Wednesday, 4 May 2016

மீண்டும் மீண்டும் பீனிக்ஸ்

மீண்டும் மீண்டும் பீனிக்ஸ்
   கிரேக்க புராணத்தில் நமது வானம்பாடியைப் போன்ற வண்ணப்பறவை பீனிக்ஸ். அந்தப் பறவையின் பெருமை பேசும் குறிப்புகள் தென்படுகின்றன. பற்றி எரியும் தீக்குண்டத்தில் பாய்ந்த அந்தப் பறவை உயிர்பெற்று எழுவதாக கூறப்படுகிறது. எரிந்து சாம்பலாகி விட்டது என்று எண்ணப்பட்ட அந்தப் பறவை உயிருடன் பறப்பதாகச் சொல்லப்படுவதை உலக அரங்கில் தோல்வி கண்டு சோர்ந்து துவண்டு போனவர்கள் மீண்டும் எழுச்சி கொண்டு எழுந்து வந்ததிற்கு சான்றாக இந்தப் பறவையை அடையாளம் காட்டுவது உண்டு.
   இந்தப் பீனிக்ஸின் உதாரணம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ? இங்கே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சாலப் பொருத்தமாகும்.
    1949ல் தொடங்கிய தி.மு.க. பல்வேறு தரவுகளை, தமிழ் தமிழர் சார்ந்த உணர்வுகளைப் பதிவு செய்து வந்தது. 1967ல் ஆட்சியில் அமர்ந்து தொடர்ந்து ஏறுநடை போட்ட தி.மு.க. எம்ஜியாரை வைத்து கழகத்தை பிழந்ததால் அதுவும் தி.மு.க. போல கட்சியின் பெயரிலும் கட்சிக் கொடியிலும் ஒரு போலித் தோற்றத்தைக் காட்டியதால் மயங்கிய மக்கள் தங்களின் மனதை போலியான மினிமினுப்பில் வைத்தார்கள். விளைவு? நலிவுகளுக்குள் சிக்கிச் சிதைந்தார்கள்.
  காரணமில்லாத கவர்ச்சியில் சிக்கியதால் போலிகளின் பொய்யுரைகளில் மனம் பதித்தார்கள். கட்சியிலும் கொடியிலும் அண்ணாவை இணைத்த எம்ஜியாரை நம்பி பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியை ஒப்படைத்தார்கள். பழிவாங்கும் போக்குடைய அந்த நடிகர் தான் வளர்த்த தி.மு.க.வை ஒழித்திட தகாத வழிகளையெல்லாம் கையாண்டார்.
திராவிட இயக்க செழுமைகளை தன்னகத்தே கொண்ட தி.மு.க.வை ஒழிக்க இங்குள்ள பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாகக் கருதுகின்ற கூட்டமும் வணிக மனம் கொண்ட - கொண்டவர்களின் குழுவும் நடத்துகின்ற ஊடகங்கள் இன்று போலவே அன்றும் இயங்கின. மிசாவின் கொடுங்கரங்களால் நெறிக்கப்பட்ட தி.மு.க. தீயில் கருகிய பொருளாக சித்தரிக்கப்பட்டது.
    அந்த ஊடகங்கள் தி.மு.க. எனும் கட்சி தீயில் விழுந்து எரிந்து சாம்பலாகி விட்டது என்றார்கள். இந்தியாவிலுள்ள நீதி, நிர்வாக அரசியல் ஊடகங்களில் உள்ள வெறிகொண்ட மேட்டுக்குடியினரின் பல்வேறு சதி முயற்சிகளை முறியடித்து, தலைவர் கலைஞரின் உழைப்பால், தியாகத்தால் தித்திக்கும் தி.மு.க.வின் தியாக தொண்டர்கள் கலைஞர் பின்னால் அணிவகுத்து நின்றதால் சாம்பலில் இருந்து சிறகடித்துப் பறந்த பீனிக்ஸைப் போல் 1989ல் பறக்கத் தொடங்கியது. மீண்டும் மத்திய அரசின் சட்ட விரோதப் போக்கால் ஜனாதிபதி வெங்கட்ராமனின் அறம் இல்லாத அடாவடித் தனத்தால் பீனிக்ஸைப் போல் மீண்டும் கழக ஆட்சி தீயில் எறியப்பட்டது. 1991ல் ராஜீவ் காந்தியின் கொலைக்குப்பின் நடந்த தேர்தலில் கழகம் தோற்றடிக்கப்பட்டது. கலைஞரைத் தவிர யாரும் வெற்றிகாண இயலாமல் போய்விட்டது.
