இலக்கியம்
இதயத்தை பண்படுத்த இலக்கியம் எந்த நாளும் இருக்க வேண்டும். ஒரு
இலக்கை இனிமையுடன் இயம்புவது தான் இலக்கியம்.
அது மட்டுமல்ல அறிவுசார்ந்ததாக ஆய்வுக்கு உட்பட்து ஆகவும் இலக்கியம்
அமைய வேண்டும். இங்குள்ள இதிகாச, இலக்கியங்கள் பெரும்பாலும் நடைமுறைக்குச் சாத்தியப்படாததாகவும்,
கற்பனை சூழ்ந்ததாகவும், முழு மூடநம்பிக்கை கொண்டதாகவும் இருக்கிறது. சங்ககால இலக்கியங்களில்
அந்த கற்பனைகளையும், புகழ்மொழிகளையும் கழித்துப் பார்த்தால் அரசு, ஆட்சி, பண்பு நலன்,
தனிமனித, சமூக ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகவும் காதல், வீரம், பொருளியல் வளர்ச்சியை,
சில புதுமைச் செய்திகளை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்திருக்கிறது. ஆனால் சங்ககால உணர்வுகளை,
தொடர்ந்து அதை வலுயுறுத்தவும், வளர்க்கவும் ஆன சூழல்கள் நாளும் நசிந்து வந்ததேயன்றி
நலம்பெறும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
இயற்கை என்பது வளர்ச்சியை நோக்கித்தான் என்றாலும், மனிதர்களைப்
பொறுத்தவரை வளர்ச்சியை வேகமாக வளர்ப்பதும், வலிமைப்படுத்துவதும் அவர்களின் அறிவு செயல்
ஆகியவற்றைப் பொறுத்தே இருக்கிறது.
அறிவாளி மகன் அறிவாளியாய் மட்டுமே பிறப்பதில்லை மரபில் கூட சுற்றுச்சூழல்
துணை கொண்டு தான் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்கிறான் சிக்மண்ட் பிராய்ட்.
அய்ரோப்பியாவை எடுத்துக்கொண்டால் அங்குள்ள அறிஞர்கள் தங்களுடைய
படைப்புக்களை காலத்துக்கு காலம் முன்னெடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
சாக்ரடீசை தனது குருவாகத்தான் கொண்டான் பிளேட்டோ. ஆனால் முழுமையும்
பக்தனாகி விடவில்லை. பிளேட்டோவின் மாணவன் அரிஸ்டாட்டில், ஆனால் சில கருத்துக்களில்
வேறுபட்டான் சிந்தனையிலிருந்த கருத்துகளை செயல்படுத்த சிலமுறைகளை பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலும்
செய்து பார்த்தார்கள்.
விவாத அடிப்படையில் அய்ரோப்பாவில் கருத்துகளும் படைப்புகளும்
வலம் வந்தன! அதனால் தலைமுறை தோறும் கருத்துகள் கூர்மை அடைந்து முன்னோக்கியே சென்றது.
அரிஸ்டாடிலின் கருத்துக்கு மாற்றுச் சொல்லக் கூடாது என்றிருந்த காலத்தில் தான் அரிஸ்டாட்டிலின்
ஒரு கருத்துக்காக அவனை முட்டாள் என்று சொல்லி மாதா கோயிலில் முட்டி தேய மண்டியிட்டு
மடிந்தான் கலிலியோ! ஆம் ஆண்களுக்கு முப்பதிரண்டு பற்கள், பெண்களுக்கு முப்பது பல் என்று
எண்ணிப் பார்க்காமலேயே சொன்னதால் அரிஸ்டாடிலை முட்டாள் என்று சொன்னான் கலிலியோ!
ஆக அய்ரோப்பாவில் மனதில் உருப்போட்டு வெளிப்படுத்தும் மொழிப்
பயிற்சி மட்டும் இலக்கியம் அல்ல. செய்முறையாக, செயல் வடிவான கலைப்பயிற்சியும் சேர்ந்தால்
தான் இலக்கியம் ஆக முடியும். அது தான் மனிதர்களுக்கு வாழ்வளிக்க முடியும் என்பதை அய்ரோப்பா
உணர்ந்ததால் தான் தொடர்ந்து பொருள் குவிக்கும் தொழிற்புரட்சி அங்கே தோன்றியது.
அதன் விளைவு தான் இன்று வளமிகு பாதையில் உலகு வருத்தம் இன்றி
செல்கிறது. வளரும் உலகத்திற்கு மக்களை வழிநடத்திச் செல்வதற்கு உரிய வகையில் அய்ரோப்பிய
பேரறிவாளர்களும் இலக்கியவாதிகளும் தங்கள் மொழியை உரிய முறையில் வளர்த்து சொற்களைக்
குவித்து வந்திருக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளோடு புதிய சொற்களையும் கண்டுபிடிக்கிறார்கள்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லாத் துறைகளிலும், எல்லாக் கல்வியிலும்
தமிழ் வேண்டும் என்று அரசை வலியுறுத்தும் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், தமிழ்ப் புலவர்கள்,
பற்றாளர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் இங்கே என்ன செய்தார்கள்? இங்கே பரவிக் கிடக்கின்ற
இலக்கிய மன்றங்கள் என்ன செய்தன? அகவலும், அந்தாதியும், பதிகமும், பாசுரமும் துதியும்
பாடி ஆண்டவனை துதித்து உணர்வை அடிமைப்படுத்துவதை அன்றி வேறு என்ன செய்தார்கள்? பக்தி
சுவை சொட்டச் சொட்ட, பட்டிமன்றங்கள் நடத்தியதன்றி பயனுள்ள செயல் தமிழுக்கு என்ன செய்தார்கள்.
புதிய கலைச் சொற்களை கண்டுபிடித்தார்களா? மக்களிடம் அதை எடுத்துச்
சொன்னார்களா? புதுப்புதுச் சொற்களை படைத்து பட்டியலிட்டுக் காட்டினார்களா? தமிழுக்கு
மாறுபட்ட அரசு செய்கின்ற செயல்களை தடுக்கின்ற, கண்டிக்கின்ற போராட்டங்களில் ஈடுபட்டார்களா?
எல்லாச் செயல்களையும் அரசு செய்து விட முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம்
தமிழுக்கு முடிந்ததெல்லாம் செய்தது. அந்த அரசைத் தொடர்ந்து நிலைபெறச் செய்கின்ற செயலிலாவது
தமிழ்நெறியாளர்கள் நிற்கிறார்களா? இதயத்தில் நல்லெண்ணம் இல்லாத சில இதழ்களும் இந்த
கூக்குரலில் தங்களை இணைத்துக் கொள்கின்றன. அந்த இதழ்கள் நினைத்தால் தமிழுக்கு எவ்வளவோ
செய்யலாம்.
சிறந்த கலைச் சொற்களை உருவாக்குவோரை அந்த இதழ்கள் ஊக்கப்படுத்தலாம்.
தமிழில் புதிய படைப்புகளைக் கொண்டுவர பாடுபடலாம். புதிய தமிழ் அறிஞர்களை நாட்டுக்கு
அறிமுகப்படுத்தலாம். வளரும் இளைஞர்களுக்குள் போட்டிவைத்து தமிழில் புதுமைகளை கொண்டு
வரலாம். இலக்கிய மன்றங்களும், தமிழ் அறிஞர்களும், இதழ்களும் இணைந்து தமிழுக்கு தொண்டு
செய்ய முன்வரலாம்.
தமிழ் இயற்கையாகவே வளம் செறிந்த மொழி. தமிழின் வேர்ச் சொற்கள்
உலகினில் பல்வேறு மொழிகளில் பரவிக் கிடக்கின்றன. இன்றையக் கம்ப்யூட்டர்க்கு ஏற்ற மொழி
என்று எழுத்தாளர், பொறியாளர் சுஜாதா எடுத்துச் சொன்னார்.
இலங்கை, மலேசியா தமிழர்களால் உலகெங்கும் தமிழ் இன்டர்நெட்டில்
பரப்பப்படுகிறது. தமிழ் வளர்க்கும் புதிய அறிவாளர்கள் தோன்றி வருகிறார்கள். அவர்களைப்
பின்பற்றி இங்குள்ள தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் அனைவரும் தமிழுக்கு
புதிய வடிவமும் சொற்களும் தர தங்கள் ஆற்றலை பயன்படுத்த வேண்டும். அதற்குரிய வகையில்
இங்குள்ள இதழ்கள் அவர்களுக்கு உற்சாகத்தை ஊக்கத்தை அளிக்க வேண்டும்.
நீரின்றி உரமின்றி துணையின்றி அரசுமின்றி நெடுநாள் வாழ்ந்த தமிழ்,
இனி தடையின்றி தளர்வின்றி தழைக்கும். புதிய உலகில் புகழோடு நிலைக்கும் நிலைகாண்பது
அறிவு சார்ந்த ஒட்டு மொத்த தமிழர்களின் பொறுப்பாகும். அதற்கான அரசை அமைப்பது உலகில்
வாழும் ஒட்டு மொத்த தமிழர்களின் கடமையாகும்.
No comments:
Post a Comment