அறிவாளரோடு
உறவாடும் மடல்
ஊரிலுள்ள உண்மைகளை உற்றுப் பார்த்து உலகிற்கு உணர்த்தும், ஊடக
நிகழ்வில் ஒரு மைல் கல்லாக நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வொன்றை தந்த நீயா? நானா? உயர்ந்து
உயர்ந்து நின்று உள்ளத்தில் நிறைந்திருக்கின்றது.
பொதுநல உணர்வாளர்கள் பலர் கண்ணில் படாத கருத்தில் உணராத, உறையாத
காட்சிகளைக் காட்டி கருத்தில் நிறைய வைக்கும் நிலையை தன் கடமையாகச் செய்கிறது நீயா?
நானா?
பெண்களின் உழைப்பை குறிப்பாக உடலை வருத்தி உருக்குலைக்கும் உள்ளத்தை
ஊனப்படுத்தும் இழிந்த வேலைகளைச் செய்வோரின் உடமைகளை உறிஞ்சும் வஞ்ச நெஞ்சம் கொண்டவர்கள்
மனித உருவில் உலவுகின்ற ஓநாய்க்கு ஒப்பானவர்கள்.
உதிரத்தை உறிஞ்சும் அட்டையைப் போல உழைப்பவர்கள் உரிமையை, உடமையை
கொள்ளையிடும் கொடூரன்களை எதிர்த்துப் போராடிய அண்டை மாநிலத்துத் அருமைத் தமிழ்ச்சிகளைக்
கண்முன் காட்டியதை என்றும் மறக்க முடியாது.
என்றென்றும் போர்களத்தில் நின்ற தந்தை பெரியார், ஆயிரம் பத்தாயிரம்
பேர் போராட்டத்தில் உயர் விட்டால்தான் புரட்சி வெடிக்கும், உரிமை கிடைக்கும் என்றார்.
ஊன்தின்று உடலெடுத்து இன்று ஏழு கோடிப்பேராக பெருகி நிற்கும்
தமிழன் தமிழச்சிகள் போராட்ட உணர்வு இல்லையே என்று கோபி கேட்ட போது கஞ்சி காய்ச்சி குடித்துவிட்டு
கழிவறைக்கு சென்று வந்து கணப்புத் தணிக்க குட்டிகளை போட்டுக் குடும்பத்தைப் பெருக்குவதுதான்
தனது வாழ்வு என்று கருதும் நிலையை எங்கும் காணுகின்ற போது கண்கள் பனிக்கிறது பின் மனம்
கடுப்பாகிறது.
மானத்தை நிலைநாட்டும் போர்களங்கள் நிறைந்த தமிழ் நிலத்தில்,
மாவீரர்கள் உலவிய இந்தக் திருவிடத்தில் மனித உணர்வில் கூர்மையும் மனதில் செழுமையும்
நிலைபெறவில்லை. இலக்கியங்கள் குவிந்து கிடக்கின்ற இங்கு கல்லும் மண்ணும் அருள்தரும்
உணர்வுகள் என்று கருதி அதுதான் கடவுள் என்று ஊராரையும் நம்ப வைத்து, கண்மூடி நின்று
கைவித்துத் தொழும் அவலம் இன்றுவரை இருக்கக் காண்கிறோம்.
இருப்பது என்னவென்று எண்ணிப்பார்காத இயல்பு கொண்ட, இகம்பர சுகம்பெற
ஏதேதோ நினைத்து எதிர்பார்த்து ஏமாறும் மனநிலையில் இந்த நிகழ்வைத் தந்ததற்கு என் பாராட்டுகளைத்
தெரிவிக்கிறேன்.
குறிப்பு: இந்த அமைப்புச்சார தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியதும்
பெண்கள் பலருக்கு உதவிகளையும் சலுகைகளையும் அறிவித்தவர் கலைஞர் என்பதையும் குறிப்பிட்டிருந்தால்
மேலும் மகிழ்வூட்டியிருக்கும்.
நன்றி
*****
பெற்றோரை தன் அருகில் வைத்து பேண வேண்டும் என்று கருதுகின்ற
பிள்ளைகளையும் அவர்களின் விருப்பத்தையும் மறுக்கும் பெற்றோரையும் எதிரெதிராக வைத்து
நடத்திய நிகழ்வு மிக நன்றாகவே இருந்தது.
மனத்திற்குள் மறைந்திருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் வித்தையை
நீங்கள் இருவரும் எங்கு கற்றீர்களோ வியப்பாக இருக்கிறது.
நன்றி
*****
அறிவாளரோடு
உறவாடும் மடல்
வடஇந்தியா - தென்னிந்திய வாழ்க்கை நிகழ்வுகள் வேறுபாடு கொண்டது
மட்டுமல்ல முரணும் கொண்டதாகும். இதை கிமுவிலிருந்து இன்று வரை இந்த ஆரிய-திராவிடப்
போர் என்றார்கள் ஆய்வாளர்கள். உலகிலேயே நீண்டகாலம் நடக்கின்ற போராகவும் இருப்பதாக அறைகிறார்கள்.
அண்மைக் காலத்தில் அயத்துப் போன (மறந்துபோன) நேரத்தில் அதை நினைவூட்டும்
வகையில் நீயா? நானா? நிகழ்வொன்றை நிகழ்த்தி உணவுச் சுவையின் வழியாக இருவேறு நிலைகளை
ஒன்றாக்கி மகிழ்ந்தது.
வடஇந்திய-தென்னிந்திய உணவுகளை உயர்வை இருதரப்பினரும் தங்களின்
இயல்பான உணர்வுகளுடன் எடுத்து விளக்கினார்கள். தாங்களே வெற்றி பெற வேண்டும் எனும் நோக்கிலும்
பேசிக் கொந்தளித்தார்கள்.
இருப்பினும் உச்சக் கட்ட நிலையில் உணவின் சுவையோடு உள்ளம் மகிழ்ந்து
உவகை கொண்ட நிலையில் நிகழ்வை நிறைவு செய்தீர்கள்-பாராட்டுகள். ஆனால் எப்போதுமே வடவர்களும்
சரி தென்னவர்களில் பலரும் சரி வடக்கு வெற்றி பெறும் நிலைக்கே தங்கள் கருத்துக்களை தருகிறார்கள்
என்பதற்கு நீயா? நானா?வும் ஒரு சான்றாக அமைந்தது. விருந்தினராய் வந்த நால்வருமே செய்திகளை
சேகரிக்காமல் நடுநிலையைத் தாண்டி வடவரை வாழ்த்தும் செய்திகளைச் சொல்லிப் பூரித்தார்கள்.
இந்தியாவெங்கும் பயணித்த எழுத்தாளர் சாருநிவேதிதா உணவுகளில்
நாற்பது வகை என்றார். அவர் வடக்கைச் சொன்னாரா? தெற்கைச் சொன்னாரா தெரிவில்லை. ஆனால்
உலகிலேயே உணவானாலும், உணர்வுகளனாலும் சொல்லும் பொருளும் பிறந்தது இந்த தென்னிந்திய
திராவிட மொழிகளின் தாயகமான தமிழில்தான் என்பது முழு உண்மையாகும். சொல்லுதல் என்பதற்கு
அதாவது தனித்தனியே பொருள் கொண்ட சொற்கள் நாற்பதிலிருந்து நூறுவரை இருப்பதாக ஆய்வாளர்கள்
அறைகிறார்கள்.
இந்த பிரியாணி, குலாப்ஜாமூன், புரோட்டா என்பதெல்லாம் இஸ்லாமிய
உணவுகள் என்று சொல்வார்கள். ஆனால் பிரியாணியை சங்க காலத்தில் கறி விரவு, நெய்ச்சோறு
என்று குறிப்பிட்டார்கள். குலோப் ஜாமூன் என்பதை கழுநீர் உருண்டை என்று இன்றும் நடைமுறையில் உள்ளதாகும்.
அதுபோக அரிசி களைந்த நீரின் அடிமண்டியை எடுத்து மண்டி என்று புளிக்குழம்பு ஒன்றை செய்வார்கள்.
மிகவும் சுவையாக இருக்கும்.
சமைப்பதற்கு 22 சொற்களும் உண்பதற்கு பன்னிரண்டு சொற்களும் சமைத்து
உண்ணும் பண்டங்களின் பெயர்கள் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலாக தமிழில் இருந்தது, இருக்கிறது.
அருந்துதல், உண்ணல், உறிஞ்சுதல், தின்றல், துய்த்தல், நக்கல்,
நுங்கல், பருகல், மாந்தல், மெல்லல், விழுங்கல், துகைத்தல் ஆகிய பன்னிரெண்டு.
அவித்தல், இடித்தல், கலத்தல், காய்ச்சல், கிண்டல், கிளரல், சுடுதல்,
திரித்தல், நனைத்தல், துவட்டல், பிசைதல், பிழிதல், பொங்கல், பொரித்தல், மசித்தல், வடித்தல்,
வதக்கல், வறுத்தல், வாட்டல், வார்த்தல், வேகவைத்தல் வெண்ணீர் படுத்தல் ஆக 22.
உண்ணும் பண்டங்களின் வகைவகையான எண்ணிக்கை நாற்பதிலிருந்து நூற்றுக்கு
மேலே இருப்பதாக சான்றோர் சா. கணேசன் சொல்லியிருக்கிறார். அப்படிப் பார்த்தால் நடுவர்கள்
சொல்லுகின்ற செய்தியைத் தாண்டி தமிழில் மலையென குவித்துக் காட்டுகிறது.
நன்றி
No comments:
Post a Comment