Tuesday, 1 December 2015

அறிவாளரோடு உறவாடும் மடல்

அறிவாளரோடு உறவாடும் மடல்
அருமைத் தங்கை அவர்களுக்கு வணக்கம், வாழ்த்துக்கள், இணையதளப் பதிவிலிருந்து தாங்கள் தந்த இரு செய்திகளை என் நண்பர் ஒருவர் கூறிய நேரத்திலிருந்து என் சிந்தை மகிழ்ந்து உள்ளம் சிலிர்த்த நிலையில் இதை எழுதுகிறேன்.
புத்தர், இயேசுவை பல நூல்களில் படித்த எனக்கு தாங்கள் குறிப்பிட்ட செய்தி என்னை வியக்க வைத்தது. புத்தர் தமிழ் படிக்க முயன்றார் என்று இரத்தின விகாரம் எனும் நூலிலிருந்து எடுத்துக் காட்டியதாகவும், இயேசுவைப் பரப்ப மொழி பெயர்ப்புக்கு தேர்வு செய்த அறுபத்துமூன்று மொழிகளில் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ் ஒன்றுதான் என்று தகவல் தந்ததாகவும் நண்பர் சொன்னதும் என் மன உணர்வுகள் அண்ணன் தங்கப் பாண்டியனின் அவர்களின் பால் சென்றது.
ஆய்வாளர்கள் போற்றிப் புகழ வேண்டிய செய்திகளைத் தரும் அன்பு மகளையும் அரசியல் அரங்கில் தி.மு.க. மதிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் அருமை மகனையும் ஈன்று வளர்த்த என் அண்ணன் என் மீது வைத்திருந்த அதீத அன்பின் காரணமாக நெஞ்சின் உணர்வு அலைகளில் அவர் நினைவு நீந்தி மகிழ்கிறது.
அன்பானவர்களுக்கு அடிக்கடி நலன் கேட்டு வாழ்த்து சொல்லும் வழக்கம் உள்ள எனக்கு, நேரில் வரும் நிலையுமில்லை. தங்களுக்கும் தம்பிக்கும் வழங்கும் வாய்ப்பை அலைபேசியும் தரவில்லை. ஆனால் அம்மாவுக்கு மட்டும் அடிக்கடி வாழ்த்துச் சொல்லி நலன் கேட்டுக் கொள்வேன்.
அக்டோபர் 30ம் நாள் தமிழ் இந்து ஏட்டில் தங்களின் குறிப்பொன்றை வெளியிட்டிருந்தார்கள். தங்களை வாசிப்புக்கு தாயும் தந்தையும் வழங்கிய நூல்களைக் குறிப்பிட்டுவிட்டு ஆங்கில இலக்கியம் போதித்த ஆசிரியர் சுப்பாராவையும் குறிப்பிட்டிருந்திருந்தீர்கள்.
நாத்திய சிந்தனையை நட்டு வளர்த்தது அப்பா தந்த நூல்கள் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். இதைச் சொன்ன தாங்கள் நாத்திகத்தை விதைத்து விளைவித்து தமிழர்கள் நலம் பேண உலகிலேயே ஓர் இயக்கம் கண்ட தந்தை பெரியாரை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
பெரியாரின் பேரறிவுக் கொள்கைகளை பேரளவுக்கு இங்கே பதிவு செய்து ஆங்கில இலக்கியத்தை அறிவியல் வரலாற்றின் மூலை முடுக்கெல்லாம் முற்றாக படித்து அறிந்துணர்ந்து படித்ததை அப்படியே ஒப்பிக்காமல் பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு எந்த வகையில் உரம் சேர்க்கலாம் என்று கருதி அணுகி ஆராய்ந்தறிந்து அறிவு நிலையில் செயல்பாட்டுத் தளங்கள் அத்தனையிலும் புகுத்தி புரிய வைத்து இங்குள்ள இளைஞர்களுக்கு உலகத்தை எழுச்சி கொள்ள வைத்த அறிஞர் அண்ணாவைக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கருதினேன்.
