Saturday, 30 April 2016

பள்ளி, பல்கலைக்கழக பாடமாக வேண்டும்

பள்ளி, பல்கலைக்கழக பாடமாக வேண்டும்

1949ல் பிறந்த திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு பிரச்சார உத்திகளோடும் சனநாயக உணர்வுகளுக்காக வகைவகையான போராட்டங்களை நடத்தி மக்களாட்சி மாண்புகளுக்கு மாறான அடக்கு முறைகளுக்கு உள்ளாகி இலட்சக்கணக்கான தொண்டர்களோடு தலைவர்களும் சிறைக்கோட்டம் சென்று பல்வேறு இழப்புகளை ஏற்று மக்களை தன்பக்கம் ஈர்த்து 1967ல் ஆட்சியில் அமர்ந்த திமுக, அண்ணா - கலைஞர் தலைமையில் தனது ஆட்சித் திறத்தால் நிர்வாகச் சீர்மையால் சீரிய திட்டங்களால் பெருகிவந்த தமிழ் மக்களுக்கு அளப்பரிய வாழ்க்கை வசதிகளை வாரித் தந்தது.

சங்ககாலம், இடைக்காலம் பின்னர் வந்த கால வரலாற்றுத் தரவுகளோடு 17ம் நூற்றாண்டில் விளைந்த விஞ்ஞானப் புதுமைகளையும் அகத்துறை சார்ந்த பல செழுமைகளையும் விளக்கிய திமுக, ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்து தமிழர்களின் புறவாழ்வு, பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் நிலைகளை உருவாக்கி நெஞ்சினிக்கும் வளங்களை வழங்கி வரலாற்றில் நிமிர்ந்து நிற்கிறது.

பெரியார் அண்ணா வழி நடந்த கலைஞர் அவர்கள், கட்சியையும் ஆட்சியையும் இயக்கியமுறை விஞ்ஞானிகளையே வியக்க வைக்கும். மாவட்ட - மாநிலத் திட்டக் குழுக்களை ஏற்படுத்தி ஆங்காங்கேயுள்ள மூலப்பொருட்களை கண்டறிந்து அதற்கேற்ற திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வந்தார்.

அடுத்தடுத்து அவரது ஆட்சி தொடர்ந்திருந்தால் தமிழகம் அய்ரோப்பா போல அமெரிக்காபோல ஆகியிருக்கும் ஏன் அதற்கு மேலேயும் சென்றிருக்கும். தமிழர்கள் இடையிடையே ஆக்கமில்லாதவர்களையும் ஆசைமனம் கொண்டவர்களையும் உழைக்காத உல்லாச மனிதர்களையும் நம்பி ஆட்சியைக் கொடுத்ததால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்.

அளப்பரிய முன்னேற்றம் காண வேண்டிய தமிழகம் அய்தாண்டுக்கு ஒரு முறை அய்ம்பதாண்டு பின்னடைவைச் சந்தித்து வந்திருக்கிறது. கடந்த அய்ந்தாண்டுகளில் ஏற்பட்ட இழப்பை எண்ணிப் பார்த்தால் நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் நெஞ்சம் நடுங்கவே செய்யும். பொய்களை நம்பும் தமிழர்கள் உண்மைகளை உணர்வதில்லை, உள்வாங்குவதில்லை, உற்றுப் பார்ப்பதில்லை. இனியாவது ஊனமுற்றவர்களையும், , உதவாக்கரைகளையும் புறக்கணித்து உழைப்பவர்களை ஆதரிப்பார்கள் என்று நம்புவோம்.

கடந்த கால நலிவுகளை நீக்கும் வகையில் 2016 தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டிருக்கிறது. வெளியிட்ட தலைவர் கலைஞரின் விளக்கத்தை உணர்ந்து உள்வாங்குவது அனைவரின் கடமையாகும்.

அந்த தேர்தல் அறிக்கையை நோக்கினால் உள்ளம் உவந்து மலர்ந்து உற்சாகம் கொள்ளும். அந்த அறிக்கையில் கலைஞரின் முன்னுரையோடு மொழிப் பயன்பாட்டில் நாலு தலைப்புகள், ஈழத் தமிழர் நல்வாழ்வு, மதுவிலக்கு, நிர்வாகச் சீர்திருத்தம், வேளாண்மை, நீர் மேலாண்மை, காவிரி நீர்ப் பங்கீடு, சேதுசமுத்திரத் திட்டம், கச்சத்தீவு எனத் தொடங்கி இறுதியில் பொது எனும் தலைப்பில் ஒட்டு மொத்த தமிழக நலன்கள் விரித்து, விவரித்து விளக்கப்படுகிறது. அறிவின் வெளிப்பாடாகத் திகழும் இந்த அறிக்கை திமுகவின் இயல்புக்கேற்றவாறு அமைந்திருக்கிறது.

விஞ்ஞானப் பார்வையில் வெளி வந்திருக்கும் இந்த அறிக்கையை பள்ளிக் கல்வித் துறையும், உயர் கல்வித் துறையும் மாணவர்களுக்கு பாடமாக வைத்தால் எதிர்காலத் தமிழர்களின் வாழ்வு மேலும் மேலும் மேலோங்கி வரும்.
அய்.நாவின் அறிவுப்புகளை இணைத்து வழங்கியிருக்கிறது இந்த தேர்தல் அறிக்கை. விஞ்ஞான பேரவையின் விரிவான விளக்கத்தையும் விஞ்சியிருப்பதாகவே கருதத் தோன்றுகிறது.

திமுகவை குறைசொல்லும் யாராக இருந்தாலும் திமுகவின் தரவுகளோடு அதன் பாணியோடு தங்களை வெளிப்படுத்தி பொது வாழ்வுக்கு வந்தார்கள். பின் திசைமாறிய பறவைகளாய் ஆனார்கள். கண்ணியமற்ற வெளிப்பாடுகளால் தங்களைக் களங்கப்படுத்திக் கொண்டார்கள்.  தங்களைத் தாழ்த்திய சாதிமத உணர்வுகளை தன் தலைமேல் வைத்துத் தரம் தாழ்ந்தவர்கள் தலை கவிழ்ந்தார்கள். பொறுப்பற்ற நிலைகளுக்குள் தங்களைச் சிறைப்படுத்திக் கொணடார்கள்.

தரம் தாழ்ந்தவர்களின் பட்டியலை வெளியிடுவதென்றால் நீட்டோலைகள் நிறைந்துவிடும். இங்குள்ளோரில் அகமும் புறமும் தூய்மை துலங்குகிறது என்றால் அது திமுகவால் ஏற்பட்டதாகும். பொய்மையும் புண்மையும் தழுவி நிற்கிறது என்றால் அது ஆயிரமாண்டு சமய அழுக்குகள் இவர்களைவிட்டு அகலவில்லை என்றே தோன்றுகிறது.
தன் கையில் கிடைக்கும் ஒவ்வொரு பைசாவையும் வெளிப்படையாய் வெளிப்படுத்தும் கலைஞர் மீது களங்கம் சுமத்துவது சரியா? படத்துறையில் முக்கால் நூறு படங்களுக்கு உரையாடல் எழுதியவர். அம்பதாண்டுகளுக்கு முன்னர் படத் தயாரிப்பாளராகி படங்களைத் தயாரித்து எம்ஜியாருக்கும் செயலலிதாவுக்கும் ஊதியம் வழங்கியவர் தன் குடும்பத்தைக் காக்க ஊழல் செய்வாரா? என்று சிந்திக்க வேண்டாமா.

கலைஞர் வாழ்க்கை உழைப்பால் இணைந்தது. ஊருக்கு உழைப்பதை உயிரணுக்களில் இணைத்து வைத்து சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்க வேண்டிய நிலையில், ஊரூராய் ஓடிச்சென்று உழைக்கும் உள்ளத்தை போற்றவில்லையென்றால் அது உள்ளம் அல்ல. ஊனமுற்ற ஒரு உறுப்புதான் என்பது உண்மையாகும்.


இந்திய அரசியல் சட்டத்தின் சிறு சுண்டக்காய் அதிகாரத்தை வைத்துக் கொண்டு மத்திய அரசின் முழு ஆதரவோடு இயங்கும் மாநில அரசுகளோடு தமிழகத்தை இணைத்த கலைஞர் சாதனையாளர் அல்லவா? எண்ணிப் பார்க்க வேண்டியது இங்குள்ளோரது கடமையாகும்.

No comments:

Post a Comment