவன்
மகா அலெட்சாண்டரின் மதிப்பு மிக ஆசான்
மாமேதை அரிஸ்ட்டாட்டில் ஒரு
மருத்துவனின் மகனாகப் பிறந்தவர்
அந்த அரிஸ்டாட்டில் ஆய்வு முறைகளை
அள்ளி வழங்கியதோடு பரிசோதனையும்
செய்து பாருக்கு உரைத்தார்
மீனுக்கு எத்தனை முட்கள்
நாயின் உடலில் எத்தனை எலும்புகள்
என எண்ணிச் சொன்னார் அரிஸ்டாட்டில்
இந்த இனிய மருத்துவத்திற்கு
இஸ்லாமியர்களின் பங்கு ஈடில்லாதது
உடலியல், கண்மருத்துவம், மருந்துகளால்
ஏற்படும் பின் விளைவுகள் அறுவைச் சிகிச்சை
ஆகியவை மருத்துவத் துறையில் மகத்தானது
ஆண்டனிவான் லிவின்கோக் எனும் விஞ்ஞானி
நுண்ணோக்கி மூலம் நோய்க் கிருமிகளை
நுட்பமாகக் கண்டு பிடித்து மைக்ரோ
பயாலஜியை உலகுக்கு அளிக்கிறார்.
கிரிகர் மென்டல் எனும் மாமனிதன்
ஜெனடிக் எனும் புதிய துறையை கண்டார்
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து மூன்றில்
டி.என்.ஏ என்னும் மரபுக் கடத்தியை
கண்டுபிடித்து உலகிற்கு களிப்பூட்டுகிறார்கள்
அய்ரோப்பா அமெரிக்காவின் அறிவாளிகளால்
ஆயிரம் மடங்கு வளர்ந்து மக்களுக்கு
ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது
மூளை வளர்ச்சி உறுப்புகளில் முதலிடம் பெற்று
துறைதோறும் விஞ்ஞானம் வளர்ந்து
வளம்தந்து மகிழ்வை வாரி வழங்குகிறது
சித்தமருத்துவம் சிறந்தது என்றாலும்
சிந்தையில் தங்கவுமில்லை வளம்
பொங்கவுமில்லை காரணம் என்ன?
சித்த மருத்துவம் போல வேறு சில
மருத்துவம் மக்களை கவரவில்லை
காரணம் சில பல கட்டுப் பாடுகளும்
கணக்கில் துல்லியமின்மையும் தான்
அறிவியல் பூத்த அய்ரோப்பாவிலும்
அதன் வழி நடந்த அமெரிக்காவிலும்
ஆய்வுக் கூடங்களில் அற்புதங்கள் விளைந்தது
எதையும் ஏன் எதற்கென்ற ஆய்வுகள்
எண்ணற்ற கருவிகளையும் மருந்துகளையும்
இனிதாக்கி உலகிற்களித்து மகிழ்வித்தது
மருத்துவத்துறைகள் வகை வகையாய்
வளர்ந்து நலமளித்து உய்வித்தது
நோய்கண்டு நொந்துபோய் சாக்காடு
நோக்கிச் செல்லுவோர்க்கு நாளும்
நோயகற்றி சாவைத் தவிர்த்து நலமளிக்கும்
முறைகள் பல மருத்துவத்தில் முன்னேறி வருகிறது
மருத்துவத் துறையில் மகக்தான மனிதர்களாக
வளர்ந்து நலம் தந்தோரை நெஞ்சில்
கொள்வதும் நினைவில் நிறுத்துவதும்
நல்லுணர்வுடன் நன்றி காட்டுவதும்
நெஞ்சுக்கு இனிமை தரும் நேர்மைக்கு சான்றாகும்!
உளவியலையும் இணைத்து உன்னத மருத்துவத்தை
ஊருக்களித்த சிக்மண்ட் ப்ராய்ட்
மனக்கோளாறுகளால் தோன்றிய நோய்களை
நோயாளிகளை உணர வைத்து நலமளித்த
பகுத்தறிவு பண்பாளர் டாக்டர் கோவூர்
காளானில் ஆய்வுசெய்து பத்துக்கும்
மேற்பட்ட நோய்களை விரட்டுகின்ற
பென்சிலினைக் கண்ட அலெக்சாண்டர் பிளமிங்
இதயத்தை மாற்றிவைத்து இறப்பவரை
இறக்கா திருக்கச் செய்த டாக்டர் பெர்னார்ட்
இதுபோல எத்தனையோ மேதைகளை
இதயத்தில் அலங்கரிக்கலாம்.

பகவானுக்கு மரணமில்லை என்பது
மதவாதிகள் கருத்தாகும் ஆனால்
பகவான் இராமகிருஷ்ணர், பகவான் இரமணர், பகவான் சாயிபாபா ஆகியோர் மரணம் அடைந்ததால்
பகவானுக்கு சாவு நிச்சயம் என்பது உறுதியாகிறது

இன்னொன்றையும் உள்ளத்தில்
எண்ணிப் பார்த்தால் இனிமை கிடைக்கும்
கடவுளின் எதிரிகள் மருத்துவர்கள் என
ஆய்ந்தறிந்த முடிவைச் சொன்னார் தந்தை பெரியார்
படித்து கல்வியறிவு அடைந்தோர் கலைகற்றோர்
வாழ்வில் நிலைபெற்றோர் தங்கள் பணிகளை
தொழிலாகக் கருதாது தொண்டாகக் கொள்ளுமாறு
வேண்டினர் அண்ணா அந்த அறிஞரின் கருத்தை
மாண்பாக மரபாக மருத்துவர் கொள்ள வேண்டுகிறோம்.
மருத்துவர் கடவுளின் விரோதிகள் என்றார் பெரியார்
ஆம் கடவுள் படைத்த உறுப்புகள் பழுதாவதுண்டு
உடைந்து நொறுங்கி ஊனமாவதுண்டு
பிரம்மாவின் படைப்பில் பல குறைகள்
பிறப்பிலேயே காண்பதுண்டு அதை
சரிசெய்து நலமாக்கும் மருத்துவர்கள்
கடவுளுக்கு மாறுபட்டவர்கள்தானே
ஆய்வுக்கூடங்களில் வேதியியல் ஆய்வு
முடிவுகளால் வியத்தகு நிலை தோன்றியது
வேதியின் வினைகளால் தானே வேறுபட்ட
பொருள்களும் உயிர்களும் உருவாகிறது
இந்த உண்மையை உரைத்தவரை
மதவாதிகள் ஆண்டவனின் விரோதிகள் என்றனர்
உயிரியல், வேதியியல், இயற்பியல்
இவற்றின் மதிப்பெண்களே கல்லூரியில்
மருத்துவம் படிப்புக்குச் சான்றாகிறது
இதைத்தான் ஓர் எழுச்சிகொண்ட
பேரறிஞன் பெருமையுடன் போதித்தான்
இயற்கையின் பரிணாமம் இவையென்றே
எடுத்துரைத்தான் மன்னனின் மகனுக்கு
இதை கடவுளுக்கு ஆகாதெனக் கூறி
மென்மையான உள்ளத்தைப் பெற்ற
மாசில்லா மாமனிதன்
ஜியார் னாடோபுருனோ என்ற
பெருமகனை எட்டுநாட்கள் தூணில் கட்டிவைத்து
இறுதியாக எரித்துக் கொன்றனர்
மடமை சார்ந்த மன்னனும் மதவாதிகளும்.
இன்று அந்த புருனோ கூறியதே
மருத்துவர்களுக்கு பாடமாகிறது.

அருள்தரும் மகான்களாக ஆலவட்டம் போட்டு
அருள்வாக்கு தந்து அறிஞர்கள் உள்ளிட்ட
ஆயிரம் பேரை தன்காலில் விழ வைக்கும்
ஆசாடபூதிகள் தலைவலி, கழுத்துவலி,
மூக்குவலி, முதுகுவலி என்றால்
மருத்துவர்கள்களின் காலில் விழுவார்கள்
அழகும் எழிலும் அறிவார்ந்த செயல் வடிவமும் கொண்ட
மருத்துவத்தைப் பயில்வோரின் உள்ளம்
அறிவியல் சார்ந்து அமைந்திருக்கிறதா
பெரும்பாலும் இல்லை என்பது தான் உண்மை.
படித்து பட்டம் பெற்று தொழில் தொடங்கி
வளம் பெற்று வாழ்வில் உயர்ந்தபின் கூட
தன் குடும்பச் சுற்றத்தைத் தாண்டி சமூக
உணர்வுள்ளவர்களாக ஆனவர்கள் மிகக்குறைவு
ஆயினும் விதிவிலக்காய் வாழ்ந்த பலரை
நினைவு கொள்வது நெஞ்சை மகிழ்விக்கும்
பார்பனரல்லாதாரின் நலனுக்கும் உரிமைக்கும்
பாடுபட்ட தென்இந்திய நல உரிமைச் சங்கத்தின்
மூலவர் டாக்டர் சி  நடேசனார்
மதவாதிகளால் வீழ்த்தப்பட்டு உரிமை
மறுக்கப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்கு
இடி மின்னலென எதிரிகள் மீது
போர்க்குரல் எழுப்பிய புதுமனிதர்
அயல்நாடுகளில் பொருளீட்டி இங்குள்ள
ஏழைகளுக்களித்துத் தொண்டு செய்த
தரவாட்டி மாதவன்நாயர் என்னும் டி.எம். நாயர்
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
புண்பட்ட பெண் இனத்தைக் காப்பதற்கு
ஆதிக்கவாதிகளை மிரளவைத்த
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
மருத்துவத்தோடு சட்டமன்ற மேலவையில்
எதிர்க்கட்சித் தலைவராக பணிபுரிந்த
டாக்டர் ஏ.எல். முதலியார் ஆகிய
அருமைப் பேராளர்கள் நமது
நினைவுப் பகுதியில் ஒளிவிடுகிறார்கள்
வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு செய்திகளை
நூறு நூல்களில் பதிவு செய்த கோவை மருத்துவர்
நமது நினைவில் நிறைந்து ஒளிர்கிறார்
கல்விப் பற்றிய அறிவில்லாதவர்களின்
கல்வி நிறுவனங்களில் அடிமைகளாய்
பணியாற்றும் பேராசிரியர்களோடு
மருத்துவமே தெரியாதவர்கள் நடத்துகின்ற
மருத்துவமனைகளில் வேலை செய்யும்
மருத்துவ மேதைகளும் விடுதலை பெற வேண்டும்
என்று வலியுறுத்திய ஊடக நிகழ்வுகளையும்
நினைக்க வேண்டுகிறேன்.
கல்வியும் மருத்துவமும் வணிகமல்ல
தொழிலுமல்ல அது தொண்டறத் தூய்மையை
நெஞ்சத்தில் நிலை நிறுத்தும் அறம்சார்ந்த அறிவாலயமாகும்
போலி மருத்துவர்கள் போலி மருந்துகள் என
பொய்மையும் குறைகளும் இருந்தாலும்
மிகுதியான மருத்துவர்கள் மேன்மையானவர்களே
மக்களை நலப்படுத்தும் மாமனிதர்கள் தான்
மக்கள் நலம் பேணுவதற்கும் மாண்புகள்
நிலைபெற்று நெஞ்சை மகிழ்விப்பதற்கும்
மக்களின் மனதில் மருத்துவர்களுக்கு ஒரு
மதிப்புமிகு இடத்தைத் தர வேண்டும்
ஏனெனில் அவர்கள் நோயாளிகளின்
அருகிலிருந்து அவர்களின் துன்பத்தை
துடைக்கின்ற தூயவர்கள் ஆவார்கள்.
வேறுதுறைகளைவிட வேறுபட்டது மருத்துவம்

தொற்றுநோய், தொழுநோய் உள்ளவர்கள்
அழுகிப்புழுத்து அருவருப்பு கொண்டவர்களை
தொட்டுத் துடைத்து மருந்தளித்து
நலப்படுத்தும் மாண்பாளர்கள்
புண்ணாகிப் புலம்புவர்களையும்
புழுத்துக் கிடப்பவர்களையும்
நலமாக்கி நடமாட வைத்த நல்லவர்கள்.
வளர்ந்த மருத்துவத்தின் நாயகன்
கிப்பாகிரிட்டிசையும் நைட்டிங்கேல் பிளாரன்சையும்
நினைப்பது நெஞ்சுக்கு இனிமை தரும்
அதுபோல் மக்களின் நலம் சூழ
மருத்துவர்களை வாழ்த்துவது
மனதிற்கு மகிழ்வைத் தரும்.
குறிப்பு: மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி அமைக்க ஆவன செய்த கலைஞர் தனியிடம் பெறுகிறார்.

*****



கண்ணன் என்றால் வடமொழியில்
வெண்ணை திருடியவனைக் குறிக்கும்!
தங்கத் தமிழில் கண்ணன் என்றால்
கண் ஒளி நிறைந்தவனைக் குறிக்கும்!
கண் அவன் என்பதாலேயே
கணவன் என்றார்கள்
என்பெயரும் கண்ணன்தான்
எனினும் இருவிழியிலும் ஒளி குறைந்து
ஊனமுற்று ஊமை விழி ஆனது
விழியில் ஒளிகாட்ட மருத்துவரை அணுகி
ஆய்வுச் செய்யச் சொன்னேன்
ஒன்று இரண்டு மூன்று நான்கு என
மருத்துவர்கள் கருவியின் துணையுடன்
உற்றுப் பார்த்து முடிவு சொன்னார்கள்
வயது கூடுவதுடன் சர்க்கரையும் கூடியதால்
வழிகாட்டும் விழிகள் பழுதாகியதாம்
கண்புரை எனும் மூடுதிரை விழியை மறைத்ததாம்
மாசு அழுக்கு என்று மற்றவர் கூறினார்
அறுவை செய்து அழுக்குமாசுதனை
அகற்றிவிட்டு ஒளி தருவோம் என்றனர்
சரிஎன்று கூறி ஒரு கண்ணை கோவை
மருத்துவமனையில் நலப்படுத்தினர்
ஒளியேற்றி கலைகாட்டும் காட்சிகளை
காணவைத்து களிப்பூட்டினர்
இன்னொரு கண்ணிலும் இருள்சூழும்
இடர்நிலை கண்டு கலங்கியது
மதுரை கோவை நெல்லையில் உள்ள
மருத்துவமனைகள் சிலவற்றில் விழியின்
மருள்நீக்கும் ஆய்வுகளை மேற்கொண்டேன்
ஆய்வு முடிந்தபின்னர் அறத்தன்மைக்கு மாறாக
நிபந்தனைகளை கூறி நெஞ்சைப் புண்ணாக்கி
புலம்ப வைத்தனர் மருத்துவமனை நிர்வாகத்தினர்
நியாய மற்றதை என் நெஞ்சம் ஏற்கவில்லை
அதனால் நெல்லை அகர்வால் மருத்துமனையை
அணுகினேன் அறுவை செய்து
அன்பு விழிக்கு ஒளியேற்றினேன்
நெல்லை அகர்வால் கண் மருத்துவமனையில்
ஒளிர்ந்த சொற்றொடர் ஒன்று என்
உள்ளத்தை அள்ளியது உற்சாகமூட்டியது
“உங்கள் கண்களின் மதிப்பை
நாங்கள் அறிவோம் என்றும்”
கண் தானம் செய்யுங்கள் காலமெல்லாம்
வாழ்வீர்கள் என்னும் வாசகமும்
என்னில் நுழைந்து இனிமையூட்டியது
அறுவைக்கு ஒரு கிழமை இருந்த போது
கண்கள் பற்றிய செய்திகளை
தித்திப்பு உணர்வுடன் தேடினேன் திரட்டினேன்
அறிஞர்கள் எழுதியதையும்
அறிவியல் உருவாக்கியதையும்
கவிஞர்கள் பாடியதையும்
தமிழ்த்தாய் பாடிய தாலாட்டையும்
பார்புகழும் பழமொழிச் சுவைகளையும்
ஓரிடத்தில் குவித்து வைத்து
உங்கள் முன் படைப்பதில்
உள்ளம் நிறைவடைகிறேன்
கோவை மருத்துவமனை பணியாளர்கள்
எனக்களித்த உதவிகளைப் பாராட்டி
நன்றி கூறி நல்வாழ்த்தை தரவும்
எட்டு பக்கக் கவிதை சிமிழ் ஒன்றை
அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்
அதுபோலவே இதிலுள்ள செய்திகளையும்
அகர்வால் மருத்துமனை தோழா-தோழியருக்கு
அனுப்பி வைக்க முடிவெடுத்தேன்.
கண்ணின் பெருமைகளை
கருத்தில் கொள்வோம்
கண்கள் ஒரு காவியப் பேரழகு
கண்கள் ஓர் ஓவியச் சிறப்பழகு
கண்கள் உடலின் ஒளிவடிவழகு
கண்கள் பேசும் என்று பல கவிஞர்கள்
பாடி மகிழ்ந்து பரவசமடைவதுண்டு
பேசு கண்ணே பேசு என்று என்றும்
பிரிய சகியே பேசு என்றும்
கட்டழகு கண்ணா என் கண்ணே என்றும்
காதலர்கள் கொஞ்சி மகழ்வதுண்டு
கண்ணே உறங்கு கான மயிலுறங்கு
பொன்னே உறங்கு பூமரத்து வண்டுறங்கு என
பெற்றவள் தாலாட்டில் பெருமை பொங்குவதுண்டு
எண்ணென்ப ஏனை எழுத்தெனப்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு என
வள்ளுவன் கண்ணை வாழ்த்தினான்
என்னும் எழுத்தும் கண்ணெனத் தகும் என
அவ்வை பெருமாட்டி அழுத்திச் சொன்னாள்
கண்ணகியின் கனல் தெறிக்கும்
அவள் நீள் விழியை காண மாட்டாது
நெடுஞ்செழியப் பாண்டியன்
நிலத்தில் வீழ்ந்தான் என்று சிலம்பு
விழியின் வீரத்தை விளக்குகிறது
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள் என்று
வில்லொடித்து மணப்பதற்கு முன்னரே
விழி கலந்து காதலில் வீழ்ந்தனர்
இராமனும் சீதையும் என்று
கம்பர் இலக்கியசுவை கூட்டினார்
அண்ணலும் அவரும் நோக்கியதை
அருகிலிருந்த முனிவரும் நோக்கினார்
என்று நமது அருமைக் கலைஞரும்
கம்பன் பாடலுக்கு கலை மணம் தூவினார்
வேட்டையாடும் வேடன் ஒருவன்
காட்டில் கண்ட ஒரு சிலையை கடவுள் என்று
தன் கண்ணெடுத்து அப்பியதால்
கண்ணப்பன் நாயனார் ஆனார்
இலியட்-ஒடிசி இனிய காவியங்களை
இசைக்கூட்டிய கிரேக்கக் கவிஞன்
இருவிழியும் இல்லாத குருட்டு ஹோமர்
எழுதிப் படிக்க இயலவில்லை இது கொடுமைதானே
கண்களற்ற திருதராஷ்டிரன்
தீமைகளை தடுக்க இயலவில்லை
கண்ணற்றவனுக்கு வாழ்க்கைப்பட்டதால்
கண்ணைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தாள் காந்தாரி
ஒளி படைத்த கண்ணினாய் வா என்றும்
உன் கண்ணில் நீர் வழிந்தால் எனவும்
என கண்ணின் பாவையன்றோ என்றும்
கண்ணம்மா என் காதலி யென்றும்
பாடிப் பரவசமடைந்த பாரதி
கண்ணில்லையோ கருகத் திருவுளமோ
என்று இரஷியப் புரட்சிக்கு துணைசெய்து
இலெனின் எனும் மூடனுக்கு துணிவூட்டிய
தன் மனம் நேசித்த பராசக்திக்கு
இந்திய விடுதலைக்கு அவர் இதயம்
இரங்கவில்லை என்று வருந்திச் சாடினான்
வற்றாத புகழ்கொண்ட புதுமைப் பாரதி.
கண்ணிகடை விழி காட்டி விட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்
வேல் விழியாலே என விலாவைக் குத்தாதே
கண்ணடைத்து அழைத்தால் கட்டழகி என்றும்
கடிகாரத்து முள் போலே ஒரு
கண்ணல்ல காலத்தை வெல்ல
கல்வியை நாடு என்றெல்லாம்
கண்களை கவிதையாக்கினார் பாவேந்தர்.
குண்டூசிபோலே இரண்டு கண்ணும் உள்ளவளாம்
என் கண்ணைக் கொஞ்சம் பாரு
உன் கண்ண அதில்சேரு கண்ணாளா
என் கண்ணாளா என்றெல்லாம்
மாறாத புகழ் கொண்ட மருத காசி பாடினார்
விழியாலே காதல் கதை பேசு
கண்ணில் வந்து மின்னல் போல் தோன்றுதே
காவியக் கலையே ஓவியமே
கண்ணுக்கு மேலாடை காவல்தரும் இமைகள்
உவமைக் கவிஞர் சுரதா ஊட்டினார் தமிழ் சுவையை
கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே
உனைக் காவல் காக்கும் தோழியரோ
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர்
பட்டுக் கோட்டையின் பார்வை இது.
கண்ணருகே தோன்றினாள்
காதளவு கண்கள் காலளவு கூந்தல்
கண்மலர்ந்த வேளையிலே பெண் பிறந்தாளே
கண்ணான கண்ணனுக்கு தெரியலையோ
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவர் கண்டாலே காதல்
இமையும் விழியும் எதிரானால்
இயற்கை சிரிக்காதா?
கண்ணதாசன் கவிதைச் சரம் கோர்தார்.
கண்ணருகே பெண்மை குடியேற
கையருகே இளமை தடுமாறப்
அத்தைமடி மெத்தையடி
அல்லிவிழி தூங்கம்மா என
வாலி கவிதை வனப்பைக் காட்டினார்.
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே என
வைரமுத்து வர்ணித்தார்.
கண்களின் வார்த்தை தெரியாதோ
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணும் கண்ணும் பேசுது
காணாத இன்பம் காணுவது என
கவிஞர்கள் பாடி வைத்தார்கள்
கண்ணாயிரத்தின் உலகம்
கபோதிபுரக் காதல் என்பது
அண்ணாவின் எழுத்தோவியம்
பூனைக் கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகமே இருண்டு போகுமா
வேல் விழி மாதரை வீரர்கள் வென்றார்கள்
என்பதற்கு சரித்திரத்தில் சான்றில்லை
இளவரசி என்றும் கண்ணடக்கம் ஓவியம் எழுதி
தமிழுக்கு அழகு சேர்ந்தார் கலைஞர் அவர்கள்
பேசு கண்ணே பேசு என்று உரையாடலும் தீட்டினார்.
மூன்று கண் மிருகம் ஒன்று வாழ்ந்ததாக
புவியியல் ஆய்வுகள் கூறியதுண்டு
மூன்று கண் கடவுளை வணங்குவதுண்டு
முக்கண்ணில் ஒன்றிலிருந்து
முருகன் பிறந்ததாக கதையுண்டு
மூளையின் முகமே கண்கள் என்று
அறிவியலார் ஆய்ந்த முடிவொன்று உண்டு
கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்
ஓரப் பார்வை உயிரை உருக்கும்
உடல் உறுப்பில் உயிருக்கு இணையானது
கலை கொஞ்சம் இரு கண்கள் தானாம்
கண்ணில்லை என்றால் கருத்துக்கள் இல்லை
கருத்து இல்லை எனில் வாழ்வில்லை தானே!
விண்ணையும் மண்ணையும் வேறுபடுத்தி
உணர்த்துவது விழியின் ஆற்றல்தானே
கண்ணே மணியே என்று தன் காதலியையும்
தன் கைக்குழந்தையையும் கொஞ்சுவதுண்டு
விரிவானில் தோன்றும் விண்மீன் ஒளியை
விழிகளின்றி வேறது காட்டும்?
கறுப்பும் சிவப்பும் கவரும் பச்சையும்
மஞ்சளலெல்லாம் கண்ணன்றி வேறெது காட்டும்
பாடிப் பறக்கும் பறவையையும் பசுமைக்கூட்டி
பரவசமூட்டும் காட்சிகளையும் மனதில்
பதிய வைத்தும் குடிவைப்பது கண்கள் தானே!
பெரிய யானைக்கு கண்சிறிதென்றாலும்
பார்வையின் ஆற்றல் பெரிதல்லவா?
முல்லைக்கு தேர்தந்த பாரியின் கொடை
அந்தப் பூங்கொடியைக் கண்டதால்தானே!
மயிலுக்கு போர்வை தந்த பேகனும்
அந்தப் பறவையின் முகத்தை கண்டதால்தானே!
தாய்மொழி அழிந்தால் அது விழியிழந்த
நிலை போன்றது என்பது உரிமைக்கும்
உவமை காட்டுவது உணர்ச்சி மிகு விழிதானே!
அருள்பார்வை என்பது பண்புகளின்
உச்சம் என்றே உயர்ந்தோர் கூறுவர்
உடலின் நோவுகண்டு உருகுவது கண்கள்தான்
கலை கொஞ்சும் கண்கள் பேசும் என்றனர் கவிஞர்கள்
மூளையின் வெளித்தோற்றம் கண்கள் என
வியந்து சொன்னார்கள் விஞ்ஞானிகள்
கண்களைப் பற்றிய காட்சிகளும் கருத்துகளும்
கலைவடிவமிக்கவிதை செழுமைகளை
இங்கு எழுதிட இடம் போதாது ஏடு கொள்ளாது
கருவிழியின் ஒளிவட்டத்தில்
இடர்பாடுகள் ஏற்படுவதுண்டு
ஊனமுற்ற கண்கள் ஊமையானதுண்டு
கண்ணொளி குறைந்து கவலை தருவதுண்டு
பேசாத விழியால் பெருமைகள் குறைவதுண்டு
விழியின் பெருமை அறிந்த விற்பன்னர்கள்
ஒளி கூட்டுகின்ற கருவிகளாம் ஆடிகளை
உருவாக்கி கண்களுக்கு மெருகூட்டினர்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
இரு கண்களில் ஆடி அணிந்தனர் சீனர்கள் என
உலகப் பயணி, மார்க்கோ போலோ எழுதி வைத்தார்
ஆயிரத்தில் முன்னூரில் இத்தாலியர்கள்
விழியில் ஒளிகூட்டும் கண்ணாடி அணிந்தனர் என்று
எழுத்தாளர் ஒருவர் எழுதி வைத்தார்
ஜோகன்னஸ் கெப்ளர் என்றும் விஞ்ஞானி
தூரப்பார்வை கிட்டப் பார்வை என்பது
கண்களுக்கு உண்டென கண்டு பிடித்தார்
ஆயிரத்து எண்ணூற்று அய்ம்பதாம் ஆண்டு
கண்களுக்கான முதல் நிறுவனம் தோன்றியது
அடுத்த ஆண்டுகளில் கண்கல்லூரி உருவானது
அதற்கு பின்னர் இங்கிலாந்து பள்ளி உருவானது
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதில்
முதல் குவி ஆடியை (காண்டக் லென்ஸ்) பொருத்தினர்
இன்று கண்ணாடிகளும் சட்டங்களும் (பிரேம்)
கலை காட்டும் வடிவிலெல்லாம்
காட்சியாக களிப்பூட்டுகிறது.
என் கண்களில் ஒளியேற்றிய
அகர்வால் கண்மருந்துவமனையிருக்கும்
உண்டால் கண்நோய்கள் வராது என்று
நேர்மையுடன் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது
மருந்தே உணவாகவும் உணவே மருந்தாகவும்
உண்டு வாழ்ந்த தமிழர் வாழ்க்கை முறை
உயிரில் உணர்வில் நிறைந்து மகிழ்வித்தது
கண் நோய் கண்டு கலங்கி வருபவர்களை
கனிவுடன் வரவேற்று அமர வைத்த
கண்கொள்ளாக் காட்சி களிப்பூட்டுகிறது
கலைக்கூடத்தில் ஒளிரும் மெழுகுச் சிலைகளாக
காட்சிதரும் செவிலியர் தங்கங்களும்
கண் நிறைந்த பிறபணியாளர்களும்
கண்ணன் வாங்க, கண்மணி வாங்க, கவிதா வாங்க
கலையரசி வாங்க பொன்முடி வாங்க
பூங்கொடி வாங்க என சோலைக்குயிலாய்
இசையெழுப்பி இருப்பவரை அழைத்து
ஆங்காங்கே உள்ள அறைகளுக்கு
அழைத்துச் சென்று சிகிச்சைக்கு
உட்படுத்தி நலமளித்த காட்சிகள்
என்றென்றும் இதயத்தில் நிறைந்திருக்கும்
எழிலார்ந்த அழகிய காட்சியாகும்
எல்லோரையும் போல என்னையும்
பலவித பரிசோதனைகள் செய்து
கண்புரை அகற்றி கலக்கம் தீர்த்தனர்
டாக்டர் லயனெஸ்ராஜ் விழிகளில் நிறைந்து விட்டார்
முதல் சோதனை செய்த அதுல்தாவன் நன்றிக்குரிய நல்லவர்
அறுவைச்சிகிச்சைக்குப்பின் சோதனை செய்த
பூவிரித்த இதழில் புன்னகையோடு
தாயன்பு ஒளிரும் அருள் கண்களால்
மருத்துவர் பிரீத்தி பார்க்கும் பார்வையால்
நோய்கள் பறந்தோடும்.
நோயாளிகளை அன்புடன் அணுகும்
அருமை நிறைந்த மருத்துவர் பிரீத்தி
நினைவில் நிரந்தரமாய் ஒளிர்கிறார்
அன்பின் நிழலாய் அமைந்தவர்கள்
சுகன்யா, உமா, சரண்யா, சுமி, முத்துலட்சுமி
சுப்புலட்சுமி, கவுரி - கவுரி, கீதா, வனிதா
பியூலா, செய்கீலி, நித்யா, பத்மா, தங்கராணி, இசக்கி மற்றும் மருத்துவமனை பணியாளர்களுக்கும் மேலாளர் கார்த்திக் இராசா
அவர் உதவியாளர் மனோகரன், கார்த்திக், சிவாவும்
பணியாளர்களுக்கும் எமது நன்றி
கற்சிலைக்கு கண் மலர் சாத்திய பிறகே
கடவுளாகும் என்பது சிற்ப சாத்திரமாகும்
இருண்ட கண்களுக்கு ஒளி தரும் வழிகளை
இயற்றிய விஞ்ஞானிகள் எல்லாம்
எதிரில் தோன்றும் கடவுள்கள் தானே
கண்களை திறந்து பார்வை தந்தவர்கள்
கடவுளுக்கு மேலானவர்கள் தானே ஆனால்
நான் நாத்திகள் என்பதால் நன்றி காட்டும்
நல்ல நெஞ்சத்தை இவர்கள் முன் காட்டுகிறேன்.
நன்றி வாழ்க நலம்.

No comments:

Post a Comment