Tuesday, 5 January 2016

ஏன் இந்த நிலை?

ஏன் இந்த நிலை?

இதுவரை உலகில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் பல்வேறு நிலைகளில் பதிவு செய்யப்பட்டு ஆவணங்களாக்கப்பட்டிருக்கிறது. இயற்கையின் நிகழ்வுகளாக இருந்தாலும் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து இனியவர்களாக இருந்தாலும், இதயமற்றவர்களாக இருந்தாலும் இயன்றவரை எல்லா நிகழ்வுகளும் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்யப்பட்டு பாருக்கு பறைசாற்றப்பட்டிருக்கிறது.
இடி, மழை, புயல், பூகம்பம் இதனால் இழந்த ஊரும், நாடும், உயிர்களும் காலவாரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயற்கையில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து அனுபவத்தின் வாயிலாகவும், காற்று, மழை, பனி, வெயிலின் பருவங்களை கணித்து மனித அறிவு பலகாலமாக பல்வேறு நிலைகளில் தன்னை தக அமைத்துக்கொண்டு வாழ்ந்து வரக் காணலாம்.
இனிக்கும் தமிழை இதயத்தில் வைக்காது இழிநிலையில் வாழ்கின்ற இன்றைய தமிழர்களின் முன்னோர்கள் இயற்கையின் இயக்கத்தை பருவங்களாக வகுத்து வகை கண்டு வாழ்ந்தார்கள். காற்றுக்கும் மழைக்கும் கூட பெயர் வைத்து கலையுணர்வுடன் வாழ்ந்தார்கள். அறுபது நாட்களை ஒரு பருவமாக வைத்தார்கள். அறுபது ஆண்டுகளில் சுழலும் பருவ சூழலை வகுத்தார்கள். அதன் வழியில் வாழ்க்கையை துய்த்து சுவைத்தார்கள். வாடை, கோடை, கொண்டல், தென்றல் என்று ஒவ்வொரு திசையிலிருந்தும் வரும் காற்றுக்குப் பெயர் வைத்தார்கள். எப்போதாவது வரும் பெருங்காற்றுக்கு பேய்க்காற்றுக்கும் புயலென்று பெயர் சூட்டினார்கள். 
சாரல், தூறல், மழை, அடைமழை, பேய்மழை, கர்ப்பேரி என்று மழையின் வலிமைக்குத் தக்கவாறெல்லாம் பெயர் சூட்டி, நிலைகாட்டி நிறைவடைந்தார்கள். ஒவ்வொரு பருவத்திலும் என்ன விதைத்தால் விளையும் என்று விஞ்ஞானப் பேரறிவுத் தோன்றாக் காலத்திலேயே விளையும் பயிர் இயல்பு கண்டு இயல் செய்தார்கள். நிலத்தின் நிலையறிந்து அதை அய்ந்தாக வைத்து, அந்த மண்ணில் என்ன விளையும், அதன் இயல்பு என்ன, இயக்கம் என்ன என்று இன்றைய அறிவியல் மட்டுமல்ல, இனிவரும் நாட்களின் ஆய்வும், அறிவும் மறுக்க இயலாத நிலையில் நிறுவினார்கள், நிலைப்படுத்தினார்கள்.
2015 நம்பரில் பெய்த பெரும் மழையால் பெருத்த சேதத்தைச் சந்தித்தது தமிழகம் இதுபோல கடந்த காலங்களில் கூட நிகழ்ந்திருக்கிறது. இயற்கையின் சீற்றத்தால், இனிய பூம்புகாரும், கொற்கையும், தனுஷ்கோடியும் கூட அழிந்து போயிருக்கின்றது. திரிகூட மலையில் இருந்து புறப்படும் ஆறு இலங்கை வரை பாய்ந்த பரவிய செய்திகள் உண்டு. இடையில் கடல் இடைமறித்து இலங்கையைத் தீவாக்கியது. அதுபோல மேற்கடல் பகுதியில் வஞ்சி, தொண்டி, முசிறி, துவாரகை போன்ற நல்ல நகரங்களையும் கடல் தன் வாயில் போட்டுக் கொண்டதை வரலாறு விளம்புகிறது. 
இதெல்லாம் இயற்கையை அறிய முடியாத காலங்களில் நிகழ்ந்தவை. ஆனால் இன்று பூத்து மணம் கமழும் அறிவியல் ஆய்வு முடிவுகள் நாளும் நாளும் நல்ல வண்ணம் வளர்ந்து பூமிப் பந்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் எளிதாக்கப் பட்டிருக்கிறது. அறிவாளர்களால் உருவான இந்த இனிய முறைகளை நாட்டை, மக்களை வழிநடத்தும் அரசைச் சார்ந்த ஆட்சி ஆளுமையாளர்கள் விழிப்புடன் நிர்வாகத்தை நடத்தினால், நெறிசார்ந்த விதிமுறைகளோடு வினையாற்றினால் வேதனை தரும் நிகழ்வுகள் மிக அரிதாகவே இருக்கும். 
ஓர் நிகழ்வைக் குறிப்பிடுவது கடமையாகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஒடிசாவில் வீசிய பெரும் புயலின் அறிகுறி தெரிந்தவுடன் இரண்டு நாளில் ஏறத்தாள 11 இலட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்த்தார்கள். ஆனால், தமிழ்நாட்டின் நிலை அதுவல்ல. இங்கு புயல் ஏதும் வீசவில்லை, பூகம்பம் வரவில்லை, வளக்கமான மழைகால நிகழ்வுகள்தான் இங்கே நிகழ்ந்தது. அதுகூட பத்துப் பதினைந்து நாட்களாக நாளும் நாளும் வானிலை மையம் மிகத் தெளிவான அறிக்கையை வழங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் கடைசி இரு நாட்களில்தான், சென்னை நகரெங்கும் ஏரிகளின் உபரி நீரால் சூழ்ந்து, உயர்ந்த நேரத்தில்தான் ஒருவாறு பார்க்க முனைகிறார்கள். 
இது ஒரு ஆட்சியின் அக்கறையற்ற அவல நிலையாகும். இவைகளை விட்டு விடுவோம். காரணம் இவர்கள், மக்களுக்காக உழைக்க வந்தவர்கள் அல்லர். மக்களின் அறியாமையால் மந்தகாச வாழ்வில் திளைப்பவர்கள். ஆனால் இங்கு ஒவ்வொரு நிகழ்வையும் விமர்சனம் செய்யும் ஊடகக்காரர்கள் ஓய்வில் உட்கார்ந்து ஊர்க்கதை பேசுபவர் எல்லாவற்றிற்கும் கலைஞர் அரசே காரணம் என்று இந்த ஆட்சியில் மக்கள் மனம் பயத்தில் இருக்கும்போது கூட வாதங்கள் செய்து மகிழ்கிறார்கள். 
கலைஞர் ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு அவரது ஆட்சியில் எல்லாவகையான அரசுக் கட்டிடங்கள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், நினைவுச் சின்னங்களெல்லாம் நீர் நிலையில் நிறுவப்பட்டன என்று பயன் தந்ததை மறந்துவிட்டு, நிலை குலைந்து, நினைவு தடுமாறி நிற்கிறார்கள்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறுகளைச் சந்திக்கலாம், தாங்கிக்கொள்ளலாம். அவர் அரசு கூட சில இடங்களில்தான் இதுபோல நடைமுறைப் படுத்தியது. நீரோடும் பாதையெல்லாம் தடுத்து நிறுத்தியது அவர் ஆட்சி என்றும் அதனால் இன்றைய சென்னை நிலை ஆனது என்று சொல்வதற்கு சான்றேதும் கிடையாது.
அவரது ஆட்சியில் எண்ணற்ற சிறுசிறு ஆறுகளில் அணைகட்டி நீர்வழிகளை நெறிப்படுத்தி, விளைநிலங்களை விரிவு படுத்தினார். ஒருவேளை அவரது ஆட்சியில் ஏதும் நிகழ்ந்திருந்தால் அடுத்து வந்த ஆட்சி அதை சரி செய்திருக்களாம். அய்ந்தாண்டுக்கு ஒரு முறை அவருக்கு மாறான ஆட்சியைத்தானே மக்கள் அமைக்க உதவுகிறார்கள். இதையெல்லாம் எடுத்துக் காட்டாமல் தங்களை அறிவு ஜீவி என்று பறைசாற்றுவோர் வாய்மூடி கிடைக்கிறார்களே அது ஏன்?
பருவ மழை காலங்களில் கூட மக்களைக் காக்க முடியாத ஒரு அரசசை புகழ்பாடிப் பூரித்துப் பாராட்டுவது அறிவுடைமையாகுமா? ஒரு நாளில் பலலட்சம் மக்களைக் காத்த ஒடிசா அரசின் செயலில் பாடம் படித்திருக்க வேண்டாமா? அவர்களின் ஆலோசனையைக் கேற்றிருக்க வேண்டாமா? பொறுப்புள்ளவர்களாக இருந்தால் இந்த அரசைப் புகழ்பாடும் ஊடகங்களும், எழுத்தாளர்களும் இந்த அரசுக்கு அறிவுரை கூறியிருக்க வேண்டாமா? ஆனால் என்ன செய்வது? தன் நலன்களுக்காக, வணிகச் சிந்தனையோடு நடைபோடும் நிலையில்தானே இங்குள்ள பெரும்பாலோரின் உணர்வுகள் உறைந்து கிடக்கின்றது.
தமிழகத்தின் நில அமைப்பையும், அதன் நீர் வழிப் பாதைகளை எப்படிக் கட்டமைத்திருக்கிறார்கள் என்பதற்கு நான் பிறந்த சிற்றூரை எடுத்துக்காட்டாக கூற விழைகிறேன். நெல்லை மாவட்டத்தில் சிவகிரி தாலுகாவில், வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் இருக்கின்ற ஊர் நான் பிறந்த கூடலூர் எனும் சிற்றூர். இந்த ஊரின் நிலையான குளம், இந்தக் குளத்திற்கு வரும் நீர், குளம் நிரம்பிய பின் வெளியேறும் கால்வாய், ஓடை, வெளியேறிய நீர் சேருமிடம் என்பதெல்லாம் சீருடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. 
மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அருகிலுள்ள சிறுமலை தொடரிலும் பெய்கின்ற மழைநீர் சீருடன் வந்து சேர்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் தண்ணீர் இரண்டு குளங்களில் நிறைந்த பின், எங்கள் குளத்திற்கு வரும் அது வரும் கால்வாய் ஓரிடத்தில் அதாவது குளத்துக் கரையைத் தொடும் இடத்தில் ஒரு வளைவு வரும். மிகுதியாக வரும் வேகத்தில் வளைவான இடத்தில் கரை உடைந்து விடும். குளமும் கரையும் அந்த ஊர் மக்களின் பொதுவில் இருந்ததால் ஊரே திரண்டு வந்து அந்த உடைப்பை அடைக்க முயலும். அருகிலுள்ள மலைத் தண்ணீர் தெற்குப் புறத்திலும் மேற்குப் புறத்திலும் குளம் நோக்கி ஓடிவரும் பாதையில் மாடுகள் குளிக்க ஓர் ஊருணியில் நீரைத் தேக்கி வைப்பார்கள்.
மேற்கில் உள்ள குளங்களில்வரும் தண்ணீர் வடக்குத் தெற்காக இருக்கும் கரையில் தென்பாகத்தில் வந்து குளத்தை நிறைய வைக்கும். குளம் நீரால் நிறைந்து நீர்வரத்து ஆகின்ற போது வெளியேற மதகு, மடைகள், கலிங்கல்கள் என்று நீர் வெளியேறும் வழியை உருவாக்கி வைத்திருப்பார்கள். முதலில் மடைகளின் வழியே பாய்ச்சுவார்கள். அடுத்து மதகுகளின் அடைப்புகளைத் திறந்து விடுவார்கள். அதிக நீர் பெருகி வரக் கண்டால் கலிங்கள்களைத் திறந்து விடுவார்கள். மிக அதிக அளவில் நீர் வந்தால் பெரிய கால்வாய்களின் குள முகப்பின் அருகே கால்வாய்களை வெட்டி விடுவார்கள். நீர்வரத்து குறைந்தபின் அடைத்துவிடுவார்கள். குளத்தின் வருவாயும், பராமரிப்பும், பாதுகாப்பும் ஊர் மக்களின் உரிமையில் இருந்ததால் இதெல்லாம் இனிமையாக நிகழ்ந்தது. இழப்பு என்பது யாருக்கும் இல்லாமல் இருந்தது. இன்று இதெல்லாம் அரசின் கைக்குச் சென்று விட்டதால் ஊராருக்கு அக்கறை இல்லாமல் போய்விட்டது.
பெருகும் நீரை ஆளுமை செய்வது என்பது கடுமையானது அல்ல. காஷ்மீரில் படகு வீடுகளில் வாழ்க்கை நடத்தவில்லையா? ஆறுகளில் பரிசல்களில், படகுகளில் பயணிக்கவில்லையா? கடற்பயணத்திலும் கடற்போரிலும் உலகிற்கே வழிகாட்டிய தமிழ்ச் செல்வங்களின் வழித்தோன்றல்கள் கண்களை மூடி கடவுளைத் தொழுதும் கடின வாழ்வு நிலையில் விழுந்து கிடப்பது ஏன்? சிந்திக்கத் தெரிந்தோர், சிந்தனையில் சீர்நிலை கண்டால் வரும் தலைமுறைக்காவது பாதுகாப்பை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment