Friday, 13 January 2017

10 & 11 புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி…

சிங்கப்பூர்
இயற்கையரணராக வாய்ந்த சிங்கப்பூர் துறைமுகம், தொழில் வளர்ச்சியில் செழித்து நிற்கும் அந்த சின்னஞ்சிறுபகுதி அவன் சிந்தையை மகிழ்வித்தது. நாளும் மலரும் புதுமைகள் அங்கே பூத்துக் குலுங்குவதை கண்டான். உல்லாசப் பயணிகள் உள்ளத்தை மகிழ்விக்கும்! பூஞ்சோலையாக் சிங்கப்பூரை கண்டான். பல்வேறு துறைகளில் சிறப்புடன் திகழும் சீனர்களையும் மலாய்க் காரர்களையும் கண்டு மகிழ்ந்தான். ஆங்கிலேயர்கள் அம்மண்ணின் உரிமையை சீனர், மலாய் தமிழர்களுக்கு வழங்க முன்வந்தபோது அதைப் பெறுவதற்கு தமிழர் பிரதிநிதிகள் இல்லையென்ற வரலாற்றுச் செய்தியை எண்ணி வேதனையுற்றான். உரிமைகளை பெறுகின்ற நேரத்தில் தமிழர்கள் உறக்கத்தல் இருக்கிறார்களே என்று உள்ளம் நொந்தான். சீர் நிரம்பிய சிங்கப்பூரில் சிறந்தோங்கிய பகுதிகளையெல்லாம் பார்த்தவாறு மலேசியப் பகுதிக்குப் பறந்தான்.
மலேயா (மலேசியா)
மலைகளும், இயற்கைச் செல்வங்களும் நிறைந்த இனிய நாடு மலேசியா, தமிழர்கள் வளத்தோடு உரிமை பெற்று வாழ்கின்ற மண், இரப்பர் தோட்டங்கள் நிறைந்த வளம் மிகு பகுதி. தமிழர் சிறப்புடன் வாழ்வது கண்டு மனம் மிக மகிழ்ந்தான். முதல் உலகத் தமிழ் மாநாடு கூட்டி தமிழ்த்தாய்க்கு சிறப்பூட்டிய தனி நாயகம் அடிகளை மனதிற்குள் கொண்டு வந்து பார்த்து வணங்கினான். ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில், அந்நாட்டுப் பிரதமரும், தமிழர் தலைவர் கலைஞரும் உரையாற்றிய காட்சி கண்டு களிப்புற்றான். மனதிற்கு மகிழ்வூட்டும் மாசற்ற மலேசிய மண்ணில் விளைந்த எழிற் காட்சிகளை கண்டவாறு பர்மியவான் பரப்பில் வலம் வந்தான்.
பர்மா
அய்ராவதி நதியருகே அமைந்த அழகு நகர் இரங்கூனை கண்டு ரசித்தான். தமிழ் மன்னர்கள் காலத்தில் வந்த, பின் வெள்ளையர் காலத்தில் அடிமைகளாய் வந்த, பின் வணிகர்களாக வந்த தமிழர்கள் அந்த நாட்டில் காடுகளை சீர்செய்து கழனிகளாக மாற்றி, நெல் மணிகளை குவித்த, வாணிபம் செய்து வளமுடன் வாழ்ந்த காட்சியெல்லாம் அவனுள் தோன்றியது.
தீரமுடன் போராடி வெள்ளையரை விரட்டி, வெற்றி பெற்று வீர சுதந்திரம் பெறுவதற்கு படையமைத்து, அதன் பின் அங்கு ஒரு அரசினை அமைத்து நாணயமும் வெளியிட்ட வீரமகன் நோதாஜிக்கு பல வகையில் உதவிய தமிழர்கள் எல்லாம் அவன் கண்ணில் தோன்றினார். படைக்கு வீரர்களையும் பணத்தையும் வழங்கிய தமிழர்களை எண்ணிப் பூரித்தான் சுந்தரலிங்கம். நேதாஜியின் வீரமிகு வரலாற்றிற்கு ஏடாக, எழுதுகோலாக அமைந்தவர்கள் தமிழர்கள் என்பதை எண்ணி இதயம் களித்தான். அத்தகைய தமிழர்கள், இந்திய அரசாங்கத்தின் பாராமுகத்தால், பாதகமான நடைமுறையால் அகதிகளாக அனாதைகளாக விரட்டிப் பட்டதை எண்ணி அழுதான்.


ஆசியா
இதயம் கனக்க தன் எழுலுடலை இந்தோனேஷியாவில் பறக்க விட்டான். பாலித் தீவுகள் என அழைக்கப்பட்ட பன்னீராயிரம் பழந்தீவுகள் என்று தமிழ் இலக்கியங்கள் பேசும் பகுதி அது. இராசராசனும் அவன் மைந்தன் இராசேந்திரனும் வென்ற பகுதிகள் அவை. பர்மா, மலேசியா, இந்தோனேஷியா, ஜாவா சுமத்ரா தீவுகளில் இராசராசனின், இராசேந்திரனின் தமிழ்ப் படைகள் நடை போட்டதை அங்கெல்லாம் தமிழப் பண்பாட்டை பரப்பியதையெல்லாம் எண்ணி எண்ணி இதயத்தை கழிப்பில் ஆழ்த்தினான். அகம் மிக மகிழ்ந்த நேரத்தில் தாய்லாந்தின் மீது பறந்தான். இனிய அந்த பகுதியை பார்த்தவாறு கம்போடியாவிற்குள் பாய்ந்தான். அங்குள்ள அரச குடும்பம் தமிழர் ஒருவரின் வாரிசி என அறிந்து மகிழ்ந்தான். பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு போனான். அலெக்சாண்டரின் தந்தை பிலிப்பின் பெயரால் வழங்கப்படும். அந்த அழு மிக பகுதியைப் பார்த்து மகிழ்ந்தான். உல்லாச சுகபோகிகள் மார்கோசையும் அவன் மனைவியையும் அகற்றிவிட்டு தன் கணவனின் நினைவாக ஆட்சிபுரியும் திருமதி அகினோவை வாழ்த்திவிட்டு ஜப்பானுக்குள் தன் தலையை நீட்டினான்.
உதயசூரியன் நாடு
உதயசூரியன் முதலில் உதிக்கும் நாடு ஜப்பான்... எண்ணிப் பார்க்கும்போது இதயத்திற்கு இனிப்பூட்டும் ஏராளமான தீவுகள் நிறைந்த இனிய மண். கண்ணில் காணும்போது மனதை களிப்புணர்வார் குளிப்பாட்டுகிறது. அய்ரோப்பிய அமெரிக்க நகரங்களுக்கு ஈடான உல்லாச நகராக டோக்கியோ உள்ளத்திற்கு உவகையூட்டுகிறது. உழைப்பிற்கும் உயர்விற்கும் எடுத்துக்காட்டானவர்கள் அந்த இனிய மக்கள். காலந்தோறும் தங்கள் கலாச்சார சின்னங்களை காத்துவரும் கடமையாளர்கள். புதுமை வாழ்வுக்குரிய கருவிகளை நாளும் தரும் புகழ் மனிதர்கள். மின்னனுத் துறையில் மின்னல்வேக வளர்ச்சியை கண்டவர்கள். புத்தமதத்தை போற்றி வளர்த்து வாழ்வில் வளர்ச்சி கண்ட புத்திசாலிகள். ஆசியாவின்  சொர்க்கம் என்று தங்கள் நாட்டை ஆக்கியவர்கள். இரண்டாவது உலகப் போரில் புழுதியாகிப்போன தங்கள் நாட்டை பொன்மயமாக மாற்றியவர்கள். புதுமை கோட்பாட்டை அமைத்து புகழ் வாழ்வு கண்டவர்கள். ஆசிய நாடுகள் எதுவும் சாதிக்காததை சாதித்தவர்கள் ஆம் அய்ரோப்பிய நாடான ரஷ்யாவை, தோற்கடித்தவர்கள் பழமைகளை இன்னும் பாதுகாத்தாலும் பொன்னொளி போன்ற புதுமைக் கோலங்களால் தங்கள் மண்ணை அலங்கரித்தவர்கள். இன்றும் மன்னர் முறைக்கு மதிப்பளித்து மன்னரை வணங்குபவர்கள். வளர்ச்சியில் புது வரலாறு படைத்தவர்கள். இன்றைய நவீன சப்பானைக் கண்டுகளித்தவன் பழைய சப்பானையும் பார்த்துக் களித்தான் சுந்தரலிங்கம்.
சாகசங்கள் புரிந்த சாமுராய்களும் அவர்களின் பட்டாளத்து நடையும் சிறப்பும் கண்ணில் தோன்றி மறைந்தது. சுகபோகத்தில் திளைத்து சோம்பேறியாக மாறி தங்கள் நாட்டை பாதுகாக்காத பரிதாபமும் நெஞ்சில் தெரிந்தது. இத்தாலியில், ஜெர்மனியில் போடவேண்டிய அணுகுண்டை ஆசிய - அய்ரோப்பிய இன வேறுபாடு காரணமாக அழகு தவழ் சப்பானில் அமெரிக்கா போட்டதால் ஏற்பட்ட அழிவுகளையும், அமெரிக்காவின் ஆதிக்கவெறியையும் எண்ணி வேதனையுற்றான். அணுகுண்டால் ஏற்பட்ட சிதைவுகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் இருப்பதை எண்ணி வருந்தினான். ஹிரோசிமா, நாகசாகி ஆகிய இடங்களை கண்டு அழுதான் அவன். வேதனையில் இருந்து விடுபட்டு வீறு கொண்டு வளர்ச்சி முகட்டில் ஏறும் சப்பானியர்களை எண்ணி வியந்து மகிழ்ந்தவாறும், தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவுகளை எண்ணிக் களித்தவாறும், நாகர்கோவல், நாகபட்டணம், நாகபுரி, நாகாலாந்து, நாகசாகி ஆகிய ஊர் பெயர்களின் ஒற்றுமைக்குள்ள பொருளை அறிஞர்கள் ஆய்வுசெய்ய வேண்டும் என்று நினைத்தவாறும் புதிய உற்சாகத்தைப் பெற்ற நினைவோடு ஆஸ்திரேலியாவிற்குப் பறந்தான்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா, இயற்கை தன் எழிலை வாரிக் கொட்டி வைத்திருக்கும் அழகிய கண்டம். ஆஸ்திரேலியா - நியூசிலாந்து பாபுவான் நியூகினித் தீவுகளை உள்ளடக்கியது. குமரிக் கண்ட மாந்தர்கள் நெடுங்காலத்திற்கு முன் நிலம்பிராய நாளில் இங்கு வந்தவர்கள். அந்த மண்ணின் மைந்தர்களை, அய்ரோப்பியர்கள் கொன்று குவித்த கோரக் காட்சிகள் அவர் இதயத்தை குத்திக் கிழித்தது. இயற்கையை ரசித்து வாழ்ந்த அந்த சூதுவாது அறியாத மக்களை, வெள்ளைநிறம் கொண்ட அய்ரோப்பியரை தெய்வம் என்று வணங்கிய வெள்ளையுள்ளம் கொண்டோரை சுட்டுப் பொசுக்கிய கொடுமையாளர்களை நினைத்துத் கொதித்தான் சுந்தரலிங்கம்.
ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதை உலகெங்கும் திகழ்கிறது என்று எண்ணியவாறு, தன் வயிற்றிப் பையில் குட்டிகளை அடைத்த வண்ணம் துள்ளிக் குதித்தோடும் கங்காருகளை கண்டு மகிழ்ந்த வண்ணம் நியூசிலாந்தில் தமிழர் வாணிபம் செய்ததற்கு ஆதாரமாக அவர்களது கப்பலும் தமிழ்பொறித்த மணியும் காட்சியாக இருப்பதைக் கண்ட மகிழ்வோடு மீண்டும் ஆசியாவிற்குள் பயணமானான்.

No comments:

Post a Comment