Tuesday, 10 January 2017

5. புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி..
கோவா
போர்த்துக் கீசியரின் பிடியில் இருந்து விடுதலை பெற்று கடைசியில் இந்தியாவுடன் இணைந்த பகுதி அது. அம்மண்ணின் விடுதலைக்குப் போராடி, போர்த்துக் கீசியர் நாட்டு சிறையில் வாடிய... கோவா விடுதலை பெற்ற பின்னரும் விடுதலை பெறாத அந்த விடுதலை வீரனின் விடுதலைக்கு வழிகோலிய பேரறிஞர் அண்ணாவை நெஞ்சில் கொண்டு வந்தான் சுந்தரலிங்கம்.
மைக்கேல் ரானடே எனும் அம் மாவீரனின், விடுதலைக்குப் போப்பாண்டவரின் மூலம் முயன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் போர்த்துக்கீசிய சிறையில் இருந்து விடுவித்தார். அங்கிருந்து மராட்டிய மண்டலத்தில் தன் விழிகளை நாட்டினான்.
மராட்டியம் பண்டை நாள்தொட்டு தென்னகத்தைச் சார்ந்தது. வஞ்சமறியா உணர்வுகளுக்கு உரியவர்கள் அவர்கள். மலைவளம் நிறைந்த பம்பாய் நகர், கடல் தன் கரம்கொண்டு தழுவும் சுகம்பெற்றது. மலை எலி எனப் புகழப்பட்ட மாவீரன் சிவாஜியின் போர்த்திறத்தால் மராட்டிய பேரரசு அமைந்ததும், அம்மாவீரனை தாழ்ந்த குலம் என இகழ்ந்து அதை மாற்ற யாகங்கள் நடத்தி பொருள்களை தம் இனத்தவர்க்கு வாரியிறைத்து மராட்டிய களஞ்சியத்தை வெற்றிடமாக்கி சிவாஜிக்கு சமத்திரியப் பட்டம் சூட்டிய கங்கை நதியருகே வாழ்ந்ததாகப் பட்டர் எனும் ஆரியகுல வேதியனை நினைத்து மனம் வெந்தான். வீரத்தால் பெற்ற அரசை ஒரு வேதியனின் காலில் வைத்து வணங்கிய சிவாஜியின் சிறுமையை எண்ணி நொந்தான். களஞ்சியம் காலியானதால் அவன் வழித்தோன்றல்கள் தொடர்ந்து ஆள முடியாது துயருற்று பேஸ்வாக்களின் பிடியில் சிக்கியதை எண்ணி இதயம் வருந்தினான்.
வெள்ளியரின் அறிவியல் உணர்வால் தொழில் நுட்பத் திறனால் ஆலைகளும், பிற தொழிற்சாலைகளும் தொடங்கப்பெற்று தொடர்ந்து வளர்க்கப்பட்டு இந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழப்பட்ட பம்பாயை கண்டு மகிழ்ந்தான். வானுயர்ந்த மாடமாளிகைகளை கண்டு வியந்தான். மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளை தொடர்ந்த சுந்தரலிங்கம் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை அம்பேக்கரின் ஊரை வணங்கினான். தென்னகத்தைப்போல் மண்ணின் மைந்தர் உணர்வுகள் அங்கேயும் செழித்திருப்பதைக் கண்டு பெருமிதம் கொண்டான். தமிழர்கள் அங்கு சென்றும் - ஒற்றுமையின்றி உருக்குலைவதை எண்ணி அவன் இதயம் அழுதது.
குசராத்
மராட்டியத்திலிருந்து அண்டையில் உள்ள குஜராத்தை காணச் சென்றான். கூர்ச்சரம் என்று வழங்கப்பட்ட குஜராத், அதன் கிர்காடுகளின் வனப்பை கண்டு ரசித்தான். காந்தியார் பிறந்த போர்பந்தர் எனுமிடத்தை விழிகளில் ஒற்றி வணங்கினான். உலக உத்தமர் என்றாலும், இந்திய மக்களின் பிதா என்றாலும், மகாத்மா என்று புகழப்பட்டாலும் காந்தியார் தன் தாய்மொழிப்பற்றை துறக்காதது கண்டு பூரித்தான். அவர் தன் சுயசரிதையை குஜராத் மொழியில் பதிப்பித்ததை எண்ணி இதயம் களித்தான்.
விந்திய சாத்பூரா மலை முகடுகளின் வழியே ஒரிசா என்னும் கலிங்கத்தின் மீது தன் விழிப் பூக்களை விரிய விட்டான்.
கலிங்கம்
கலிங்கம்... காவியப் பெருமை வீரம் விளைகின்ற பூமி. போர்வெறிகொண்ட மாமன்னன் அசோகனை அகிம்சாவாதியாக மாறறிய புனித மண். தினவெடுத்த தோள்களுக்கு போர் தொடுத்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதுபோல தெற்கிலும் வடக்கிலும் கலிங்கத்தின் வீரர்கள் பொருதிக் கொண்டே இருந்தார்கள். குலோத்துங்கனின் படைகள் கருணாகரத் தொண்டைமானின் தலைமையில் கலிங்கத்தை வென்றதால், கலிங்கத்துப்பரணி என்று தமிழ் இலக்கியத்திற்கு பரிசாக கவிதைச் சிமிழ் ஒன்றை செயங்கொண்டார் வழங்கியிருக்கிறார்.
கோனார்க்கில் உள்ள சிற்பவடிவங்கள் கொக்கோகத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. பல மத ஆதிக்கத்தில் அது இருந்ததற்கான காட்சிகள் அங்கும் நிரம்ப உண்டு. இதையெல்லாம் எண்ணப் படத்தில் கண்டபடியே மகதம் எனும் இன்றைய பீகாரில் நுழைந்தான் இனியவன் சுந்தரலிங்கம்.

No comments:

Post a Comment