Thursday, 31 December 2015

கண்ணியத்தை இழக்கலாமா?

கண்ணியத்தை இழக்கலாமா?
கடந்த 1965ம் ஆண்டு நிகழ்ந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போர் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே ஒரு புதுமைப் போர் ஆகும்.
பல்வேறு கருத்துக்கள் கொள்கைகளுக்காக பல்வேறு புரட்சிகள் நடத்திருந்கின்றன. மன்னர்களின் கொடுமைகளை எதிர்த்து தங்களின் வாழ்வை நிலைப்படுத்துவதற்காக புரட்சிகள் பூத்திருக்கின்றன. உழைப்பவன் தனது உரிமைகளுக்காக போராடி மடிந்த நிகழ்சிகள் வரலாற்றில் புரட்சிகளாக வர்ணிக்கப்படுகின்றன.
மயக்கம் தரும் மதக் கருத்துகளில் மாற்றம் வேண்டும் மாண்பு வேண்டும் என்று மார்ட்டின் லூதர், ராமானுசர் போன்றோர் புதுமையாக போராடிப் புரட்சி கண்டதாக புகழக் கேட்டிருக்கலாம்.
ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தின் நாவிலும் உணவிலும் இணைந்த தாய்க்கு இணையாக மொழியைக் காக்கப் போராடி உயிர்விட்டு ஏற்படுத்திய புரட்சியை இங்கேதான் இந்த தமிழகத்தின் தான் நிகழ்ந்தது.
இந்தப் புரட்சி இயற்கையாகவோ தன்னெழுச்சியாகவோ நடந்துவிடவில்லை. அண்ணாவின் பொதுவாழ்வின் நுழைவுக்குப்பின் அவரும் அவரது அன்புத் தம்பிகளும் உழைத்த உழைப்பின் விளைவாகவும் தொய்வற்ற பல்வேறு நிலைகொண்ட பரப்புரைகளின் பயன்களாகவும் மாணவர் மத்தியில் ஏற்படுத்திய வீரம் சார்ந்த வேட்கையால்தான் இந்தப் புரட்சி இங்கே நிகழ்ந்தது.
இந்தப்போரை நடத்துவது தி.மு.க. தான் என்றாலும் பொதுநிலை பெற வேண்டும் என்று முத்தமிழ் காவலர் திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களை இந்தப்போரை அறிவிக்கச் சொன்னார் அண்ணா அவர்கள். அறப்போராகத்தான் அறிவித்தார் திரு. கி.ஆ.பெ. ஆனால் கழகத் தோழர்கள் ஆர்ப்பரிப்பைத் தாங்க முடியாத அன்றைய முதல்வர் திரு. பக்வத்சலம் அவர்களும் மத்திய அரசும் ஆணவப் போக்கோடு தோழர்களை கொன்று குவித்த நிலையை ஏற்படுத்தினர்.
தென் வியட்நாம் புத்த பிட்சுகளைப் போலவே உடலை தீ நாக்குகளுக்கும் இரையாக்கினர் திரு. சின்னச்சாமி, திரு. சிவலிங்கம், திரு. அரங்கநாதன், திரு. வீரப்பன், திரு. முத்து, திரு. சாரங்கபாணி ஆகிய கழக மாவீரர்கள்.
இராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுக்கு மார்புகாட்டி நின்ற மாணவன் சிவங்கை ராஜேந்திரன் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த, கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்த இளம் காளை.
அன்றைய போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் திரு. பே. சீனிவாசன், திரு. எல்.கணேசன், திரு. துரைமுருகன், திரு. வேடச்சந்தூர் முத்துச்சாமி, திரு. ஜீவா கலைமணி, திரு. ரஹ்மான்கான், திரு. ஆலடி அருணா, திரு. மு.பி. மணிகண்டன், திரு. அமுதன் போன்ற மாணவத் திலகங்கள் ஆகும்.
தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் உயிர்களை இழந்தவர்களும் கழகத் தோழர்கள்தான். சிறைக் கூடத்தில் நிரப்பப் பட்டவர்களும் சித்திரவதைக்கு ஆனானவர்களும் தி.மு.க. தோழர்கள்தான். அதுமட்டுமின்றி, இங்குள்ள எல்லா மக்களையும் தரமாகவும், திறமாகவும் அழகு நடையிலும் அணி நலம் சார்ந்த, எழில் நடையிலும் பேச வைத்தது தி.மு.க.தான்.
ஒருவன் அழுத்தமாகவும், அழகாகவும் தமிழை உச்சரித்தாலே அவன் தி.மு.க காரன்தான் என்று அழைக்கின்ற, மதிக்கின்ற நிலை பெற்றது தி.மு.க. தான்.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போருக்கு, புரட்சிக்கு இதயமாய் நின்று இயக்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அதனால்தான் பக்வத்சலம் அரசு அவரை மட்டும் தனிமைச் சிறைக்கு பாளையங்கோட்டைக்கு கொண்டுசென்றது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் நடந்த அந்த ஆண்டிலிருந்து போர் அறிவித்த நாளில் வீர வணக்கம் நாள் கூட்டம் நடந்து மொழிப்போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு இன்றுவரை வீரவணக்கம் செலுத்துகின்ற இன்றைய தித்திக்கும் தி.மு.க தான்.
அதுமட்டுமல்ல தமிழினம் தோன்றிய நாளிலிருந்து காணாத தமிழக காட்சிகளை எல்லாம் கலைவடிவத்தோடு கட்டமைத்து அதைப் போற்றி மகிழும் கட்சியாக தி.மு.க. மட்டுமே இருக்கின்றது. உலக விந்தைகளில் ஒன்றான வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், வானளந்த தென்குமரி முனையில் வள்ளுவர் சிலை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி, பாவாணரின் அகரமுதலி தொகுப்பு, திரு.கீ.இராமலிங்கனாரின் ஆட்சி மொழி அகராதி அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் அரசுடமை, அனைத்துக் குறள்களையும் மனப்பாடம் செய்த மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் நிறைய நிறைய தமிழ்த் தரவுகளை உருவாக்கி தமிழர்களின் உள்ளத்தை உவகையில் ஊஞ்சலாட வைத்தவர், தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ் வாழ்த்தாக மாற்றித் தந்தவர், தலைவர் கலைஞர் அவர்கள்.
ஏற்கனவே, அண்ணா காலத்தில் நிலைநாட்டிய, மதராஸை தமிழ்நாடு ஆக்கியது, தமிழ் ஆட்சிமொழி என்று நடப்பில் சாத்தியமாக்கியது, உலகத் தமிழ் மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் தமிழ்ச் சான்றோருக்கு சிலை வைத்தது, உலக மொழி ஆங்கிலத்தோடு தமிழையும் சேர்த்து பாடமொழியாக ஆக்கியது தி.மு.க. தான். எத்தனை பெருமைகளை அறிந்தும் அறியாதது போல, உணர்ந்தும் உணராதவராக இங்குள்ளோர் இருப்பது பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் இதையெல்லாம் செய்த தி.மு.க.வையும் கலைஞரையும் காய்ந்து கொண்டே தமிழ் மீது தணியாத காதல் கொண்டவர்களாக காட்டிக் கொள்வதைப் பார்த்தால், இவர்கள் மீது கசப்புணர்வு மட்டுமல்லாமல் கடுமையாக சாடவேண்டும் என்று தோன்றுவது என்பது உண்மையாக உள்ளம் உள்ளவர்களுக்கு உறுதியாக கருத முடியும்.
தமிழ் உணர்வையும் தமிழனத்தையும் காப்போம் என்று ஒற்றை மனிதராக ஊடக வெளிச்சத்தில் முகம் காட்டும் மணியரசன், தமிழரசன், தமிழறிவு மணியன், சீமான் வணிக மனம் கொண்டோரால் நடத்தப்படுகின்ற பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓங்கி முழங்கும், உள்ளத்தில் உண்மை உணர்வற்றோரை நினைக்கின்ற போது மனதில் மாறாத நகைச்சுவை காட்சிகளே தெரிகிறது.
இயல்பாக ஓர் ஆயிரம் பேரை கூட்டமுடியாத சில அரசியல் பொதுநல நிறுவனங்களும் இதில் இணைந்து கொள்வது என்பது ஏ, தமிழகமே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இழிவுகளைத் தாங்கப்போகிறாயோ என்ற எண்ணமே இதயத்தில் எழுகிறது.
இதில் ஏடு நடத்துவோர், எழுத்தாளர்கள், தங்களை இனம் காட்டுவோர், பதிப்பகச் சான்றோர் என பகட்டுமொழி பேசுபவர் எல்லாம் கூட தி.மு.கவின் தமிழ்ப் பெருமைகளைச் சுட்டாமலேயே தவறான தகவல்களை வெளிப்படுத்துகின்றனர்.
தற்போது ஒரு செய்தி, ஆழி.செந்தில்நாதன் எனும் பதிப்பாளர் பொள்ளாச்சியில் ஒரு நிகழ்ச்சியை முடித்திருக்கிறார். இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் அதிகம் உயிர் இழந்தவர்கள் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்காக அங்கே ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று அவரது ஆர்வலர்கள் ஏற்பாடு செய்து அதை இவர் நிறைவேற்றியிருக்கிறார். இதில் ஒரு செய்தியைப் பார்க்க வேண்டும். இந்தித் திணிப்புப் போர் முடிந்து அய்ம்பதாவது ஆண்டில் இங்குள்ள சில ஏடுகளும் தொலைக்காட்சிகளும் கூட புரட்சி என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். போர் நடந்த நாளில் போரையும் தி.மு.க வையும் இகழ்வாகப் பேசிய பத்திரிக்கைகள் இந்தப் புரட்சி என்று சொல்வது மகிழ்ச்சிதான். தி இந்து தமிழ் நாளிதழ் அய்ம்பதாவது நினைவு நாளில் ஒரு முழுப் பக்கத்தில் ஆழி. செந்தில்நாதன் அவர்கள் தொகுத்த செய்திகளை அழகுபட சொல்லியது.
அதில் கடைசிப் பகுதியில் திரு. செந்தில்நாதன் இந்தப் போரின் விளைவுகளை அறுவடை செய்தவர்களும் திராவிடக் கட்சிகள்தான். ஆட்சியிலிருந்த தி.மு.கவும், அ.தி.மு.க.வும் தான் என்றார். அந்தப் போர் நடந்தபோது அ.தி.மு.கவே பிறக்க வில்லை. அ.தி.மு.க.வை உருவாக்கிய திரு. எம்.ஜி.ஆர். அவர்கள், செல்வி ஜெயலலிதாவுடன் கோவாவில் ஒரு படப்பில் டூயட் பாடிக்கொண்டிருந்தார். மொழிப்போரில் புரட்சியின் பயனை அறுவடை செய்தவர்கள் என்பது இந்தப் புரட்சியினால் ஆட்சியில் அமர்ந்தது தி.மு.க. என்பதற்காக சொன்னதாகும். அந்தப் புரட்சியை உருவாக்கிய தி.மு.க அந்தப் புரட்சி நடக்கவில்லை என்றாலும் ஆட்சியை அமைத்திருக்கும்.
வளர்ந்த நிலையில் நடந்து வந்த தி.மு.க. 1957யிலிருந்து சட்டமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்று வந்தது. விழுக்காடு அடிப்படையில் பார்த்தால் 1967ல் ஆட்சிக்கு வந்தேயிருக்கும். விதைத்தவன், விளைவித்தவன், அறுவடை செய்தால் கூட அது தவறல்ல. ஆனால் வீதியில் நின்றவன், வீட்டுக்குள் அடைந்தவன், வீணாய் போனவன் எல்லாம் இந்தப் போரின் புகழை அறுவடை செய்வது எந்த வகையில் நியாயம். இதயமுள்ளோர் எண்ணிப் பார்க்க வேண்டும். மேலும் அண்ணாவின் மறைவிற்குப் பின், கலைஞர் காலத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் 1971ல் வரலாறு காணாத 184 இடங்களில் வெற்றி பெற்றது தி.மு.க. ஆனால் அதற்குப் பின் வந்த மேட்டுக்குடி சூத்திரதாரிகளின் சதி வலையில்கீழ் கட்சி பிளவுபட்டது. அதனால் நிலை மாற்றம் கண்டது. மேட்டுக் குடியினர் அ.தி.மு.கவை தங்கள் அதிகார வலைக்குள் வளைத்துப் போட்டனர். அவர்களின் பிடியில் அப்போது இருந்த தமிழர்களும் அடங்கி விட்டார்கள். இருப்பினும் தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து தமிழ் வளர்க்கும் தரவுகளை தவறாது நிலைப்படுத்தி வருகிறார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கணினி விசைப்பலகை அமைக்கும் ஆய்வரங்கம், அதற்குமுன் நடந்த தமிழ்நெட் 99 எனும் கருத்தரங்கம், அது மட்டுமல்லாது ஆட்சியில் இருந்த போதும் இல்லாதபோதும் இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர்களை திரட்டி வைத்து தமிழ் தரவுகளை ஒப்பிப்பது, உருவாக்குவதுமான நிகழ்வுகளை நிறைய நிறைய செய்தவண்ணம் இருக்கிறார்.

இது ஒரு துளி அளவு கூட செய்யாத ஜெயலலிதா ஆட்சியில் அமர்த்த மேற்கொண்ட தனிமனிதர்களும் அரசியல் அமைப்புகளும் தமிழை விரும்பாதவர்களும் துணை செய்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதாகும். ஆனால் எத்தனைதான் சொன்னாலும் தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். மக்களை மயங்கச் செய்யும் செயல்களிலிருந்து விலகிக்கொள்ள மாட்டார்கள், எதைச் சொன்னாலும் ஏற்க மாட்டார்கள் என்றால் கணியன் பூங்குன்றன் சொன்னது, தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது போல இவர்கள் மூட்டுகின்ற தீய நிலைகளில் பொசுங்கி புகையாகிப் போவார்கள். இது போன்ற எத்தனையோ நிகழ்வுகளை வரலாறு சந்திருக்கிறது.

No comments:

Post a Comment