Saturday, 22 October 2016

பொது அறிவு, உணர்வு உள்ளோர் உணர வேண்டிய உன்னதம்?

பொது அறிவு, உணர்வு உள்ளோர்
உணர வேண்டிய உன்னதம்?
 சேலத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர் திரு. கோ. வேள்நம்பி எழுதிய பயணம் எனும் நூல் இரண்டாயிரத்து எண்ணூறு பக்கங்கள் கொண்ட நூலாகும்.
 கற்பனையாக எழுதப்படும் அல்லது வரலாற்றுச் செய்திகளோடு கற்பனை கலந்து தான் சேர்ந்த கொள்கைகளை திணிக்கும் நாவல்கள் தமிழில் நிறைய நிறையவே வந்திருக்கின்றன. சரித்திர நாவல்கள், சமுதாய நாவல்கள் என பொய்யும் புனைவும் கலந்து புழுகு மூட்டைகளாக எழுதிக்குவித்தோர் இங்கு ஏராளம் உண்டு.
 இன்று மட்டுமல்ல கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக வந்த புராணங்கள் இதிகாசக்கதைகள், இசைப்பாடல்கள் தமிழின் தூய்மையையும் தமிழர்களின் சீர் சிறப்புகளை உணர்வுகளை கொச்சைப்படுத்தும் பனுவல்கள் பலவந்தன. வந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கக் காணலாம்.
 ஆனால் திருவேள் நம்பி அவர்கள் நம் காலத்தில் நூற்றாண்டு காலச் செய்திகளின் நிகழ்வுகளை அது எப்படி செயல்வடிவம் கண்டு தமிழர்களை தலைநிமிரச் செய்தது என்பதை நெடுங்கதை வடிவில் ஒளிர்கிறது. எப்படி ஆரியத்தால் விளைந்த அவலங்களை மாற்றி சீர் பெற்றது, நலிந்தோர் நல்வாழ்வு கண்டனர் என்று மிக ஏதும் அறியாத அந்த மக்களிடம் உரையாடுவது மூலமாக விளக்குகிறார். ஆயிரமாண்டு அவலங்களை அறியாமையை அடிமையுணர்வை மாற்றி முறைப்படுத்த இளைஞன் பாண்டியனால் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடந்தவர்கள் மூளையில் உணர்வேற்றி முழு மனிதர்களாக மாற்றுவதை மிக அருமையாக விளங்க வைத்து இந்த நூலைப் படைத்திருக்கின்றார். இதன் ஆசிரியர் திருவேள நம்பி அவர்கள்.
 பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டு தவிர எழுந்த திராவிட இயக்கச் சிந்தனையில் பூத்த சீர்மிகு நிலைகளையும் ஆரியம் சார்ந்த வேதப்பிராமணகள் சதியேற்றிகளையும் சனதானத் திணிப்புகளையும் மிகத் தெளிவாக விளக்குகிறார்.
 இந்த நூலை மூன்று பாகங்களாக அதாவது அண்ணா வகுத்த, கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்று திராவிட இயக்க கொள்கைகளையும் அதன் செயல் வடிவத்தையும் அதனால் தமிழர்களுக்கு விளைந்த வளம், வாழ்வு, உரிமை, உயர்வு என்ன என்று உண்மை புதுக் காட்சிகளோடு மறுக்கவியலாத சான்றுகளோடு நிலைநாட்டியிருக்கிறார் திரு.வேள் நம்பி. இந்த நூலின் சிறப்புகளை விவரிப்பதெனில் சில நூறு பக்கங்கள் ஆகும். ஆகவே திராவிட இயக்க தமிழ்ச் சிந்தனையில் சிறந்ததைப் படிப்போம். மேலும் தெளிவு பெற இந்த மூன்று பாகமுள்ள பயன் நூலைப் படிப்பது நலம் தருவதோடு, தாம் கொண்ட தூயகொள்கையில் மேலும் உறுதி பெற உதவும்.
 பொதுமக்களின் நலன் நாடியே பொதுவில் இயங்குகிறேன் என்று சொல்லி உண்மைக்கு மாறானவற்றை தெரிந்தும் தெரியாமலும் மக்களை குழப்புவர்கள் இந்த நூலைப் பயின்றால் மனச்சாட்சியின் மாசு அகன்றிட வழிவகுக்கும். இந்த நூலில் என்னை வியப்புற வைத்த செய்தி என்னவென்றால் இந்தியத் துணைக் கண்டத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்று காங்கிரஸ் கோராத காலத்தில் முழு உரிமை பெற்ற நாடாக இந்திய சுதந்திரம் பெற வேண்டும், வெள்ளையர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முதன் முதலில் தீர்மானம் போட்டு பிரகடனப்படுத்தியது நீதிக்கட்சிதான் என்பதும் அதைப் பார்த்த காங்கிரசின் மாநாட்டின் தீர்மானம் போட்டார்கள் என்பது தான்.
நீதிக்கட்சிக்காரர்கள் அனைவரும் வெள்ளையரின் அடிவருடிகள் என்ற  பூதாகார பொய்யைப் பரப்பியதால் காங்கிரசுக்கு இந்தச் செய்தி ஒரு தவிர்க்க முடியாதது என்று கொள்ளலாம். இதுபோக பலப்பல வியப்பூட்டும் செய்திகள் இந்த நூல் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment