பாசத்தை சுமந்த பண்பாளர்
அன்பார்ந்த
அருமை நண்பர் அவர்களுக்கு வணக்கம். நலம், இங்கு நாங்கள் நலமே சூழ நல்வாழ்த்துகள்.
மிக இளைய
வயதில் இருந்து தாங்களும் தங்களின் தாயும், தமக்கையாரும், தமையன் பெரிய நாச்சியப்பனும்
என்மீது அன்பு காட்டியவர்கள். அதிலும் என்மீது கொண்ட அன்பின் காரணமாக நான் பிறந்த சிற்றூரில்
எங்கள் ஓலைக்குடிசையில் அமர்ந்து உணவருந்தியதும் அதன்பின் ஓரளவு நான் வளர்ந்த நிலையில்
இராசபாளையத்தில் என் வீட்டிற்கு வந்திருந்து மகிழ்வூட்டியதும் பிறிதொரு நாள் சென்னையில்
எனக்கும் என் மனைவி மகன்களுக்கும் தமிழர் மரபுப்படி கோழிக் குழம்புடன் விருந்து கொடுத்து
சிறப்பித்ததும் மறக்க முடியாத நினைவுச் சித்திரங்களாகும்.
அதன்பின்
ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்குப் பின் தங்களின் தமைக்கையார் திருமதி ஞானம்பாள் அவர்களிடம்
பேசுகின்ற வாய்ப்புக்கு உதவி செய்ததும் இனிமையான ஒன்றாகும். அதன் விளைவு தங்களின் அக்காள்மகன்
பாஸ்கரையும் அவரது அன்புத் துணைவியார் மீனா, அவர்களது புதல்வன் சரவணனையும் பார்க்கின்ற
வாய்ப்புக் கிடைத்தது.
இளமையில்
பதிந்த உணர்வு எளிதில் மாறாது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். இப்போது தங்களின்
பேரன் பிறந்து அவரை அழைத்து வந்த நாளில் அந்தக் குழந்தையை பெற்ற பெருமாட்டி திருமதி
வள்ளிக்கண்ணு அவர்களிடம் குழந்தையை வாழ்த்துச் சொன்ன வாய்ப்பு மேலும் மகிழ்வூட்டியது.
தமிழர்களில்
நகரத்தார் எனும் வணிகக்குலம் வரலாற்றுக் காலத்தில் இருந்தே புகழ் பெற்றது. உலகம் முழுக்க
பொருள்களை ஏற்றியும் இறக்கியும் மக்களை வாழ்த்திய அவர்கள் தமிழ்மொழியையும் பலநாடுகளுக்கு
ஏற்றுமதி செய்தார்கள். அதன் இயல்பையும் இனிமையையும் எடுத்துச் சென்றார்கள். இடையில்
ஆரியரின் ஆதிக்கத்தில் சிக்கி இடமாறிய அவர்கள் இடைக் காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியங்களில்
மனதை பதிவு செய்தார்கள். இன்றுவரை ஆலயத்தித் திருப்பணிகளில் ஆழ்ந்து மகிழ்வடைந்திருக்கிறார்கள்.
ஆனால்,
தமிழர்களை தலைநிமிரச் செய்த நீதிக் கட்சியில் இவர்களின் பங்களிப்பு இமயம் போன்றது.
செட்டிநாட்டரசர் வணிகத்தில் ஈட்டிய பெரும் பொருளை கல்விப் பணிக்காக வழங்கினார். அண்ணாமலைப்
பல்கலைக்கழகம் அதற்கோர் எடுத்துக்காட்டாகும்.
அடுத்து
கருமுத்து தியாகராச செட்டியார், காரைக்குடி அழகப்ப செட்டியார், இராசா சர் முத்தையாச்செட்டியார்
தமிழர்கள் கல்வி கற்பதற்கு பெரிதும் உதவினார்கள். இழிவுப் படுத்தப்பட்ட தமிழை நிமிர்த்துவதற்காக
தமிழிசை மன்றத்தை உருவாக்கியனார் இராசா சர் அண்ணாமலை செட்டியார்.
மேலும்
தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி ஆகியவற்றில் பல சாதனையாளர்கள் வசுப.மாணிக்கம், தமிழண்ணல்,
அண்ணாமலை, மெ.சுந்தரம், ச. மெய்யப்பன், முருகப்பா குழுமம், அருணாசலம் குழுமம் என்றெல்லாம்
மனதில் நிலைகொள்கிறார்கள்.
எங்கள்
குலத்தைச் சேர்ந்த மாவீரர்களின் சிறப்பை எடுத்துக் காட்டியவர்கள் திரு.தமிழ்வாணன்,
திரு. கவியரசு கண்ணதாசன் ஆகும். புலித்தேவன், மருதுபாண்டியர்கள் புகழ்பாடியவர்கள் இவர்கள்.
நாட்டார்,
நகரத்தார் எனும் வழக்கு, நாட்டார்கள் மண்ணைக் காக்கும் போர்த்துறையிலும், மண்ணை வளப்படுத்தும்
வேளாண் துறையிலும் சிறந்திருந்தார்கள். நகரத்தார் உலகின் நால்புறமும் நாவாய்களிலும்
நடந்து சென்றும் நாடுகள் பலவற்றில் வணிகம் செய்து, நவீனப் பொருட்களையும் பல்வேறு நாகரிகங்களையும்
அறிந்து வந்தார்கள். இந்தியப் பெரும் செல்வந்தர்களில் நாலுபேர் நாட்டுக்கோட்டையார்கள்
ஆகும். திரைப்படத்துறையில் ஏ.வி.எம். மெய்யப்பன், ஏ.எல். சீனிவாசன், கவியரசு கண்ணதாசன்
சாதனைகள் போற்றப்பட்டவை. அதுபோலவே வங்கித் துறையிலும் வளம் சேர்த்தவர்கள்.
இலங்கை,
பர்மா, மலேசியா, சிங்கப்பூர், தென் வியட்நாம், தென்ஆப்பிரிக்காவிலிருந்து இவர்களை விரட்டவில்லையென்றால்
இன்றைய நிலையில் செட்டிநாட்டுப் பகுதி மட்டுமல்லாது மொத்தத் தமிழகமும் அமெரிக்காவாக
வளர்ந்து செழித்திருக்கும். எல்லா அமைப்புகளிலும் இடம் பிடித்த அவர்கள் தமிழர்களை வாழ
வைத்த வளமளித்த தித்திக்கும் திராவிட இயக்கங்களிலும் ஈடுபாடு காட்டி, தங்களின் திறத்தையும்,
தியாகத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
தங்கள்
பேரனுக்கு தங்களின் தந்தையின் பெயரை இணைத்துச் சூட்டியதாக தங்கள் மருமகள் வள்ளிக்கண்ணு
அவர்கள் சொன்னார்கள். நான் கேட்ட வினாக்களுக்கு தெளிவாகப் பதில் சொன்னார்கள். தங்களின்
துணைவியார் அன்பு போல தங்களின் அக்கா மருமகள் மீனா போல, குடும்ப பெருமைகளை இந்தப் பெண்ணும்
காப்பாற்றுவாள் என்று நம்புகிறேன்.
நான்காவதாக
தங்களின் தந்தை இந்த மண்ணில் பிறந்திருக்கிறார் என்று மகிழும் தங்களுக்கும், தங்கள்
இல்லத்தாருக்கும் இதயமார்ந்த வாழ்த்துகள்.
No comments:
Post a Comment