அறிவாளரோடு உறவாடும் மடல்
பேரன்புடையீர் வணக்கம், வாழ்த்துக்கள். முன்னர் எழுதிய மடல்களில்
சங்கக் கட்டிடம் பற்றியும் நடிகர்களின் நிழற்படக் காட்சி பற்றியும் மற்றும் சில செய்திகளை
சொல்லியிருந்தேன்.
அதில் படக் கண்காட்சியில் 1931ல் வெளிவந்த முதல் தமிழ்ப் பேசும்
படத்தில் நடித்த டி.பி. இராசலட்சுமிலிருந்து இத்துறைக்கு வந்தவர்களை வரிசையில் அமைக்க
வேண்டுகிறேன்.
அதுபோல் நாடக நடிகர்கள், வில்லன், வில்லிகள், நகைச்சுவை நடிக
நடிகையர், குணச்சித்திர நடிகர், நடிகைகள், குழந்தை நடிகர், நடிகைகள் நடித்த விலங்குகள்,
பல்வேறு நாட்டு மொழிப்படங்களின் நடித்த நடிகையர்களை வரிசைப்படுத்தலாம். பார்க்கவரும்
இரசிகர்களுக்கு கட்டணம் வைத்து ஒழுங்குபடுத்தலாம்.
அடுத்து சினிமா பற்றிய செய்திகளை தாங்கிய நூல்களை மட்டும் கொண்ட
ஒரு சிறிய நூலகத்தை ஆய்வு மாணவர்களுக்கு அமைக்கலாம். புதுப்படங்களின் முதற் காட்சியைப்
பார்க்க பிரிவியூ தியேட்டர் ஒன்றை சிறிய அளவில் உருவாக்கலாம்.
மூன்றாயிரத்திற்கு மேல் இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர் எண்ணிக்கை
ஆண்டு தோறும் அதிகமாகிக் கொண்டே வர ஏற்பாடுகளை செய்யலாம். பம்பாயில் சண்முகானந்த சபாவில்
1973லேயே ஆறாயிரத்திற்கு மேலான உறுப்பினர்கள் இருந்த நினைவொன்று வருகிறது. இப்போது
அது அதிகமாயிருக்கலாம். ஆசியாவிலேயே பெரிய நாடக அரங்கம் என்ற முத்திரை பதித்தது அந்த
அரங்கம். அது தமிழர்களால் அமைக்கப்பட்டது. அண்ணன் டி.கே. சண்முகம் அவர்கள் மாதக்கணக்கில்
அங்கே நாடகம் நடித்தி பொருள் சேர்த்து தந்ததால் அவர் பெயரிலேயே அழைத்தார்கள்.
தங்கள் மீது பொறுப்பின் பழு மிகுதியாகவே இருக்கும் கலை உணர்வு
கொண்ட உளத்தூய்மையுடன் உற்ற நண்பர்களின் துணையுடன் அந்தப் பழுவை பஞ்சாக மாற்றலாம்.
ஒருவரை பார்த்தவுடன் தோழரே என விளிக்கும் முறையை மனத்தூய்மையுடன்
இயன்றால் பரவலாக்கலாம். பயனுடையதாக்கலாம். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சங்கம் சார்பில்
நடிகன் குரல் என்று ஏடொன்று நடந்து வந்தது இன்று இருக்கிறதா நடக்கிறதா என்று எனக்குத்
தெரியாது. நடிகர்களுக்கு பயனுடையதாக வந்த நாட்களில் பார்த்த நினைவுப் பசுமையாக இருக்கிறது.
படத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களின் சங்கங்கள் பல இருக்கின்றன.
தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், வினியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் சின்னத்திரை
கலைஞர்கள் என சங்கங்கள் இயங்குவதாக அறிகிறேன்.
உங்கள் ஆட்சி ஆளுமையில் ஒரு புதுமையாக இந்தச் சங்கங்களோடு நேச
உறவுக்கும் தொடர்புக்கும் தூதர்களை நியமிக்கலாம். அது போல மத்திய மாநில அரசுகளின் உறவு,
தொடர்புக்காக உரியவர்களை தூதர்களாக நியமிக்கலாம். ஊடகச் செய்தி தொடர்பாளராக அறிவும்
நுட்பமும் வாய்ந்தவர்களை நியமிக்கலாம் ஏனெனில், இந்த ஊடகங்கள் இருக்கின்றதே இந்த ஊர்க்குசும்பு
என்பார்களே அதுபோல உலகக் குசும்புகளின் உறவுக் கூடமாகவே விளங்குகிறது. அந்த ஊடகங்களில்
உறவாடும் சங்க தொடர்பான சமயோகிதம் உள்ளவராக இருப்பது நலம் இல்லையெனில் ஏதாவது சிக்கலில்
மாட்ட வைத்து விடுவார்கள்.
நிறைவாக உங்கள் உயர்வில் நினைவில் ஒன்றைப் பதிய வைக்க விழைகிறேன்.
உங்கள் அணிக்கு பாண்டவர் அணி என்று ஏன் பெயர் வைத்தீர்கள் என்று தெரியவில்லை, புரியவில்லை.
அய்வர் அணி என்றோ, அய்ந்திணை அணி என்றோ தமிழ்ப் பெயர் சூட்டியிருக்கலாம். பாண்டவர்களில்
மூத்தவன் சூதாட்ட வெறி கொண்டவன், சொக்கட்டான் ஆட்டத்தில் மூழ்கிக் கிடந்தவன். இதையறிந்த
சகுனி அவனை சூதாட அழைக்கிறான். அந்த ஆட்டத்தில் அவன் தன்னையும் இழந்து விடுகிறான்.
மீண்டும் அவனது மனைவியை வைத்து ஆடி அவளையும் இழந்து விடுகிறான்.
பாஞ்சாலியை துகில் உறிய துச்சாதனன் முன்வந்த போது பாஞ்சாலியே
கேட்கிறாள். என்னையிழந்து தன்னை இழந்தானா? தன்னை இழந்து என்னை இழந்தானா? என்று. தன்னை
இழந்த அவனுக்கு என்னை வைத்து சூதாடும் உரிமையில்லை. அது மட்டும் அல்ல நான் மற்ற நால்வருக்கும்
உரியவள் அவர்களின் சம்மதத்தைக் கேட்டானா அவர்கள் ஒத்துக் கொண்டார்களா என்றும் அறைகிறாள்.
கட்டிய மனைவியைப் பணயப் பொருளாக வைத்து பந்தயம் கட்டிச் சூதாடிய
தருமனையும் அவனது தம்பிகளையும் மகாகவி பாரதியார் தனது பாஞ்சாலி சபதத்தில் மிக்க கேவலான
சொற்களால் சாடுகிறார்.
ஊன் திண்று உடலெடுத்தவர்களை சோற்றுப் பிண்டங்கள், சொரணையற்றவர்கள்,
மான உணர்ச்சி சிறிதும் இல்லாத மரக்கட்டைகள், மதோன்மத்தர்கள், கேடிகள், தடியர்கள் என்று
தரமற்ற சொற்களால் சாடுகிறார். அது மட்டுமல்ல மகாபாரதக் கதையும் எழுதியவனின் பிறப்பும்
மிகவும் அருவருப்பான கற்பனையாகும்.
பாண்டவர் அணி என்பதால் மேலும் சில செய்திகளை கண் முன் வைக்க
விரும்புகிறேன். மகாபாரதக் கதை கூறுவதுபோல அஸ்தினாபுரம் அரசு பாண்டவர்களுக்கு உரியதல்ல.
அரசகுல வழக்கப்படி முதல் பிள்ளைதான் அரசனாக வர முடியும். அவனுடைய தயவின் கீழ்தான் மற்றவர்கள்
இருக்க முடியும். அந்த வகையில் அந்த அரசு திருதராஷ்டிரனுக்கு உரியதாகும். அவன் குருடன்
என்பதால் அவன் தம்பி பாண்டு அரசை ஆழ்கிறான். ஆனால் அவனது பிள்ளைகளால் கூறப்படும் இந்த
பாண்டவர்கள் பாண்டுவின் குருதி வழி குழந்தைகள் அல்ல. அவர்கள் வானுலகத் தேவர்களின் வாரிசுகளாவார்.
இவர்களுக்கு உரிமையற்ற அரசை திருதராஷ்டிரனின் மூத்த மகன் துரியோதனிடமிருந்து பாண்டவர்களுடைய
நண்பன் பின் உறவினன் கிருஷ்ணனின் சூசு வலை சூழ்ச்சி நிலைகளால் பறிக்க முயல்வதுதான்
பாரதக் கதையின் அதன் 18நாள் குருசேத்திரப் போரின் மையப் புள்ளியாகும். அதுமட்டுமல்ல
காலம்தோறும் கதைசொல்லிகள் புனைந்த பொருத்தமற்ற புதுப்புதுப் கதைகள் செருகப்பட்ட குப்பை
நூலாகும் மகாபாரதம்.
இந்தப் பாண்டவர்களின் வெற்றி என்பது பாரதப் பாண்டவர்கள் பெற்ற
வெற்றி போன்று சூதுநிலை, சூழ்ச்சி வலை கொண்ட, கடவுள் நிலை கொண்டவனின் வெற்றியல்ல. உண்மை,
உழைப்பு, ஒற்றுமை மக்களாட்சியின் மாண்பு ஆகியவற்றின் மூலம் பெற்ற வெற்றியாகும். பெயர்
என்பதைத் தவிர மற்றப்படி பெருமைக்குரிய வெற்றியாகும் இது.
நால்வரோடு அய்வரானோம் என்று படகோட்டி குகனைக் குறிப்பிட்டான்
அயோத்தி இராமன். இந்தப் பாண்டவர் அய்வர் அணி என்பது அதுபோல் அல்ல. தூய நிலைக்காக உழைத்தவர்கள்
இந்த அய்வர்கள் ஆகும். ஆயினும் இந்த அய்வரில் பாரதப் பீமனாக திரு.விஷால் அவர்கள் உணர்ச்சி
வயப்பட்டு வெடிப்பதைக் காண முடிகிறது. பீமன் உணர்ச்சி வேகத்தினால் பலவித சிக்கல்களுக்கு
ஆளானதாக கதைகள் கூறுகிறது. மற்ற நால்வரைப் போல விஷாலையும் நிதான நிலைக்கு கொண்டுவர
வேண்டுகிறேன்.
ஊடகக்காரர்கள் முன் செய்திகளை வெளிவிடும்போது மிக நிதானமாக வெளியிடுவது
நலம். இல்லையெனில் பொய்களையும் புறம் கூறும் செய்திகளையும் விற்றுப்பிழைக்கும் இந்த
ஊடகக்காரர்கள் வேண்டாத விளைவுகளை விதைத்து விளைவித்து அறுவடையும் செய்து விடுவார்கள்.
(பாரா உஷார்)
சமத்துவம், சுதந்திரம், சகோரத்துவம் என்னும் மக்களின் உறவு,
உரிமைகளுக்கான உன்னத சொற்களை உச்சரித்து, சமத்துவம் சனநாயகத்தையும் தந்த சொற்களை உச்சரித்து,
பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட மாமேதை ரூசோவும் உழைப்பின் வடிவே உலகின் உன்னதக் காட்சி
என்று உலகிற்குச் சொல்லி உழைப்பவனை தோழன் என்றழைத்த சான்றோன் காரல் மார்க்சும் உரைத்ததற்கு
நெடுங்காலத்திற்கு முன்னரே தோளுக்கு மேல் தோழன் என்று மொழிந்த தமிழ்ச் சீர்மையோடு தோழர்
என்று அழைக்கும் தங்களுக்கு சொல்ல நினைத்தேன் சொன்னேன் வேறொன்றுமில்லை.
நன்றி
பெறுநர்
நடிகர் நாசர் அவர்கள்,
தலைவர்,
தென்னிந்திய நடிகர் சங்கம்.
No comments:
Post a Comment