Tuesday, 17 November 2015

நீங்காத நினைவு - மாறாத மகிழ்ச்சி

நீங்காத நினைவு - மாறாத மகிழ்ச்சி
அழகுத் தமிழ் காக்கும், அருமைத் திருப்பணியில் அண்ணாவின் வழிச் செல்லும் ஆற்றலின் அரசே வணக்கம்!
மாலை மதியமும், மாசில் வீணையும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், உறவாடி மகிழ்ந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து ஓராண்டு நிறைவு பெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஈராண்டுக்கு ஒருமுறை செம்மொழி மாநாடு நடக்கும் என்ற செய்தியின் நினைவால் இதயம் இனிமையோடு இணைந்து ஈடில்லா மகிழ்வைத் துய்த்தவண்ணம் இருக்கிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வு மலரில் ஏறக்குறைய ஆயிரம் கட்டுரைச் சுருக்கத்தை வெளியிட்டு எழுத்தார்வம் கொண்டவர்களை மகிழ்வித்தீர்கள்.
மேலும், எட்டு பக்க அளவு கட்டுரையை மாநாட்டு அரங்குகளில் வாசிக்கச் செய்து வரலாற்று சிறப்பையும் வழங்கினீர்கள். மாநாட்டில் பேராளர்கள் என்றும், கட்டுரையாளர்கள், நோக்கர்கள் என்றும் மாநாட்டு ஆய்வரங்கில் கலந்து கொள்ளச் செய்து தமிழுணர்வு மேலும் தழைக்கவும், செழிக்கவும் செய்திடச் செய்தீர்கள்.
மேலும், பல்வேறு நிகழ்வுகளால் மாநாட்டு காட்சிகள் மாட்சியுறச் செய்தீர்கள். மாநாட்டு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு, மாசற்றத் தமிழ்ப் பணியில் மகோன்னதமான நிலை கண்டு எல்லார் உள்ளத்திலும் மாறாத மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
அந்த மலரில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு அண்ணாவின் உரையைப் படித்து விட்டு, தங்கள் கட்டுரையையும் படித்துப் பார்த்தபோது அண்ணாவின் அச்சாய் தாங்கள் திகழ்வதை எளிதில் உணர முடியும்.
ஆய்வரங்க மலரிலும், சிறப்பு மலரிலும் அருமையான கட்டுரைகள் சில இருந்தது என்றாலும், நமது இனமான இயக்கத்தின் பகுத்தறிவு, அறிவியல் பார்வை கொண்ட கட்டுரைகளை மிக அரிதாகவே காண முடிகிறது.
கட்டுரையாளர்கள் பலரோடு கடித வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு உள்ளே உணர்வுகளை நமது பாதைக்கு மாற்ற அவ்வப்போது முயன்று வருகிறேன்.
மாநாட்டுக்குப் பின் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை வேறு தலைப்பிட்டும், திருத்தங்கள் செய்தும், எழுத்தின் அளவை சிறிதாக்கியும், பத்து பக்க அளவில் கட்டுரைகளை அனுப்புமாறு மாநாட்டுக் குழுவினர் கேட்டிருந்தார்கள். தொகுத்து மலரில் வெளியிடப் போகிறோம் என்றும் அறிவித்தார்கள். அதன்படி நான் அனுப்பி வைத்தேன்.
ஆனால் அதற்குப் பின் செய்திகள் ஏதுமில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து ஓராண்டு நினைவு நாளில் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு மலரை வெளியிட்டு நிகழ்வொன்றை நடத்த வேண்டுகிறேன். சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்து கட்டுரையாளர்களுக்கு ஏதாவது ஒரு பரிசை வழங்க வேண்டுகிறேன்.
மே நாள் அன்று லியோனி தலைமையில் நடந்த அருமையான பட்டிமன்ற நிகழ்வில் மகிழ்ச்சியோடு தாங்கள் கலந்து கொண்ட காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நண்பர்களிடம் சொன்னேன். சூசூகலைஞர் எப்போதும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு மகிழ வேண்டும்என்றேன்.
அந்த நிகழ்வில் வெளிப்பட்ட பாடல்களைப் போல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் படிக்கப்பட்ட பெண்ணியம் எனும் கட்டுரையில் சில பாடல்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் ஒரு தாலாட்டையும், ஒரு ஒப்பாரியையும் தங்கள் முன் படைக்கிறேன்.
கடல் அளந்து கப்பலிட்டு கப்பலிலே தோணியிட்டு
துறையறிஞ்சுத் தோணியிடும் சோழருட வம்முசமோ
இது என் பிள்ளைகளுக்கு என் தாய் பாடிய தாலாட்டு.
காடு வழி நடந்தாலும் கங்கை வழி போனாலும்
கண்ணாகத் காத்தவரே கன்னியழிச்ச மன்னவரே
தனியாகப் போனீரே தவிக்க விட்டு போனீரே
இது என் தந்தை இறந்த போது என் தாய் பாடிய ஒப்பாரி.
அழிவிலிருந்த பழந்தமிழ்க் கலைகளைப் பாதுகாத்து பரப்பி வரும் தங்கை கனிமொழியின் பணிகளில் தெளிவான நாட்டுப்புறப் பாடல்களையும் ஆங்காங்கே அரங்கேறச் செய்து மாந்த இனத்திற்கு தமிழ் வழங்கிய மகத்தான கருத்துச் செல்வங்களை உலகோர் நெஞ்சில் உறைய வைக்க வேண்டுகிறேன்.
இயக்கத்தின் இனமானச் செய்திகளை இலக்கிய உணர்வுகளை மேலும் மேலும் வளர்த்தெடுத்தால், பரவச் செய்தால் இயக்கம் இரும்பனைய வலிமையைப் பெறும் என்பதை தாங்கள் அறியாததல்ல.
ஆனால், இன்றுள்ள கழகத் தோழர்களில் அதிலும் உயர்நிலை பொறுப்புகளில் இருப்பவர்களின் உள்ளம் இயக்கம் சார்ந்ததாகவோ கட்சி - தலைமை மீது உண்மை விசுவாசம் உள்ளதாகவோ இருக்கிறதா? ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.

பெறுநர்:  தலைவர் கலைஞர் அவர்கள்

No comments:

Post a Comment