Wednesday, 4 May 2016

மகிழ்வோடு விடைபெறுவேன்
அனைத்து நாட்டு பொதுமக்களே, அன்பார்ந்த தமிழர்களே வணக்கம். எந்த நாளும் மகிழ்வோடு இருந்திட இதய வாழ்த்துகள்.
இந்த உலகில் இருந்தும், உங்களிடம் இருந்தும் விடைபெறும் நாள் நெருங்கி வருவதை உணர்வதால் உங்களிடமிருந்து விடை பெற விரும்புகிறேன். ஏழையாய் பிறந்த நான் இல்லாமையில் வதிந்த நான். ஒரு சிற்றூர் பள்ளியில் ஒன்றரை ஆண்டுகளே படித்தேன். அதற்கு மேல் பள்ளியில் கல்வி பெறும் வாய்ப்பை வறுமை எனக்கு வழங்கவில்லை.
உயிர்வாழ உடல் தேவை உடல் நிலைக்க உணவு தேவை. இது இயற்கை. எட்டு வயதில் பள்ளியில் இருந்து வெளிவந்த நான் சிற்றூர் ஒன்றில் இடிப்பொடிய உழைத்தும் இரைப்பையை நிரப்ப முடியாத நிலையே நீடித்தது. உடல் வளர்க்கும் உணவுக்காக நான் பார்க்காத வேலை இல்லை. படாத துன்பமில்லை. உணவோடு ஆண்டுக்கு முப்பது ரூபாய் ஊதியத்திற்கு மாடு மேய்க்கும் கொத்தடிமையாக ஓராண்டு காடு மேடு மலைகளில் காலம் கழித்தேன்.
உணவோடு மாதம் மூன்று ரூபாய் ஊதியத்திற்காக ஒரு பணக்கார வீட்டில் எடுபிடியாக ஒராண்டு காலம் உழன்றேன். தன்னோடு தன் தாய் தந்தை உடன் பிறந்தவர்களைக் காக்கும் நிலை வந்த யாரானாலும் துன்பங்களை சுமப்பதைத் தவிர வேறு கதியில்லையே.
உலகில் உருவாகும் எந்த உயிரும் சாக்காட்டில் சங்கமிப்பது என்பது தான் இயற்கை வகுத்த நியதி. ஆக சாவது என்பது தவிர்க்க முடியாதது என்பது தான் உண்மை. சாவது புதிதல்ல என்றான் இனிய பாவலன் சங்க காலத்துக் கணியன் பூங்குன்றன். நேற்று இருந்தவன் இன்றில்லை என்பதுதான் இந்த உலகின் சிறப்பு என்றான் நல்லறிவாளன் நமது வள்ளுவன்.
சாவது என்பது எப்போதும் நடக்கும் என்றாலும் அதையே நினைத்து வாழ முடியாது இருக்கின்றவரை இனிமையோடும் இலட்சியங்களோடும் வாழ்வது தான் வாழ்பவரின் எண்ணமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் என் மனம் எப்போதும் மேற்கண்ட உணர்வுகளுடனே வாழ்ந்து வந்திருக்கிறது. இளவயதிலேயே என்னுள் பதிவான தித்திக்கும் தி.மு.க.வின் உணர்வுகளையே பதிவு செய்து பதியம் போட்டு பயிர் செய்து அதன் பயன்களை பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன்.
வறுமை எனும் பறவை வானத்தில் வட்டமிடவில்லை தலையில் கூடு கட்டி வாசம் செய்தது. அந்தக் கொடும் பறவையை விரட்டி கூடுகளைக் கலைத்து சிறிது குளுமைச் சூழல் தோன்றுவதற்குள் இருபது ஆண்டுகளுக்கு மேல் ஓடி மறைந்து விட்டது.
பொருள் நிலையில் சற்று மேலேறிய நாளில் இருந்து சமூக உணர்வுடன் நாளும் என் எண்ணமும் நடப்பும் நடைபோட்டபடியே இருந்தது. நடைபாதை வியாபாரியாக தொடங்கி ஒரு நல்ல உணவகத்தை முப்பத்து மூன்று ஆண்டுகள் நடத்திய நான் ஈட்டிய பொருளால் நாற்பது விழுக்காட்டை அன்றாடம் இல்லாதவர்களுக்கு வழங்கி வந்திருக்கிறேன்.
காய்கறி குழம்பு, இலவச உணவு, கடன் சொன்னதை பெறாதது எல்லா அமைப்புகளுக்கும் நன்கொடை நான் சார்ந்த தி.மு.க. வின் தொண்டர்கள் பலருக்கு உதவிகள் மட்டுமல்லாது தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கு நாடெங்கும் நண்பர்களை திரட்டி அழைத்துச் செல்லும் செலவு என்றெல்லாம் இழந்து வந்திருக்கிறேன்.
அய்தாறுமுறை தி.மு.க. ஆட்சியில் இருந்த நாளில்கூட என்னுடைய மூன்று உணவகங்கள் மாற்று அரசியல்வாதிகளால் நொறுக்கப்பட்ட பின்னரும் கூட கட்சியிலோ ஆட்சியிலோ எந்தவகையான எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில்தான் இயக்கத்தில் பற்று வைத்து இயங்கி இருக்கிறேன்.
இயக்க வளர்ச்சி ஆர்வத்தில் இயக்க சிந்தனைகளை செழுமைகளை ஆட்சிச் சாதனைகளை எல்லார்க்கும் சொல்ல இருபத்து நாலு தலைப்புகளில் நூல்களை எழுதி முப்பதாயிரம் புத்தகங்களை இலவசமாகவே வழங்கியிருக்கிறேன்.
பல்வேறு தலைப்புகளில் ஒரு இலட்சம் துண்டு வெளியீடுகளை வெளியிட்டிருக்கிறேன். கட்சிக் கூட்டங்களுக்கு செலவுப் பொறுப்பேற்றிருக்கிறேன். நூற்றுக்கணக்கான கூட்டங்களில் காசின்றி என் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
அய்ந்தாண்டுக்கு ஒருமுறை பொறுப்பேற்கும் இயக்கப் பொறுப்பாளர்களுக்கும் நண்பர்களுக்கும் தமிழ் சார்ந்தவர்களுக்கும் ஏறக்குறைய ஏழாயிரம் மடல்களை எழுதியிருக்கிறேன். பத்து வயதில் படிப்பகங்களில் படிக்கத் தொடங்கிய நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்லாயிரம் புத்தகங்களைப் படித்து அதிலுள்ள சாரங்களை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தியிருக்கிறேன்.
இன்றும் கூட இயக்கம் சார்ந்த கருத்துக் கொள்கை எண்ணங்களை நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இணைய தள வலைப்பூவில் வழங்கி வருகிறேன்.
மேற்கண்ட உணர்வுகளில் இறுதிநாள் வரையில் இணைந்திருப்பேன் என்ற உறுதி என உள்ளத்தில் இருக்கிறது பலவிபத்துகளிலும் உடல் நலிவு காரணமாகவும் சற்று இயலாமல் இருந்தாலும் உற்சாகம் சிறிதும் குறையவில்லை. இன்று எழுபது வயது நெருங்குகின்ற நிலையில் வாழும் நாள் குறுகி வருகிறது. எந்தச் சூழலிலும் சாவதைப்பற்றி அஞ்சாத நான் இறுதி நாளிலும் அஞ்சாத மனத்தையே பெற்றிருப்பேன்.
மறைகின்றபோது கூட மகிழ்வாகவே மூச்சை நிறுத்துவேன். நல் உறவுகளையும் நண்பர்களையும் நெஞ்சில் நிலை கொண்ட தமிழையும் தித்திக்கும் திமு.கவையும் பிரிகின்ற நிலையில் நெஞ்சு வருந்தும் என்றாலும் நான் வாழ்ந்த காலத்தில் வளர்ந்த நிலைகளை எண்ணிப் பார்த்து என் உயிர் இறுதி முடிவைத் தொடும்.
உலகில் பிறந்த நாலாயிரம் கோடிக்கும் அதிகமாக மறைந்த மனிதர்கள்களை விட வளமான நிலைகள் கண்ட நாளில்தான் நான் மறைகிறேன். கடந்த காலங்களில் வாழ்ந்த மன்னர்கள், வளமான மனிதர்களைவிட வாழ்வு சார்ந்த வளமான புதுமைகள் பூத்துக் குலுங்கும் உலகில் வாழ்தேன். உலகோடு ஒவ்வொரு நாளும் உறவும் தொடர்பும் கொண்ட நாட்களில் நான் வாழ்ந்தேன். வளர்ந்த விஞ்ஞானம் தந்துள்ள செழுமைகளில் தோய்ந்தும் துய்த்தும் வாழ்ந்தேன் - வாழ்கிறேன்.
சாக்ரடீசின் பகுத்தறிவுக் கேள்விகளிலிருந்து நடந்து விடியல் கண்ட இந்த உலகை உற்றுநோக்கி உணர வைத்த பேரறிஞர் அண்ணாவின் வழிநடந்த அறிவுத் தம்பியாய் வாழ்ந்த நிறைவோடு மறையும் நாளை எதிர்நோக்கி நடக்கிறேன். சங்ககால இலக்கிய உணர்வும் புதுமைப் பயனும் உள்ளத்தில் பதிந்த திராவிட இயக்கத்தின் பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தம்பிகள் தகுதிசான்ற பலரையும் ஓவியமாய் உள்ளுக்குள் பதித்த உணர்வுடனேயே மறைகிறேன் - வருகிறேன்.

எதிர்வரும் விஞ்ஞானம் என்னவெல்லாம் விளைவிக்கும் சாதிக்கும் என்று தொலைநோக்கு பார்வையோடுதான் நான் மறைகிறேன். ஆகவே மகிழ்வுடனே விடை பெறுகிறேன் என்பதை இப்போதே தங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

No comments:

Post a Comment