Tuesday, 5 January 2016

திரும்பிப் பார்த்தால்...

திரும்பிப் பார்த்தால்....
திசையெங்கும் கார்காலப் பெருமழையில் பெருவெள்ளத்தில் சிக்கி உயிர்களையும் உடமைகளையும் இழந்து நிற்கும் இந்த வேளையில் எண்ணிப் பார்க்க வேண்டிய இன்றியமையாத செய்திகளை எண்ணிப் பார்க்க வேண்டியது இன்றைய தமிழர்களின் கடமையாகும்.
1949ல் உருவான தி.மு.க. தொடங்கிய நாட்களில் பெரியாரின் பேரறிவுக் கொள்கைகளை பெருமளவுக்கு மக்களிடம் பதிக்கின்ற பணியிலேயே தன்னை ஈடுபடுத்தி உழைத்து வந்தது. பெரியாரின் பேராதரவோடு ஆட்சியில் அமர்ந்த காமராசரும் அதற்கு முன்னிருந்த முதலமைச்சர்களும், பேரறிஞர் அண்ணாவின் பேராற்றலால் வளர்ந்துவரும் கழகத்தை அழித்திட பல்வேறு வழிகளைக் கையாண்டார்கள்.
சமூகக் கொள்கைகளையும் நிகழ்வுகளையும் சொல்லி வந்த கழகம் ஆட்சியின் கடமைகளை வலியுறுத்தி அதன் அவலங்களையும் எடுத்துக் காட்டி வாதித்த நிலையில் காமராசர் அவர்கள் வெட்டவெளியில் பேசுவது ஏன்? சட்டமன்றத்திற்கு வந்து பார் என்று சவால் விடுத்தார்?
உலகப் புதுமையாக கட்சி முடிவெடுக்க பொதுமக்களின் முன் வாக்குப் பெட்டியை வைத்து நாங்கள் தேர்தலில் நிற்கவா? வேண்டாவா? வாங்களியுங்கள் என்று வேண்டிக் கொண்டது. தேர்தலில் பங்கெடுக்க மக்கள் ஆதரவளித்த நிலையில் 1957ல் தேர்தலில் பங்கெடுத்து பதினைந்து இடங்களைப் பெற்றது. அருமைத் தமிழர்கள் அதன் பின்னர்தான் ஆட்சியின் தரவுகளும் சனநாய மாண்புகளும் தமிழகத்தில் மணம் தரும் மலர்களாக மலரும் நிலை கண்டார்கள்.
பின்னர் 1962ல் பரிணாம வளர்ச்சியாக பதினைந்து அய்ம்பதாக ஆனது. அதன் பின்னர் 1967ல் 138 உயர்ந்து தமிழர்களின் அன்பினால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பு கழகத்தை வரவேற்றி நின்றது. கழகம் தோன்றுவதற்கு முன் இருந்த தமிழக சமூக நிலைகளையும் அது ஆட்சியேற்ற நாளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதன் விளைவால் தமிழகம் இருக்கின்ற நிலைகளையும் மன மாசற்ற மாண்புகளோடு ஆராய்ந்து உருப்பெருக்கி உற்றுப்பார்த்தால் உண்மைகள் ஒளிவிடக் காணலாம்.
1967ல் ஆட்சியேற்ற அண்ணா ஈராண்டுகளில் மறைந்துவிட்டார். அதன்பின் ஆட்சியேற்ற கலைஞரின் ஆட்சித் திறத்தையும் அவரின் திட்டங்களையும் தீட்டிய சட்டங்களையும் அதன் வளர்ச்சி நிலைகளையும் கண்ணில் குறையின்றி அறம் சார்ந்த உணர்வோடு ஆய்வு நிலையோடு ஆராய்ந்தால் கிடைக்கின்ற முடிவு, வரலாற்றில் என்றுமில்லா வாழ்வை வளநிலைகளை தமிழர்கள் பெற்றுத் துய்த்தது கலைஞரால்தான் என்பது வானவில் போன்று வண்ணம் காட்டி நம்மை மகிழவைக்கும்.
அதன்பின் கழகத்தை உடைத்து சில வணிக நிறுவனங்கள் போல ஒரு கட்சியைத் தொடங்கிய திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் கலைஞர் மீது பகை மனத்தோடு தகாத நிலையை எடுத்து பெரியார் அண்ணா கொள்கைக்கு மாறானவர்களோடு கூட்டுச் சேர்ந்து ஆட்சியை அமைத்தார்.
அதுவரை கொஞ்சுமொழி பேசி கோல நிலை காட்டிய தமிழகம் ஊடகக் காரர்களின் திராவிட இயக்க எதிர்ப்பு காரணமாக மூகாம்பிகையின் பக்தியால் ஊமை நிலை கண்டது, உருமாறிப்போனது. எம்.ஜி.ஆர் கழகத்தில் இருந்த போது சில இயல்புகள் சிறந்தது என்றாலும் சீர்கேடுகள் மிகுதியும் உணர்வுகளிலும் நடப்பிலும் சூழ் கொள்ளத் தொடங்கியது.
எம்.ஜி.ஆரின் உளப்பாங்கில் உள்ள உணர்வு நலிவுகளை உற்று நோக்கி உயர்சாதி ஆணவக் காரர்களும் அவர்களது ஊடகங்களும் அவரை மகானாக சித்தரித்து மக்களை மயங்க வைத்து அவர் அருகில் இந்த ஜெயலலிதாவை அமர வைத்தார்கள். எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்கு அருகிலிருந்து பாடுபட்ட ஆர்.எம். வீரப்பன் போன்ற விசுவாசிகளை புறந்தள்ளிவிட்டு, இந்த ஆரனங்கை காட்சிப் பொருளாக்கி அவரின் நிழலாக்கினார்கள்.
இதையெல்லாம் அறியாது அ.தி.மு.க வில் அங்கம் வகித்த தமிழர்கள் எப்போதும் போலவே ஏமாளியாகவே இழிவடைந்தார்கள். இவர்களைப் போலவே பெரும்பாலன தமிழர்கள் சிந்தனையில் சீரின்றி, அடிக்கடி, ஆடும் இந்தப் பாவையிடம் ஆட்சியைக் கொடுத்தார்கள்.
ஆய்ந்த நல்உணர்வோடு ஆட்சியை அமைக்க வேண்டிய மக்கள் பத்திரிக்கைகள் காட்டிய வானவெடி வண்ணக் காட்சிகளில் மயங்கி, அவர்கள் ஊதிப் பெரிதாக்கிய பொய்களை நம்பி, அவர்கள் போடுகின்ற புகைமூட்டம் கண்ணை மறைக்க அடிக்கடி தவறான முடிவுகளையே எடுக்கிறார்கள் தமிழர்கள்.
இங்குள்ள எல்லாத் துறைகளிலும் அதிகார நிலைகள், பசப்பும் பாசாங்கும் காட்டுகின்ற காட்சி மயக்கத்தில் இங்குள்ள தமிழர்கள் அறிவும் பார்வையும் கூட அலங்கோலம் என்றாகி விடுகிறது.
இலட்சியவாதிகளாக மிளிர்ந்த திராவிட சிந்தனையாளர்கள் கடும் உழைப்பாளிகள் கூட ஊனஉணர்வுகளுக்கு உள்ளாகி விடுகிறார்கள். விளைவு தமிழர்களின் தமிழகத்தின் தமிழ்மொழியின் நிலை தாழ்வுற்றுத் தள்ளாடி வருகிறது. இந்த சூழலில் தன்னந்தனியராக, சர்வ வல்லமை பொருந்திய தமிழ் எதிர்ப்பு தத்துவவாதிகளோடு தன்னலக் காரர்களோடு முதுகில் குத்தும் மோசக் காரர்களோடு எத்தனை வகை அரசியல் திறம் உண்டோ எத்தனை வகை அணுகுமுறை உண்டோ அத்தனையும் கைக்கொண்டு போராடி வருகிரார் கலைஞர்.
இவருக்குப் பின் அணிவகுக்க வேண்டிய அறிவாளர்கள், ஆற்றலாளர்கள், சோம்பிச் சோர்ந்து சுருண்டு விடுகிறார்கள். உறங்கியவர்களை எழுப்பி விட்டு இயங்க வைக்கும் நிலைகொண்ட தமிழர்களும் சொளுக்கென்று படுத்து விடுகிறார்கள். கலைஞரால் ஏற்றம் பெற்றோரும் எழில் நிலை அடைந்தோரும் இதயத்தில் ஏற்றம் பெற்றோம், எழில்நிலை அடைந்தோம் என்று எண்ணுபவர்கூட அவ்வப்போது உண்மையற்றவர்கள் நடத்துகின்ற ஊடகங்களின் உணர்வில் மயங்கி, இந்த இழிதகை போக்குக்கு இரக்கம் காட்டி இளகி விடுகிறார்கள். விளைவு தொடர்ந்து தமிழகம் பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகி நலிந்து வரும் நிலையே இங்கே நிலவுகிறது.

இன்றைய தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு அருகில் வருகிறது. உண்மையை உணர்ந்து உழைப்பவர்களை தமிழர்கள் வாழ்வின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களை ஓயாது உழைப்பவர்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். அப்படி அமர வைத்தால், கல்வி நிலை வளர்ச்சி, தொழிற்துறை அணுகுமுறை, அதன் விளைவு, வேலை வாய்ப்பு, சமூக அமைதி அதனால் ஏற்பட்ட வருவாய் பெருக்கம், வாழ்க்கையின் வளர்ச்சி, ஒவ்வொரு வீட்டிலும் அழகிய பொருள் மட்டுமல்ல வியத்தகு விஞ்ஞானப் பொருள்கள் மேலும் மேலும் நிறைந்து உற்சாகத்தில் ஊஞ்சலாடி மகிழ்வு நிலை காணலாம்.

No comments:

Post a Comment