ஆய்வுகள்
வளம்பெற வேண்டும்
இந்திய இலக்கியக் கழகம் வெளியிட்ட திரு. க. அரங்கசாமி அவர்கள்
எழுதிய கபிலர் எனும் நூல் என் கண் முன் கலைவடிவம் காட்டி நின்றது.
சங்க காலக் கவிதைகளில் அதிகம் பாடிய கபிலர் அவர்களைப் பற்றிய
பல்வேறு ஆய்வுச் செய்திகளை அடுக்கி வைத்து மகிழச் செய்கிறார். குறிஞ்சியைப் பாடிய குளிர்முகக்
கவிதைகளின் சிறப்புகளை செதுக்கி, அழகிய சிலைகளாக கண்முன் நிறுத்துகிறார்.
அவருடைய அறச்சிந்தனை, துறவிவாழ்வு, அவரது நண்பருக்காக அவர் செய்த
உதவி, உயிர்த்தியாகம் ஆகியவற்றை விளக்கிச் சொல்லி நம் நெஞ்சை நெகிழ வைக்கிறார். தமிழர்
வகுத்த அய்வகை நிலத்தில் குறிஞ்சியை நேசித்த நெஞ்சினர் கபிலர் என்று பலவித சான்றுகளை
முன் வைக்கின்றார்.
குறிஞ்சி நிலத்தில் தோன்றியவர் என்றும், பாரியும் அந்த நிலத்தில்
பிறந்து வளர்ந்தவர் என்றும், இந்த இருவரும் இதயம் நிறைந்த நண்பர்களாக ஆனதற்கு இதுதான்
காரணம் என்றும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
இதையெல்லாம் விட நமது இதயத்தை ஈர்ப்பது பாரியின் பரம்புமலை என்பது
இன்று சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்ற பிரான்மலை அல்ல. அது இன்றுள்ள தருமபுரி மாவட்டத்தில் பர்கூரின் பின்னணியில் இருக்கும் படர்ந்த மலை என்ற
தனது ஆய்வுக்கு பல்வேறு நிலைகளை எடுத்துக்காட்டி வலிமை சேர்த்திருக்கிறார்.
சங்க காலத்திற்கு நெடுநாட்கள் முன்னிருந்தே வளர்ந்து நிலைகொண்ட
அறிவியல் ஆற்றல், அனுபவ செழுமையின் ஆற்றல் இடைக்காலத்தில் தமிழப் பகைவர்களால் இதிகாச
புராணங்களில் அருளின் ஆற்றலாக பசப்பு மொழிகளால் பதிவு செய்யப்பட்டு மத, மகுடிக உணர்வுகளுக்குள்
மக்களை மயங்க வைத்துவிட்டார்கள் என்ற கருத்தையும் முன்வைத்து பகுத்தறிவுக்கு செழுமை
கூட்டுகிறார்.
அத்துடன் கபிலரின் கொள்கைக்கு மாறாக புராண இதிகாச வடிவங்களில்
எழதியதை கபிலர் எழுதியது என்று அவரையும் தமிழ் உணர்வையும் இழிவுபடுத்தியதை எடுத்துக்
காட்டுகிறார்.
நாள், திங்கள், ஆண்டு முறையில் இங்குள்ள வரலாறு இல்லாததால்,
தமிழ் பண்பாட்டுப் பகைவர்கள் ஆன வேதமோதும் வேதியர்குல கொழுந்துகளால் தமிழையும் தமிழர்
நெறிகளையும் தெளிவற்ற நிலைகளில் நிறைத்து வைத்திருக்கிறார்கள். ஆய்வற்ற தமிழர்கள் அவர்கள்
சொல்வது உண்மையென்று நம்பி உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
வெள்ளையர்கள்
வரவிற்குப் பின் கார்டுவெல் போன்றோரின் ஆய்வுக்குப் பின் வெள்ளையர்கள் வெளிக்கொணர்ந்த
சிந்துவெளி சீர்மைக்குப் பின் பல்வேறு ஆய்வாளர்கள் ஆய்வுப் புலத்தில் பயணித்து பலவித
செய்திகளை வெளிப்படுத்தி தமிழின் செழுமை பெருமைகளை பறைசாற்றி வருவதும் மாண்புகள் நிறைந்த
தமிழை மனத்தூய்மையுள்ள நிலைகளை மக்களுக்குக் காட்டுவது வரவேற்கக்கூடிய, வாழ்த்துக்குரிய
ஒன்றாகும். இந்த கபிலர் எனும் ஆய்வு நூலைப் படைத்த க.அரங்கசாமி அவர்களையும், நூல்களை
வெளியிட்ட சாகித்திய அகாடமியையும் பாராட்டி வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment