Wednesday, 6 January 2016

இயற்கையை எதிர்கொள்ள வேண்டும்

இயற்கையை எதிர்கொள்ள வேண்டும்
இயற்கையின் இயக்கம் என்பது இயன்றவரை நெறிகொண்டது, நேர் சார்ந்தது ஆகும். வேதிப் பொருள்களை இயக்க வைக்கும் இயற்கையின் பிள்ளைகளான காற்றும், நீரும் கலைவடிவம் காட்டி களிப்படையச் செய்வதும் உண்டு. சில காலம் கலவரச் சூழலைக் காட்டி, கலங்கவைத்து கண்ணீர் சிந்த வைப்பதும் உண்டு.
வான், மண், வளி, ஒளி, நீர் என இயற்கையின் ஆளுமையால் நீர்நிலைகளை இந்த நிலஉலகில் ஏற்படுத்தியிருக்கிறது. விண்ணில் உலவும் பல்வேறு நட்சத்திரங்களும், கோள்களும் ஒலியலைகளால் உறவு கொண்டு இந்த மண்ணை இனிமையும் அழகும் ஒளிர்ந்தததாக ஆக்கி வைத்திருக்கிறது.
இயற்கையின் இயக்க உணர்வுகளை அவ்வளவு எளிதில் மனித அறிவு கணித்துவிட முடியாது என்பதற்கு உலகம் முழுவதும் ஏற்படுகின்ற எதிர்பாராத காற்றும், மழையும், பூகம்பமும், எரிமலைச் சீற்றமும் சான்றாக விளங்குகிறது. ஆயினும் அறிவில் சிறந்த நாடுகளில் சேதாரம் மிகக் குறைவாகவும் அறிவியல் உலகில் மிகவும் அப்பாவியாகத் திகழ்கின்ற இந்தியா போன்ற நாடுகளில் மிகுவாகவும் இருப்பதைக் காணலாம்.
இந்தத் துணைக்கண்ட வரலாற்றில் குறிப்பாக தமிழக வரலாற்றில் புயலெனும் பேய்க்காற்றும் அதனால் கொட்டும் பெருமழையும் பூகம்பம் எனும் நிலநடுக்கம், இதனால் ஏற்பட்ட அழிவு என்பது அய்யாயிரம் ஆண்டுகளாகவே பதிவாகிக் கிடக்கக் காணலாம்.
அதுபோக சிந்து சமவெளித் தமிழர்களின் அறிவியல் ஆய்வின் வெளிப்பாடான அறுபது ஆண்டு சுழலும் பருவச் சூழல் என்பது அறுபது ஆண்டுகளில் எந்தெந்த ஆண்டுகளில் இயற்கையின் நிகழ்வு எப்படி இருக்குமோ அதுதான் அறுபது ஆண்டுகளிலும் இயங்கும் என்பதுதான். அதுதான் கொல்லமாண்டு பஞ்சாக்கத்தில் இடைக்காடர் வெண்பாவில் விளக்கமாக வரையப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். கடந்த காலங்களை விட இன்றைய நாட்களில் இயற்கையின் சீற்றங்களை எதிர்கொண்டு பாதுகாப்பது எளிதாகவே இருக்கிறது. ஏனெனில் அறிவியல் தந்த விஞ்ஞானக் கருவிகள் வலிமைமிக்கதாக விளங்குகிறது. ஆனால் இயற்கையின் இயக்க முடிவுகளை மிகத் துல்லியமாக வரையறுக்க இயலாது. ஆனால் வருமுன் காப்போம் எனும் நிலைப்படி, நீதிப்படி தொலைநோக்குப் பார்வையில் அரசுகள் ஆய்வுசெய்து செயல்பட்டால் மக்களை முழு அளவில் பாதுகாக்க முடியும்.
ஆனால் இந்தியாவில் பெரும்பாலான அரசுகள் ஆவிஉலகிலும், அந்தராத்மாக்களின் அருள் வேண்டியே இயங்குவதால் முழு விஞ்ஞானமும் வினையாற்றுவதில்லை என்பதுதான் முழு உண்மையாகும்.
மக்களாட்சி முறைகள் பல இங்கே மயக்கத்தில் கிடக்கிறது. மக்களின் மனமோ மாயஜாலாங்களில் சிக்குண்டு சிந்தனையில் சீர்மையின்றி சீரழிந்த நிலையில் நின்று தவிக்கிறது. ஓர் அரசை ஆள எத்தகையவர்களை தேர்வு செய்ய வேண்டும் எனும் தெளிவில்லாமலலேயே திசை தவறி நடக்கக் காண்கிறோம்.
ஒரு நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கி அதன் அடிப்படையில் வளர்ச்சி நிலைகளை உருவாக்குவதுதான் ஒரு நல்லரசின் கடமையாக வேண்டும். அதற்கு ஒவ்வொரு துறையிலும் உள்ள தேர்ந்த அறிவாளர்கள், ஆய்வாளர்கள், திறனாளர்களின் கருத்தறிந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும். அதற்கு ஆள்வோரிடம் பொதுமக்களுக்காக இயன்றவரை உழைப்பதும் தியாகம் செய்வதுமான மனிதர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதைவிடுத்து, ஊழல் மனம் கொண்டவர்களையும் உழைக்காதவர்களையும் உல்லாசபுரிகளில் சென்று ஓய்வெடுத்து உறங்குபவர்களையும் தேர்வு செய்தால் 2015 சென்னையிலும் டெல்டா மாவட்டங்களிலும், கடலூரிலும் நேர்ந்த நிலை அதற்கு முன் இருந்த நான்காண்டு நலிவும் நாசமும் ஏற்படும். கடந்த அய்ம்பதாண்டுகளில் நடந்த அரசுகளில் கலைஞரின் அரசு நல்ல அடிப்படைகளோடு நிதி நிலை அறிக்கைகளை வழங்கி அதனடிப்படையில் பெருமளவு வளர்நிலை கண்டது. ஆனால் எல்லா நிலைகளிலும் வணிகமனம் படைத்தோரும், இடைத்தரககர்களும் இடம் பிடித்ததால் வானளாவ வளம்பெற வேண்டிய தமிழகம் ஏற்றநிலையிலிருந்து இறக்கச்சரிவில் உருண்டு வருவதைக் காண்கிறோம்.
அனைத்துத் துறையிலும் அடித்த தலைமுறையை அடிமைகளாக்கும் நிகழ்வு முறைகள் நிறைந்து வரக் காண்கிறோம். அரசியல், கல்வி, ஊடகங்கள், அரசு நிர்வாகம், தன்னார்வ அமைப்புகள், சமூக உணர்வுகள் அனைத்திலும் அடிமை உணர்வை உருவாக்கும், ஆளுமையாளர்கள் ஆதிக்கம் செலுத்தக் காண்கிறோம்.
இவற்றிலிருந்து விடுதலைப் பெற பாடுபடும் மிகச் சிறந்த மனிதர்களை விரக்தியடையச் செய்யும் முயற்சிகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. படிப்பறிவு இல்லாக் காலத்தில் உரிமை வேட்கையும், அதற்கான தியாகம் செய்யவும், தீரர்கள் நிறைய தோன்றியவண்ணம் இருந்தார்கள். ஆனால், இன்று கருவிலேயே இவற்றைக் கொல்லும் காட்சிகளைக் காட்டுவோர் களைப்பும் சலிப்புமின்றி வினையாற்றுகின்றனர்.
உலகிற்கு எல்லாந் தந்த தமிழன் இன்று எல்லா நிலைகளிலும் உணர்ச்சியற்ற உதவாக் கரையாக உருவாகி வருகிறான். அதற்கோர் எடுத்துக்காட்டு காற்றிலும், மழையிலும் தன்னைக் காப்பாற்றும் ஓர் அரசை உருவாக்கும் திறத்தைப் பெறவில்லை என்பதுதான்.

No comments:

Post a Comment