நீயா? நானா?
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், நலம்சூழ வாழ்த்துக்கள்.
ஏழெட்டு மாதங்களுக்குப் பின் இனிய தலைப்பு ஒன்றில் கருத்துகளைத்
தெரிவிக்க அழைத்த நீயா? நானா?வுக்கும் தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தங்கள் முன்
நிறுத்துகிறேன்.
நினைத்ததெல்லாம் பேசமுடியாத நிலைக்குள் நீயா? நானா? நிறுத்திவிடும்
நிலை இருக்கிறது. பேசியதெல்லாம் முழுமையும் ஒளிபரப்ப இயலாத சூழலும் நீயா? நானா?வை சூழ்ந்து
நிற்கிறது.
இதுபோன்ற நல்ல நிகழ்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்தினால், நீயா?
நானா? காலத்தால் அழியாத காவியமாய், வரலாற்றை வண்ணப்படுத்திக் கொண்டிருக்கும்.
கருத்துகளை வெளியிடும் உரிமைக்கு விஜய் டிவியில் தடையில்லையென்றால்
வேறுவகை சிரமம் இல்லையென்றால் தங்கள் இருவரின் உள்ளத்தில் உறைந்திருக்கின்ற உணர்வுகளை
உண்மைகளை இன்னும் தெளிவாகவும், வலிவாகவும் வெளிப்படுத்தலாம் என்று கருதுகிறேன்.
நிகழ்ச்சிக்கு முன் நெஞ்சோடு தழவி வாழ்த்துச் சொன்ன தாங்கள்,
மொழிந்த சொற்றொடரை எண்ணிப் பார்க்கின்றேன். இதய நன்றியைப் பதிவு செய்கிறேன்.
ஆம் பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தார்கள் என்ற பொய்மையை உடைத்தெறிய
வேண்டுமென்று தாங்கள் கூறியது செவியில் தேன்பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.
அரிவிந்த் நீலகண்டனுக்கு பதில் சொன்னபோது திரு.கோபி அவர்கள்
அமர்ந்த நிலையில் தன் இடது கை ஆட்டி ஆட்டி இன்னும் வேகமாக கடுமையாக சொல்லும்படி சைகை
காட்டியது நினைவில் நிறைந்த மறக்கமுடியாத ஒன்றாகும்.
உங்கள்
அனுபவத்தில் உள்ளதைச் சொல்லுங்கள் என்று ஆணையிட்டதால் என்னைப் பற்றி அனைத்தும் சொன்னேன்.
தி.மு.க.வில் பல பொறுப்புகளில் இருந்து உழைத்த நாட்களில் மூன்ற உணவகங்களை மாற்றுக்
கட்சிக்காரர்கள் சூரையாடினார்கள். அதற்காக கட்சியில் எந்த உதவியையும் கேட்டதில்லை.
கடன்பெற்று மீண்டும் தொழில்நடத்தி வளர்ந்தேன் உயர்ந்தேன் ஆயினும் கட்சி ஆர்வத்தால்
ஈட்டிய பொருளையெல்லாம் இழந்தேன். எனினும் இன்றும் தி.மு.கவைச் சொல்வதற்கு செலவழித்துக்
கொண்டிருக்கிறேன். மனதில் மகிழ்வையும் நிறைவையும் நிறுத்தி வைத்து நாளும் மகிழ்கிறேன்.
******
அறிவாளரோட உறவாடும் மடல்
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், நலம்சூழ வாழ்த்துக்கள்.
நெஞ்சில் நிலை பெறும் நிகழ்வொன்றை நீயா? நானா? நிகழ்த்தி மகிழ்வித்திருக்கிறது.
ஏற்கனவே கேரளாவில் தமிழ்ப் பெண்கள் நடத்திய தங்கள் தேவைக்கான
உரிமைப் போராட்டத்தை ஒரு நீயா? நானா?வில் குறிப்பிட்டு பதிவு செய்ததை மைய இழையாகக்
கொண்டு போராட்ட உணர்வைப் பொங்க வைக்கும் நிகழ்வு மனதில் பூரிப்பை ஏற்படுத்துகிறது.
