பல்கலைக்கழகங்களின் பார்வைக்கு
பல்கலைக் கழகம் என்பது உயர் கல்வியை
ஆய்வின் உச்சம் வரை அழைத்துச் சென்று மாணவர்களை உலகின் உயர் மனிதர்களாக ஆக்குகின்ற
உன்னதமான கலைக்கோட்டம் என்பதை உலகம் மிக நன்றாக அறியும்.
அந்த அறிவுசேர் நிலையங்கள் இன்று
உலகம் முழுவதும் பரவி பயனளிக்கிறது என்பது நாம் மகிழ்கின்ற ஒன்று ஆகும்.
ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு பகுதிகளில்
அந்தந்த மண் வாசனையோடு அடுத்த நாடுகளின் உறவுகளோடும் பல்வேறு துறைகளின் பாடங்களை நடத்தும்
பாடசாலைகளாகவும் திகழ்ந்திடக் காண்கிறோம்.
மேலும், ஆராய்ச்சித் துறைகளில்
பலவேறு ஆய்வுகளை நடத்தி ஆக்கமிகு நிலைகளை உருவாக்கியதால்தான் உலகம் என்றும் காணாத வாழ்க்கையில்
வளங்களைப் பெற்று மனித குலம் வானமளவு வளர்த்திருக்கக் காண்கிறோம்.
மருத்துவ விஞ்ஞானம், வேதியியல்
விஞ்ஞானம், பொறியியலில் பலவேறு துறைகள் ஆகியவை வானளாவ வளர்ந்து வியத்தகு நிலைகாட்டி மகிழ்விக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம்
பல்கலைக் கழகப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழங்கள் ஆயிரத்தில் ஒன்று என்ற நிலையில்
இல்லையென்று ஏடுகளில், இதழ்களில் வெடிக்கின்றபோது, இங்குள்ள பல்கலைக் கழகங்கள் கடமை
தவறியதோ எனும் எண்ணம் இதயத்தில் தோன்றுகிறது.
தமிழ் சார்ந்த சிந்து வெளி நாகரிகங்கள்
வாழ்ந்த மொகஞ்சதாரோ, அரப்பாவை உலகில் உள்ள பலவேறு பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்தபோது,
சென்னை பல்கலைக்கழகம் கண்மூடி உறங்கியது எனும் குற்றச்சாற்றை முன்னர் பலர் கூறியது
உண்டு.
அது மொகஞ்சதாரோ, அரப்பாவில் பதினெட்டு
(18) மேடுகளில் இரண்டுதான் அகழ்ந்து எடுக்கப்பட்டு என்றும், மற்றவையும் அகழ்ந்தால்
மேலும் எண்ணற்ற தகவல்கள் கிடைக்கும் என்றும், தமிழ்நாட்டில் தமிழ்ப் பல்கலைக்கழகம்
தோன்றிய பின் அந்த இனிய கலைக்கூடம் கூட சிந்துவெளியின் எஞ்சிய சிறப்புகளை வெளிக் கொணர
முயற்சிக்கவில்லை எனும் புகார்கள் நிறையவே இருக்கின்றன.
சூரிய வெப்பம் மிக நிறைய கிடைக்கின்ற
இங்கு - அது பற்றிய ஆய்வுகளும் செய்முறைப் பயிற்சிகளும் பல்கலைக் கழகங்களால் தொட்டுக்கூட
பார்க்கப்படவில்லை என்று பலர் வருந்துகிறார்கள்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக் கழகத்தில் காற்றாலை மின்சாரம் பற்றிய பட்டப் படிப்பு தொடங்குவதாக வந்த செய்தி
நம்மை மகிழ்விப்பது போல சூரிய ஆற்றல் மின்சாரம் பற்றிய படிப்பும், ஆய்வு நிலைகளையும்
மற்ற பல்கலைக் கழகங்கள் மேற்கொண்டால் மகிழ்வின் எல்லை மேலும் நீளும் அல்லவா?
குறைந்த மக்கள் எண்ணிக்கை கொண்ட
சப்பானில் 2000 க்கும் மேல் பல்கலைக்கழகங்கள் உண்டு என்கிறார்கள். ஆனால் நூறு
(100) கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இங்கு நானாறு (400) க்கும் குறைவான பல்கலைக்
கழகங்கள் உள்ளன என்பதும், அதுவும் உலகத்தரத்தில் ஒன்றுகூட இல்லை என்பதும் நாம் எங்கே
நிற்கிறோம் என்று உள்ளம் வருந்துகிறது.
தமிழகத்தில் 1960க்கு முன்னர்
இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. இன்று இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள்
இயங்குகின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்த கல்லூரிகள் ஆயிரத்தைத்
தாண்டி நீண்டு வரும் நிலை காண்கிறோம். படிப்பவர்கள்
எண்ணிக்கை ஆண்டுக்கு பல இலட்சங்களாகப் பெருகி வருகின்றன.
ஆயினும் மக்கள் கூட்டத்தில் படர்ந்த
மாசுகள் அகன்றதாகத் தெரியவில்லை. மாண்புகள் வளர்ந்து சிறந்ததாக மணக்கும் காட்சிகளைக்
காண முடியவில்லை. கற்றவர்கள் மத்தியில் சுவைக்கு உதவாத எண்ணங்களும், காட்சிகளும், கசப்பூட்டும்
உணர்வுகளும் மாறியதாக மறைந்ததாக அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
ஆறு ஆண்டுகளில் தொடங்கி ஏறக்குறைய
இருபது ஆண்டுகளில் பெறுகின்ற கல்வி, படிப்பறிவு பெற்றவனின் மனதில் உள்ள களையை, குறையைக்
களைய முடியவில்லை. அறிவியல் சான்று தராத கருத்துகள் செய்திகளால் தன்னை சிறைப்படுத்திக்
கொள்ளும் நிலைதான் இங்கு நீடிக்கிறது.
படிக்காதவன், பாமரன் அவன் என்றால்
பலவித நம்பிக்கைகளை பதியம் போட்டு வளர்க்கலாம். நெட்டுரு செய்யலாம். படித்தவன் அதுவும்
பல்கலைக் கழகம் வரை கல்வி கற்றவன் அறிவியலுக்கு மாறான ஆய்வு நெறிகளைத் தாண்டி ஆராய்ச்சி
உணர்வுகளுக்கு எதிர்த்திசையில் செல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
வெள்ளையர் காலத்தில் உருவான சென்னைப்
பல்கலைக்கழக வரலாற்றில் முத்திரை பதித்த நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்திருக்கின்றன.
இராமச்சந்திர தீட்சதரின் தமிழர்
தோற்றமும் பரவலும்” எனும் அருமையான கட்டுரை இங்கேதான் வழங்கப்பட்டது. பரிதிமாற் கலைஞரின்
- பூரணலிங்கம் பிள்ளையின் தமிழ்ச் செம்மொழி எனும் சிந்தனை இங்குதான் கருத்துருப் பெற்றது.
இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் இருந்திருக்கலாம்.
நீதிக் கட்சித் தலைவர்களின் முயற்சியால்
இங்கு பல்வேறு பள்ளிகளும், கல்லூரிகளும் நிறையவே தோற்றுவிக்கப்பட்டன. அதன் பட்டியல்
நீளும், அதில் குறிப்பிடத்தக்கது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
தமிழர்களுக்கு உயர் கல்வி வழங்க
வேண்டுமெனும் தலையாய நோக்கத்துடனேயே அது தொடங்கப்பட்டது. ஆனால், சென்னைப் பல்கலைக்
கழகத்தில் மிகச் சிறுபான்மையினருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
வாய்ப்புகள் வழங்கப்பட்டதால் தமிழர்களுக்கு கல்வி பெருமளவு தரப்பட்டது. அதற்கு பிறகுதான்
பார்ப்பனர் அல்லாதாரின் கல்வி முன்னேறத் தொடங்கியது. தமிழரின் உயர்வும், தமிழிசையின்
செழிப்பும், வளர்ப்பும் வெளியே தெரிந்தது.
இன்று பலவேறு துறைத் தொடர்புடைய
நிறைய பல்கலைக் கழகங்களோடு பல நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களும் உருவெடுத்து விட்டன.
ஆயினும், மனக் கருத்துகளிலும்
உளவியல் நிலையிலும் பெரிய மாற்றம் கண்டிருக்கிறதா? இருந்தால் அதை பல்கலைக்கழகங்கள்
ஆய்ந்து அதன் விளைவை அளவை விளக்கி வெளியிட்டிருக்கிறார்களா?
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
மாணவர் மன்றங்கள் நடத்திய நிகழ்வுகளில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏ, தாழ்ந்த தமிழகமே”
ஆற்றோரம்” எனும் தலைப்புகளில் ஆற்றிய உரைகள் தமிழரின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும்
பயன்பட்டதோடு அந்தப் பல்கலைக் கழகத்திற்கும் புகழ் முத்திரை சூட்டியது.
இன்றுள்ள பல்கலைக்கழகங்கள் அந்த
நிலையில் இருக்கிறதா? இருந்தால் மக்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறதா?
ஒவ்வொரு துறைக்கும் உரிய பல்கலைக்
கழகங்கள் இங்கே இயங்குவது சரிதான். ஆனால் அந்த கல்விக் கூடங்கள் வாழ்கின்ற பகுதியின்
மண் வாசனை, மொழி வழங்கும் பகுதியின் மண் வாசனை, மொழி வழங்கும் கருத்துக்கள், வாழ்வியல்
கூறுகள், பழக்க கருத்துகள், வாழ்வியல் கூறுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் நிறை
குறைகளை ஆய்ந்து அவர்களுக்கு நேர்வழி காட்டுவது என்பது அந்தக் கல்விக் கூடங்களின் கடமையாக
வேண்டும். ஏனெனில், அங்கிருந்துதானே மாணவர்கள் வருகிறார்கள்.
கடந்த கால மாணவர்களைப் போன்று
பொது நலனில் அக்கறையும் எழுச்சியும் இல்லை என்றும், பிழைப்பு மனோபாவத்துடன்தான் பாடங்கள்
போதிக்கப்படுகிறதென்றும் ஏடுகளிலும், இதழ்களிலும் படிக்கின்றபோது இதயம் வலிக்கவே செய்கிறது.
அதுமட்டுமன்றி தான் பயிலும் கல்விக்
கூடத்தின் பெருமை அங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு தெரியவில்லை என்பது இதயப் புண்ணை
மேலும் குத்துவதாகவே இருக்கின்றது.
No comments:
Post a Comment