Tuesday, 3 January 2017

1. புத்துலகம் கண்ட புதுமனிதன்

புத்துலகம் கண்ட புதுமனிதன்
பிறந்த மண்
புத்துலகம் கண்ட புதுமனிதனாக, ஆம், சுந்தரலிங்கம் சூப்பர்மேனாக மாறுவதற்கு முன்னர் அவன் ஒரு கிராமத்தான். நெல்லை மாவட்டத்தின் ஒரு ஓரத்தில் இருக்கும் ஒரு கிராமம் கூடலூர். அங்குதான் அவன் பிறந்தான். வறுமை நிறைந்த குடும்பத்தில் பிறந்த அவன் வாழ்வில் வளம் சூழவில்லை. ஏன், வயிற்றுக்கே கஞ்சியில்லை எனும் நிலைதான் பல நாட்களில் நிலவியது. கொடிது கொடிது இளமையில் வறுமை மிகக் கொடிது என்ற அவ்வையின் கருத்துக்கு அவன் விளக்கமானான். மிக இளம் வயதில் தன் வயிற்றை நிரப்ப அவன் பட்டபாடு மிக கடினமானது. மண்சுமந்து கல் சுமந்து, களைவெட்டி, கதிர் அறுத்து சுமந்து களம் சேர்ச்து, காடுகளில் அலைந்து விறகு சேர்ச்து விற்று, ஆடுகள் மேய்ச்து மாடுகள் ஓட்டி அதில் கிடைக்கும் கூலியில் வயிற்றின் சிறுபகுதியை நிரப்பி நீரருந்தி வாழ்நாளை கழித்தவன். அவனுக்கு அவன் பெற்றோர் இட்ட பெயர் இந்திய துணைக் கண்டம் முழுவதும் பரவியிருந்த சைவமதத்தின் மூலமான அம்மையப்பனின் உயிர் நிலையக் காட்டும் லிங்க வழிபாட்டு சின்னத்தின் தாக்கத்தில் உருவானது. எத்தனையோ லட்சியங்களை உள்ளடக்கிய சமயம் கடைசியில் வெறும் பெயரில் மட்டுமே எஞ்சியிருந்தது. லிங்கத்துடன் பல சொற்களை இணைத்து தநம் செல்வங்களுக்குப் பெயரிட்டு மகிழ்ந்ததோடு நின்றுவிட்டனர். ராமலிங்கம், சிவலிங்கம், கனக லிங்கம், பசுவலிங்கம், பாடகலிங்கம், பூதலிங்கம், நாகலிங்கம், நச்சாடை தவிர்த்தலிங்கம், மகாலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம் என்று லிங்கமயமாக ஆக்கியதுபோல் இவனுக்கும் சுந்தரலிங்கம் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர் இவன் பெற்றோர். பசியில் தோய்ந்து பாயின்றி படுக்கையில் கிடந்தாலும் சுந்தரலிங்கம் எதையும் அது என்ன? அது ஏன்? எதற்கு அப்படி? என்று விடையறியும் திறன் பெற்றவனாக விளங்கினான். இயற்கையில் அவனுக்கு வாய்த்த இந்தக் குண் பின்னாளில் சூப்பர்மேனாக மாறுவதற்கு வழிகோழியது. சுந்தரலிங்கம் பிறந்த ஊர் கிராமம் என்றாலும் ஓரளவு வளம் நிறைந்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை கொட்டியதும் நேரே அந்த ஊர் குளத்திற்கு வர நீர்வரத்துக் கால்வாய் உண்டு. பெரியகுளம் ஒன்று அங்கு உண்டு. நெல்லும், கரும்பும், பருத்தியும், கடலையும் பிற தானியங்களும் விளைகின்ற மண்வளம் நிரைந்த வயல் வெளிகளும் தோட்டம் துறவுகளும் நீர் நிறைந்த கிணறுகளும் உண்டு. உழைக்கின்ற மக்கள் நிறைய உண்டு. வெயிலில் காய்ந்து - மழையில் நனைந்து இடுப்பொடிய உழைத்தும் எழில் வாழ்வைக்காண முடியாது எலும்புகூடான மனிதர்களும் அங்கே உண்டு. கோபுரம் போல் ஓரிடத்திலும், நெடிய கோயிலைப் போல் தொடர்ந்த நிலையிலும் அழகிய சிறுமலைத் தொடர் அந்த ஊரின் அருகே உண்டு. அறிவும் வீரமும் நிறைந்த தன் மண்ணில் விடுதலைக்கு அன்னியரை எதிர்த்து இந்திய துணைக் கண்டத்தில் முதல் முழக்கம் எழுப்பிய மாவீரன் புலித்தேவன் உலவிய நெற்கட்டான் செவல் எனும் வீரம் செறிந்த ஊர் அருகிலேயே உண்டு.
வறுமை நிறைந்த சூழல் எனினும் இனிமை நிறைந்த மனிதர்களும் அங்கே பிறந்து வாழ்ந்தார்கல். திரைப்படங்கள் தோன்றாக் காலத்தில் கலை மிளிரும் கலைஞர்கள் பலர் நிறைந்திருந்தார்கள். பெண்கள் பொது இடங்களில் பொது மன்றங்கள், அரங்குகள் மேடைகளில் ஆடிப்பாடி ஆண்டவன் கதைகளை மக்களிடம் பதிப்பதற்கு கூத்து நடத்திய கலைஞர்களும் அந்த சின்ன ஊரில் வசித்தனர். வள்ளி திருமணம், அல்லி அர்ச்சுனன், பவளக்கொடி, சந்திரமதி, அரிச்சந்திரன் - மயான காண்டம், கோவலன் என்று இங்கு மட்டுமல்ல இலங்கை - பர்மா - சிங்கப்பூர், மலேயா என்று அங்கெல்லாம் சென்று கலைமனம் பரப்பினார்கள். மேடையில் கலைஞர்கள் தோன்றியவுடனேயே கடவுளே தோன்றியிருக்கிறார் என்று கையெடுத்து கும்பிட்டதாக வெல்லாம் இன்றும் பேசிக்கொள்கிறார்கள். அருணாசலவேளார் - வேல்வேளார் - கவிதை தீட்டும் கந்தப் புலவர், பபூன் சுப்பையாத்தேவர், ஸ்திரிபார்ட் சங்கரபாண்டியத் தேவர் என்ற கலைஞர்களெல்லாம் வாழ்ந்த ஊர் அது. கிராமியக் கலைக்கு முதல் கலைமாமணிப் பட்டத்தøப் பெற்ற திரு. சிவஞானபாண்டியன் இன்றும் வாழ்கிறார் அங்கே. சங்கரதாஸ் சுவாமிகள், பி.யூ.சின்னப்பா போன்ற கலைமாமணிகளுடன் தொடர்பு கொண்டவர்கள். ஊரில் இராமயாணச் சாவடி கட்டி, இதிகாச மடமைகளை எடுத்துக் கூறுவதுமுண்டு. ஆண்டுக்கொரு முறை அய்ந்தாறு கோவில்களில் விழாக்கள் நடப்பதுண்டு. ஆடல் பாடலுடன் நையாண்டி மேளங்களை நையப்புடைப்பதுண்டு. முத்தாலம்மன் சிலையை செய்து ஊரையே பயமுறுத்தி ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் உடைப்பதுண்டு.
நிலாக் காலங்களல் இளைஞர்களும், இளம் பெண்களும், சிறுவர் சிறுமிகளும் தெருக்களில் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு மனம் கனிந்து மகிழ்ச்சியில் திளைப்பதுண்டு. கும்பி - கோலாட்டு என்று பெண்களும், சடுகுடு, கிளித்தட்டு, சிலம்பம், தீப்பந்தம் என்று இளைஞர்களும் தம் திறமையைக் காட்டி மகிழ்வதுண்டு. குற்றங்குறைகளை விசாரிக்க நடுத்தெருவில் பஞ்சாயத்துக் கூடி விவாதிப்பதுண்டு. உறவினர் கூட்டம் மிகுதியானோர் ஓங்கிக் குரல் கொடுத்தால் ஒருதலைப் பட்சமாக கூட நீதி வழங்குவதுண்டு. காலையில் எழுந்து பல்வேறு மக்களும் காடுகழனிகளுக்கு உழைத்திட சென்றுவிடுவார்கள். ஆனால் ஊரின் மேலோரத்தில் மேட்டுக்குடியாக திகழ்ந்த ஒரு சிறு கூட்டத்தின் வீட்டுப் பெண்கள் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி ஈரத்தில் தோய்ந்த சேலையுடன் விரிந்த கூந்தலுடன் விழியில் ஒளிதுலங்க வாசல் பெருக்கி சாம் தெளித்து கட்டிச் சாணத்தின் மீது பூசணிப்பூவை வைத்து வீட்டின் முன்புறத்தை அழகுபடுத்தி ஆலயம் சென்று அம்மனையோ அல்லது அவள் ஆலனையோ வழிபட்டு மேனி வாடாத மேன்மக்களாய் திகழந்த அக்ரகார வாசிகளும் அங்கே வாழ்ந்தார்கள். உழைக்காமல் உடல் வளைக்காமல் வாழத்தெரிந்த அறிவு ஜீவிகள் அல்லவா?
சுந்தரலிங்கம் அந்த ஊரில் இருந்த துவக்க பள்ளியில் பார்ப்பனப் பெண்கள் சிலர் மற்றும் பலவேறு பிரிவினைச் சார்ந்த சிறுவர் சிருமியருடன் இணைந்து படித்தான். தொடர்ந்தாற்போல் ஒண்ணரையாண்டுகள் படித்து எழுத்தைப் பயின்ற காலத்தில் அவன் பள்ளியில் சுறுசுறுப்பாகத் திகழ்ந்தான். பாடங்கலை ஒப்புவிப்பதில் சூட்டிகையானவன் என்று பெயரெடுத்தான். பள்ளி நாடகங்களில் சிறப்பாக நடித்து ஊரார் திருண்டுவந்து பாராட்டும் அளவுக்கு சிறப்புடன் திகழ்ந்தான். ஊரில் நடக்கின்ற அத்தனை நிகழ்ச்சிகளிலும் கண்பதித்தான். கவனத்தில் வைத்தான். இதுவரை சொன்ன சுந்தரலிங்கத்திற்கு உரியது எல்லாவற்றிலும் இந்த சித்திரத்தை வரைபவனுக்கு தொடர்பு உண்டு.
கணிப்பொறித் தேகம்
அந்த ஊரில் மருத்துவத் துறையில் ஈடுபாடு கொண்ட வைத்திய சிகாமணிகளும் உண்டு. மூலிகை வைத்தியத்தில் மூழ்கி திளைத்த முத்தெடுத்த மூக்கையாத்தேவர், அவன் மகன் முனியாண்டித்தேவர், அவர்பெற்ற செல்வம் முத்தையாத்தேவர் என்று பரம்பரை வைத்தியக் குடும்பமும் உண்டு. பாம்புக்கடி, பல்லி விஷம், தேள்கடி, வண்டுகடி ஆகியவற்றிற்கு விஷ முறிவு மருந்துகளை இலவசமாகவே வழங்குவார்கள். காட்டிலுள்ள மூலிகைகளைக் கெண்டுவந்து அளவு கொண்டு சேர்ச்து, சாறாக, களிம்பாக, பொடியாக நோய்கண்டவர்களுக்கு தந்து அந்த நோய் மீண்டும் வராத அளவுக்கு அதன் ஆணிவேரையே அறுத்தெறியும் அளவு ஆற்றல் பெற்றவர்கள் அந்த பரம்பரை வைத்தியர்கள். அதுமட்டுமின்றி, சில மூலிகைகளை சாப்பிட்டால் வானலோகத்து தேவர்களை காணலாம் என்று வேறு சொல்லிக் கொண்டிருப்பார்கள். வேறு சில மூலிகையை உண்டால் கூடுவிட்டு கூடுபாயும் வித்தையையும் கைகூடும் என்று விக்ரமாதித்தன் காலக் கதையைப் படித்து கனவுலகிலும் மிதந்தார்கள். சில இலைகளின் வழியாக தங்கத்தைப் படைக்கலாம் என்று காலத்தை அதில் கரைத்த தலைமுறையும் உண்டு. மூலிகை வைத்தியத்தில் முழுமூச்சாய் ஈடுபாடு கொண்டிருந்த இந்த வைத்தியர் இல்லத்திற்கு அடிக்கடி சுந்தரலிங்கம் வருவான். அங்குள்ள மருந்துகளையும் அதை செய்கின்ற முறைகளையும் கூர்ந்து கவனிப்பான். ஏற்கனவே இராமாயணத்தில் அவன்கேட்ட அனுமன் பறப்பதையும், அவன் தூக்கிவந்த சஞ்சீவி பர்வத மூலிகையும் இவனுக்கு பெரும் விந்தையாகப்பட்டது.
விக்ரமாதித்தன் கதையில் வரும் உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயக்கண்ணாடி போல் நாட்டில் டெலிவிஷன் வந்துவிட்டதாக வேறுபலர் பேசிக் கொண்டார்கள். டெலிவிஷன் கண்டுபிடித்தது எப்படி என்பதை அறிய முயற்சிக்காதவர்கள் எல்லாம் விக்ரமாதித்தனை முன்னுதாரணம் காட்டத் தவறுவதில்லை.
இதிகாச கருத்துக்களைக்கூட ஆராய்ச்சி பூர்வமாக எண்ணிப் பார்க்கவும், அறிவியல் ரீதியாக அலசிப் பார்க்கவும், அந்த மருத்துவக் கூடம் அவனுக்கு உதவியது. அரிஸ்டாடிலுக்கு மருத்துவக் கூடம் தான் அறிவியலை உரைப்பதற்கு உதவியது. என்றெல்லாம் பின்னாளில் சுந்தரலிங்கம் படித்தான். அந்த வைத்தியக் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும், அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எதையாவது அரைப்பதும் - காய்ச்சுவதும், இடிப்பதும் - நிறுப்பதும் ஆக இருந்தார்கள்.
சுந்தரலிங்கம் இதையெல்லாம் ஓரிடத்தில் இருந்து உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தவன் பின் அவர்களுக்கு உதவிகள் செய்யவும் முனைந்தான். பால்வடியும் அழகிய முகமும் கள்ளங்கபடமற்ற அவன் உள்ளமும் அவர்கள் வீட்டில் அவனுக்கு இடமளிக்க செய்து விட்டது. பள்ளிக்கு செல்லாமல் அந்த மருத்துவக் கூடத்திலேயே நாள் முழுக்கக் கிடந்தான். அவனுடைய ஆர்வத்தைக்கண்ட அந்த மருத்துவ இல்ல பெரியவர் அவனை தன் இல்ல உறுப்பினராக ஆக்கிக் கொண்டார். அதுமுதல் சுந்தரலிங்கம் மூலிகையின் ஆற்றலையெல்லாம் தெரிந்து கொள்ள முனைந்தான்.
சந்தையில் இருந்து வாங்கிவந்த பொருள்மீது சுற்றியிருந்த காகிதத்தை கையில் வைத்து படித்துக் கொண்டிருந்தான் சுந்தரலிங்கம். அதுவிடுதலை நாளிதழ். அதில் தந்தை பெரியார் சொன்ன கருத்தும், ஒரு விஞ்ஞான கட்டுரையும் வெளிவந்திருந்தது. தந்தை பெரியார் சொல்கிறார், மரக்கட்டையும், தகடும் பறக்கின்றபோது மனிதன் பறக்க முடியாதா? முயன்றால் முடியும். மனிதன் பறக்கும் காலம் வரும் என்று அந்த சமுதாய விஞ்ஞானி கூறியிருந்தார். விஞ்ஞானக் கட்டுரையில் வானில் பறந்தபடியே வாழும் அண்டவெளி மனிதனை தோற்றுவிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள், என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த செய்திகள் அவன் சிந்தையில் புதிய எண்ணங்களை தோற்றுவித்தது. மூலிகையில் புதிய மருந்தொன்றை கண்டுபிடிக்க வேண்டும். அதன்மூலம் புதிய சாதனை படைக்க வேண்டும் என்றெல்லாம் அவன் மனம் எண்ணிக் களித்தது.
சில பல இலைகளை கலந்து இடித்து, சாறெடுத்து, காய்ச்சிப் பதமாக்கி இன்னும் சில பொருள்களை கலந்து, சில ஓணான்களை பிடித்து வந்து, அதன் வாயில் அவற்றை ஊற்றி அதன் செயல்களை ஊன்றிக் கவனித்தான். சில சில மாறுதல்களுடன் மருந்துகளை தயாரிச்து ஓணான்களுக்கு கொடுத்தான். சில மடிந்தன - சில மயக்கமுற்றன. சிலவற்றின் செயல்களில் மாறுதல் தெரிந்தது. ஊர்ந்து சென்ற ஓணான் உந்திக் குதித்தது. சில உயரத் தாவின. ஒரு சில கோழிக்குஞ்சுகளுக்கு சில மருந்துக் கலவைகளை கொடுத்தான். அவை குருவிக் குஞ்சாய் பறந்து காட்டின. இப்படியாக பகலும் இரவுமாய் பல நாட்கள் மருந்துக் கலவையில் ஈடுபட்டு பரிசோதனைகள் செய்து பார்த்தான்.
இறுதியாக ஒரு மருந்து, எதைக் கலந்தானோ? எதைச் சேர்த்தானோ? தெரியவில்லை. அவனே அதை அருந்திப் பார்த்தான். அவனுக்கே ஒரு புதிய உணர்வு தோன்ற ஆரம்பித்தது. உடல் லேசானதுபோல் தோன்றியது மூச்சை இழுத்தால் மேலேறுவதுபோல் ஒரு உணர்ச்சி. காலை நேரத்தில் சுந்தரலிங்கம் கதிரவனின் ஒளிரேகையை ஊடுருவிப் பார்த்தான். தன் மூச்சை இழுத்து கைகளை தூக்கினான். என்ன வியப்பு! அவன் கால்கள் தரையில் இருந்து மேலே எழும்பியது. அவனுக்கே ஆச்சர்யம் தாங்கவில்லை. பின் ஒருவாறு தன்னைக் கட்டுப்படுத்தினான். பின் ஒருமுறை மூச்சை இழுத்து பறக்கும் ஆற்றலை பரிசோதித்தான். அவன் சாப்பிட்ட மூலிகைகள் என்ன செய்யும் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் அவன் அடுத்தடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட்டான். மேலும் சில மூலிகைகளை கதிரொளியில் காயவைத்து உண்டான். மேலும் மேலும் அவன் உடல் இயக்கத்தில் பறக்கும் தன்மை மேலோங்கி வந்தது. அருகில் உள்ள அழகிய சிறுமலையை அவன் தன் ஆய்வுகளுக்கு பயன்படுத்திக் கொண்டான். பின் ஒரு நாள் அவன் அருகில் உள்ள நகரத்திற்கு சென்றான். அங்குள்ள நூலகத்தில் பல்வேறு நூல்களை முறையாகப் படிக்க முனைந்தான். அரசியல், கலை, மொழி, வரலாறு, அறிவியல், வேதியியல், நிலயியல் என்று பல்வேறு நுட்பமான நூல்களையெல்லாம் படிப்பதற்கு ஆர்வம் கொண்டான். தமிழ்ச் சித்தர்களின் பல்வேறு மருத்துவ நூல்களை தெளிவுற படித்தான்.
இமயம் வரை பரவியிருந்த சிவ மதத்தின் பால் பாடப்பட்ட பாக்களையெல்லாம் அறிவியல் முறைகளை கொண்டு ஆய்ந்து பார்த்தான். விந்தியத்திற்கு தெற்கில் உள்ள பல்வேறு ஆலயங்கள் அமைக்கப்பட்ட விதத்தையும் அங்கெல்லாம் சில மூலிகைகளை உண்ணுமாறு வலியுறுத்துவதையெல்லாம் எண்ணிப் பார்த்தான். மீண்டும் மீண்டும் சில மூலிகைச்சாறு, மருந்துப்பொடி, மருத்துவ களிம்பு என்றெல்லாம் செய்து தன்னுள் கொண்டு பரிசோதனைகளை செய்து பார்த்தான். இப்போது அவன் பறவைகளைப் போல ஆனால் சிறகுகள் இன்றிப் பறக்கும் நிலையை அடைவதாக உணர்ந்தான். அவன் அருந்திய மருந்துகள் மீது கதிரொளி பாயும் ஆற்றலினால் அவன் உறுப்பில் ஏதோ ஒன்று இயந்திரத் தன்மையடைந்து வருவதை அவனால் உணர முடிந்தது.
கதிரொளி சில வாயுக்களை உடலின் உள்ளேயே தயாரிச்து அதை பறப்பதற்கு பயன்படுத்தும் வகையில் அமைத்திருப்பதாக உணர்ந்தான். காற்றில்லை என்றாலும் பறப்பதற்கு தடையில்லா நிலையில் அவ்வுறுப்பு அமைந்திருந்தது. மெல்லப் பறக்க முனைந்தவன் வான் பறப்பில் செல்லப்பிள்ளை விளையாடும்... பறந்து விளையாடும் நிலை பெற்றான். அவனுடைய இந்த மாற்றமும் செயலும் ஊரில் எவருக்கும் தெரியா வண்ணம் நடந்து கொண்டான். அந்த வைத்தியக் குடும்பத்திற்கே கூட இவனுடைய நிலை தெரியாது.
சுந்தரலிங்கம் பரபரப்பை விரும்பாத காரணத்தால் தன்னுடைய மாற்றத்தை மற்றவர்க்கு காட்டிக் கொள்ளவில்லை. மேலும் நூலகத்தில் பயின்ற கருத்துகள் அவனை புதிய மார்க்கத்தில் செல்லத் தூண்டியது. மேலும் சில மருந்துகளை- மூலிகையிலிருந்து செய்து உண்டான். இப்போது பறக்கினற சக்தியோடு மேலும் ஒரு மாற்றமும் தோன்றியது. அதாவது அவன் மனம் நினைக்கின்ற செய்திகள் எல்லாம் அவன் கண்முன் படமாக தோன்றியது. இந்த நிலையைக் கண்டு சுந்தரலிங்கம் மகிழ்ச்சிக் கூத்தாடினான். தன் நிலையை பலமுறை பரிசோதனை செய்து பார்த்தான். தெளிவான விதிகளோடு உடல் இயக்கம் அறிவியல் கருவி போல இயங்குவதைக் கண்டான். அவன் உள்ளத்தில் ஒரு திட்டமான வேலைத் திட்டம் உருவாகியது.
ஆம் இந்த உலகம் முழுவதையும் பறந்து பார்க்க வேண்டும். பின் அண்ட வெளி முழுவதும் பார்க்க வேண்டும். அண்டத்தின் மர்மத்தை அறிய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். ஆனால் இதை யாரிடமும் சொல்லக்கூடாது எல்லா உலகங்களையும் பார்த்துவிட்டு வந்தபின் உலகத்திற்கு சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
புறப்பொருளால் உருவாகும் விண்கலம் - கணிப்பொறியைப் போல் அவன் மனமும் - அவன் மூளையும் மாறியிருந்தது. அது அப்படி ஆனது? என்ன மருந்துகளால் ஆனது. எந்த முறையில் அவன் தன்னை மாற்றிக் கொண்டான் என்றெல்லாம் அவன் விளக்கவில்லை. காரணம் அவன் தமிழன். தமிழர்கள் தங்களின் எல்லாக் கண்டுபிடிப்புகளை விளக்கமாக கூறி விதிகளை வகுத்து முறையான செய்திகளோடு சொன்னார்களா என்று தெரியவில்லை. அப்படியே சொல்லியிருந்தாலும் அன்னியர்கள் அதை தம் வயப்படுத்தியபோது வாளாவிருந்தார்கள் என்பதுதான் தமிழனின் வரலாறு. அதுபோல் சூப்பர்மேன் சுந்தரலிங்கமும் தன் உடல் மாறிய விதத்தையும் விளக்கவில்லை.
வானில் பறக்கிறான்

மேலும், அவனின் தோல் எத்தகைய சூட்டையும் குளிரையும் தாங்குகின்ற வகையில் சில மூலிகைகளை சேர்த்து வைத்துக் கொண்டான். பின் அண்டவெளி சம்மந்தப்பட்ட கோள்கள், மீன்கள் ஆகியவற்றை விளக்குகின்ற பஞ்சாங்கத்திலிருந்து பல்வேறு செய்திகளை திரட்டி தன் கணிப் பொறித் தேகத்தில் தேக்கிக் கொண்டான். பின் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் கூடலூர் மலைமுகட்டிற்கு சென்று, தான் பிறந்து வளர்ந்து - வாழ்ந்த மண்ணை நெகிழ்ந்த உள்ளத்தோடு கலங்கிய விழியால் பார்த்துவிட்டு தன் திட்டப்படி தெற்கு நோக்கிப் பறந்தான். பறந்து செல்லும்போது தன் உறவினர்கள் வாழ்ந்த பல்வேறு ஊர்களில் தன் மனத்தை பதித்த வண்ணமே பறந்தான். விந்தையான தன் உடல் மாற்றத்தை எண்ணியபோது தன் விழி மூடி மனம் களித்தான். விழி திறந்தபோது தனக்கு கீழே விரிந்து கிடக்கின்ற இயற்கைக் காட்சிகளைக் கண்டு வியப்புற்று மகிழ்ந்தான். பறந்து சென்று பனி மூடிக் கிடக்கின்ற தென்கண்டமான அண்டார்டிகாவை அடைந்தான்.

No comments:

Post a Comment