     அப்போது தி.மு.க.வை நெருப்பில் எரிந்து விட்டதாகவே சொன்னார்கள். கலைஞரின் உழைப்பு முயற்சியால் அடுத்து வந்த அய்ந்தே ஆண்டுகளில் பீனிக்ஸைப் போல சிறகடித்துப் பறந்தது.
   அடுத்த அய்ந்தாண்டுகளில் பழைய பிரச்சாரமும் பிழைப்பு மனம் கொண்ட சில கட்சிக்காரர்களாலும் 2001ல் தி.மு.க.வை தோற்கடித்து தீயில் எறிந்து விட்டதாக கொக்கரித்தார்கள்.
   அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற புது வரலாறு படைத்தது. எரிந்து கொண்டிருந்த தீயிலிருந்து பீனிக்ஸ் போல அரசியல் வானில் ஆளுமை காட்டியது. அடுத்து வந்த 2006ல் மீண்டும் ஒரு அருமையாய் தமிழ்நாட்டு அரசில் அமர்ந்து வரலாறு படைத்தது. அடுத்து 2011ல் நடந்த தேர்தலில் பிழைப்பு மனம் கொண்ட கட்சிகளாலும் உறவாய் இருந்த சிலரது ஊடலாலும் மீண்டும் கழகம் தோற்கடிக்கப்பட்டு எதிர்க்கட்சி தகுதிகூட இல்லாத நிலை ஏற்பட்டது. மீண்டும் பழைய நிலையிலேயே தீயில் எரிந்து விட்டதாக கூறி மகிழ்ந்தார்கள்.
    இன்று நடக்கவிருக்கும் தேர்தலில் ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தால் இங்குள்ள பல கட்சிகளை வளைத்து ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர்களால் உருவாக்கப்பட்ட புதுபுது உத்திகளால் வீழ்த்த திட்டமிட்டு நடக்கும் பிரச்சாரத்தைத் தாண்டி இன்று எழுந்திருக்கின்ற தி.மு.க.வின் ஆதரவு அலை பீனிக்ஸை மீண்டும் நினைவு படுத்துகிறது.
   நெருப்பில் எரிந்தாலும் நீரில் அமிழ்ந்தாலும் மண்ணில் புதைந்தாலும் மீண்டெழுந்து வானமளவு தனது வல்லமையை நிரூபித்து வந்திருக்கிறது, வருகிறது. இனிமேலும் இதுபோன்ற நிலைகள் வந்தால் அப்போதும் பீனிக்ஸ் எனும் வானம்பாடியாய் அரசியல் வானில் வலம் வரும்.
  காரணம் திராவிட இயக்கச் செழுமைக் கொள்கையையும் அதற்காக பெரியார், அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களைப் பின்தொடர்ந்த பேராளர்களின் உழைப்பும், உறுதியும் மக்களிடம் பதிந்த உணர்வும் என்றும் அழியாத இயற்கையின் வேதியைப் போல இந்த மண்ணில் நிலைகொண்டிருக்கும். நீடித்து வளர்ந்து கொண்டிருக்கும்.
    தீயில் எரிந்த பீனிக்ஸைப் போல மீண்டும் மீண்டும் தி.மு.க. உயிர் பெறும் உரம் பெறும் என்பதே வரலாறு. விழுவது எழுவதற்காகத்தான் என்பதும் விதையை புதைப்பது முளைப்பதற்காகத்தான் என்பதும் இயற்கையானதாகும். இயற்கையாகவே பிறந்து வளர்ந்த தமிழைப் போல அந்தத் தமிழை இதயமாகக் கொண்ட தி.மு.க.வும் எழில் இணைந்த இயற்கையான இயக்கமாகும். அந்த இனிய இயக்கத்தை சரியாக, முறையாக உளத் தூய்மையோடு புரிந்து கொண்டால் தமிழும் தமிழர்களும் புதிய உலகிலும் புகழ் பெறுவார்கள்.

No comments:

Post a Comment