12.
மீண்டும்
ஆசியா
மஞ்சள் இனமக்களைக் கண்ட மகிழ்ச்சி மனதை தாலாட்டியது தைவான் லாவோஸ் ஆகியவற்றை பார்த்துவிட்டு
வியட்நாம் எனும் வீரம் விளைகின்ற மண்ணில் பறந்தான். வியட்நாம்... அப்பப்பா... அந்த
மக்களின் மன உறுதி எண்ணிப்பார்க்கவே மலைப்பூட்டுகிறது. தங்கள் மண்ணின் உரிமைக்காக
அவர்கள் செய்த தியாகமும்,
உலகின் சிறந்த தொழில்நுட்பமும் பலம் படைத்த படையமைப்பும் பெற்ற
அமெரிக்காவை எதிர்த்து ஹோசிமின் எனும் மாவீரனின் தலைமையில் போராடி வெற்றி
பெற்றதும் புதிய வரலாறு படைத்து விட்டது. சைகோனில் தமிழரகள் வாணிபம் செய்து
வளமுடன் வாழ்ந்ததெல்லாம் அவன் மனதில் தோன்றியது. தீக்குளித்து உயிர்த்தியாகம்
செய்த புத்த பிக்குகளின் உருவங்கள் தமிழ் காக்க தணலில் மெழுகான தங்கங்களை
நினைவூட்டியது. அதை எண்ணியவாறு கொரிய விண்ணில் பறந்தான்.
பழம் பெருமை வாய்ந்த கொரியா பல்வேறு துறைகளில் இன்று வளர்ந்திருப்பதைக் கண்டு
மகிழ்ந்தான். இருவேறு கொள்கைகளில் மனம் பதித்து இரண்டாக பிளந்திருந்த அந்த இனிய
மக்கள் இன்று இணைந்திடும் நிலையில் இருப்பது காண இதயம் மகிழ்ந்தது.
மஞ்சள் இன மக்களின் தாய் மண்,
மங்கோலியா. மங்கோலிய இனமே பல்வேறு பகுதியில் பல்வேறு
பெயர்களில் வாழ்கிறது. சீனர்களாக - ஜப்பானியர்களாக - கொரியர்களாக - வியட்நாமியராக
மற்றும் வேறுபல பெயர்களில் வாழ்வது கண்டான். மங்கோலிய மலைவாழ் பழங்குடியைச்
சேர்ந்த செங்கிஸ்கான் அவன் வழிவந்த வீரச்செயல்களையெல்லாம் இதயத் திரையில் போட்டுக்
களித்தான். உண்மைகள் மறைக்கப்படும்போது உரிமைகள் மறுக்கப்படும்போது பாதிப்பு
அடைந்தவர்கள் கோபங்கொண்டு கொதிப்பால் செய்கின்ற செயல்களை கொடுமையானதென்று சொல்பவர்
இருக்கத்தான் செய்கின்றனர். இழிவு செய்வோரை பொறுத்துக் கொண்டு மறப்பதும்
மன்னிப்பதும் சால்பு நிலை என்று சொல்லலாம். ஆனால் சரித்திரம் மாறிவிடுகிறதோ.
மன்னிப்பவர்க் மரத்துப்போய் விடுகிறார்களே,
காலத்தீயில் சாம்பலாக மாறிவிடுகிறார்களே.
செங்கிஸ்கான் செய்தது சரியா - தவறா என்று நினைக்கின்றபோது சிந்தனை தன்
சிறகடித்து பலவாறு பறக்க நினைக்கிறது.
முஸ்லீம் மதத்தில் கான் எனும் புதிய குலம் தோன்றியதை எண்ணியவாறு சீனத்தின்
வானத்தில் தன் மனச்சிறகை விரித்தான் சூப்பர்மேன் சுந்தரலிங்கம்.
சீனம் கீழ்த்திசை நாடுகளின் கலாச்சாரச் சிகரம். நெடுங்கால வரலாறு கொண்ட நாடு.
சீனத்து நெடுஞ்சுவர் உலகச் சாதனைகளில் ஒன்று. காகிதத்தையும் - வெடிமருந்தையும்
முதலில் கண்டு பிடித்து அதை வளர்த்து பயன்படுத்தாமல் முடக்கி வைத்த நாடும் கூட.
பல்வேறு குலங்களால் பாங்குடன் ஆளப்பட்ட நாடு. வரலாற்று நிகழ்ச்சிகளை வழிவழியாய்
படைத்த நாடு. கன்பூசியசின் தத்துவமும் சன்யாட்சனின் சீர்திருத்தமும் சீனத்தை
வளப்படுத்தின. மாசற்ற மனம் படைத்த மாசேதுங்கின் மாபெரும் உழைப்பால் மானத்துடன்
வாழும் நாடு. நெடுங்காலத்திற்கு முன்னர் தமிழரோடு வாணிபத் தொடர்பும் பண்பாட்டு
உறவும் கொண்டது. அந்த மண் பொதுவுடமைப் பூக்கள் அணி சேர்க்க புதுவாழ்வு நோக்கி
நடைபோடும் சீனத்தின் சிறப்புகளை எண்ணியவாறு சீனத்துப் பட்டு தன் உடலை தழுவ திபேத்
நேபாளம் ஆகியவற்றை கண்டான்.
நேபாளம் தெற்கே இராமேஸ்வரத்துடன் கொண்ட உறவை எண்ணியவாறு ஆப்கானிஸ்தானில்
பறந்தான். அதன் வழியாக பாகிஸ்தானுக்குள் பறந்து பல்வேறு பகுதிகளை பார்த்துவிட்டு, அந்த
நாட்டுக்கு உரிமை பெற்றுத்தந்த ஜின்னாவை மனதிற்குள் எண்ணி மகிழ்ந்தான்.
பாகிஸ்தான் போல திராவிடஸ்தானுக்கும் சுதந்திரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால்
ஏனோ அந்த உரிமை உணர்ச்சி அந்த பகுதி மக்களுக்கு வரவில்லை. பண்பாட்டு ஒருங்கிணைப்பு
இல்லாததால் அந்த உணர்வு மேலோங்கவில்லை என்று எண்ணினான்.
எதிர்காலத்திலாவது உரிமைகள் பெற பண்பாட்டு ஒருமையும் உணர்வும் வேண்டும் என்பதை
உணர்வார்களா? என்று எண்ணியவாறு சோவியத்தின் ஆசியப் பகுதிக்குள் பறந்தான்.
முஸ்லிம் பகுதியாக விளங்கிய நிலம் சோவியத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறது.
தாஷ்கண்ட் நகரை கண்டு களித்தான். லால்பகதூர் சாஸ்திரியின் மறைவை எண்ணி
வருந்தினான். அப்படியே துருக்கி சென்றான். இஸ்தாபுல் நகரின் அழகு அவனை கவர்ந்தது.
அய்ரோப்பாவின் வாசலாக விளங்கிய காண்ஸ்டாண்டி நோபிளை கண்டவாறு இரான் எனும் பழைய
பாரசீகம், பக்கத்தில் அமைந்த எகிப்து,
பாபிலோனியா,
கிரேக்கம் ஆகிய மத்திய தரைக்கடல் பண்பாட்டை உள்ளடக்கிய
பகுதிகளை பார்த்து மகிழ்ந்தான். சிந்துசம வெளியில் முந்தைய நாளில் வாழ்ந்த
செந்தமிழ்ச் செல்வியால் வளர்க்கப்பட்ட பண்பாடுகள், பாரசீகம், அலெக்சாண்டரால்
தோற்கடிக்கப்பட்ட டயரஸ் மன்னனின் மக்களை மணந்து வாழ்ந்து தன் அந்திமக் காலத்தை
அலெக்சாண்டர் இங்கேதான் கழித்தான். கிரேக்கத்தின் மாஜிடோனியப் பகுதியின் மாமன்னன்
அலெக்சாண்டர் இந்தியா வரை படை நடாத்தி வெற்றிகளை குவித்தவன். அந்த கிரேக்கர்களின்
முன்னோர் பாண்டியர்கள் என்கிறான் அறிஞன் பிளினி, பாபிலோன் நகரின் கலாச்சார
சீர்மையும், தொங்கும் தோட்ட அதிசயமும் அவனுள் தோன்றியது. டைக்ரடீஸ், யூப்ரடீஸ்
ஆற்ரோரங்களின் பண்பாட்டுச் சின்னங்களில் தன் அகத்தை அமிழ்த்திக் களித்தான் அந்த
அருமைத் தமிழ் மகன்.
எதிப்திய பிரமீடுகளின் தோற்றம் அவனை திகைப்பில் ஆழ்த்தியது. தமிழரின்
முதுமக்கள் தாழி இங்கு பிரமிடுகளாக உயர்ந்தது காண அவன் மனம் மகிழ்ச்சிக்
கோட்டையில் உச்சியில் ஏறிநின்றது. அலெக்டாண்டரின் நினைவாக உருவான அலக்சாந்திரியா
நகரமும் தலைநகர் கெய்ரோவும்,
அஸ்வான் அணைக்கட்டும்,
சூயல் கால்வாயும் அவனை குதூகலமடைய வைத்தது. பாரோமன்னர்களின்
பிரமிடுகளை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது. நைல் ஆற்றங்கரையில்
விளைந்த கலாச்சாரப் பயிர்கள் எத்தனை?
கால வெள்ளத்தில் முகமதிய கலாச்சாரத்தை தாங்கி நிற்பதைக்
கண்டான்.
ரோமாபுரிச் சீசரையும் அந்தோணியையும் தன் அன்புவலைக்குள் சிக்க வைத்த பேரழகி
கிளியோபாட்ராவின் அழகினையும் அவளது அரசிய்ல திறத்தையும், அவளது
அழகிய மார்பில் புரண்ட தமிழகத்தின் எழில் முத்துக்களையும் கண்டு ரசித்தான்.
அதையடுத்து எபிரேயம்,
ஆம் இன்றைய இஸ்ரேல்,
ஏசுவை உலகுக்கு அளித்த எழில்பூசிய மண். உலகின் மக்கள்
பல்வேறு வழிபாட்டு தழைகளில் சிக்கி சிதறி சீரழிந்த நிலையில் இருந்து அவர்களை மீட்ட
உலகின் முதல் மறுமலர்ச்சித் தூதுவன்.
சில தெய்வ வழிபாட்டில் இருந்து ஒரு தெய்வ வழிபாட்டிற்கு உலக மக்களை உயர்த்திய
பெருமைக்குரிய பேராளன். அவன் வகுத்த
கோட்பாட்டில் உலகின் பெரும்பான்மை மக்கள் ஒருங்கிணைந்ததை எண்ணி உவகை கொண்டான்.
பழைய இஸ்ரேல் எதுவென்று தெரியாமல் பரம்பரையாய் வாழ்ந்து வந்த பாலஸ்தீனியரை
அகதிகளாக அனாதைகளாக ஆக்கிவிட்டு யூதர்களுக்கு அந்நிலத்தை வழங்கிய அமெரிக்கர்களை, பிரிட்டானியரை
எண்ணி நொந்தான். அகதிகளாய் அலைந்த யூதர்கள் ஆட்சியுரிமை பெற்றனர். அரசுரிமை
பெற்றிருந்த பாலஸ்தீனியர் அகதிகளாய் மாறினர். பழைய ஹீப்ருமொழி புதுக்கோலம்
கொண்டது. யூதர்களின் ஆற்றலை நினைத்து வியந்தான். எபிரேயப் பண்பாட்டின் பங்காளியான
முகமது நபி தன்னைச் சார்ந்தோருக்கு தனி மதம் கண்டு பெரும்பான்மை மக்களை தன்
பின்னால் அணிவகுக்கச் செய்ததையும் எண்ணிப் பார்த்தான். நபிகள் நாயகத்தின்
மார்க்கத்தின் பலநாட்டு மக்கள் கட்டுண்டு கிடப்பதைக் கண்டான். ஒன்றே குலம் ஒருவனே
தேவன் என்று முழங்கிய தமிழ் மகன் திருமூலரின் சைவ மதம் அந்நிலையை உருவாக்கவில்லை.
ஏசுவும் நபியும் அந்த நல்ல உணர்வுகளை உலக மக்களின் உள்ளத்தில் பதித்ததை எண்ணி
பெருமிதம் கொண்டான். சவுதி அரேபியாவுக்குள் சென்று மெக்காவை கண்டு மகிழ்ந்தான்.
மெக்காவில் இருந்து மெதினாவுக்கு நபிகள் சென்றதை விழாவெடுத்து கொண்டாடும்
முகமதியரின் உணர்வை மதித்தான். நபிகளின் கொள்கைகளை உலகில் பரப்ப கலிபாக்கள்
மேற்கொண்ட வீரத்தையும் தியாகத்தையும் நெஞ்சில் தேக்கி இன்புற்றான். கிறிஸ்துவ
பாதிரியார்கள் சிலர் தமிழகத்திற்கு வந்து தமிழ்மொழிக்கு தொண்டு செய்ததையும் அதில்
பெஸ்கி, தன் பெயரை தமிழ்படுத்திக் கொண்டதை எண்ணி இதயம் களித்தான். பின் ஓமான் சென்றான்.
ஓமான கடலில் திராவிட இயக்க வீரர் பன்னீர்செல்வம் விமான விபத்தில் மறைந்தார் எனும்
நினைவு நெஞ்சை அடைத்தது. அருகில் உள்ள துபாய், குவைத்தைப் பார்த்தான்.
கோட்டை என்ற தமிழிச் சொல்லே குவிட் ஆகி குவைத் ஆனது. மொத்தத்தில் அறிவியல்
வளர்ச்சியின் பயனால் அராபிய நாடுகள் எண்ணெய்யை எடுத்து விற்று வளம் பெருகி
ஏற்றமிகு நிலையை எய்தியது கண்டு மகிழ்ந்தான். ஈச்சம்பழத்தை மட்டுமே உண்டு
இலக்கியம் பல படைத்தவர்கள் இன்றைய நிலையில் என்னவெல்லாம் செய்வார்களோ? பாக்தாத்
எனும் இராக்கிய நகைர நினைக்கின்றபோது 1001 இரவுகளும்,
சிந்துபாத்தின் முகமும் அவன் நெஞ்சில் ஊஞ்சலாடியது.
அய்ரோப்பியருக்கு பல்வேறு அறிவக் கருவூலங்கலை விளம்பரமின்றி அள்ளி வழங்கியவர்கள்
அராபியர் எனும் நினைவு அவர்களைப் பற்றிய மதிப்பை மேலும் உயர்த்தியது.
பின் ஆப்பிரிக்காவின் இருண்ட பகுதி எனும் செழிப்பான இயற்கை வளம் நிறைந்த எழில்
மண்ணை காணப் பறந்தான்.
13. புத்துலகம் கண்ட புதுமனிதன்
ஆப்பிரிக்கா
நெடுநாள் அடிமை மனோபாவத்திலிருந்து விடுபட்டு விடுதலை உணர்வை நெஞ்சத்தில்
ஏந்தி போராடி வெற்றி பெற்று விடுதலை கீதம் இசைக்கிறது, ஆப்பிரிக்க
மண்டலம். நங்க்ருமா,
கென்யாட்பா,
முகாபே போன்ற தலைவர்களின் முயற்சியும் உழைப்பும் அந்த
மக்களுக்கு உரிமையும்,
உயர்வையும் வழங்க பயன் பட்டது. காங்கோ விடுதலை வீரன், லும்பாவின்
வாழ்வும் சாவும் மேலும் உத்வேகத்தை ஊட்டியது. ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் மண்ணை
தாங்களே ஆளும் உரிமை பெற்றன.
அய்ரோப்பாவின் ஆதிக்கம் அறுபடத் தொடங்கியது. வில்லில் இருந்து விடுபட்ட
கணைபோல் பல நாடுகள் முன்னேற்றத்தை நோக்கி வேகநடை போடத் தொடங்கியது. கனிவளங்கள்
நிரம்பிய தென் ஆப்பிரிக்காவை மட்டும் விட்டுவிட அவ் வெள்ளையர்களுக்கு மனமில்லை
தங்கப்பாளைங்களை கொள்ளையிட இதை விட வேறு இடம் வெள்ளையர்களுக்கு கிடைக்கவில்லை.
அதனால் மண்ணின் மைந்தர்களை அடிமைகளாக அடக்கிய வண்ணம் இருக்கிறார்கள். தென்
ஆப்பிரிக்க விடுதலைக்குப் போராடிய நெல்சன் மாண்டலே 26 ஆண்டுகளுக்குப் பிறகு
சிறையில் இருந்து விட்டு வெளியுலகைப் பார்த்திருக்கிறார். தங்கனியா, கென்யா, மொராக்கோ, சூடான்
போன்ற இடங்களின் அழகுமிகு இடங்களை ஆற்றின் பேரழகை அருவியில் வழியும் வெள்ளி நீரை
கிளிமஞ்சாரோ போன்ற சிகரங்களை கண்டு மகிழ்ந்தவன், மோரிஸ் தீவில் தமிழர்களின்
வாழ்வு, வளர்ச்சியினை அறிந்து கொண்டபின் மடகாஸ்கரில் தமிழர்கள் பரப்பிய மாயா
நாகரிகத்தை களிப்புடன் கண் விழித்துப் பார்த்தான். தமிழர்கள் தங்கள் கலாச்சாரங்களை
அட்லாண்டிக் தீவுகளிலும்,
பசிபிக் தீவுகளிலும்,
அமெரிக்கக் கண்டத்திலும் பரப்பியது காண அவனுக்கு பூரிப்பு
ஏற்பட்டது. எதியோப்பியா மக்கள் திராவிடர்களின் நெருங்கிய உறவினர்களாக இருப்பது
அவனுக்கு வியப்பாக இருக்கிறது. அறியாமையும் வறுமையும் அவர்கலை ஒன்றாக்கி இருக்கும்
என்று எண்ணிக் கொண்டான். கறுப்பு இன மக்களின் துன்பமும், துயரமும்
அவர்களின் அடிமை வாழ்வும்,
அவதிகளும்,
அவைகளில் இருந்து விடுபட அவர்கள் செய்த தியாகமும் அவன்
நெஞ்சில் நிழலாடியது. விழிநீர் கன்னத்தில் உறவாடியது. தென் ஆப்பிரிக்காவில்
கறுப்பின மக்களுக்காக போராடிய காந்தியாரும்,
காந்தியாருக்காக பல வகையில் உதவி அவருடைய உயர்வுக்கு உதவிய
தமிழர்களும் அவர் நெஞ்சில் தோன்றினர். காந்திக்கும் நேதாஜிக்கும் தோள் கொடுத்து
தியாகம் செய்தவர்கள் தமிழர்கள் என்பதை எண்ணிப் பெருமிதம் கொண்டான்.
ஆஸ்திரேலியாவும்,
ஆப்பிரிக்காவும் நிலப்பரப்பில் ஒன்றாக இருந்த நாளில், குமரிக்
கண்டத்து தமிழ்மக்கள் இரு கண்டங்களிலும் குடியேறி, இயற்கையோடு இணைந்து
வாழ்ந்ததை எண்ணிப் பார்த்தான். போதும் என்ற மனம் பொன் போன்றது என்று கருதியதால்
வளர்ச்சியை நோக்கி நடக்க மறந்து இருந்த இடத்திலேயே வாழ்ந்து மடிந்தார்கள்.
அய்ரோப்பாவின் அறிவியல் புரட்சி அவர்களையும் இன்று தொட்டு சுகமளிக்கும் நிலைகளை
நேரில் கண்டான் சுந்தரலிங்கம்.
ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகளும் அதில் உயர்ந்த மரங்களும், பூத்துக்குலுங்கும்
மலர்க் கூட்டமும்,
தொங்கும் இனிய கனிகளும், மண்ணில் மறைந்திருக்கும்
கனி வளங்களும்,
அங்கு வாழும் இனிய மக்களையும், விலங்குகளையும்
கண்டபின் அய்ரோப்பாவுக்குள் தன்னை அய்க்கியப் படுத்தினான் அற்புத உடல் படைத்த
அன்பு மகன் சுந்தரலிங்கம்.
No comments:
Post a Comment