Friday, 28 October 2016

கல்லூரிகள் சோலையாகட்டும்

கல்லூரிகள் சோலையாகட்டும்
கல்லூரிகள், உயர்கல்வி பெறுகின்ற (கலா சாலை) கல்விக்கூடம் என்கிறார்கள். இளங்கலை, முதுகலை ஆராய்ச்சிக் கல்வி என்றெல்லாம் பயிற்சி தருகின்ற ஆய்வுக்கூடம் என்கிறார்கள். நாட்டு வளம் கூட்டுகின்ற நல்லறிஞர்களைத் தோற்றுவிக்கின்ற அறிவுக்கூடம் என்றும் அறைகின்றார்கள்.
துறைதோறும் ஆற்றலாளர்களை ஆக்குகின்ற அருமைமிகு கலைத்தோட்டம் என்கிறார்கள். மருத்துவர்களை, பொறியாளர்களை, அறிவுசால் அறிஞர்களை ஆற்றல்மிகு வடிவமைப்பாளர்களை அனைத்தும் போதிக்கும் ஆசான்களை படைத்தளிக்கும் பல்கலைக் கழகத்தின் கிளை என்று கல்லூரிகளைக் கூறுகிறார்கள்.
கல்லூரிக்குள் நுழைந்து வெளிவரும் போது பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.டி, எம்.சி.ஏ., எம்.பி.ஏ. என்றெல்லாம் பட்டங்களை தன் பெயருக்கு பின்னால் பெருமிதத்துடன் போட்டுக் கொள்ளும் நிலை காண்கிறார்கள்.
பெருமையும், பாரம்பரியமும் மிக்க இந்தியாவில் பல்லாயிரம் இரண்டொருவருக்கே கிடைத்தது. அதுகூட வாழ்க்கையை முன்நடத்திச் செல்லும் கல்வியாக இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளையர்கள் தந்த கல்வி அதுவும் அவர்களது மொழியில் வழங்கிய கல்வியில் தான், வேதம் தவழ்ந்து பூரித்த புகழ்மிகு புனித நாட்டின் புதல்வர்கள் புதுவாழ்வு கண்டார்கள்.
ஐரோப்பியர்கள் வழங்கிய ஆற்றல்மிகு செய்திகளும், கருத்துகளுமே இங்கு கல்விப் பொருளாக முன்வைக்கப் பெற்று இன்றுவரை கற்றவர்களுக்கு களிப்பூட்டும் வழிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
அனைத்துவகைக் கல்வி நுட்பங்களும் ஆங்கிலத்திலேயே வழங்கி சிந்தனைக்கூடம் முழுவதும் அடிமையாகி அன்னிய மொழியிடமே அடிமைப்பட்டுக் கிடக்கிறது. வாழ்க்கை, வளர்ச்சிக்கு வளத்திற்கு வழிகாட்டிய அந்த கல்வி இன்றுவரை இந்திய மக்களுக்கு 12 விழுக்காடு தான் கிடைக்கிறது. 350 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருக்கிறதாம் எல்லாரும் கல்லூரிக்கு செல்லவேண்டுமென்றால், ஏறத்தாழ மூன்றாயிரம் நான்காயிரம் பல்கலைக்கழகங்கள் வேண்டுமாம்.
இந்த முன்னூற்று ஐம்பது பல்கலைக் கழகங்களில் ஒன்றுகூட உலகத் தரத்திற்கு இணையாக இல்லையாம். காவியங்களும், கலைகளும் சான்றோர்கள் ஆசி வழங்கினாலேயே அனைத்தும் நிகழும் என்கிற கதைகள் உலவும் நாட்டில் கல்லூரி காணாதவர்களின் விழுக்காடு எண்பத்தி எட்டாகும்.
அந்த கல்லூரிக்குள் சென்று வருபவர்களின் சிந்தையை ஆய்ந்து பார்த்தால் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. கல்லூரி கல்வியின் அடிப்படையில் கற்றவனின் மனமும், நடப்பும் இருப்பதில்லை. புதுமைச் செய்திகளே கிடைக்காத தீவுப் பகுதியில் வாழ்பவர் போன்ற மனநிலையிலேயே படித்து பட்டம் பெற்றவர்கள் இருக்கக் கண்டு இதயம் அழுவதைக் காணலாம்.
மருத்துவக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்த முதுநிலை ஆராய்ச்சியில் உருவான மருந்துகளையும், முறைகளையும் கடைப்பிடித்து கடமையைச் செய்யும் மருத்துவர்களின் நிலை நமது நெஞ்சில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இல்லை.
விஞ்ஞானம் தந்த வியத்தகு நிலைகளை மக்களிடம் முடிந்தவரை விளக்கிச் சொல்ல வேண்டிய மருத்துவரின் நடைமுறைச் சிந்தனை நாட்டுப்புற வடிவிலேயே இருக்கக் காணலாம்.
மதம் சார்ந்த மாசுகள் நிறைந்த கதைப் பாத்திரங்களில் மனதை பதிய வைத்து மற்றவர்களுக்கும் அதை நிலைநிறுத்தச் சொல்கிறார்கள். மருத்துவர்களுடைய அறையைப் பார்த்தால் மருத்துவத்தை வழங்கிய மாமேதைகளின் படங்கள் இருக்காது. மாறாக சடையில் ஒன்று இடையில் ஒன்று என இரு பெண்களிடம் ஈடுபாடு கொண்டவனையும் அவனைப் போல பலப்பல பெண்களின் பால் இச்சைக் கொண்டவர்கள் படங்கள் இருக்கக் காணலாம்.
பதினெட்டு, இருபது ஆண்டுகள், கல்லூரி தந்த வாழ்க்கை முறையை அணுகாமல் இளமையில் விவரம் தெரியாத நாள்களில் பதிய வைத்த மதவாத கருத்துகளில் மனதை பதிய வைத்து வாழ்வது கற்றவர்களுக்கு அழகாகுமா?
இந்த நாடு ஒரு வித்தியாசமான நாடு என்றார் மாசற்ற சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் சொல்லிவிட்டு விளக்கமும் தந்தார்.
கல்வி கற்றால் முட்டாள்தனம் ஒழியும் என்று கருதினேன். ஆனால் கற்றவன் இங்கே இரட்டை முட்டாளாக இருக்கிறான். அறிவியல் வளர்ந்தால் மூடநம்பிக்கை ஒழியும் என்று கருதினேன். ஆனால் அறிவியலையும் மூடநம்பிக்கையோடு இணைத்துப் பார்க்கிறான். கலப்பு மணம் செய்தால் சாதி ஒழியும் என்று நினைத்தேன். ஆனால் கலப்புமணம் செய்தவன் எல்லாம் தனிச்சாதியாகி விட்டான்” என்றார். இதில் வேதனை என்னவென்றால் கல்லூரி சென்று பட்டம் பெற்றவர்கள் தான் இதில் முழுமையும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
இந்திய அளவில் இன்னும் நாற்பது விழுக்காடு பள்ளிகளை காணாதவர்களாகவே இருக்கிறார்கள். கற்றவர்கள் அதிலும் கல்லூரியில் கற்றவர்களில் சில விதிவிலக்குகளை தவிர மற்றவர்கள் மடமையில் குளித்து மகிழ்ச்சி கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். இங்கே உருவாகும் ஆசிரியரின் மனோபாவம் ஆக்கம் நிறைந்ததாக அறிவு சார்ந்ததாக இல்லை.
ஆங்கில வழக்கல்வி அடிமைகளை தோற்றுவிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதையும் விட்டுவிட்டால் அறிவியலைத் தரும் மொழிகளோ அந்த மொழியில் முறையோ இருப்பதாத் தெரியவில்லை.
பன்னிரண்டு விழுக்காடு கல்லூரியில் படித்தவர்கள் எண்பத்தெட்டு விழுக்காட்டினரோடு வாழ்கின்ற போது பெரும்பான்மை விழுக்காடே வெற்றிபெற நேரிடும். அதாவது படித்தவரை மற்றவர் பாழ்படுத்தும் நிலை நேரிடலாம்.
பல்லாயிரம் ஆண்டு பழைமைத்தன்மை இங்குள்ளோரை எளிதில் விட்டுவிடாது என்பதற்கோர் எடுத்துக்காட்டு அறிவியல் வழியில் கல்வி கற்று மருத்துவாரக, பொறியாளராக உருவாகி வெளிநாட்டில் வாழும் நிலைபெற்றோர் அவர்களுக்கு வாழ்வழித்த அறிவியலோடு உறைந்து வாழ்வது அர்த்தமற்ற ஆதாரமற்ற அறிவாய்வு நிலைகாணாத பல்வேறு உணர்வுகள் அவர்களின் உள்ளத்தை ஆளுமை செய்வதை அவர்சென்ற இடத்திலும் காட்டுகின்ற பல்வேறு காட்சிகள் நமக்கு உணர்த்துகிறது.
கல்வி என்பது அதுவும் கல்லூரிக் கல்வி என்பது அறிவு சார்ந்ததாக ஆய்வு சாரந்ததாகவே இருக்கும் இருக்க வேண்டும். கல்லூரி செல்பவர்களின் மாற்றம் என்பது நடை, உடைகளில் மட்டுமல்லாது மனதிலும், நடைமுறையிலும் மாற்றம் கொண்டதாக ஏற்றம் கொண்டதாக இருக்க வேண்டும். எதிரில் ஒளிர்கின்ற ஏந்திழையிடம் மட்டுமல்லாது கல்லூரி தரும் அறிவியல் உணர்வுகளின் ஈர்ப்பும், ரசிப்பும் இருக்க வேண்டும்.
பயன்படாத பழைமையில் பயணிப்பதை விட்டுவிட்டு பயன்மிகு புதிய பாதையில் நடந்திய உறுதிகொள்வதுதான் படித்தவர்களுக்கு அழகாகும்.
பள்ளிகள், பாடசாலைகள், அதனால் விளைந்த நன்மைகள் என்று எந்த ஆதாரமும் இல்லாத இந்த நாட்டில் ஐரோப்பியர்களால் உருவான கல்வியின் பயனால் களிப்புறும் வாழ்வைப் பெற்றிருக்கிறோம். அதுவும் குறைந்த விழுக்காட்டினரே பெற்றிருக்கிறோம். பெருகிவரும் மக்களுக்கு கல்வி வழங்க தூய தொண்டாற்ற வேண்டியிருக்கிறது.
கல்வி நிலையங்கள் தூய நிலைபெற போராட வேண்டியிருக்கிறது. கல்வி அடிமை நிலையிலிருந்து அறிஞர்களை விடுவிக்க வேண்டியிருக்கிறது. கல்வி கொள்ளையர்களின் கைச்சிறையிலிருந்து கல்விக் கூடங்களை மக்களின் நலன்காக்கும் அறச்சாலையாக்க வேண்டியிருக்கிறது.
ஏனெனில், இங்கே கல்வி என்பது வணிகமயமாக்கப்பட்டு விட்டது. வணிகத்தில் கொள்லை லாபம் பார்த்த கொடுமையாளர்கள் எல்லாம் கல்வியின் காவலர்களாகி விட்டார்கள்.
பத்துக்குப்பத்து வட்டி வாங்கியவனெல்லாம் பள்ளியில் தாளாளராகி விட்டார்கள். சாராயம் விற்ற குற்றவாளிகள் எல்லாம் சர்வகலாசாலை வேந்தராகி விட்டார்கள். கஞ்சி வணிகம் செய்தோரெல்லாம் கல்வித் தந்தையாகி விட்டார்கள்.  பொய் சொல்லியே பிழைப்பு நடத்தியவனெல்லாம் கல்வி நிலைய புரவலராகி வடிட்õரக்ள் இவர்களிடம் ஆசிரியரும், பேராசிரியரும், அறிவாளிகளும் அடிமையாகி கைகட்டி வாய்பொத்தி நிற்கும் நிலை காண்கிறோம்.
தொண்டாகக் கருதவேண்டிய கல்வி தொல்லையாகிப் போனது. சூழ்நிலைக்கேற்ப கொள்ளை இலாபம் அடிப்போர் கல்வி நிலையங்களில் தங்கள் கைவரிசை காட்டும் நிலை  காண்கிறோம்.
கல்லூரி என்பது வெறும் சொற்பயிற்சி பெறும் நினைவுக்கூடம் ஆகாமல் புதுப்புதுக் கருவிகளைக் கண்டறியும் கலைவளர் சோலையாக்க முனைவீர் என் வேண்டுகிறாம்.

No comments:

Post a Comment