Monday, 14 December 2015

அறிவாளரோடு உறவாடும் மடல்

அறிவாளரோடு உறவாடும் மடல்
அழகை விரும்புவோரையும், அவர்களுக்கு மறுப்புச் சொல்வோரையும் முகம் பார்க்க வைத்து, உள்ள உணர்வுகளை உலகம் காண வைத்த நீயா? நானா? பல்சுவை உணர்வுகளை படைப்பது போல் இதிலும் தன் அழகைக் காட்டி நின்றது.
இருதரப்பும் நிறையச் சொன்னார்கள். அதோடு ஆசையும் தேவை என்றார்கள். அலங்காரம் அவசியமென்றும் அறைந்தார்கள். சிலர் மன அழகுதான் தேவை என்றார்கள் அறிவாளர்கள் நிறைந்த நிலைகளை அழகாகச் சொன்னார்கள்.
அழகு என்பது இயற்கையோடு இணைந்திருப்பது, அதை இருவகை என்பார்கள். இதை தமிழில் எழில் என்றும் அழகு என்றும் இனம் பிரிப்பார்கள். இயற்கையில் காணும் காட்சிகளை மூளையின் செழுமைக்குத் தக்கவாறு இரசிக்கச் சொல்லுவதை எழில் என்றார்கள்.
தன் முகத்தைக் காட்டும் கண்ணாடித் தன்மைக்கு முன்னர் நிற்கும் உயிரினங்களில் அதே மூளைச் செழுமைக்குத் தக்கவாறு ஒப்பனை செய்யச் சொல்லும். அதற்கு அழகு என்று பெயர் வைத்தார்கள்.
மனஅழகு, உடல் அழகு என்றும் பலர் கூறுவதுண்டு. இயற்கையில் தோன்றும் கருமேகத்தை எழில் என்று சொன்னான் இனிய வள்ளுவன். மலரும் கொடியும் எழில்தான். அதற்கு ஒப்பனை தேவையில்லை. ஆனால் அந்த மலரும் பிறவும் ஒப்பனைக்கு பயன் படுகின்றன.
ஆண்களின் அழகு, மிருகங்கள் பறவைகளுக்குத்தான் உண்டு என்பார் கவிஞர் வைரமுத்து. சிங்கம், கோழி, மான் போன்றவற்றைக் குறிப்பிடுவார் அழகின் சிரிப்பு என்று புரட்சிக் கவிஞர். இயற்கையின் எழிலையெல்லாம் எழுத்தில் வடித்து நமது இதயத்தில் நிரம்பி வைத்தார்.
எல்லை தாண்டும் போது அன்பழகு அறிவழகு இயலழகு கெட்டு ஆணவப் போக்கும் ஆசை நினைப்பும் மேலோங்கி அவலங்கள் தோன்ற காரணமாகி வருவதை உணர முடிகிறது.
தமிழர்களில் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியாகவே உடைகளையும் அணிகலன் வகைகளையும் உடலோடு இணைத்து வைத்திருந்தார்கள். தலைமுடி கொண்டையும் அதில் பூச்சூடி காதில் தோடும், தொடியும் (பிரைஸ்லெட்) கையிலும் காலிலும் வீரக்கழல் என்று கால்தண்டையும் கைத்தண்டையும் அணிந்து அழகுப்படுத்திக் கொண்டார்கள். இப்போது கூட இந்த தெலுங்கு வழி வந்தவர்கள் இன்னும் அணிகிறார்கள்.
தமிழர்கள் உடை அணிவதில் ஒரு பாதுகாப்பு இருந்தது. பின்கொசுவம் வைத்து கட்டும் சேலையை எளிதில் யாரும் அவிழ்க்கவோ, உருகவோ, மேலே தூக்கவோ இயலாது. இன்னும் சொல்வதென்றால் பாலியியல் முயற்சியின் போது சோர்ந்து போக வேண்டும் அல்லது அவள் உடன்பட வேண்டும்.
ஆனால் இங்கு மன்னர்களுக்காகவும் மைனர்களுக்காகவும் பொட்டுக்கட்டப்பட்டு  தேவதாசிகளாக விளங்கியவர்களில் பலர் ஊர்மேய வேண்டிய ஒப்பனைகளில் ஒன்றுதான் இந்த நாட்டியக்காரிகளின் ஒப்பனை உடையழகுதான் இங்குள்ள பெண்களால் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிலப்பதிகாரத்தில் மாதவியின் நாட்டிய அரங்கேற்றத்திற்கு பயன்படுத்திய ஒப்பனைப் பொருட்களெல்லாம் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த ஒப்பனை அழகு என்பது தன் நிலை தாண்டுகின்றபோது தான் ஆணவத் திமிர் ஆசை அழுத்தம் கூடி, அறிவழகு, அன்பழகு, இயல்பழகு இயற்கையழகு கெட்டு அவலங்களும், அசிங்கங்களும் ஏற்பட்டு அறம் அழித்து விடும் நிலைகாண்கிறது என்பதை உற்றுப் பார்த்தால் உணர்ந்து கொள்ள முடியும்.
*****
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், வாழ்த்துக்கள். நினைத்திடும் போதெல்லாம் இனித்திடும் நீயா? நானா? நிகழ்வில் சித்த மருத்துவத்தின் சீர் செழுமைகளையும் புதுமைக்குள் புகவிடாத புண்ணான நிலைகளையும் விரிவாகவே விவாதித்தார்கள்.
கோபியின் குளிர் முகத்தில் குறுந்தாடி பயிராகி, பசுமை காட்டி நிற்கிறது. நிகழ்ச்சியின் நேரத்தையும் குறள் வடிவில் கொண்டுவந்து, வீண்விவாதங்களைத் தவிர்த்து, அதாவது பயினில சொல்லாமை என்பதுபோல் பார்ப்பவர் சலிப்படையாத நிலையை உருவாக்கியது உண்மையில் உவகை தரும் ஒன்றுதான்.
சிந்தனையில் பூத்த கருத்துக்கள் பலவற்றை இருவேறு நிலைகளிலும் எடுத்து வைத்தார்கள். இதில் இன்னும் பல செய்திகளைச் சொல்லியிருந்தால் மகிழ்வாக இருந்திருக்கும். மருத்துவர் திரு. சிவராமன் அவர்கள் இன்னும் கூட விரிவாக விளக்கிச் சொல்லியிருக்கலாம். அதாவது இது மருத்துவமாக மட்டும் பார்க்கவில்லை. இதில் மதக் கருத்துக்களும் வழிபாட்டு உணர்வுகளும், ஆதிக்க உணர்வுள்ள குரு-சிஷ்ய நிலையும் சூழ்ந்திருக்கிறது. தி.மு.க. அரசைத் தவிர வேறு எந்த அரசும் எல்லாக் காலத்திலும் ஆதரவு அளிக்காததும் காரணம். இதை வணிக நிலைக்குள் கொண்டு வரக் கூடாது அப்படி செய்தால் அது பாவம் என்ற போதனையும் தான் காரணம் என்று அவர் விளக்கியிருக்கலாம்.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பது அடுப்படி அஞ்சரைப் பெட்டியை ஆய்வுக் கூடமாக வைத்து, அன்னையர் குலம் உருவாக்கியது. அந்நிய மோகத்தில் அனைத்தையும் இழந்த தமிழன் இந்த இனிய மருத்துவத்தின் மகத்துவம் மாண்பையும் கூட இழந்து வந்தான், வருகிறான்.
மருத்துவர்களை தனித்தனியே குற்றம் சொல்வதோ மொத்தமாக குறை சொல்வதோ கூட அறம் ஆகாது. பொதுவாக இந்தியா என்று சொல்லப்படும் இந்தப் பகுதியில் ஆய்வு, அறிவுணர்வில் எந்த அரசும் இருந்ததில்லை, இயங்கியதில்லை. ஒரு ஆராய்ச்சி கூடத்தையோ கல்லூரிப் பல்கலைக் கழகத்தையோ உருவாக்கித் தரவில்லை. இதில் ஆயுர்வேதம் என்பது ஆரிய வேதமாகக் கருதி அதற்கு மட்டும் அரசுகள் ஆதரவிட்டன. இந்த சித்த மருத்துவம் என்றால் சித்தர் நாத்திகர்கள் என்று கருதி, அதை அழித்திடவும் முனைந்தன.
ஞானம் என்பது பொதுவானது, விஞ்ஞானம் என்பது அதை விஞ்சிய ஞானம். விஞ்ஞான மருத்துவம் தான் அலோபதி மருத்துவம். ஆய்வுக்கூடங்களில் அலசப்பட்ட முடிவுகள் தான் அலோபதி. அதுபோல இல்லாமல் அய்ன்ஸ்டீன் போல ஆய்வுக்கூடம் இல்லாமல் கண்டுபிடித்ததுதான் இந்த நாட்டுப்புற மருத்துவம். தமிழ் மருத்துவம் தான் இந்த சித்த மருத்துவம். ஆதிக்கம் செலுத்தாமல் அரசுகளின் ஆதரவு இருந்தால் உலகின் முதல் நிலைக்கு உயர்ந்து ஒளிவீசும். அமெரிக்காவில் அண்ணா சொன்னார் எங்கள் அன்பழகனுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தபோது, குப்பைமேனி இலையை வைத்து நோய் தீர்த்தோம். ஆனால் எங்களிடம் எல்லாமே கச்சா பொருளாகவே இருக்கிறது என்றார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் வந்த கலைக்கதிர் இதழ் ஒன்றில் படித்த நினைவொன்று கண்முன் விரிகிறது. அதில் சித்த மருத்துவம் வெள்ளை பாசானம் என்று பழிக்கின்ற இந்த சுகர் (வெள்ளை சீனி) என்பது தூய்மைப் படுத்துகின்ற போது அதிலுள்ள வேதிப்பொருட்கள் (மொலாசஸ்) வெளியேறி விடுகிறது. அதனால் அந்த சீனியில் சமச்சீர் இல்லாது போய்விடுகிறது. அது குடலுக்குள் செல்லுகிறபோது வேறுபல வேதிப்பொருட்களை சுரண்டுகிறது. அதனால் இந்த சமச்சீர் கெட்டு சக்கரை நோய் வந்து விடுகிறது. ஆனால் இதை உணர்ந்த நாடுகளில் கூட நானூறு மடங்கு விரும்பப்படுகிறது என்றது அந்தக் கட்டுரை.
வெல்லம், கரும்புச்சாறு, பழங்கள், பழச்சாறு, பனைவெல்லம் போன்றவற்றை உண்டால் நோய் வராது என்று விளக்கப்பட்டிருக்கிறது. உலகில் எல்லாத் தரவுகளையும் ஒன்றுபோல் பார்ப்பதோ அது ஆகாது என்று உதறி விடுவதோ அறிவுடைமை ஆகாது. அதனதன் நிலைக்குள் இயங்க வேண்டும். இதை மனித அறிவு உணர்ந்து, மதித்து, உள்வாங்கி துய்க்க வேண்டும். அது ஊருக்குச் சொல்லி உணர்த்துவது அறிவாளிகளின் மக்கள் நலம் நாடுவோரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
நேரத்தை சுருக்கிய நீயா? நானா?மேலும் மேலும் கூர்மையான அதுவும் தமிழின் உண்மைப் பெருமைகளை உலகிற்கு உரைக்கும் நிகழ்வுகளை இன்னும் இன்னும் தெளிவாகப் பேசுகின்ற ஆய்வாளர்களை, அறிவாளர்களை, நல்லுணர்வாளர்களை திரட்டி நடத்த வேண்டுகிறேன். நடக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி

No comments:

Post a Comment