அறிவாளரோடு
உறவாடும் மடல்
அன்பின் தளபதி அவர்களுக்கு வணக்கம், வாழ்த்துக்கள். விடியல்
மீட்புப் பயணம் நல்ல விளைவுகளை விதைத்து வருகிறது. தங்களது ஓய்வு பெற்ற உழைப்பிற்கும்
கருத்து விதைப்பிற்கும் பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் பாராட்டு மொழிகள் மலரெனத்
தூவப்படுகிறது.
கடந்த காலத்தில் கிளைக் கழகத் தோழர்களையும் அதில் ஈடுபாடு காட்சி
கழகத்தை வலிவுபடுத்தும் நிகழ்வுகள் நிகழ வேண்டும் என்று வேண்டியிருந்தேன். அதுபோலவே
மாணவ, மாணவியரையும் கழகத்தில் ஈர்க்கும் வழியாக அவர்களுக்கென்றே தனியாக நிகழ்ச்சிகள்
நடத்த வேண்டுகிறேன்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெரு நகரங்களில்
உள்ள மாணவர்களை அந்தந்த ஊர்களிலும், மற்ற மாணவர்களை மாவட்டத் தலைநகரங்களிலும் கலந்துரையாடல்
நிகழ்வை நடத்த வேண்டுகிறேன்.
அடுத்த நிலையில் தமிழகமெங்கும் உள்ளவர்களுக்காக ஒரு சிறப்பு
மாநாட்டை திருச்சி மாநகரில் நடத்தலாம். அதில் ஆர்வமுள்ள மாணவர்களைப் பேச வைத்து உலக
வரலாற்றை விளக்க வைக்கலாம். அண்ணா காலத்தில் இருந்த அவருக்கும் மாணவர்களுக்கும் இருந்த
உறவைச் சொல்லலாம்.
1965 மாணவர் உலகம் நடத்திய மொழிப்புரட்சியை பேச வைக்கலாம். அந்த
மொழிப் புரட்சியை முழு வெற்றி பெரும் வகையில் இயக்கிய இனிய தலைவர் கலைஞரைப் போற்றச்
செய்யலாம். அண்ணா கொண்டுவந்த இருமொழித் திட்டத்தால், சட்டத்தால், மாணவர்கள் அடைந்த
பயன்களைப் பட்டியலிடலாம்.
கலைஞர் ஆட்சியில் கல்வியும் அதன் உயர்வையும் உச்சநிலையாக கணிணிப்
புரட்சியை விளக்கலாம். 1999ம் நடந்த தமிழ் நெட்டையும் 2010ல் நடந்த உலகத் தமிழ் செம்மொழி
மாநாட்டில் கணிணிக் கருத்தரங்கங்களையும் அதில் கணிணி இயக்க விசையையும் உருவாக்கியதையும்
அதன் விளைவுகளையும், உலகளாவிய நிலையில் மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்பும் பயனும் நிகழ்ந்ததை
நிதர்சனப் படுத்தலாம்.
சமச்சீர்க் கல்வி என்பது கல்வி வரலாற்றில் ஓர் புதுமைப் புரட்சி
என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தும் நிகழ்வாக அது இருக்கலாம். மாணவர் உலகில்
மகத்துவம் என்பது தாங்கள் அறியாதது அல்ல. தலைவரைப் போலவே தாங்களும் மாணவ நிலையிலேயே
கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்று அமைப்பு வைத்து அண்ணா, இராஜாஜியை அழைத்து பேச வைத்தது
நெஞ்சின் நினைவில் ஒளிர்கிறது.
உயர்நிலைப்பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவத் தோழர்களை ஆங்காங்கே
கூட்டி வைத்து விளக்கம் தருகின்ற நிகழ்வை நிகழ்த்த வேண்டுகிறேன். அது இன்றைய பயன் என்பதுமட்டுமல்ல
எதிர்கால கழக வலிமைக்கு பொதுவாழ்வு தொண்டர் பெருக்கத்திற்கும் வழி வகுக்கும். பின்
வரும் பேராளர்கள் பலரும் தளபதியால் இந்த நிலை அடைந்தேன் என்று சொல்லும் நிலை வரும்.
பட்டமளிப்பு விழா போல மாணவர்களுக்கு பாடம் நடத்தி போதிப்பது
என்பது மாணவர் உலகில் தங்களுக்கென்று தனிஇடம் பெறவும் கூடும். கழகத்தைச் சொல்வதற்கென்றே
இருபத்துநாலு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி முப்பதாயிரம் பிரதிகளை இலவசமாக வழங்கி
ஏறத்தாள பல்வேறு தலைப்புகளில் ஒரு இலட்சம் துண்டு வெளியீடுகளை மக்களிடம் விதைத்த கழகத்தை
உயிரணுக்களில் ஊன்றி வைத்திருக்கும் இந்த எளிய தொண்டனின் எண்ணத்தை எண்ணிப் பார்க்க
வேண்டுகிறேன். ஏற்றுக் கொண்டால் திட்டமிடுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
2016 தேர்தல் நெருங்கி வருகிறது. தமிழகத்தில் நெறி சாரா நிலையில்
இயக்கும் நிறைய இருக்கின்றன. ஆதாரமற்ற பொய்களை அழகிய வடிவத்திலெல்லாம் காட்டி மக்களை
அலைக்கழிக்கின்ற ஊடகங்கள் வேறு ஊதுகுழலாக ஒத்து ஊதுகின்றன.
காட்சி மயக்கத்தில் நீண்ட காலமாகவே கனவில் நீந்துகின்ற மக்களாக
நமது மக்கள் இருக்கிறார்கள். வேறு சில சிக்கல்களும் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி
தமிழகத்தை தலைநிமிர்த்த தளபதியின் உழைப்பை தலைமையில் ஏற்று, நடைபோட்டு, வெற்றிச் சிகரத்தை
எட்டுவீர்கள் என்றாலும் அதற்குத் தங்களோடு உடல் வலிமையும் உள்ள உணர்வும் கொண்ட அனைவரும்
உழைத்தாக வேண்டும். அதற்கான ஊட்டச் சத்தை ஏற்கனவே வழங்கியிருக்கிறீர்கள். இருப்பினும்
அதில் சோர்வு சிறிதும் அடையாதிருக்கு அவர்களை இயக்க வேண்டுகிறேன். கழகத்தின் நூற்றுக்கணக்கான
சிறந்த பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படிப் பேச வேண்டும் என்று நெறிப்படுத்தி
செலவில்லாத தெருமுனைப் பரப்புரையை மேற்கொள்ள வேண்டுகிறேன். அடைமழை போல் ஆறேழு மாதங்களில்
மக்களை அணுகுவது வாக்குகளைக் குவிக்க உதவும் என்று கருதுகிறேன்.
நன்றி
பெறுநர்
தளபதி, மு.க.ஸ்டாலின் அவர்கள்,
கழகப் பொருளாளர், அண்ணா அறிவாலயம்,
சென்னை.
தளபதி, மு.க.ஸ்டாலின் அவர்கள்,
கழகப் பொருளாளர், அண்ணா அறிவாலயம்,
சென்னை.
No comments:
Post a Comment