ஊழல்
- அரசியல் - ஊடகம்
ஊழல் என்பது ஒழிக்க முடியாத கொசுக்களைப் போல நோய் பரப்பும் ஒன்றாகும்.
கொசுக்களாவது பருவத்திற்குத் தக்கவாறு இயங்கும். காற்றுக் காலத்தில் தன்னை மறைத்துக்
கொண்டு மழைக்காலத்தில் தனது சாம்ராச்சியத்தை அமைத்துத் தர்பார் நடத்தும். ஆனால் ஊழலில்
உண்மையும் இல்லை, நன்மையும் இல்லை.
ஊழல் எல்லா இடங்களிலும் ஒளிந்தும் மறைந்தும் உல்லாச வாசிகளுக்கு
உதவுகின்ற ஒன்றாகவே உயிர்வாழுகின்றது. பாடுபட்டவன் உரிமைப் பொருள்களை எல்லாம் பல்வேறு
நிலைகளில் பறிக்கப் பயன்படும் இந்த ஊழல் எல்லா நிலைகளிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது.
அதுவும் இந்தியா போன்ற இதிகாச, புராண, புனைவுகளில் மனம்புதைத்து
மகிழ்கின்றவரகள் உள்ளங்களில் ஊற்றெடுத்த வண்ணம் இருக்கக் காணலாம். கெண்டையை வீசி விறால்
பிடிப்பதுபோல பத்து பைசா பத்தி, சாம்பிராணி, சூடத்தைக் கொழுத்திவிட்டு தனக்கு வேண்டிய
அனைத்தையும் பெற அருள் கேட்கும் உணர்வு என்பது ஊழல்தானே. பக்தி மனம் கொண்ட எல்லா உள்ளங்களிலும்
இந்த முறைகளும் எதிர்பார்ப்பும் என்பது ஊழல்களிலேயே மிக உச்சத்தில் இருப்பதாகும். உழைக்காது
ஊரைச் சுரண்டி வாழும் அத்தனைபேரும் இந்த ஊழலில் ஈடுபடுவதை எந்நாளும் காண முடியும்.
அடுத்து வணிக நிலையிலுள்ள எல்லா நிலைகளிலும் இந்த ஊழல் உறவு
கொண்டதாகவே தெரியும் காட்சிகளை எங்கும் காணலாம். ஊழல் பருவத்திற்குத் தக்கவாறெல்லாம்
உருவெடுக்கும். விழாக் காலங்களில் திடீர் திடீரென்று விலைகள் கூட வேடங்கள் பல புனைந்து
விளம்பரங்கள் பல செய்து வீணான பொருள்களை எல்லாம் விற்று எவன் தலையிலாவது மிளகாயை அரைப்பது
வணிகத்தின் வழக்கமாகும்.
வருவாய்க்கு வரிகட்ட வேண்டியது அறம் முறையென்றாலும் அரசை ஏமாற்றுவதற்கு
ஆயிரம் வழிகளை உருவாக்கித் தரும் ஊழல் திலகங்களாக ஆடிட்டர்களும் அனுபவ கணக்கர்களும்
அணிவகுத்து நிற்பார்கள்.
ஒருவேளை உண்மையான அரசுப் பணியாளர்களால் கணக்குகளில் குறை கண்டுபிடிக்கப்பட்டு
நடவடிக்கையென்று வந்தால் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து வரி ஏய்ப்பு செய்வதற்கு
துணையாக துதிபாடும் வல்லமை மிக்க வழக்கறிஞர்கள் வரிசை வரிசையாய் வந்து கொண்டிருப்பார்கள்.
பெரும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் வணிக மன்னர்களுக்கும்
உழைப்பு சிறிதும் இல்லாமலேயே கோடிக்கணக்கில் பொருள் ஈட்டும் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும்
வரிஏய்ப்பு செய்துதரும் அக்கவுண்ட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் லாயர் மற்றும் பார்அட்லாக்களுக்கும்
வாய்மையை புதைகுழியில் போட்டு அடைத்து வளநிலை சூழவேண்டிய நாட்டை வறுமைக்குள் போட்டு
வதைக்கிறோம் என்று அவர்கள் உணர்வதில்லை. மக்களும் அதுபற்றி கவலை கொள்வதில்லை என்பது
இங்குள்ள நிலையாக நீடிக்கிறது.
ஒருவேளை இந்த ஊழல் பெருக்கச் சொத்துகளில் இவர்களுக்கும் பங்கிருக்குமோ
என்ற அய்யப்பாடு சிலபல ஆய்வாளர்களுக்கும் மக்கள் நலனையே நினைக்கும் மாண்புடையவர்களுக்கும்
இருப்பதை அறிய முடிகிறது.
ஊர் நலனுக்கு உழைப்பதாக, ஓலமிடும் ஊழையிடும் ஊடகப் பெருச்சாளிகள்
இது பற்றிய ஆய்வை நடத்துவதில்லை. விளம்பரத்தில் வரும் வருவாயை வீங்க வைப்பதிலையே தங்களின்
முழுக்கவனத்தையும் வைப்பது என்பது அவர்களின் வாடிக்கையாகி விட்டது.
முதலீடு பெரிதும் இல்லாமல், ஆயிரக்கணக்கான ஊடகங்கள் உயிர்வாழ்வது
எப்படி? இந்த ஊழல் வருவாயில் ஊரை எப்போதும் ஏமாற்றி வரும் மதவாத அமைப்புகள் தரும் விளம்பரப்
பணம் ஒன்றினால்தான் என்பது முழு உண்மையாகும்.
இந்த நாளிதழ்கள் எத்தனை வகையான விளம்பரங்களைப் பதிய வைக்கிறார்கள்
என்பதை ஆராய்ந்தால் ஆயிரம் முனைவர் பட்டங்களைப் பெற முடியும். சிறு விளம்பரம், வரி
விளம்பரம், பத்தி பத்தியாக விளம்பரம், கால் பக்க, அரைப்பக்க விளம்பரம், முழுப்பக்கத்தில்
முதற் பக்கத்திலேயே செய்திகள் ஏதுமில்லாத விளம்பரம் மற்றும் சிறு சிறு விளம்பரங்கள்.
தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சிக்கு ஊடே நிகழ்ச்சிகளை விட அதிக நேரம் விளம்பரம் அடியில்
வரிகளாக ஓடிக் கொண்டிருக்கும் விளம்பரம், செய்திகளுக்கான நேரம் வரும்வரை ஒரு நிமிடத்திற்கான
விளம்பரம் என்றெல்லாம் ஊடகங்களின் ஊழல்தானே. இவர்களது செயலால் நிறுவனங்கள் எல்லாம்
மக்களிடம் மோசடி செய்த பணத்தோடு காணாமல் போய்விட்டார்களே, இதற்கு யார் பொறுப்பு. நினைக்க
வேண்டியது நெஞ்சுள்ளோõர் கடமையாகும்.
இந்த ஊடகங்கள் அனைத்தும் ஊதிப்பெருக்கியது பெருக வைப்பது அரசியல்
வாதிகளின் ஊழலைத்தான் என்பது நடைமுறை நடப்பாகும். அதிலும் வருவாய் கருதி அந்த ஊழல்
உள்ளவர்களை ஊருக்குக் காட்டாமல் இவர்களது உணர்வுகளுக்கு ஒடுங்காதவர்கள் சிறு துளி அளவு
ஊழல்களை அல்லது ஊழல் என்று உறுதிப் படுத்தாதவர்களை ஓங்கிப் பறையடிப்பது வாடிக்கையாக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
இந்திய சமூகத்தில் ஊழல் என்பது தனி மனிதன் உள்ளிட்ட எல்லா இடங்களிலும்
எல்லா நிலைகளிலும் நீக்கமற நிறைந்து கிடப்பதை உற்றுப் பார்க்காமல் இந்த அப்பாவி அரசியல்
வாதிகளைப் பற்றி மட்டுமே அறைந்தவண்ணம் இருக்கிறார்கள்.
அரசியல், அரசியல் கட்சிகளில் ஈடுபாடு கொள்வோர் ஆகியவற்றை ஆய்வுக்கு
எடுத்துக் கொள்வோம். ஓர் அரசியல் கட்சி, அது சிறிதோ பெரிதோ ஒரு கொள்கையை செயல்படுத்தும்
நோக்கத்தோடுதான் ஆட்சியைக் கைப்பற்ற உழைத்துப் போராடுகிறது. அந்தக் கட்சி ஆட்சியைப்
பிடிக்க அந்தக் கட்சியில் ஈடுபாடு கொண்ட தொண்டர்கள் பசி, பட்டினி, சிறை, துன்ப துயரங்களை
யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இலட்சக்கணக்கான தொண்டர்கள் ஒரு கட்சியைச் சார்ந்த
பல்வேறு நிலைகளில் மக்களுக்காக உழைத்துப் போராடி அந்த மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியில்
அமர்கிறார்கள். அவர்கள் அமைத்த ஆட்சியில்தான் நாட்டின் அனைத்து மக்களும் நலன் பெறுகிறார்கள்.
அரசில் பணியாற்றுவோர், அரசாங்க உரிமம் பெற்று ஆலை மற்றும் நிறுவனங்களை
நடத்துவோர், பொதுமக்கள் எல்லாம் பல்வேறு சலுகைகளைப் பெறுகிறார்கள். மக்களின் அனைத்துப்
பிரிவினரும் அரசின் சலுகைகள் வங்கிக் கடன்களையெல்லாம் பெற்று வளர்கிறார்கள். வாங்கிய
கடன்களை கட்டாதவர்களும் நிறுவனங்களும் நிறைய இங்கு இருக்கின்றன.
ஆனால், இதில் ஏதாவது, ஆட்சி அமைத்த கட்சியைச் சார்ந்தவர்களுக்கு
இருக்கிறதா? வங்கிக் கடன், அரசின் சலுகைகள் ஏதாவது கிடைக்கிறதா? என்றால், இல்லையென்பதுதான்
உண்மையாகும். வென்றாலும், தோற்றாலும் அந்தக் கட்சியில் கொண்ட பற்றுப் பாசம், வேட்கையால்
அந்தத் தொண்டர்கள் இழந்ததை இங்குள்ள யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. இங்குள்ள ஒட்டு
மொத்த ஊழல்களிலேயே மிக சிறு ஊழல் என்பது இந்த அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சிறு
பகுதியினர் செய்யும் ஊழல்கள்தான். ஆனால் இதை மலையளவு, வானமளவு காட்டுபவர்கள் அனைவருமே
ஏதாவதொரு ஊழலில் உறைந்து கிடப்பவர்கள்தான் என்பதை அவர்களுடைய உளவியல் உணர்வுகளை ஊன்றிக்
கவனித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.
ஒரு அரசியல் கட்சியின் ஊழலைச் சாடுவதற்கு இங்குள்ள யாருக்கும்
அருகதையில்லை. ஒருவேளை சாடுவதென்றால் அந்தக் கட்சியின் தொண்டர் களுக்குத்தான் அருகதை
இருக்கிறது. அவன் தனது கட்சியின் முன்னோடிகள் வளம் பெற்றுவதற்காக வருந்த மாட்டான்.
காரணம் அவனுக்குத் தெரியும் அரசியல் கட்சியைச் சார்ந்தவனுக்கு ஊழலை சொல்லிக் கொடுத்ததே
ஆசை மனமும் அடுத்தவருக்குரியதை அபகரிக்கும் எண்ணம் கொண்ட இங்குள் மக்களும் மனிதனர்களும்õதான்
என்பதை அவன் உணர்வான். சரி, இவற்றோடு இன்றொன்றையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
எந்தவொரு நாடும் ஊழல் இல்லாததாக இருந்தாக வேண்டும் என்பதுதான் பொது நீதியாகும் நியதியாகும்.
ஆனால் அதற்கு அந்த நாட்டிலுள்ள பண்பாடும் சமூகத் தரவுகளும் தகுதியுள்ளதாக இருந்துவிடுவது
அவசியம். மக்களின் மனதில் அந்தத் தரவுகள் ஆழ்மனதில் இருந்தாக வேண்டும். அதற்கு அங்குள்ள
நிலைகளை உருவாக்கும் அறிவுடையோர் அறிவு ஆய்வு உணர்வுகளை அவர்கள் உள்ளத்தில் ஆளுமை செய்ய
வேண்டும்.
அங்குள்ள மொழிகள் அதன் சொற்கள், சொற்கள் தரும் பொருள்கள், கருத்துக்கள்
கண்ணியம் கொண்டதாக இருக்க வேண்டும். மக்களை வழிநடத்துவோர் வழக்கமான நடைமுறைகளில் வல்லாண்மை
நிலை கொண்டவர்களாக இல்லாது பூத்துவரும் புதுப்புது உணர்வுகளை நுகர்பவர்களாக இருக்க
வேண்டும். மக்களை நல்வழிப்படுத்த நல்லதோர் அரசியல் சட்டம், இறையாண்மை கண்டிப்பாக அமைந்திருக்க
வேண்டும். பல்லாண்டுகளாக பழகிவரும் மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் பயனுடையதா,
பயனற்றதா எனப் பாகுபடுத்தி, நல்லதை நிறுத்தி அல்லதை அகற்றிவிடும் ஆற்றலும் துணிவும்
கொண்டு மக்கள் நலனைப் பேணுபவர்களாக இருக்க வேண்டும். இதில் ஏதாவது இங்கு இருந்ததா என்றால்
பெரும்பாலும் இல்லையென்பதுதான் உண்மையாகும்.
இந்திய விடுதலைக்குப் பின் உருவான அரசியல் சட்டம்தான் உலகிலேயே
கனமான சட்டப் புத்தகம் ஆகும். ஆனால் அதில் உள்ள சந்து பொந்துகள், இண்டு இடுக்குகள்,
ஓட்டை உடைசல்கள், ஊனங்கள், ஈனங்கள், ஒற்றுமைக்கு உதவாத நிலைகள் ஓராயிரம் இருப்பதாக
ஆய்வாளர்கள் ஓங்கி அறைகிறார்கள். இந்திய அரசியல் சட்டம் தயாரித்தவர்களில் உணர்வுகளையும்
எண்ணிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும்.
அரசியல் நிர்ணய சபையில் மிகுவாக இந்து மத உணர்வுள்ள வடஇந்தியர்களே
அதிக அளவில் இருந்தனர். அரசியல் அமைப்பை உருவாக்கிய குழுவில் அய்ந்து உறுப்பினர்கள்
இருந்தனர். அதில் ஒருவர் இசுலாமியர், மற்றொருவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட
வகுப்பில் பிறந்த திரு. அம்பேத்கார் அவர்கள். இவர் மெத்தப் படித்தவர் ஆயினும் ஒரு பார்ப்பனாரால்
வளர்க்கப்பட்டவர். ஒரு பார்ப்பன மங்கையை மணந்தவர். ஆனால் அவர் இங்குள்ள இந்துத்துவா
எனும் வேதக் கொள்கைகள் செய்த கொடுமைகள், குற்றங்கள், பிறவிப் பேதங்கள், இழிந்த தன்மைகளை
எல்லாவற்றையும் அறிந்து உணர்ந்து இங்குள்ள வரலாற்றுச் சூழல்களையெல்லாம் இனம்பிரித்துக்
காட்டி எதிர்நிலையில் நின்று போராடியவர்.
அடுத்தவர்கள் மூவரும் சென்னையைச் சேர்ந்த பிராமணர்கள். டி.டி.கிருஷ்ணமாச்சாரி,
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யங்கார், கோபால்சாமி அய்யங்கார் என்ற பெயர்களைப் பார்த்தாலே
இவர்கள் வைணவ வழிவந்த வாழ்க்கை நிலைகளைக் கொண்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதில் இசுலாமியர் எந்த நிலையிலும் இந்தப் பணிகளில் ஈடுபாடு காட்டவில்லை.
மூவரும் கூட எந்த வகையில் முழு நேரப் பணிகளில் இருந்ததில்லை. அரசியல் சட்டத்தின் எல்லா
அம்சத்திலும் டாக்டர் அம்பேத்கார் தனது இயல்புபடியே உருவாக்கி வந்தார். இந்தியாவை காலனி
நாடாக்கிய இங்கிலாந்தின் அரசியல் சட்டத்தை அருகில் வைத்துக் கொண்டு இந்தியாவுக்கான
அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்று எண்ணி அமைத்துக் கொண்டிருந்தார்.
ஆனால், அடிக்கடி அவர் தயாரித்த அரசியல் அமைப்பில் பகுதி பகுதியாக
சில பல திருத்தங்களை மட்டும் எடுத்துச் சொல்லி எழுத வைத்தார்கள் மேற்கண்ட மூவரும்.
அரசியல் அமைப்பு முழுமை பெற்ற போது, இசுலாமியர் சொன்னார், அழைத்தார்கள் வந்தேன், அமரச்
சொன்னார்கள் அமர்ந்தேன், கையெழுத்துப் போடச் சொன்னார்கள் போட்டேன், வேறொன்றும் அறியேன்.
முழு நேரமும் பணியாற்றிய அம்பேத்கார் சொன்னார், எல்லாம் செய்தேன், அது என் இயல்பில்
தான் செய்தேன், ஆனால் இந்த மூவரும் தந்த முன்னூறு திருத்தங்களால் அது அப்படியே தலைகீழாக
மாறிவிட்டது என்றார்.
இதை எழுதியது நான் என்றாலும் இந்த அரசியல் சட்டம் எரிக்கப்பட வேண்டியது ஒன்றாகும்.
பின்னர் ஒருமுறை இந்தியப் பொதுஉடமைப் போராளி நம்பூதிரிபாத் எனும் பெயர் கொண்டவர் என்றாலும்
தூய கம்யூனிஸ்டான தூயவர் இ.எம்.எஸ். சொன்னார் இந்த அரசியல் சட்டம் ஆயிரம் அடி ஆழத்தில்
புதைக்கப்பட வேண்டியது என்றார். இதைத்தான் இந்திய இறையாண்மை புனிதம் என்கிறார்கள்.
இந்த நாட்டை ஜனநாயக அதாவது டெமாக்கரசி என்று நேரு சொன்னார். அதற்குத் தந்தை பெரியார்,
இது ஜனநாயகமல்ல பிராமணியம்தான் ஆகும். டெமாக்கரசி அல்ல பிராமணோகரசி என்றார். அதுதான்
இன்றைய நிலையாக பெரு விழுக்காட்டு காட்சி நிலைகள் கண்ணில் படுகிறது. ஊடகவியலில் உள்ளத்தைப்
பதித்திருக்கின்ற நண்பர்களே ஊரில் ஒரு பழமொழி உண்டு. யானை போவது தெரிவதில்லை, ஆனால்
சுண்டெலி போகிறது துல்லியமாகத் தெரிகிறது என்பதுதான் பழமொழி, பழையமொழி, பழிமொழி ஆகும்.
அதுபோல யானை போன்ற ஊழல்கள் ஊரெங்கும், நாடெங்கும் பெருகி, கெடு
நாற்றத்தைப் பரப்பி வரும் வேளையில் அரசியல் அரங்கில் சிலரின் ஊழல்கள் மட்டுமே இருக்கிறதென்பதை
உணர்ந்து பெருகி வரும் பெரும் பெரும் ஊழல்களை உருவாக்கும் தரவுகளை ஆய்ந்து தெளிந்து
அதை அகற்றும் வழி எது என தேர்ந்து தங்களின் தொடர்பணிகளை ஆற்றுவது என்பதுதான் அறிவு
நாணயம் ஆகும்.
இங்கு யார் யார் கிறித்தவர்கள் இல்லையோ, யார் யார் இசுலாமியர்
இல்லையோ மற்ற அனைவரும் இந்துதான் என்று இந்திய அரசியல் சட்டத்தில் நிலைப்படுத்தியது
ஊழல் இல்லையா, மோசடி இல்லையா? இங்கு சமணம், புத்தம், சைவம், வைணவம், சீக்கியம், சார்வாகம்,
அத்வைதம், துவைதம், லோகாதயம், நாத்திகம் ஆகிய அத்தனை பேரையும் இந்து எனப் பதிவு செய்ததைவிட
ஊழல் மோசடி ஏதாவது இருக்க முடியுமா? இதில் இந்து என்ற கணக்கில் இணைந்தவர்களுக்கு இந்து
என்பது என்ன? மதம் என்பது என்ன? இந்த இந்துவின் இயல்பென்ன, இலட்சியம் என்ன? அதன் முறைகள்
என்ன? அதன் நோக்கம் என்ன? அதன் கீர்த்தி என்ன? அதனால் விளைந்த விளைவென்ன என்று கே.பி.
சுந்தரம்பாளின் என்ன? என்ன? என்னென்ன பாட்டுப்போல நீழுகிறதே தவிர, இந்த நிலையில் இந்துமதம்,
இந்துப் புனிதம், இந்துக் கலாச்சாரம், இந்துப் பண்பாடு, இந்துக் கலைகள் என்பது பரவலாகப்
பேசப்படுகிறது. இந்த ஊடகங்கள் ஊழலைப் பற்றி ஒரு விழுக்காடாவது மோசடிக்காரர்களாலும்
ஊழல் முறைகளாலும் அரசியல் சட்ட வடிவமைப்பில் இருந்த மூவரின் மோசடி போல அவர்களின் வழிவந்தவர்களும்
இங்குள்ளவர்களை ஏமாற்றிப் பிழைக்க வருகிறார்கள் என்பதுதான் உண்மையாகும்.
இந்தப் பூவாகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஏற்கனவே அடிமையில்
ஆழ்ந்திருந்தவர்களின் உள்ளத்து உணர்வுகள் இன்றும் எழமுடியாமலேயே இளைத்துக் கிடக்கிறது.
இதையெல்லாம் உற்று நோக்கி மக்களுக்கு உணர்த்த வேண்டிய ஊடகங்கள் உறக்கத்தில் இருப்பதுபோல்
இருப்பதற்குக் காரணம் இந்த ஊடகங்கள் ஊழலில் புழுத்த புழுக்கள் என்பதுதான்.
மக்களை எழுச்சிபெற வைத்து ஏற்றத்திற்கு அழைத்துச் செல்லவேண்டிய
அனைவரும் ஊழலில் மிதந்ததால் விதியே கெதியென்று வாழ்வதைத் தவிர இங்குள்ள நல்ல மக்களுக்கு
வேறு என்ன தோன்றும்.
No comments:
Post a Comment