Saturday, 22 October 2016

இந்தியா ஒரு...

இந்தியா ஒரு...
 இந்தியா ஒரு துணைக் கண்டம் என்பது ஆய்வாளர்கள் மட்டுமல்ல. பொது அறிவுள்ள சாதாரண சராசரி மனிதர்களுக்கும் தெரிந்த ஒன்றுதான்.
 வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெறும்போது இந்தத் துணைக் கண்டம் இருநாடுகள் என்று அடையாளம் காட்டப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் என்று இனம் காணப்பட்டது. அதில் இந்தியா என்பது பல்வேறுபாடு கொண்ட மதங்கள், மொழிகள் மண்சார்ந்த தேசியங்கள் கலாச்சாரப் பண்பாட்டு வேறுபாடுகள் முரண்பாடுகள் கொண்டதாக இருந்தது.
 அய்ரோப்பியச் சிந்தனை கொண்டவரும், இங்குள்ள சூழலில் வர்த்தகக் கருத்துக்களை பொதுப் புத்தியில் வைத்திருந்தவரும், சீரிய முற்போக்கு உணர்வாளரும் ஆன திரு. பண்டித சவகர்லால் நேரு அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் முகப்பில் மதசார்பற்ற, சோசலிச சனநாயக இந்தியக் குடியரசு என்று பொறிக்க வழி செய்தார்.
 இந்திய அரசின் இலட்சினையாக அதாவது முத்திரையாக புத்தன்வழி நடந்த மாமன்னன் அசோகனின் அரசுரிமையான நான்கு முகம் கொண்ட சிங்கத்தைப் பொறிக்கச் செய்தார்.
 அரசியல் சட்ட முகப்பில் இருப்பது வெறும் எழுத்துகளாக இருக்கிறதே தவிர உண்மையில் நடப்பு நிலையில் அது போல் இல்லை என்பது ஊரறிந்த உண்மையாகும். ஆனால் பொழைப்பு மனம் கொண்டவர்களும் முறையற்று பொருள் குவிக்கும் பூமான்களும் இந்திய அரசியல் சட்டம் அருமையானது, புனிதமானது என்று ஊரெங்கும் உலகெங்கும் ஓங்கி முழங்கி இங்குள்ள உண்மை நிலைகளை மறைத்து உலகத்தாரை ஊமையாக்கி ஒத்துக் கொள்ள வைத்து விடுகின்றனர். அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் கண்காட்டும் காட்சி நிறைந்த மக்கள் கூட்டம் கொண்ட இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது என்கிறார்கள். அதுமட்டுமே சனநாயகம் என்று சாட்டுகிறார்கள்.
 மக்களாட்சி முறையென்பது, மக்களின் மனம் விரும்புவோர், ஆட்சியில், ஆட்சி பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்கின்றனர் என்பதை உரத்து முழங்குகிறார்கள்.
 இந்திய அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தையும் ஊடகங்களையும் இங்குள்ள எல்லாவகையான அறிவுஜீவுகளையும் ஆட்சிக்குட்படுத்தினால் அவலங்களே மிஞ்சும்.
 வளரும் அறிவியலும் அது சார்ந்த விஞ்ஞானமும் வானோக்கி வளர் நிலைகளை உருவாக்கி மக்களுக்கு வாழ்வளித்து வருவதை கண்கூடாகப் பார்க்கிறேம்.
 இந்த நிலையில் இந்திய ஆட்சிகளின் நிலைகளையும் அரசுகளில் பல்துறை செயல்பாட்டு அமைப்புகளையும் எண்ணிப் பார்த்தால் இதயம் வலிக்கவே செய்யும்.
 எடுத்துக்காட்டாக இந்திய தேர்தல் ஆணையத்தையும் அதன் ஆணைகளையும் அவர்களின் உணர்வு செயல்களையும் பெரிதும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.
 கடந்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் தி.மு.கழகம் தோற்ற போதெல்லாம் அது மக்களால் நிகழவில்லை தேர்தல் ஆணையர்களால் ஏற்பட்டது என்பது ஊரறிந்த உண்மையாகும்.
 மேட்டுக்குடி சார்ந்த, மேட்டுக்குடியின் மேலாண்மையை ஏற்றுக்கொண்ட அடிமை உணர்வு கொண்டவர்களால் அந்தத் தோல்வி ஏற்பட்டது. இந்தியச் சூழலில் சனநாயகம் என்பதும் தேர்தல் என்பதும் மக்களை மயக்கி, ஏமாற்றி பொருள்பறிக்கும் ஒரு முறைதானே தவிர அவற்றில் உண்மைத் தன்மையோ ஊனமில்லாத உணர்வோ இல்லை என்பதுதான் எண்ணிர் பார்த்தால் கிடைக்கும் முடிவாகும்.
 இந்தியச் சூழலில் எதுவும் உண்மைத்தன்மை கொண்டதாக இருக்க முடியாது. எத்தர்களின் முயற்சி இருக்கவிடாது.
 இந்திய அரசியல் முகப்பில் இருக்கும் இனியச் சொற்களுக்கான பொருள் அதன் முழுமையும் இல்லாத ஒன்று என்று அறிவாளிகளால் பலகாலம் சொல்லப்பட்டு வருகிறது.
 முன்னூறு திருத்தங்களை கண்ட முதல் அரசியல் சட்டம் முழுமையும் புதிதாக உருவாக்க வேண்டும் என்பது பலகாலம் சொல்லப்படும் ஒன்றுதான். ஆனால் அதிகார வர்க்கமும், அரசியல் அடாவடிகளும் மாற்றத்தை பெற ஏற்படுத்த விட மாட்டார்கள்.
 இந்தியச் சூழலுக்கு உகந்த ஆடசிமுறையொன்றை பேரறிஞர் அண்ணா வலியுறுத்தினார். கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தும் செழுமை கொண்ட ஆட்சிமுறையை செழுமைமிகு கலைச் சிலையாக அவர் செதுக்கி வைத்திருந்தார்.
 இந்திய மண்ணையும் இந்திய ஒருமைப் பாட்டையும் பேணிப் பாதுகாக்க அதுகொடுத்த சட்டங்களை மைய அரசிற்கு தந்து விட்டு மக்களை பேணிப் பாதுகாக்கும் பிற சட்டங்களை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.
 மக்களின் கருத்தறிந்து ஆட்சி நடத்த விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை முன்னெடுத்துச் சென்றால் தேர்தல் தில்லுமுள்ளுகளை திருட்டுத் தனங்களையும் தேர்தலுக்கான தேவையற்ற செலவுகள் ஏற்படாது தவிர்க்கலாம் என்றார். இடைத் தேர்தல் தேவையில்லாத நிலை காட்டினார்.
 இடர்பாடுகள் தோன்றுகின்றபோது மக்களின் கருத்துக் கணிப்புகள் எடுக்கலாம். மக்கள் அதில் ஈடுபாடு காட்டுகின்ற வகையில் மக்கள் எல்லாருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயல வேண்டும் என்றார். அந்த அருமை அண்ணாவின் கருத்தை ஏற்றுக் கொண்டால் இந்திய அரசியல் முகப்பில் உள்ள செழுமையுள்ள சொற்கள் செயல் வடிவம் பெறும் என்பதுதான் உண்மையாகும்.

No comments:

Post a Comment