கோமதி என்னும் என் தாயின் பெயர் தாங்கிய அந்த அருமைத் தங்கையின்
போராட்டம் சோவியத் புரட்சியை தூண்டும் ஒன்றாக துலங்கும் மக்சிம் கார்க்கியின் நாவல்
தலைவி, இளைஞன் பாவலைப் பெற்ற தாயின் நினைவை நெஞ்சில் கொண்டு வந்தது.
திராவிட இயக்கங்கள் நடத்திய பொது உரிமைப் போராட்டங்களில் பெண்கள்,
அதுவும் கைக்குழந்தையை கையில் ஏந்திய பெண்கள் சிறையேகிய பெருமை நிகழ்ச்சிகள் இங்கே
வரலாற்றில் பதிவாயிருக்கிறது.
போராட்ட உணர்வு இங்கு ஏன் தலைதூக்கவில்லை என்பதற்கான அடிப்படை
காரணங்களை இந்த நிகழ்வில் யாரும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் திராவிட இயக்கப் பிரச்சாரத்தில்
தெளிவாக முன் வைக்கப்பட்டன.
மதம் சார்ந்த எண்ணக் குப்பைகளை குவிந்து கிடக்கும் உள்ளங்களில்
உரிமைப் போராட்ட வாசம் இடங்கொள்ள இயலாது என்று உரிமைப் போராளி தந்தை பெரியாரின் வழிநடந்த
பேரறிஞர் அண்ணாவின் வெளிப்பாடுகள் இங்கே இருளகற்றும் ஒளிக்கற்றையாக உலா வந்தது. இந்தியாவின் உண்மையான பொதுவுடைமை இயக்கம் தி.மு.க.
தான் என்று 1953லே தோழர் ஜீவாவை அருகில் வைத்துக் கொண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரகடணப்
படுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் இரண்டொருவர் இனிய செய்திகளைச் சொல்லி இன்புற
வைத்தார்கள். கருத்தியல் அடிப்படையில் போராட்டங்கள் நடந்தால் அது வெற்றி பெரும். நல்ல
விளைவுகளைத் தரும் என்றார்கள்.
பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் நீண்ட நாட்களுக்குமுன் வைத்த
கருத்தொன்று நெஞ்சில் நிலைகொண்டிருக்கிறது. சம்பவங்களால் ஏற்படும் பிரச்சாரம் விரைவில்
மறைந்து விடும். கருத்துக்களால் ஏற்படும் பிரச்சாரம் நெஞ்சில் நிலை கொள்ளும், உணர்வில்
கூர்மையேற்றும், உள்ளம் உரம் பெறும் என்றார் அவர்.
உலகில் நடந்த - நடக்கின்ற போராட்டங்கள் புறத்தேவையான பொருள்
பெரும் நோக்கங்களுக்காகவும் நடக்கிறது. உளம் சார்ந்த, உணர்வின் உயர்வு சார்ந்த, உரிமை
சார்ந்த தரவுகளுக்காகவும் நடந்து-நடக்கிறது. இதில் நீண்ட நாட்களாக நடக்கின்ற போர் இயற்கை
தந்த இனம் சார்ந்து நடக்கின்ற ஆரிய-திராவிடப் போராட்டமாகும்.
இந்தப்
போர் புறத்தேவை, பொருள் தேவைகளுக்காகவும் போதை தரும் போதனையான மதவாதம், மதவாத மயக்கத்தினாலும்
மங்கி விடுகிறது, மறைந்து கொள்கிறது. ஆயினும் மறையாத, மடிந்து போகாத வேதிநிலை போல மீண்டும்
மீண்டும் உயிர் பெறும் உரிமைகளைப் பெற்றுத் தரும். அதற்கு நீயா? நானா?வில் தெளிவு தரும்
நிகழ்வுகள் தொடர்ந்து வரும், துணிவு தரும் என்ற நம்பிக்கை நல்லோர் நெஞ்சை நாளும் மகிழச்
செய்யும்.
மதிப்புநிறை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நலம்சூழ நல்வாழ்த்துக்கள்.
ஏறத்தாழ நூறாண்டுகால பெரியார் சிந்தனை செயல்நிலை பெற்று, சீர்கண்டு,
மாற்றம் கண்டு, மறுமலர்ச்சி பெற்று வளர்ந்துவரும் சூழலில், ஆரிய சார்புகொண்டோரும்,
அவரது அடிமைகளும், பெரியார் கண்ட பெருமாற்றச் செழுமைகளை சிதைக்கின்ற முயற்சியில் இன்று
பல்வேறு காட்சிகளைக் காட்டி, மக்களை குழப்பி வருகிறார்கள்.
அண்ணா பெயர் கொண்ட கட்சி ஆரியமாலாவின் பிடியில் சிக்கியபின்னர்
முழு அடிமைத்தனத்தை நீக்கமுடியாதவாறு நிலைப்படுத்தி விட்டார். இதை முற்றாக எதிர்த்துப்
போரிட வேண்டியவர்களையும் ஆரியம் தனது கைப்பிடியில் சிறை வைத்தது போன்று சிதைத்து சீரழித்து
விடுவதைக் காண்கிறோம்.
இந்த நிலையில் காய்தல், உவத்தில் இன்றி பெரியார் இயலைப் பேரளவுக்குச்
சொல்லி பதிவுசெய்து பயன்நிறைய வைப்பதாகச் சொல்லும் பெரியார் வழி நடப்பதாகச் சொல்பவர்கள்
பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடப்பது சரியா? என்ற எண்ணமே எழுகிறது.
கொள்கை ஒன்றென்றால் குழுக்கள் பல எதற்காக? புரியவில்லை. தலைமைச்
சிந்தனையென்றால்கூட ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி குறு மதியாளர்களை எதிர்த்துப் போரிடம்
சூழலை ஏற்படுத்தலாம் என்று மனம் கருதுகிறது.
ஆரியமாலவைத் தவிர மற்றவர்கள் தங்கள் பெருமைகளுக்காக பெரியாரின்
புகழ் பாடத் தயங்குவதில்லை. ஆனால் பெரியாரின் மய்யக் கொள்கைகளான சாதி மதக் கருத்துக்களை
கண்மூடிப் பின்பற்றவும் மறப்பதில்லை. இந்த முரண்பாட்டை தோலுரித்துக் காட்டவேண்டிய பெரியார்
இயலாளர்கள் ஒருங்கிணைந்து போரட வேண்டிய சூழலில் பெரிதும் உறக்கத்தில் இருப்பதாக÷ தோன்றுகிறது.
பெரியார் இயல் உணர்வுகள் பெருகி வருகிறது. சிந்திப்போர், சீர்நிலைப் பெறுபவர், நல்லுணர்வான
நாத்திகத்தைத் தழுவி வருவோர் நாட்டில் சிறுக சிறுக பெருகி வரும் சூழல் நிலவுகிறது.
இந்த இனிமையை மேலும் மேலும் பெருக வைக்கவும், தங்களைப் போன்றோரை ஆயிரக்கணக்கில் பெருக
வைக்கும் முயற்சியாக, தாங்கள் தான் திட்டமிட்டு தாய்மையுணர்வோடு பிரிந்து கிடப்போரை
ஒருங்கிணைத்து, ஓர் செயல் அளவுத் திட்டத்தோடு, எங்கும் பெரியாரை பேருருவாகக் காட்டும்
முயற்சியை எடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
இழிவும்
குழப்பமும் தன்னலமும் பின்னிக் கிடக்கும் சூழலில் இது முக்கியம் என்று கருதுவீர்கள்
என்று எண்ணி வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment