அரசியல்வாதிகள்
நாட்டிலுள்ள எல்லாத்துறைகளும், எல்லா மனிதர்களும் தொடர்பு கொண்ட
ஒரு துறை அரசியல், நாட்டில் வலிவும் நலமும், நல்ல அரசியல் பணியாளர்களால் நிலைநாட்டப்
பட வேண்டும். அரசியல் ஈடுபாடு என்பது தொண்டு மனப்பான்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
பழிச் சொல் இல்லாத புகழினைப் பெற வேண்டும் எனும் விருப்பத்துடன் அரசியலில் ஈடுபட வேண்டும்.
எந்தக் கட்சியானாலும் மக்கள் நலனுக்காக பாடுபடும் உணர்வும்; மக்களாட்சியின் மாண்புகளை
மதிக்கின்ற மனப்பாங்கும் அரசியல்வாதிகளின் நெஞ்சில் நின்று நிலைபெற வேண்டும். தெரிந்தோ
தெரியாமலோ தவறுகள் நிகழ்ந்தால் தன்னைத் திருத்திக் கொள்கின்ற பெருந்தன்மை அரசியல் ஈடுபாடு
கொண்டோர்க்கு அவசியம் வேண்டும்.
எதிர்நிலையில் இருந்தபோது என்னவெல்லாம் சொன்னோம் எனும் நினைவு
நிலைமாறும்போதும் நெஞ்சத்தில் நிற்க வேண்டும். ஊழலுக்கு காரணமாகி முதல் முறையாக ஒரு
பதவியை கட்சியானாலும் அரசின் நிர்வாகத்தினாலும் உதறியவர்களுக்கு மீண்டும் எந்தப் பொறுப்பும்
வழங்கக்கூடாது. வன்முறையாளர்களும், வாழ்வின் நெறி தவறுபவர்களும் அரசியலில் ஈடுபடுவதை
அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் தன்னை உயர்த்திக் கொள்ள தவறான வழிகளை இவர்கள் உருவாக்கக்கூடும்.
ஆட்சிப் பீடத்திற்கு வரும் அரசியல்வாதிகள் அப்பழுக்கற்றவர்களாக தங்களை உலகிற்குக் காட்டிக்
கொள்ள வேண்டும். சிந்தøன் செழுமையும், செயல்ச் சீர்மையும், அறிவுக்கூர்மையும் கொண்டவர்கள்
அரசியலில் ஈடுபாடு கொண்டால் நாடு அளவிலா வளம் பெறுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். வளம்
பெற்ற நாடுகள் நடைமுறைப்படுத்திய திட்டங்களுக்கு இந்த நாட்டிற்கு ஏற்றவாறு செயல்படுத்தும்
அறிவாற்றல் பெற்றோர் அரசியலில் முதலிடத்திற்கு வர வேண்டும். அரசு பெறுகின்ற வரியானாலும்,
அரசியல் கட்சிகள் பெறுகின்ற நன்கொடையானாலும் பொதுமக்களின் வியர்வையில் உருவானதே! அதை
மக்கள் நலனுக்கே பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு, ஒவ்வொரு நொடியும் அரசியல்வாதிகளின்
உள்ளத்தை ஆளுமை செய்ய வேண்டும்.
மேலே கண்டவற்றை குணமாகக் கொண்ட அரசியல்வாதிகள் நாட்டில் எத்தனை
பேர்? மிகச் சிலர்தான் என்று கூறிவிட முடியும். நாட்டு மக்களின் பொருளை எத்தனையோ வகையில்
கொள்ளையிடும் அரசியல்வாதிகள் இங்கே உலவுகின்றனர். அரசினர் போடுகின்ற எத்தனை திட்டங்கள்
தோல்வியை தழுவி மக்களை துயர்படுத்துகின்றன? அரசு அதிகாரிகள் அநியாயங்களுக்கு துணை செய்து
பங்கு வாங்கிக்கொள்ளும் அமைச்சர்கள் நிறைந்த நாடாக அல்லவா இந்நாடு திகழ்கிறது. அரசுப்
பணம் என்ன கட்சிப் பணத்தைகூட கொள்ளையிடும் களவாளிகள் அரசியலில் உள்ளனரே! மங்கை சூதகமானால்
கங்கையில் மூழ்கலாம்; கங்கையை சூதகமானால் எங்கே குளிப்பது? என்று பசும்பொன்தேவர் அடிக்கடி
கூறியது அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு பொருத்தம். நாடாள்வோர் நல்லவர்களாக விளங்கி மக்களுக்கு
வாழ்வளிக்க வேண்டியவர்கள் கொள்ளையர்களானால் யாரிடம் முறையிடுவது? சட்டத்தில் காவலர்களே
அதை தன் இஷ்டத்திற்கு வளைப்பது என்றால் எங்கேபோய் அழுவது? பொதுமக்கள் தவறிழைத்தால்
கிரிமினல், சிவில் சட்டங்கள் தண்டிக்கட்டும். ஆனால் அரசில் உள்ள அரசியல்வாதிகளின் தவறுகளுக்கு
ராணுவச் சட்டமே தண்டனை தரவேண்டும் என்று அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். முந்திரா
ஊழல், போபர்ஸ் ஊழல், பங்குச்சந்தை ஊழல், நகர்வாலா மோசடி என்ற சூப்பர் ஊழல்கள் மட்டுமின்றி
ஆங்காங்கே நடக்கின்ற நாட்டையே நாசப்படுத்தும் நரித்தனமான ஊழல்களுக்கெல்லாம் முடிவு
ஏது, விடிவு காலம் தான் ஏது? வேடிக்கையாக சொல்வதுண்டு. அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன
என்பதற்கு உதாரணமாக சொல்வார்கள் கிணறே இல்லை. ஆனால் கிணறு தோண்டியதாக இலட்சம் ரூபாய்
கணக்கில் இருக்கிறதே என்று கேட்டால் கிணறு தோண்டியதாக ஒருவர் எழுபதாயிரம் எடுத்துக்
கொண்டார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மூடிவிட்டேன் என்று ஒருவர் முப்பதாயிரத்தை
விழுங்கி விட்டார் என்று அரசை ஏமாற்றும் அலுவலர்கள் உள்ள நாடு இது, ரோடு போடாமல், கிணறு
வெட்டாமல் மக்களின் வரிப்பணத்தை ஸ்வாகா செய்யும் மனிதர்கள் ஆளுமைத் துறையில் இருந்தால்
மக்கள் வதைபடுவதைத் தவிர வேறு மார்க்கம்தான் என்ன? ஒரு ஆற்றல் மிக்க அறிஞனை விட, பயன்மிகு
ஒரு விஞ்ஞானியைவிட, திறன்மிக்க ஒரு அதிகாரியை விட அரசியல் வாதிக்குத்தான் மக்களிடம்
மதிப்பு இருக்கிறது.
நாட்டின் வளம் யாரால் பெருக்கப்பட்டாலும் அரசு சார்ந்த அமைச்சரவைக்கு
அந்தப் பெருமை முழுக்கப் போய் சேருகிறது. ஒரு ஆட்சியின் கீழ்தான் இந்த நாடு வளம் பெற்றது
என்று தான் வரலாறும் கூறுகிறது. அந்த வளத்திற்கு அடிப்படையாய் இருந்த ஆற்றல் மிக்க
அறிஞர்கள் கருவேப்பிலையின் நிலையில்தான் பயன்படுத்தப்படுகின்றனர். மக்கள் இதயங்களில்
எவரெஸ்ட் நிலையில் உள்ள பல அரசியல் வாதிகளின் உள்ளமோ மோசத்தின் பிறப்பிடமாய் உள்ளது.
தமக்கு வாழ்வளிப்பார்கள் என்று மனமுவந்து வாக்களித்தவர்களுக்கு வேதனையை பரிசாக தரும்
அரசியல்வாதிகளே! இங்கு அதிகம். அரசியலின் கூறுகள் அனைத்தும் அறியாதவர்களுக்கு எந்த
அரசியல் கட்சியும் பொறுப்புகளை வழங்கக் கூடாது என்று சட்டமே கூட இயற்றலாம். அரசியல்
தகுதிகளை பெறுவதற்கு தேர்வு வைத்தால் கூட தவறில்லை. மக்களாட்சியின் மாண்பினை மாசுபடுத்தும்
மதோன் மத்தர்களுக்கு மரண தண்டனை என்றாலும் பாவமில்லை. மக்களாட்சியின் மன்றங்களுக்கு
சென்றபின் வாய் பேசாது இருப்போர்க்கு அபராதம் கூட விதிக்கலாம்.
இங்குள்ள கலாச்சாரமே சோம்பேறித்தனமானது. இங்குள்ள சமயம், சாஸ்திரம்,
ஆச்சாரம், அனுஷ்டானம் ஆகிய அனைத்துமே சோம்பலைத் தோற்றுவிக்கக் கூடியது. வழிபாட்டுத்
தன்மையேகூட இலஞ்ச இலவணிய முறையால் உருவானதே! கெண்டையைப் போட்டு விரால் பிடிக்குமுறையிலே
வழிபடும் உணர்வு இருக்கிறது. உள்ளத்தைப் பண்படுத்தும் புதிய முறைகளை உருவாக்கினால்
அன்றி இந்த நாடு உயர்வடையாது. அதற்கு வழிதான் என்ன? அரசியல்வாதிகள் சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டவர்களாக ஆவதற்கு மார்க்கம்தான் என்ன? புதியதோர் நாடுகாண புதுமை எண்ணங்கொண்ட
இளைஞர்களை உருவாக்க பொதுவாழ்வில் ஈடுபடுவோரை புடம்போட்டு எடுக்கின்ற புதுமுறை ஒன்று
உருவாக்க வேண்டும். வழிவழியாய் நல்லவர்களை உருவாக்கும் வழி ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும்.
அந்தரங்க அரசியல் நடத்துவோரை பொதுவாழ்வில் இருந்து அகற்றும்
உணர்வு மக்களிடம் வளர வேண்டும். மனதில் களங்கத்துடன் நடக்கும் மனிதர்களை பொதுவாழ்வில்
இருந்து புறக்கணிக்கும் நிலை வேண்டும். ஆராய்ந்து பார்த்தால் அனைத்து தவறுகளுக்கும்
பிறப்பிடம் அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகளின் உள்ளம் தான் என்பது விளங்கும். உள்ளத்
தூய்மையின்றி அரசியலில் உலாவருவோரை பொதுவாழ்வில் இருந்து நிரந்தமாக நீக்கி வைக்கும்
நெஞ்சத்தை பொதுமக்கள் பெற வேண்டும். ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உள்ள அறுதிப்
பெரும்பாண்பான்மை என்பது ஐந்தாறு இடங்கள் என்ற வகையில் ஓட்டளிக்கும் பக்குவம் வாக்காளர்களுக்கு
வேண்டும். தவறு செய்யும் மனிதர்களை நீதிமன்றத்திற்கு இழுத்து சென்று தண்டிக்க வைக்கும்
பொது நிறுவனங்கள் நாடெங்கும் பெருக வேண்டும். அதற்கு மக்கள் இதயங்களில் புதிய எண்ணங்கள்
நாளும் மலர வேண்டும். மக்களாட்சி முறை வளராது மடியுமானால் சனநாயகத் தத்துவம் நாசமாக்கப்படுமானால்
எதிர்காலம் பிரஞ்சுப் புரட்சிப்போல ஒன்றை உருவாக்கத் துணியும்.
No comments:
Post a Comment