அண்ணாவின் அருமைத் தம்பிகளில் ஒருவரான இனமான பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் சொற்பொழிவு சுருக்கத்தை எடுத்துக்காட்ட விழைகிறேன். ஆங்கிலப் பேரறிவாளர் கவிஞர் ஷெல்லியின் கவிதைக் கருத்துக்களிலிருந்துதான் உலகில் நடந்த பெரும் புரட்சிகள் எல்லாம் உருவானது என்கிறார் பேராசிரியர். கவிஞனின் கருத்தை உள்வாங்கி வால்டேரும், ரூசோவும் பிரஞ்சுப் புரட்சிக்கான விதைகளை நட்டு வளர்த்தார்கள் என்கிறார்.
பிரெஞ்சுப் புரட்சியின் போது புரட்சி வீரர்கள் தலைமறைவாகயிருந்த எல்லையோர ஜெர்மன் பகுதியில் தான் காரல் மார்க்சும், ஏங்கல்சும் வாழ்தார்களாம். அந்தத் தலைமறைவு வீரர்களின் உறவும் நட்பும் தான் பொதுவுடைமைச் சித்தாந்தம் பூப்பதற்கு உதவியதாம். அவைகளை உட்கொண்டதால்தான் இலியோவினிச், லெனின் சோவியத் புரட்சியை முன்னெடுத்தாராம்.
அமெரிக்க உள்நாட்டுப் புரட்சிகளுக்கும் கருப்பர் கிளர்ச்சிகளுக்கும் கூட கவிஞனின் கருத்து காரணமானதாம். வாஷிங்டனும் அவரது நண்பர்களும் ஆப்ரகாம் லிங்கனும் கூட ஷெல்லியின் கவிதையை நேசித்தவர்களாம். பேராசிரியரின் பொழிவு சுருக்கத்தை நான் உணர்ந்தவரை சொன்னேன்.
இந்து நாளிதழில் இன்னொரு குறிப்பும் ஒளிர்ந்தது. பக்தி இலக்கியங்களை முற்றாக மறுதளிக்க முடியாது என்பதாலும் பக்தி என்பதின் அடித்தளம் பயம் என்கிறார்கள். பயபக்தி என்பது மதம் போதித்த வகைகளை பயபக்தியுடன் மதித்து மகத்துவமாகப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இவற்றில் ஆய்வுகள் கூடாது, ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக் கூடாது என்றும் பறைசாற்றுகிறார்கள்.
அஃறிணைப் பொருள்களையும் வழிபாட்டுத் தரவுகளாகச் சொல்கிறார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு வரை இருண்ட காலம் என்றார்கள் சில ஆய்வாளர்கள். ஊர்வன, நடப்பன, பறப்பன போன்ற பல்வேறு உயிரினங்களை மக்கள் வணங்கி வழிபட வேண்டும் என்று வல்லாண்மை நிலை காட்டி, வணங்கச் சொல்கிறார்கள். மறுப்பவர்களை கொன்று குவிக்கிறார்கள்.
சோவியத் நூலொன்றின் சான்றுப்படி, பனிக்கரடியை வணங்கச் சொல்லி மறுத்த பத்தாயிரம் மக்களைக் கொன்று குவித்தான் சைபீரியர் பகுதியைச் சேர்ந்த மன்னனின் செயல் அறியப்படுகிறது. இங்குள்ள சாணக்கியனின் அர்த்தசாஸ்திரம் கூட அத்தகைய நிலையை பேரொரு வகையில் செயல்படுத்த சொல்கிறது.
இதையெல்லாம் மறந்துவிடுவோம் இந்த பக்தி இலக்கியங்கள் தமிழ் சார்ந்ததா என்றால் இல்லையென்கிறார்கள் பகுத்தறிவு ஆய்வாளர்கள். இனிமையாளர் பாக்களில் எடுத்தாளப்படும் இந்த பக்தி இலக்கியங்களின் பாட்டுடைத் தலைவர்களின் உள்ளமும் நடப்பும் அவர்களு புகழ்பாடும் கதைகளிலிருந்து பார்த்தால் கண்ணியம் உள்ளதாகத் தெரியவில்லை. தமிழ் தரும் அறம்சார்ந்த அறிவுசார்ந்த நிலைகளுக்குள் அடங்கவில்லையென்றே அறைகிறார்கள்.
கடவுள், மதம், சாதி, சாஸ்திரம், சோதிடம், மந்திரம் மற்றும் பல மாயாவாத கருத்துக்களுக்கு தமிழில் சொற்கள் இல்லை என்கிறார் தந்தை பெரியார். இதுபோல் எதுவும் இல்லையென்பது சில இடைச்செருகள்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் தெளிவாகத் தமிழ்நிலையை தெரிந்து கொள்ளலாம்.
உயிர்கள் தோன்றுவதற்குக் காரணம் ஆதிமூலம் எதுவென்று கேள்விக்கு உலகம் முழுவதும் இருந்த மதவாதிகள், சிந்தனையாளர்கள், மேதைகள் அனைவரும் கடவுள் என்றுதான் சொன்னார்கள். ஆனால் காட்சிபூர்வமாக, கருத்துபூர்வமாக நிரூபிக்க முடியாது என்றார்கள். ஆனால் உயிர் தோன்றியதற்குக் காரணம் ஆதிநிலை, நீர் தழுவிய நிலமென்று தமிழ்தான் சொன்னது, தமிழன்தான் சொன்னான். திணைக் கோட்பாடுகளில் தெளிவாக வெளிப்படுத்தினார்கள்.
இங்கும் சரி, ஈழத்திலும் சரி தமிழர் ஏற்றம் பெறாததர்க்கு உலகளாவிய நிலையில் ஒளிரும் புகழ் பெற்றவர்கள் இல்லையென்பது வருத்தம்தோய்ந்த என் கருத்து. மறைதூதர் தனிநாயகம் அவர்கள், உலகநாட்டு மொழி ஆய்வாளர்களைக் கண்டறிந்து, முதல் உலகத் தமிழ் மாநாட்டை மலேசியாவில் நடத்தினார். அதன்பின் சென்னையில் அண்ணா நடத்தினார்.
கடந்த நூற்றாண்டுகால திராவிட இயக்க வரலாற்றில் அண்ணாவின் பங்களிப்பு என்பது அளப்பறிய ஒன்றாகும். இங்குள்ள எல்லாவகை இளைஞர்களையும் எல்லாவகைகளிலும் எழுச்சி ஏற்றம் கொள்ள ஓர் இனிய சூழலை இலட்சிய வடிவங்களை ஏற்படுத்தியவர் அவர். குறிப்பாக, மாணவர்களையும், அவர்களை வழிநடத்திய ஆசிரியப் பெருமக்களையும் கவர்ந்து அவர்களுக்கு ஆக்கமிகு நிலைகளை நிலைப்படுத்தியுவர் அவர்.
அய்ரோப்பாவின் எல்லாவகை அறிஞர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் இதயத்தில் வைத்து, இங்குள்ளவர்களுக்கு தமிழ் நிலைக்கேற்ப, இயக்கி வழி நடத்தினார்.
தமிழ் நடையில் எழுத்திலும், பேச்சிலும் தண்ணொளி சிந்தும் தன்னிகரில்லாத தனிநடை கண்ட அவர் தமிழ் இலக்கியங்களை, தனித்துவத்தை இங்குள்ள தமிழ் அறிஞர்களை விட ஆழமாக உணர்ந்து, உணர்த்தியவர் என்பதற்கு ஒரு நிகழ்வை நினைவு படுத்துவது கடமையென்று கருதுகிறேன்.
இந்திய அரசின் நிதியமைச்சராகப் பொறுப்பு வைத்த திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் அடிக்கடி அண்ணாவிடம் ஆங்கில இலக்கியத்தின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே இருப்பாராம். அதைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா அவர்கள். ஆர்.கே.எஸ். அவர்களிடம் தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் அதன்பின் ஆங்கில இலக்கியம் பற்றிக் கூறுங்கள் என்று கூறிவிட்டு படிக்கின்ற முறைகளைச் சொன்னாராம்.
தமிழ் இலக்கியங்கள் முழுவதும் கற்றுணர்ந்த ஆர்.கே.எஸ். அவர்கள் அண்ணாவிடம் தமிழ் இலக்கியங்கள்தான் நம்பர் ஒன் என்று புகழ்ந்தாரம். எங்கள் ஊரில் சில மாதங்களுக்கு முன் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் எந்தஓர் உலக இலக்கியவாதியும் தமிழ் இலக்கியங்களைப் படித்து உணரவில்லையென்றால் அவன் இலக்கியவாதியே இல்லை என்றார்.
அண்ணாவின் ஆங்கிலப் புரிதலுக்கும் உரைநடைக்கும் சில எடுத்துக்காட்டுகளை முன்வைக்க மனம் விழைகிறது. 1962ல் நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, மேலவையில் முதல் பேச்சை நிகழ்த்தினார். நேரம் நிறைவடைய இருந்த சூழலில் அவர் பேச்சை சிலர் குறுக்கிட்டார்கள். அப்போது அருகிலிருந்த திரு. வாஜ்பாய் அவர்கள் அவருடைய கன்னிப்பேச்சு இது. யாரும் குறுக்கிடாதீர்கள் என்றார். பண்டிதர் நேரு அவர்களும், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களும் அவர் பேச்சில் யாரும் குறுக்கிடாதீர்கள். அவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்றார்கள். பின் தன் நண்பர்களிடம் அண்ணாவுடைய ஆங்கில நடையை நேரு பெரிதும் புகழ்ந்தாராம்.
அப்போதே வாஜ்பாய் அவர்கள் அண்ணாவின் நெருங்கிய இனிய நண்பரானாராம். பிறிதொரு முறை பேசிவிட்டு வெளியே வந்தபோது திரு. பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் அண்ணாவின் கையைப்பற்றி குலுக்கியவாறு நான் பீகாரைச் சேர்ந்த திராவிடன் (ஐ ச்ட் ஈணூச்திடிஞீச்டிதூச்ண ஞூணூணிட் ஆடிடச்ணூ) என்றாராம்.
இந்தியாவில் அமெரிக்கத் தூதராக இருந்த கால்பிரெய்த் அவர்கள் டெல்லியிலிருந்தபோது அண்ணாவின் நெருங்கிய நண்பரானார். அண்ணா அமெரிக்க சென்றபோது கால்பிரெய்த் விருந்து அளித்து மகிழ்ந்தார். அடுத்த வந்த அமெரிக்கத் தூதர் செஸ்டர்போல் என்பார் ஒரு நிகழ்வில் அண்ணா பேசியதைக் கேட்டுவிட்டு இப்படியொரு ஆங்கிலப்பேச்சை அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கேட்டதில்லை என்றார். நான் சில நேரங்களில் அண்ணாவின் ஆங்கிலச் சொற்பொழிவை குறுந்தகடுகளில் கேட்பதுண்டு. அதுபோல திரு. ஓசோவின் புத்தர் பற்றிய ஆங்கில சொற்பொழிவைக் கேட்டபோது அறவே ஆங்கிலம் தெரியாத நான் அந்த ஓசை நயத்தோடு அண்ணாவின் நினைவோடு துள்ளிக் குதித்து ஆடி மகிழ்ந்திருக்கிறேன்.
தமிழும் தமிழனும் தான் உதித்த தாய் மண்ணிலும் பரவிய இடங்களிலும் ஆதரவற்ற அனாதைகளாய், உரிமையற்ற அடிமையாய் வதிகின்ற நிலை காண்கிறோம். அடிமை நிலையை அகற்றி, உரிமை நிலையை நிலைநிறுத்த உலகளாவிய நிலையில் குறிப்பிடத்தக்க நிலையில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அறிஞர் அண்ணாவை யேல் பல்கலைக்கழகம் சிறப்பித்ததும் அந்த சிறப்பை ஏற்க அண்ணா சொன்ன காரணங்களையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு வேலை இருந்திருந்தால் தமிழரின் உரிமையை நிலைநாட்டும் நிகழ்வுகள் நடந்து நேர்நிலை கண்டிருக்கலாம். யேல் கல்விக்கூடம் அழைத்தது போல உலக நாடுகளில் உள்ள உயர்நிலை அழைப்புகள் அழைத்து மதிப்பளித்திருக்கலாம். விளைவு தமிழரின் நிலை மேலோங்க பல்வேறு நாடுகளின் ஆதரவும் பெருகியிருக்கலாம் என்று தமிழர்கள் பலவற்றை இழந்து வாழும் இந்நாளில் இதயம் எண்ணி ஏங்குகிறது.
நூலறிவு நிறைகொண்டு நுண்ணறிவு நுண்மாண் நுழைபுல செழுமையோடு இயங்கும் பேராசிரியப் பெருமாட்டியான தங்களுக்கு எழுதுவதற்குக் காரணம் அண்ணா போன்று அனைத்துவகைக் செழுமையும் உளத்தூய்மையும் ஆங்கிலத் திறனோடும் உலகெங்கும் தென்னகப் பண்பாடுகளையும் திராவிட இயக்கச் சிந்தனைகளையும் கடந்த நூற்றாண்டுகளின் தமிழகத்தின் நிகழ்ச்சி வடிவங்களையும் அதன் விளைவுகளையும் தமிழ் காட்டும் குறள் வழங்கும் சங்க கால இலக்கியங்களை வரிசைப்படுத்தி இயற்கை ஆய்வு அறிவியல் உணர்வுகளையும் உரத்துச் சொல்லும் உயர்வினைத் தாங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை அண்ணாவின் மாணவப் பாசறையின் படைவீரன் என் இதயத்தில் நிறைந்திருக்கின்ற அண்ணனின் அருமைச் செல்வி என்பதும்தான்.
புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சற்றுத் தெளிவடைந்து தி.மு.கவில் இணைந்திருக்கின்ற தங்களை நிறைய அழைப்பதாகக் கேள்விப்படுகிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வலிந்து வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு தித்திக்கும் திராவிட இயக்கச் சிந்தனைகளை விதைத்துவரவும் வேண்டும் என்பதுதான்.
சாமானியன் எனச்சொல்லி வரலாறு காணாத சரித்திரம் படைத்த அண்ணாவையும் அனைத்துவகை ஆற்றலையும் பெற்றுத்தர தந்தை பெரியாரின் தொண்டனென்று பெருமைகொண்ட அண்ணாவின் தலைவர் தந்தை பெரியாரையும் அண்ணாவின் வழி நடந்த கலைஞர், நாவலர், பேராசிரியர், தங்களின் தந்தை, அண்ணன் தென்னரசு போன்ற பெருமக்களையும் உலக முழுவதும் எடுத்துக்காட்டி தமிழன் யாரையும் தாழ்த்தான், யாருக்கும் தாழான் என்ற அண்ணாவின் உரிமைச் சமத்துவத்தை உரக்கச் சொல்லுங்கள் ஒவ்வொரு நாளும் தமிழ் உள்ளங்கள் தங்கள் வாழ்த்துக்களை வழங்கியவண்ணம் இருக்கும்.
நன்றி
பெறுநர்

பேராசிரியை, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள்,
சென்னை.

No comments:

Post a Comment