Monday, 31 October 2016

இயல் இசை நாடகக் கலை மணந்த ஊர் எழில் கொஞ்சும் எங்களின் கூடலூர்

இயல் இசை நாடகக் கலை மணந்த ஊர்
எழில் கொஞ்சும் எங்களின் கூடலூர்
நாட்டோரே நல்லோரே நலமளிக்கும்
நல்ல தமிழை நாவில் குடி வைத்து
நாட்டின் நிலை உணர்த்தும்
அறிவார்ந்த பெருமக்களே!
நான் பிறந்த ஊரழகின் நிலைகாண
அன்புடன் அழைக்கின்றேன் வாரீர்!
சங்ககால கவிஞர்களின் பெயரில்
கூடலூர் கிழார் என்பதும் ஒன்று
தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்த
இனிய பெயர் இடம்பெற்றிருக்கின்றது
அதில் அந்த அருமைக் கவிஞனின்
அழகிய ஊர் எதுவென்று தெரியவில்லை
சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டி
பூகம்பமாய் புறப்பட்ட பூலித்தேவனின்
புரட்சிப் பூமியாம் நெல்கட்டும் செவிலின்
அருகில் அமைந்த ஆற்றலாளர்கள் பிறந்த
அருமையான சிற்றூர் எங்கள் கூடலூர்.
சின்னஞ்சிறிய ஊர் எனினும் சீர்நல்கிய
சிங்காரப் பேரூர் சிந்தை நிரம்பிய கூடலூர்
மேற்கே பூலித்தேவனின் போர்க்களம் அமைந்த
வாசுதேவநல்லூர் என்னும் வரலாற்றுப் பேரூர்
கிழக்கே நைடதக் காவியம் தந்த
அதிவீரராம பாண்டியனின் கரிவலம் வந்த நல்லூர்
தெற்கே ஆவுடைநாயகி எனும் அழகிய
அரசியை நினைவூட்டும் சங்கரன்கோவில்
வடக்கே கோட்டை கொத்தளங்கள் கட்டி
களம் அமைத்து பல போர்களைக் கண்ட
சிவகிரி எனும் செம்மைநாட்டார் பூமியும்
இதயத்தில் பதிந்த எழில் சார்ந்த ஊர்களாகும்.
நண்பர்களோடு நானும் அந்த நல்லூருக்கு
செல்கின்ற வேளையில் சிந்தையில் பதிந்த ஊரை
பெருமையுடன் பேசிக் கொண்டிருந்தேன்
பசி பட்டினி வறுமையின வாட்டத்தால்
பத்துவயதில் பஞ்சம் தவிர்க்க பறந்தோடி வந்தவன்
திராவிட இயக்கச் சிந்தனைச் செழுமையில்
சீர் நிறைந்த நண்பர்களோடு சென்றேன்
அன்று நண்பர்களுக்குச் சொன்னதையே
இன்றும் நெஞ்சில் நினைத்துப் பார்க்கிறேன்
பதினாறு வகையான பல்வேறு சாதிமக்கள்
அருகருகே வாழ்ந்து அமைதி கொண்டார்கள்
வடக்குத் தெரு, தெற்குத்தெரு, நடுத்தெரு
கீழத்தெரு என்று பகுதிகள் அழைக்கப்பட்டன.
தெற்குத் தெருவில் ஒரு மறவர் பிரிவினர்
வடக்குத் தெருவில் மற்றொரு மறவர்கள்
நடுத்தெருவில் சிறுபான்மைச் சாதியினரோடு
இருபிரிவு மறவர்களும் இணைந்திருந்தனர்
இதுபோக பல பகுதிகள் சாதியின் பேரால்
குறிப்பிடும் நிலை குடி கொண்டிருந்தது
மேலோரத்தில் பார்ப்பனச் சேரி(அக்ரகாரம்)
கீழோரத்தில் சானார்குடி (நாடார்)
வடக்கோரத்தில் பறையர்குடி (தலித்)
வடகிழக்கில் பள்ளர்குடி (தேவேந்திரகுலவேளாளர்)
என்றே அன்று அழைக்கப்பட்டது
நடுத்தெருவிற்கும் தெற்குத் தெருவிற்க்கும்
இடையில் சைவப்பிள்ளைமார் வீடுகள்
வடக்குத் தெருவில் நாலைந்து புலவர் வீடுகள்
வடக்குப் பகுதியில் ஒரு சிறு தெருவில்
மண்பாண்டம் வனையும் குயவர்கள்
அதற்கும் வடக்கே சில இல்லம்பிள்ளைகள்
நடுத்தெருவில் அய்ந்தாறு கைவினை ஆசாரிகள்
ஒரு சலவைத் தொழிலாளர் (வண்ணார்) இல்லம்
ஒரு சவரத் தொழிலாளர் வீடு (நாவிதர் மருத்துவர்)
ஒரு அருந்ததியர் வீடு (செருப்புத் தொழிலாளி, சக்கிலியர்)
இது ஊரின் சாதி அமைப்புகளாகும்
வேதத்தின் விதியோ வேதியர்களின் சதியோ
தமிழர்களைப் பலப்பல சாதிகளாக்கி
வீழ்த்திய ஆரியம் அந்த மக்களின்
அன்பின் எல்லையை அழித்திட முடியவில்லை
சாதிகளின் எல்லை கடந்து ஒரு வரை ஒருவர்
உறவுமுறை சொல்லி உண்மை உள்ளத்தை
உலகுக்குக் காட்டி உவப்புடன் வாழ்ந்தனர்
என்னதான் சாதியத் தளைகளைப் போட்டாலும்
உறவுமுறைப் பெயர்களை உருக்குழைக்க
ஒரு நாளும் ஆரியத்தால் முடியவில்லை
எல்லாச் சாதிக்கார்களுமே தமிழில்
நிலவிய உலவிய இனிய பெயர்களையே
பயன்படுத்தி பரவசமடைந்தார்கள்
அய்யா (அப்பா) ஆத்தா (அம்மா) அம்மானார் (மாமா)
அத்தை (மாமி), அப்பத்தாள், பொன்ஆத்தா பொன்னையர் போத்தி உடன் பிறந்தாள் (அக்கா, தங்கை)
உடன் பிறந்தான் (அண்ணன் தம்பி)
மதினி, கொழுந்தி, மச்சான், அத்தான், மாப்பிள்ளை என்ற
இந்த உறவுச் சொற்கள் எல்லை கடந்து
எல்லாச் சாதியாரிடமும் இணைந்து
எழிலூட்டி இன்பமடைய வைத்தது
மணஉறவு நிகழ்வுகள் ஒரு சாதிக்குள் நடந்தாலும்
மனமொத்த அன்புறவு எல்லா இடங்களிலும்
உள்ளதென்று அனைவரும் பேசுவதுண்டு
ஒவ்வொரு சாதிக்காரர்களுக்கும்
குலதெய்வ வழிபாடு ஆண்டுதோறும்
அமர்க்களப்பட்டு மகிழ்வதுண்டு
மேளதாளம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
பொங்கல் பூசை, ஆடு கோழி அறுத்தல், சாமியாடுதல்
ஆகிய நிகழ்வுகளால் மனம் மகிழ்வதுண்டு
இல்லாத கடவுளுக்கு எதுவும் இயலாது ஒன்றுக்கு
இதயத்தை பறிகொடுத்ததால் தமிழர்கள்
இழந்தது ஏராளம் ஏராளம் என்பார் பெரியார்.
இங்குள்ள மக்களின் குலதெய்வ வழிபாட்டை
எண்ணிப்பார்ப்பது ஆய்வுக்கு மெருகூட்டும்
தெற்குத் தெருவில் வாழ்கின்ற கொண்டையன் கோட்டை
மறவர்களின் குலதெய்வம் பூலுடையர்
சாஸ்தா என்னும் தெய்வம்
இத்தெய்வம் இங்கில்லை என்கிறார்கள்
இது வள்ளியூர், சாத்தான்குளம் பகுதியில்
இருப்பதாக கூறுகிறார்கள் ஊரிலுள்ள பெரியவர்கள்.
வடக்குத் தெருவில் வாழ்கின்ற செம்மைநாட்டார்
அல்லது செம்பியன் நாட்டார் எனும்
மறவர்களின் குலதெய்வம் மதுரை வீரன்
இது நெற்கட்டுஞ் செவிலில் இருந்தது
பின் இங்குவந்து கோயிலைக் கட்டி வைத்தார்கள்
இந்த மதுரைவீரன் கோயில்கள்தான்
தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வழிபடும்
சிறு தெய்வ வழிபாடென்று ஆய்வாளர் கூறுகிறார்கள்.
பிராமணர்களுக்கு பெருமாள் கோயில் என்றும்
வீரப்பெருமாள் அய்யனார் என்றும்
இருகோயில்கள் குலதெய்வம் என்கின்றனர்
ஆசாரிகள் அனைவருக்கும் கருப்பசாமி கோவில்
பிள்ளைகளுக்கு மாடசாமி கோவில்
நாடார் குலத்தவர்களுக்கு மாரியம்மன் கோவில்
தலித்துகளுக்கு ஊர் காவலன், அய்யனார்
தாழ்த்தப்பட்டோர்க்கு (பள்ளர்) வீரபாண்டியம்மன்
இது தவிர இரண்டொரு பிள்ளையார் கோவில்
உள்ளிட்ட எல்லாக் கோயில்களிலும்
எல்லா மக்களும் கண்மூடி கைகூப்பி நிற்பதைக் காணலாம்.
இழிசாதியென்று இகழ்வோரின் சாமிகளிடம்
உயர்சாதியினர் பக்திக் காட்டுவது விசித்திரம்தான்
இதுபோக எல்லாச் சாதிக்காரர்களும்
இணைந்து வரிபிரித்து ஆடிமாதம்
அம்மன்கள் மூவருக்கு விழா எடுப்பதுண்டு
மற்றும் ஆங்காங்கே இருப்பதாக சொல்லப்படும்
பேய்கள் முனிகள் பிசாசுகள் ஆகியவற்றை
பிள்ளைகளுக்கு சொல்லி பயமுறுத்துவதுண்டு.
நெறியல் பிசாசு, மொட்டைமலை மடத்து முனி
கல்லுப்பட்டி முத்தையா, கலிங்கள் முனி
என்றெல்லாம் கோடாங்கிகள் குறிகாரர்கள்
ஓங்கி முழங்கி ஊரையே பயமுறுத்துவதுண்டு.
ஊர் காவலப் போத்தி எனும் கோவில் விழா
நடுச்சாமம் என்பார்களே அந்த நேரத்தில்
சுத்தமான கருப்புநிற வெள்ளாட்டங் கிடாயை
ஊசியான கொண்டியை ஆட்டின் தொண்டையிலேயே
செருகி ஊரைப் பயமுறுத்துவார்கள்.
ஊர் கூடி கொண்டாடும் திருவிழாக்களில்
ஊமையாக நடக்கும் விழா வீரபாண்டியம்மன் விழா
வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் காவல்தெய்வம்
காளியம்மன் திருவிழா சற்று ஆரவாரம் காட்டும். ஆனால்
மக்களின் மனம் கவர்ந்த விழாவாக
முத்தாலம்மன் விழாதான் சிறப்பானது
மறைவிடத்தில் மண்ணால் சிலை செய்து
ஊர்மந்தையில் உட்கார வைத்து
பொங்கலிட்டு மாவிளக்கேற்றி வைத்து
ஒரு நாளிருந்து பூசித்து வழிபட்டு
மறுநாள் ஊருக்குக் கிழக்கே ஓரிடத்தில்
உடைத்து நொறுக்கிவிட்டு வருவது தான்
முத்தாலம்மான் திருவிழாவாகும்.
இந்த சிலையை செய்யும்போதும் நொறுக்கும் போதும்
யாரும் பார்க்கக் கூடாது என்றெல்லாம்
பயமுறுத்தி பதற்றமடையச் செய்வார்கள்
உயிரற்ற மண் பொம்மையைக் கண்டு
பயந்தவர்கள் ஊரில் வீரர்களென்று
உலா வருவதைக் காணலாம்.
இந்த வழிபாட்டுச் சிந்தனைகளால்
தமிழை தமிழனை தமிழ்ச்சீர்மைகளை
சிதைத்த பார்ப்பனர்களும் அவர்களின்
அடிதொட்டுக் கிடக்கும் அடிமைகளும்
கெட்டவர்கள் என்றாலும் கெட்டிக்காரர்கள்தான்
கேடு செய்வதில் மிகவும் கெட்டிக்காரர்கள்தான்
எத்தனை கெட்டிக்காரத்தனங்கள் செய்தாலும்
தமிழர்களின் தாய்த் தெய்வ வழிபாட்டை அதுவும்
பிரிந்த சாதிகள் அனைத்தும் இணைந்து
வழிபடும் வழிபாட்டு வழக்கத்தை
சாதிய வெறியர்களால் மாற்ற முடியவில்லை.
இன்னும் இனிய காட்சிகள் இதயத்தில் விரிகிறது
இன்று கதிர்களை அடிக்கவும்
காற்றாடியில் தூற்றிநெல்லை
மூடையில் இணைத்து விடும்
கருவிகள் கொண்ட வாகனங்கள்
எங்கும் இயங்குகிறது. ஆனால்
உழுது சாலடித்து நாற்றுப்பாவி நடுகை நட்டு
களையெடுத்து உரமிட்டு பயிர்களை
கண்விழித்து இரவு பகல் காத்திருந்து
அறுக்கின்ற நாள் வரையில்
உழைப்பவர்களின் உணர்வுகளை
ஊன்றிப் பார்த்தால் காவியச் சுவைகூடும்
ஆடல் பாடல் அலங்காரச் சொற்கள்
கேலி கிண்டல் இடக்கு ஏகடியம்
இதயம் நோகாதவாறு மகிழ்வூட்டும்
இனிய உணர்வை எங்கும் காணலாம்
ஆண்பெண் இருவரும் உழைக்கின்ற
இனிய நிலை எல்லாப் பருவங்களிலும்
வேளாண் பணிகளில் இருந்ததை காணலாம்
எழுதும் கவிஞரோ இசைவாணனோ கருவியோ
இல்லாமல் இலக்கியசுவை கூட்டும்
இனிய பாடலை எங்கும் கேட்கலாம்.
வயலில் நிகழும் கண்நிறைந்த காட்சியொன்று
இன்று நினத்தாலும் இதயம் இனிக்கின்றது.
செஞ்சாந்து பொட்டுவைச்ச சின்னவளே இங்க வந்து
மச்சானின் மச்சத்திலே மனசை வைச்சிக்கடி
வானம் கறுக்குதடி மின்னல் வரப் போகுதடி
மேகந்திரளுதடி மழை வரப் போகுதடி
கோடை மழை பெய்ததடி குளிர்காத்து வீசுதடி
மானே மரிக்கொழுந்தே மாமன் பெத்த மல்லிகையே
கிட்டவந்து கட்டிக்கடி எனக் காதல் உணர்வுகள்
களை கட்டும் காட்சிகள் கண்ணில் வந்து நிறைகிறது.
மம்பட்டி, களைவெட்டி, களைக்கொட்டு
கொட்டுமம்பட்டி, பன் அரிவாள் என்று
பலவித வேளாண் கருவிகள் கண்ணில் தெரிகிறது
பன் அரிவாள் என்பது பயனுள்ள கருவியாகும்
பல்வரிசைபோல அமைந்திருக்கும் அரிவாள் ஆகும் அது.
நெற்கதிர், வரகு, குதிரைவாளி, கேப்பை
சாமையோடு புல்போன்ற வலிவற்றதையெல்லாம்
அறுக்கிற ஆற்றல் கொண்டதாக பன்அரிவாள் விளங்கும்.
கதிரை அறுத்து பின் அரியரியாய் அடுக்கிவைத்து
கட்டாக கட்டிக்கொண்டு களத்திற்கு வருவார்கள்.
களத்தில் நிகழும் காட்சியொன்று இன்றும்
கண்ணில் நிறைந்து களிப்பூட்டுகிறது
கட்டுகள் குவிந்திருக்கின்ற களத்து மேட்டில்
வைக்கோலில் திரித்த பிரியை (கயிறு போல)
காளை யொருவர் இரு கைகளிலும் பிடித்திருப்பர்
பெண்கள் நாலைந்து பேர் கதிர்கட்டுகளை
அவிழ்த்து அதிலுள்ள கதிர் அரிகளை
அள்ளி அந்த காளையிடம் வீசுவார்கள்
ஒவ்வொருவரிடமும் வாங்கி அதை அடித்து
வைக்கோலை பொனையலின் பல பகுதிகளுக்கும்
போட வேண்டும். இந்தப் பொனையலின் காட்சிகள்
நம்மை பூரிக்க வைக்கும்.
நான்கு நான்கு மாடுகளை இணைத்துக் கட்டி
வட்டமாக வைக்கோலை அந்த மாடுகள் மிதித்து
எஞ்சிய நெல்லை பிரிக்க முனையும்,
கதிர் அடிப்பதில் ஒரு போட்டியே நடக்கும்.
மதினி கொழுந்தியாள் முறை கொண்ட பெண்கள்
அள்ளி வீச, மச்சான் அத்தான் முறை
கொண்டவர்கள் சரியாக பிடித்து
அடிக்க வேண்டும் இதில் தவறினால்
அவன் ஆண்மையை கேலி செய்வார்கள்
இதில் என் தந்தை எப்போதும் வெற்றி பெறுவார்யென
என் தாய் இதை பெருமையுடன் பேசுவார்.
கடும் உழைப்பால் கூட களிப்புறும் உள்ளத்துடன்
வாழந்தவர்களை வரலாற்றாய்வாளர்கள்
வாழ்த்தி படைக்க வேண்டுகிறேன்
இந்த இனிய ஊரில் எல்லாமே கொடையாக
வழங்கி வள்ளலாய் திகழ்ந்தார்கள்
தோட்டங்களில் கீரை காய் கனிகள்
வீடுகளில் மோர் குழந்தைகளுக்கு சோறு
நீர் நிலைகளில் கிடைக்கின்ற மீன்கள்
ஒருவொருக்கொருவர் கொடுத்து
இதய மகிழ்வு கொண்டு வாழ்ந்தார்கள்.
மழைக்காலங்களில் என் தந்தை மீன்பிடிப்பது வழக்கம்
அதை ஊர் மக்களுக்கு வழங்குவது என் தாயின் பழக்கம்
எல்லா வீடுகளிலும் என் தாயின் பெயர் சொல்லியே
மீன் குழம்பு மணந்து மகிழ்விக்கும்.
மீனைக் கருவாடாக்கித் தருவதும் தனிக் கொடையாகும்.
ஊரில் உள்ள நாவிதர் எல்லா நோய்களுக்கும்
சூரணங்கள் தந்து குணப்படுத்துவார்
இன்று எல்லாமே வணிகமாகி விட்டது
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு
வழங்கி வாழ்வித்தால் வாழ்க்கைக்கான
போராட்டங்கள் பொங்காது தவிர்க்கலாம்.
பொதுநலச் சட்டங்களும் தேவை இருக்காது போகலாம்
இது எங்கள் ஊரில் இருந்த இனிய நிலையாகும்.
நீர்வரத்து கால்வாய் உடைந்தால் வீட்டுக்கு
ஒருவர் ஓடிவந்து உடைப்பை அடைப்பார்கள்
இன்று அந்த இனிய நிலை இல்லாது ஒழிந்தது
எதற்கும் அரசை எதிர்பார்க்கும் நிலைவந்தது
சங்கக் கவிதைகளில் வரும் அலர் தூற்றுதல்
இங்கும் இருந்ததை என இளவயதில் கேட்டிருக்கிறேன்
உடன்போக்கு நிகழ்வுகளும் நடந்ததுண்டு
இரண்டு மூன்று பேரை மணந்தவர்களும் உண்டு
அக்காவை மணந்தவர்கள் அவர் தங்கையையும்
இணைத்து வாழ்ந்து இன்பமடைந்தார்கள்.
இதை அந்த அக்காவே ஏற்படுத்தித் தருவதுண்டு
நடுத்தெருவில் ஊர்க்கூட்டம் நடப்பதுண்டு
உறவினர் கூட்டம் மிகுதியானால்
நீதியின் நெஞ்சம் அவர்களுடன்தான் உறவாடும்.
பெண்ணை ஏலா என்றும்
ஆணை ஏலே என்றும் அழைக்கும்
விளிப்புச்சொல் கூட பொருள் மாறி
இனிப்பான செல்லச் சொற்கள் கூட இடமிழந்து வருவது
இதயத்தை வருத்துகிறது. இதை நினைக்கின்ற போது
இன்று தூக்குக்கயிற்றில் பிணைந்து நிற்கின்ற
பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் கவிதை
வரிகள் உள்ளத்தை ஊடுறுவி நிற்கின்றது.
சடுதியில் வருவாயா, என் சாவைத் தவிர்ப்பாயா?
என்ற அந்தக் கவிஞன் தன் மகனைக்
காணாமலேயே மறைந்து போனான்
மறந்து விடுவதை அயத்துப் போனேன் என்றும்
விரைந்து வருவதை சடுதியில் வா என்றும் கூறுவார்கள்.
சடுகுடு, கிளித்தட்டு, பல்லாங்குழி, தாயம்
சிலம்பம், தீப்பந்தம், கும்மி, கோலாட்டம்
குதிரை தாண்டுதல், நெஞ்சில் நிறைந்த தாலாட்டு
இறக்கிறபோது கூட இசைக்கின்ற ஒப்பாரி
மறைந்தவரை நினைத்து மாரட்டித்து அழும்பாட்டு
வள்ளைப்பாட்டு வரிப்பாட்டு என்று தமிழகத்தின்
ஏனைய பகுதிகள் போல எங்கள் ஊரும்
இனித்துக் கிடந்த நாள் நான் சிறுவனாக
இருந்த போது எழில் சிந்தும் நாட்களாகும்.
இதை நினைக்கின்றபோது இன்று
உழைக்காத உண்டக்கட்டிப் பார்ப்பனர்கள்
ஊரில் ஒருவர்கூட இல்லாதது உண்மையில்
உள்ளத்திற்கு உவகை ஊட்டுவதாகும்.
காசி-இராமேஸ்வரம், மதுரை, திருப்பதி
மற்றும் பல கோயில்களை நிறுவனப்படுத்தி
அதை பெருந்தெய்வங்கள் என்று கதையளந்து நிலைப்படுத்தியதை ஏற்று எங்கள் ஊர்
இராமனுக்கும் சிவனுக்கும் கிருஷ்ணனுக்கும்
கோயில் எழுப்பவில்லை மாறாக
காவல் வீரர்களுக்கு தாயன்பு அம்மன்களுக்கும்
ஆலயம் எழுப்பி அன்பு காட்டினார்கள்.
ஊரை ஏய்த்து உண்டு கொழுத்து பெருத்த விட்ட
உடலின் ஊளைச் சதையைக் குறைப்பதற்கு
நடைபயிற்சி செய்பவர்கள் இங்கில்லை.
நாயுடன் இணைந்து பயணம் நடத்தவில்லை
காலையில் எழுந்து காடு கழனிகளில்
உழைத்து விட்டு வந்து மாலையில்
உள்சாகமூட்டும் விளையாட்டுகளில்
நீந்தி விளையாடி நெஞ்சை மகிழ்வித்து
நிறைவு கொண்டு வாழ்ந்திருந்தார்கள்
முத்தாலம்மன் திருவிழா முடிந்த பின்
இரண்டு நாடகங்கள் நடக்கும் அது
புராண இதிகாச புழுதியை வாரி இரைக்கும்
இன்று அந்த நிலை இல்லை.
அறிவியல் தந்த அனைத்து கருவிகளும்
எங்கள் ஊரிலும் இனிமையூட்டுகிறது.
வேலையா பாலையா முருகையா
சுந்தரய்யா சுப்பையா என்றும்
முத்துப்பாண்டி, வெள்ளைப்பாண்டி
சின்னப்பாண்டி பெரியபாண்டி எனவும்
முத்தாத்தா, பெத்தாத்தா செல்லாத்தா சுந்தராத்தா
சீனியாத்தா வேலாத்தா கருத்தாத்தா புல்லாத்தா குருவாத்தா
பெருமாத்தா பொன்னாத்தா அழகாத்தா இராமாத்தா
சின்னத்தாய், பெரியதாய், ஆவுடைத்தாய், கோமதி
என்றெல்லாம் பெரும்பாலும் தமிழ்ச்சொல்லின்
அழகையும் அருமையையும் இணைத்தே
பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.
ஊரில் காரைவீடு என்று ஒரு வீட்டை குறிப்பிடுவார்கள்
அதுதான் முதல் கட்டிடம் என்று சொல்வார்கள்
இன்று ஊரில் எழிலார்ந்த வீடுகள்
ஏராளமாக தோன்றி மகிழ்விக்கிறது
நான் குளித்த கிணறுகளும் சின்னமடை பெரியமடை
கலிங்கல், மதகு தடுப்பணை சக்கிலியன் பாறைஊற்றும்
காவியத்தின் ஓவியமாய் ஒளிவிடுகிறது.
மதங்களால் நிறுவனப்படுத்தப்பட்ட கடவுள்களான
ஏசுவையும் அல்லாவையும் இந்துமத
விஷ்ணுவையும் சிவனையும் மற்றவர்களையும்
வணங்கி வழிபடுவோர் இங்கு யாருமில்லை.
இங்குள்ள தெற்குத் தெருவில் ஒரு இடத்தில்
இராமாயணச் சாவடி என்ற அரங்கு உள்ளது.
இரவில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்
இராமாயணத்தையும் மகாபாரதத்தையும்
பாவங்களோடு படித்து விளக்கமும் தருவதுண்டு
ஆயினும் அந்த இதிகாசங்களில் மக்கள்
அடிமையாகி அலங்கோலம் ஆனதில்லை
தன்அன்பு மனைவியை சூதாட்டத்தில் தோற்று
மாற்றானிடம் இழந்த தர்மனுக்கோ அவன்
தம்பிகளுக்கோ அல்லது அய்வரோடு
கொஞ்சிக் களித்த பின்னும் ஆறாவதாக
கர்ணனையும் பார்த்து காமப்பார்வை வீசிய
பாஞ்சாலிக்கோ கோயில் கட்டி வணங்கவில்லை
அதுபோலவே கோடுதாண்டி குலமகள் பண்பை
குழிதோண்டிப் புதைத்துவிட்ட சீதையையோ
சீதையையிழந்த இராமன், ஆண்டவனின்
அவதார மெனினும் அவனை வணங்குவதற்கு
யாரும் முயலவில்லை என்பது மகிழ்வளிக்கிறது.
கைகுத்தல் அரிசி என்பது உடலுக்கு வலிமைதரும்
என்பது இன்றுவரை உள்ள கருத்தாகும்.
நெல்லை அரிசியாக்குவதற்கு இரண்டுவகை
உலக்கையின் இருபுறத்திலும் பூண்கள்
இருப்பதைக் காணலாம்.
உரல் ஒன்றில் நெல் உமியை அகற்றுவார்கள்
உலக்கையின் ஒருபக்கம் இரும்பு வளையம்
மாட்டப்பட்டுப் பயன்படுத்துவார்கள்
வேறொரு உரலில் அரிசியைத்தட்டி தவிட்டை
அகற்றி நயப்படுத்துவார்கள். அதற்கு உரலின்
வேறொரு வடிவம் இருக்கும்.
உரல் ஒன்றில் இரண்டு மூன்று நான்கு பேர்கள்
உலக்கையால் குத்தும் காட்சி உண்மையில்
இசைமணம் கொண்ட கலைக் காட்சியாகவே
கண்ணில் தோன்றி களிப்புற வைக்கும்
உழைப்பதில் சோர்வு இல்லாதிருக்க உஸ் உஸ் என்ற
ஓசை வடிவோடு பெண்கள் உரல் குத்துவது
உள்ளத்தில் இன்றும் ஒளிவிடக் காணலாம்.
உளவியல் நோய்களை ஓரங்கட்டும்
ஒருமுறை என்று உடுக்கடி கோடாங்கிகளையும்
குறிசொல்லும் வகைகளையும் ஆய்வு செய்த
அறிஞர் பெருமகன் சிங்கார வேலர் சொல்கிறார்
பொதுஉடமை உணர்வுகளை பொங்கித்தந்த
சிங்கார வேலரின் பார்வையோடு இங்குள்ள
கோடங்கிகளை எண்ணிப் பார்ப்போம்.
பேய் பிடித்தவர் என்று அதுவும் ஒரு பெண்ணை
தன்முன் இருத்திவைத்து உடுக்கெடுத்து அதை
அடித்து ஒருவித இராகத்தோடு பாட்டுப்பாடி
அந்தப் பெண்ணின் மனதைப் தன்வயப்படுத்த
உடுக்கடிப்பதற்கு ஏற்றார் போல
தலையைச் சுற்றி சுற்றி ஆடவைத்து
அல்லது அப்பெண்ணின் சுற்றலுக்கு ஏற்றவாறு
தன் உடுக்கின் தாளத்தை மாற்றியடித்து
இரண்டுமூன்று நாள் இரவுப் பகலும்
ஓங்காரக் குரலோடு போராடுவார்
அதன்பின் அந்தப் பெண்ணின் தலையில்
ஒரு கல்லைத் தூக்கி வைத்து
ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் போடவைப்பார்
அதன்பின் அந்தப் பெண் இயல்நிலைக்கு திருப்புவார்
இதைத் தொழிலாகக் கொண்டவர்கள்
சங்கரபாண்டியத்தேவர், பக்காளிமுத்தையாத்தேவர்,
பக்கத்து ஊரில் ஒரு நாயக்கர் வாழ்ந்தனர்.
இந்த கோடாங்கி குறிகாரர்களை நினைக்கின்ற போது
சங்க இலக்கிய காட்சி கண்ணில் தெரிகிறது
ஒரு பெண் தன்னிலை இழந்த தனியாகப்
புலம்புவதைப் பார்த்த தாய் ஒருத்தி வெறியாட்டு
வேலனை அணுகி நிலைமையை விளக்குகிறார்
வெறியாட்டு வேலன் அவளிடம்
செம்மறி ஆட்டுக் குட்டியை அறுத்து
அதன் குருதியை அந்தப் பெண்ணின் மீது
தெளித்தால் சரியாகும் என்கிறார்.
அதற்கான பணிகளை தாய் செய்யமுற்படுகிறாள்
அதற்கு அந்தப் பெண் சிரித்துக் கொண்டே
தாய் ஏன் இவ்வளவு தொல்லைப் படுகிறாள்
நான் நேசிக்கும் அவனோடு என்னை
சேர்த்து விட்டால் எல்லாம் சீராகிவிடும் எனச் சொல்கிறாள்
இதில் பாதிக்கப்படுவோர் பாலியல் உணர்வில்
பாதிக்கப்படுபவர்களாகவே இருப்பதைக் காணலாம்.
பெண்களைப் போல தலையில் கொண்டைபோட்ட
ஆண்கள் சிலர் இருந்தனர் தலைமுடியை அள்ளி முடிவதே
ஓர் அழகுக் கலையாகும். முடியை இரு கைகளால்
அள்ளி முடிந்தபின் பார்த்தால் ஆணோ பெண்ணோ
கோயில் சிலைபோல கொள்ளை அழகுதரும்.
ஒவ்வொரு வீட்டிலும் ஆமணக்கு விளக்கெண்ணை
வேப்பங்கொட்டை வேப்ப எண்ணெயிலும்
நோய் தீர்க்கும் தன்மையை விபரமாய் அறிந்திருந்தனர்.
அத்துடன் மகப்பேறுநிலைகளை தெளிவாய் தெரிந்திருந்தனர்
நாவிதர் எனும் நல்ல மனிதர் சூரணங்களைத் தந்து
நோய் தீர்க்கும் நிலை நெஞ்சில் நிறைந்ததுபோல
அந்த நாவிதர் வீட்டு பெண் ஒருவர்
மகப்பேறு சீரடைய சில வழிகளை சொல்லுவார்
வயிற்றுக்குள் இருப்பது ஆணா பெண்ணா என
உள்ளிருக்கும் பிள்ளைத் துடிப்பை வைத்துக் கூறி விடுவார்
ஒரிரு பிள்ளை பெறுவதற்கே இன்று ரொம்பவும்
பெண்கள் ஓய்ந்து விடுவதை காண்கிறோம்.
ஆனால் எங்களின் இனிய கூடலூரில்
பெரும்பாலும் காடுகரை தோட்டங்களில்
கடுமையாக உழைத்துக் கொண்டே
குறைந்தது அய்ந்து முதல் எட்டுக் குழந்தைகளும்
அரிதாக பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை
ஈன்றவர்களை நினைக்கின்றபோது
இதயம் இனிக்கவே செய்கிறது.
இதில் பத்து பைசாவைக்கூட பெறாமலேயே
பிரசவம் பார்த்த அந்த நாவிதர் வீட்டு
நல்ல தாயை நாளெல்லாம் பாராட்டுவோம்
பிள்ளை பெறுவதற்காக அரசுப் பணியில்
பணியாற்றும் பெண்களுக்கு மூனு மாத ஆறுமாத காலம்
விடுமுறை தரப்படுவது போல் இங்கு கிடையாது
பிள்ளை பெற்ற சில நாட்களிலே எல்லா
பணிகளிலும் ஈடுபாடு கொண்டு உழைத்திடுவர்
ஆயினும் எந்த நலிவும் தாய்கோ பிள்ளைக்கோ
ஏற்படுவதில்லை என்பது இனிமையானதாகும்
பத்துப் பிள்ளை பெற்ற பின்னும் என் பொஞ்சாதி
பஞ்சுமெத்தைபோல இருக்கிறாள் என்று
நகைச்சுவையுடன் சிலர் கூறக்கேட்டுருக்கிறேன்
பிறந்த பிள்ளைகள் பலசாலிகளாகவே விளங்கினர்.
ஆனால் இன்றோ மருத்துவமனைகளில்
ஒரு பிள்ளையை பெற்றெடுக்கவே
பல்லாயிரம் ரூபாய்களை பெறக் காண்கிறோம்
அதுகூட தாயின் வயிற்றை கிழித்து பிறக்கும்
நாளுக்கு முன்னரே வெளியில் எடுத்து
குறைப்பிரவசமாக ஆக்கிவிடுவதைக் காணலாம்
பணம் ஏதும் பெறாமல் பத்துப் பிரசவம்
பார்த்த கிராமத்து பெருமாட்டி எங்கே?
இயல்பாய் பிறக்க விடாமல் அறுத்தெடுத்து
பணத்தைக் குவிக்கின்ற இன்றைய மருத்துவர்கள் எங்கே
நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு வலிக்கிறது.
இன்னொரு காட்சியைக் கருத்தை கவர்கிறது
தோடு அணியும் காதில் ஓட்டையைப் பெரிதாக்கி
அதில் குணுக்கு என்னும் வளையங்களை அணிவார்கள்
அதை காது வளர்ப்பது என்று கூறுவார்கள்
அந்த காதில் ஈயத்தால் ஆன இருவளையங்களை
அணிந்திருப்பார்கள். சிலர் தங்கத்தால் ஆன
பாம்படம், தடயம், தண்டட்டி முடிச்சி அணிகளை
அணிந்திருப்பதைக் காணலாம். இதில் வளையத்தை
மணமாகாதவர்களும், தடயம் போன்றவற்றை
மணமானவர்களும் அணிந்திருப்பதைக் காணலாம்
இந்த முறை எப்போது வந்ததென்றால்
முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு பயந்து
தன் பெண்களை அசிங்கப்படுத்தவே இதுபோன்று
செய்தார்கள் என்று சிலர் கூறுவதுண்டு.
துளசியும் தூதுவளையம் சோற்றுக்கற்றாலையும்
பிரண்டைக் கொடியும் நோயைப் போக்கும் நுட்பத்தை அறிந்திருந்தனர் இன்னும் சில நாட்பட்ட புண்ணை
ஆற்றும் என்று கண்டனர்
விளக்கெண்ணையும் வேப்பெண்ணையும்
பற்பல நோய்கிருமிகளை கொல்வதாக கூறுவர்.
மழைச்சாரலில் வாழ்கின்ற ஆதிவாதிகள் அணிவது போன்றதொரு அணிகலன் வேர்ப்பாசி இதை இங்குள்ள வயதான பெண்கள் அணிவதைக் காணலாம்.
கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிந்திருப்பர்
இதை கடமை, கட்டாயம் என்று கருதுகின்றனர்
குறிப்பாக இருபிரிவு மறத்திகளும்
இருபிரிவு தாழ்த்தப்பட்டோரும் அணிந்திருப்பர்
என அத்தைமார் நால்வரில் மூவர் அணிந்திருந்ததை
பார்த்ததோடு அதை பரிசிலிக்கவும் செய்தேன்
பச்சை மஞ்சள் கறுப்பு சிகப்பு காவி நிறங்கள்
அணிசேர்ந்து அழகூட்டும் பாசி இது சிறுமிகளாக இருக்கும்போது சிலர் கருகுமணிப்பாசி அணிந்திருப்பர்.
உழுத நிலத்தை சமப்படுத்துவதை
சாலடித்தல் என்று சொல்லுவார்கள்
சமன்படுத்தியபின் நட்டால்தான்
விளைச்சல் நன்றாக் இருக்குமென்பர்
இந்த நாற்று நடுவதை தொடங்கி வைப்பது
தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்மணிகள் தான்
நட்டு முடித்தபின் குலவை ஒலி எழுப்பி
மங்கல இசைக்கூட்டுவார்கள்
அதை ஏற்றுக் கொண்ட நில உடமையாளர்
வெற்றிலைபாக்குடன் பணமும் தந்து
தன் நன்றியை தெரிவிப்பார்
இழிசாதி என்று ஒதுக்கப்பட்ட வகுப்பினர்களுக்கு
இந்த மரியாதை வியப்பைத் தருகின்றது.
சங்க காலத்தில் படையமைப்புகள் இல்லை ஆனால்
எல்லா வீரக்கலைகளும் விளைந்து நிறைந்திருந்தன
அதுபோலவே எல்லாக் கலைகளும் இங்கும் சிறந்திருந்தன
இலைதழைகளில் நோய் நீக்கும் மருந்திருப்பதாக
எந்த மருத்துவர்களும் எந்த ஆய்வுக் கூடமும்
எடுத்துச் சொல்லவில்லை.
விளக்கெண்ணையை கொடுத்தே நலமுடன்
குழந்தைகளை பெற வைத்தார்கள் அதுவும்
பதினாறு குழந்தைகள் பெற்றவர்களும்
அறுத்து போட்டு குழநதைகளை எடுக்கவில்லை.
மழையில் வெயிலில் நனைந்தாலும்
மாண்பாளாக்களாகவும் மாசற்றவர்களாகவும்
விளைந்து சிறந்திருந்தார்கள்.
தித்திக்கும் மொழிகலந்த தெம்மாங்கு இசை
நம்மை தேனாற்றில் நீந்தச் செய்யும்
நகரவாசிகளிடம் நாகரிக மனிதர்களிடம் உள்ள
நலந்த உள்ளம் என்பது நாம் இங்கே காணமுடியாதது
வணிகத்தனமோ கணிகைக்குணமோ இல்லாத
வாய்மை சேர்வாழ்வின் இலக்கணம் இவர்களது ஆகும்
சரியோ தவறோ மனதில் பட்டதை வெளிப்படுத்தினர்
கையில் அரிவாளோடு சண்டியர்களாக
சிலர்வலம் வருவதுண்டு
உறவு என்று வரும் போது உயிர் உருகுவதுண்டு
மண்சுவரின் மேல் ஓலை தரகுப்புல் கொண்டு
தன்வீட்டை தானேகட்டிக் கொள்வது
அது பழுதாகும்போகுது சரிசெய்து கொள்வது
ஆண்பெண் இருவருக்குமே இயல்பானது.
மாட்டுச்சாணத்தை கரைத்து தரையில்
மெழுகி துõய்மை செய்வதும் உண்டு.
சிலம்பம் சுருள்வாள் கிளித்தட்டு கோலாட்டு
கும்மி, சடுகுடு, குதிரை தாண்டுதல் பகலில்
பல்லாங்குழி ஆடுபுலி ஆட்டங்கள்
அனைத்துப் பகுதிகளிலும்
விளையாடி மகிழ்வதைப் பார்க்கலாம்
வானொலி வருவதற்கு முன்னால்
ஊரில் உள்ள வாலிபர்கள் சிலர்
திரை இசையில் வந்த சிறந்த பாடல்களை
பாடி மகிழ்வதுண்டு பாராட்டு கூறுவதுண்டு
இனியவர் இம்பம்மா, வேலையா திருமலை
முத்துப் பாண்டியன், சக்திவேல், நடராஜன்
ஆகியோர் பாடும் திறமை பெற்றவர்கள்
வானொலி, தொலைக்காட்சி எல்லாம்
அன்று இலவசமாய் மக்களுக்கு கிடைத்ததுண்டு
ஏழரைக் கட்டையில் இவர்கள் பாடும்போது
காற்று தன்னில் சுமந்து சென்று காதில் தருவதுண்டு
இசைக்கருவிகள் ஏதுமின்றி இசையிலக்கணம்
எல்லார் பாட்டிலும் இணைந்திருந்தது
வெளியூர் செல்வது என்பதெல்லாம்
வெகுகுறைவானவர்களுக்கே கிடைத்தது
அப்படிச் சென்றுவந்த சிலரும் பலவற்றை
கதையளந்து பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு.


...தொடரும்

No comments:

Post a Comment