Thursday, 19 January 2017

16 & 17 புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி…

நிலவுலகின் நிலை
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற வள்ளுவன் குறள் மொழிப்படி சுழலும் இந்த உலகில் எத்தனை வேறுபாடுகள், எத்தனை விசித்திரங்கள் என்று எண்ணிப் பார்த்தான். மண் வேறுபாடுகள், பருவ வேறுபாடுகள், தோற்ற வேறுபாடுகள், சுவை வேறுபாடுகள், சுக வேறுபாடுகள் வாழ்க்கை நிலையில் ஏற்படும் வேறுபாடுகள் மனநிலை வேறுபாடுகள், தத்துவங்களில், சித்தாந்தங்களில் உள்ள வேறுபாடுகள் அந்த வேறுபாடுகளின் விளைவால் தோன்றும் நன்மையும் தீமையும், ஆக்கமும் அழிவும் அவனிடம் அடையாளம் காட்டிக் கொண்டன.
ஒற்றுமையில் வேற்றுமையும் வேற்றுமையில் ஒற்றுமையும் அவன் சிந்தனையைக் கிளறியது. மனிதனின் உள்ளுறுப்புகள் ஒற்றுமையென்றாலும் வெளிப்புறத்தில் வேற்றுமையடைகிறது. வெளிப்புறத்தில் வேற்றுமையென்றாலும் உள்ளே உருவாகும் எண்ணங்களும் உறுப்பெறும் சிந்தனைகளும் ஒன்று படுகின்றன.
நிறம் மாறிய இனங்கள், குணம் மாறிய மனிதர்கள், தடம் மாறிய கொள்கைகள், நிலைமாறிய நிகழ்ச்சிகள், கோடுகள் எல்லையாகி நாடுகளாகிய நிலங்கள் எல்லாம் அவன்முன் தன் நிறம் காட்டி நின்றன. போதையின் விளைவாகத் தோன்றும் நலனும் நாசமும் காட்சிகளாகி அவன் கண்முன் நின்றன. அறிவியல் போதை ஆராய்ச்சிப் போதையாகி இந்த அகிலத்தை வளரச் செய்தது. மன ஆசை போதையாகி அழிவிற்கு வலிகோலியது. பொது வாழ்வுப் போதை பலரை புகழ் மனிதராக்கியது. பொல்லாங்கு மணம் கொண்டோர் கொண்ட போதையில் பலர் பொசுங்க நேர்ந்தது. மனம் கொண்ட அன்பு காதலுக்காக அரச பதவியைத் துறப்பதும், அரசுப் பதவிக்காக அன்பு நெறியைக் கொல்வதும் ஆண்டாண்டு காலமாக நடந்த வண்ணம் இருக்கிறது. கயமை, கள்ளத்தனம், கையூட்டு, உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசும் கபட நிலை ஆகிய யாவும் கைவீசி வேக நடை போடுவதாகவே தோன்றியது அவனுக்கு. மருந்து மிகுதியானால் நஞ்சாவதும் நஞ்சில் நலம்பயக்கும் நல்ல மருந்திருப்பதும் இயற்கை எத்தனை விளையாட்டுக்களை நடத்திக் காட்டுகிறது என்று எண்ணிக் கொண்டான். கண்ணுக்குத் தெரியாத சிறிய அணுவில் ஒரு உருவத்தின் உறுப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய இயற்கை, பெரிதாக உருக்கொண்ட உடன் எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்த வைக்கிறது. அன்பும், பண்பும், கனிவும் காதலும், கருணையும், எழிலும், இதய ஈரமும், இளகிய மனச்சாரமும், பெருங்குணமும், பேராண்மையும் ஆகிய உணர்வுகளைக் கொண்ட உருவங்களை உருவாக்கும் இயற்கை, இந்த உணர்வுகள் இம்மியும், இல்லாத கல் மனக்காரர்களையும் தோற்றுவிக்கிறதே என எண்ணி வியப்புற்றான், பின் வேதனையுற்றான். எல்லையற்றதாக உலகம் இருக்க வேண்டும் என்று இனிய தமிழ்க் கவிஞன் கணியன் பூங்குன்றனும் செர்மானிய சிந்தனைக் கருவூலம் காரல் மார்க்சும் கண்ட கனவுகள் இன்றும் கனவாகவே இருப்பதாக உணர்ந்தான்.
உலகு உலகு என்று பறைசாற்றிய தமிழ்க் கவிதைகள் தரும் உணர்வுகள் ஒன்றிய உலகத்தை உருவாக்கவில்லை. மாறாக உரைத்த தமிழினத்திற்கே பாதகமாக முடிந்ததைக் கண்டான். பொய்மைகள் புரையோடி விட்ட இந்த மண்ணில் பொல்லாங்குத் தனம் போர்க்கோலம் பூண்டுவிட்ட இந்த உலகில் உண்மைகல் உலா வர வேண்டும். நீதி உணர்வுகள் நிலைக்க வேண்டும். மனித மனங்களில் நல்லொளி வீச வேண்டும் என்று தன் உள்ளக் கருத்துக்களை உலவ விடும் முயற்சியில் தங்கள் உயிர்களை இழந்த உத்தமர்களை நினைத்து கண்ணீர் உகுத்தான்.
இயற்கை தன் இதயக் கதவுகளைத் திறந்து வைத்து, எல்லோரும் வாருங்கள் என்னிடமுள்ள செல்வங்களை வாரிச் செல்லுங்கள், இன்புற்று வாழுங்கள் இனிய உணர்வுகளை உங்கள் இதயத்தில் தேக்கி வையுங்கள் என்று வேறுபாடின்றி எல்லோரையும் அழைக்கிறது. காடு வளம், கனிவளம், கடற்செல்வம், மலைவளம், மழை வளம் என்று தன் கருவறைக்குள் கணக்கற்ற செல்வங்களை காத்து வரும் இயற்கையை நேசிக்காமல் அதற்கு தன் நன்றி உணர்வை காட்டாமல் அந்த இயற்கைக்கே இடையூறு விளைவிக்கும் மனிதர்களை, அதுவும் கற்றறிந்த கனைவான்களை எண்ணி கவலையுற்றான். வான் வெளியை வலம் வரும் காற்று மண்டலத்தை களங்கப்படுத்துவோரை மனதில் கடிந்து கொண்டான்.
ஆதிக்க மனநிலையும், அடிமை மனோபாவமும் ஆதிகாலத்தில் இருந்த பல்வேறு நிலைகளில் பல்வேறு உருவங்களில் இந்த உலகில் வாழ்ந்து வருவதை எண்ணி வருந்தினான். ஆழ்ந்து சிந்திக்காமல், அறநெறியை நெஞ்சில் கொள்ளாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று மனிதர்கள் வாழ்வதால், வளைந்த வரலாறுகளும், வாழ்வில் சரிவுகளும் தோன்றுவதைக் கண்டான் தூய மகன் சுந்தரலிங்கம்.
புயல், பூகம்பம், இடி, மின்னல், மழை, எரிமலைச் சிதறல் ஆகிய இயற்கைச் சீற்றங்களால் இறந்தோரை விட, மதச் சண்டையில் மாய்ந்தோர் மிகுதி எனும் நிலை அஜன் மனதை வாட்டியது. நூற்றாண்டு கால சிலுவைப் போரில் மடிந்த வீரர்களும் மற்றும் பல்வேறு மதச் சண்டையில் இறந்தவர்களையும் நினைத்து வருந்தினான்.
தொண்மைக் காலத்தில் தமிழ் மகள் அவ்வை கூறிய குற்றம் பார்க்ணுன் சுற்றமில்லை, என்பதை உள்ளத்தில் உறைய வைக்காத காரணத்தால் மனித இனங்கள் அனைத்தும் ஓரிடத்தில் இருந்தே உருவானது எனும் உறவுப் பாதையை மறந்து போனதால் நெறிகெட்டு நேர்வழி கெட்டு மதபோதையில் சிக்கி மனிதர்கள் மாய்வதை எண்ணி மனம் கலங்கினான்.
இத்தனைக்கும் இடையில் அறிவியல் வழியாக உலகை உயர்த்த ஓயாது போராடும் நல்லறிவாளர்களும், மனித நேயத்தை மறந்துவிடாத மாமனிதர்களும் இந்த உலகில் சீர்மைகள் நிலவ, சிறப்புகள் துலங்கச் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் அவனுள் தோன்றியது.
உலகைச் சுற்றி வரும்போது அவன் பார்த்த காட்சிகளெல்லாம் ஒளிநாடா போல் அவன் உள்ளத்தில் ஓடிக் கொண்டிருந்தது. கண்டங்கள், கடல்கள், பெருங்கடல்கள், குழந்தைகள் போல் கடலில் விளையாடும் கடல்ச்சீல்கள், அலைகடல் மீது அசைந்தாடி மகிழும் ஆயிரக்ணீணக்கான கப்பல், மனித உடலில் ஓடும் நரம்புகள் போல் உலகெங்கும் உள்ள இருப்புப் பாதைகள். அதன்மீது கடமையே கண்ணென கருதிச் செல்லும் வண்டித் தொடர்கள் வானில் பறவையைப் போல் நீந்தும் வாகனங்கள், இடம்விட்டு இடம்மாறி இரை தேடிச் சென்றாலும் தன் இருப்பிடத்திற்கே திரும்பி வரும் இனிய அழகிய பறவைகள், மலை முடிகள், அதன் மீது கதிரவனின் மஞ்சள் ஒளிபடும்போது ஏற்படும் பேரழகு, வானுயர்ந்து நிற்கும் மரக்ணீõடுகள், மலர்ச் சோலைகள், பயன்மிகு பழத்தோட்டங்கள், பாசமிகு மனிதர்கள், வலிமையுடன் எளிமையும் மிக்க அரசர்கள், ஆண்மை மிக்க அரசுத் தலைவர்கள், அடங்கி அடிமையாகி கிடக்கும் அரசு நிர்வாகிகள், பயன்மிகு நிலங்கள், பாழான இடங்கள் ஆகிய அனைத்தும் அவனுக்கு மீண்டும் தன் முகங்காட்டி நின்றன. இதற்கிடையே அவன் இதயம், அவன் பிறந்த பகுதிக்கு மீண்டும் பறந்து சென்றது. என்னதான் உலகைச் சுற்றினாலும், அண்டவெளியில் அடுத்து அவன் செல்ல பிறந்த மண்ணில் மீதுள்ள பாசத்தை துறந்திட அவன் உள்ளம் இணங்கவில்லை போலும். அதிலும் இரத்த நாளத்தில் இணைந்துவிட்ட இனிய தமிழ் மொழியை பேசிப் பழகி வாழ்ந்த உயிர் தமிழகத்தையும் அவன் ஊரையும் எப்படி மறக்க இயலும். இளகிய இதயத்தோடும், கலங்கிய விழிகளோடும் தமிழகத்தையும் அவன்  உறவினர், நண்பர்களையும் தன் உள்ளத்தில் பதித்துக் கொண்டான். தமிழ் இலக்கியங்களின் மைய இழையாக ஓடும் அறிவியல் கலாச்சார உணர்வுகளை ஏந்தும்... அதாவது மனம் திறந்து உள்ளத்தை உரைக்கின்ற உள்ளங்கள் உலகில் அதிகமாகும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மனிதர்கள் மாய்வார்கள், மறைவார்கள். உலக மனிதர்கள் அனைவரும் உறவினர்கள் எனும் பாச உணர்வு மனித உள்ளங்களில் தழைத்து வளரும் என்று உறுதியாக எண்ணினான் உயர்ந்த மனிதன் சுந்தரலிங்கம்.
இதிகாச மடமைகளை எடுத்துக்கூறும் இலக்கிய மன்றங்கள், மதச் சடங்குகளை மக்களிடம் பரப்பும் முயற்சிகளில் ஈடுபடும் பெரிய மனிதர்கள். பகவத் கீதையின் பம்மாத்தையும் பைபிளின், பழைய - புதிய ஏற்பாடுகளையும் குர்ஆனின் கூற்றுக்களையும் உதயமாகும் ஒவ்வொரு நாளும் ஓங்கி முழங்கி வரும் அமைப்புகள் ஆகிய அனைவரும் அந்த பயனற்ற பாதையில் இருந்து விலகி பயன்மிகு விஞ்ஞானத்தை விளக்கும் - விவரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். உதவாக்கரை சொற்களையெல்லாம் மனதில் உருப்போட்டு எடுத்துக்கூறும் வேதபாராயண விற்பன்னர்கள் எல்லாம் அறிவியலை மக்களிடம் எடுத்துக் கூறும், ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட வேண்டும். அறிவியல் உணர்வுகளை மக்களிடம் பதிய வைத்தால், ஒவ்வொரு மனிதனின் செயலிலும் அறிவியல் உணர்வுகள் ஒளி வீச தொடங்கினால், வேதங்கள், இதிகாசங்கள், உபநிடத்துக்கள், சுலோகங்கள் கூறுகிறதே இறைவன் உறைகின்ற சொர்க்கம், அந்தச் சுகம் அனைத்தும் எல்லோருக்கும் இந்த மண்ணில் கிடைக்கும். இதை மதவாத பித்தர்கள் உணர வேண்டும், சீரிய சித்தர்களாக மாற வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டான்.
அய்ன்ஸ்டினின் தத்துவத்தை, அய்சக் நியூட்டனின் விதிகளை, ஆல்வா எடிசனின் படைப்புகளை டார்வினின் பரிணாம வளர்ச்சியை, மெண்டலிபின் கோட்பாடுகளை எல்லார்க்கும் எடுத்துக் கூறும் இனிய தொண்டினை கற்றவர் மேற்கொள்ள வேண்டும். விஞ்ஞான உணர்வுகளை மனிதர்கள் உள்ளத்தில் ஊன்றி விதைத்து வளர்த்து மலர்ந்து கனிய வைக்க வேண்டும். அறிவியல் பண்பாடு எல்லோரு மனதிலும் குடிகொள்ள வேண்டும், என்று விரும்பினான். வேறுபாடுகளும், வீண் மனிதர்களும் நிரம்பியிருக்கின்ற இந்த உலகை வேதனையோடு பார்த்தான்.
இந்த உலகில் நிலவும் இடர்பாடான சூழல்கள் இல்லாத உலகம் ஒன்று இருக்குமா என்று சிந்தித்தான். அறிவியல் அறிஞர்களின் பல்வேறு ஆய்வுகளை ஆராய்ந்தது அவன் மனம். அண்டவெளியில் பயணம் செய்து அப்படியொரு உலகை காணத் துடித்தது அவன் உள்ளம்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம், கருதி
இடத்தாற் செயின்.

என்ற குறள் மொழியின்படி செயல்படத் துணிந்தான் சூப்பர்மேன் சுந்தரலிங்கம்.
விண்வெளியில்
உலகின் விளிம்பில் நின்றுகொண்டு மீண்டும் ஒருமுறை தான் பிறந்த தமிழ் நிலத்தையும் தமிழ் இலக்கியச் செல்வங்களையும் உயிர் தமிழின் உயர்வையும் எணணியபோது அவன் மனம் கலங்கித் தவித்தது. உருகிய உள்ளத்தை சற்றுத் தெம்புடன் உறைய வைத்தவாறு உயரே விழி நோக்கினான். விழி சென்ற திக்கில் அவன் உடல் மேலேறியது. முகில் கூட்டத்திற்கு கீழே உருண்டு வரும் உலகை தன் விழிகளால் பார்த்தான்.
இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!
மருட்டுகின்ற மதத் தலைவர் வாழ்கின்றாரே!
வாயடியும் கையடியும் மறைவதென்னாள்?
என்று முழங்கிய புரட்சிக் கவிஞன் தோற்றமும் அந்த மாக் கவிஞனை  மக்களிடம் பதித்த பேரறிஞர் அண்ணாவும் அண்ணாவை அடையாளம் காட்டிய தந்தை பெரியாரும் இதயத்தில் பதிந்தனர்.
உலகம் பல வண்ண ஓவியமாய் கண்ணுக்கு குளுமையூட்டியது, தூரத்தே இருந்து பார்க்கும்போது உருண்டையாய் கூடத் தெரியவில்லை. நிலவைப் பார்ப்பதுபோன்ற தோற்றமே தெரிகிறது. ஒளிவட்டம் காட்டும் இதன் மேற்பரப்பில் தான் எத்தனை நிகழ்ச்சிகள் எத்தனை எண்ணங்கள், எவ்வளவு ஆசைகள், அதற்காக எவ்வளவு அழிவுகள், அவலங்கள், அத்தனையும் மீண்டும் அவன் முன் நின்றன!
நீல வடிவாய் தெரிந்த வானத்தில் கருமை தன் கரங்கொண்டு தழுவ ஆரம்பித்தது. பூமியல் மட்டும் நீலநிறமாய் தெரிவது ஏன்? காற்று மண்டலத்தில் உள்ள தூசியில் கதிரவனின் ஒளிரேகைகள் படுவதால் ஏற்படும் தோற்றமே அது என்று உணர்ந்தான்.
பூமியில் இருந்து செலுத்திய பல்வேறு செயற்கைக் கோள்கள் பூமியை சுற்றிக்கொண்டு இருப்பதைப் பார்த்த சுந்தரலிங்கம் மனித ஆற்றலினை எண்ணி மகிழ்ந்தான். சூரியனை சுற்றிவரும் கோள்கள் ஒவ்வொன்றுக்கும் செல்ல ஆசைப்பட்டான் என்றாலும், அந்தக் கோள்களைப் பற்றி நிலவுலக அறிஞர் பெருமக்களின் ஆய்வுகளை தெரிந்து வைத்திருந்ததால் புதிதாக அங்கே காண ஏதுமில்லை என்று முடிவு செய்து இந்த சூரிய குடும்பத்தை விட்டு மற்றொரு காலாக்சிக்கு செல்ல முடிவெடுத்தான். அவன் செல்லுகின்ற பாதையில் அவன் கண்ட காட்சிகள் இயற்கையின் இனிய கோலத்தை அவனுக்கு எடுத்துக் காட்டின! சூரியனை சுற்றிவரும் கோள்கள், அந்தக் கோள்களை சுற்றிவரும் துணைக் கோள்கள் அத்தனையும் அவன் முன் அழகிய காட்சியாகத் தோன்றியது. தகத்த காயமாய் பொன்னொளியை அள்ளி வீசும் பகலவனும், அதைச் சுற்றும் வியாழனும், வியாழனின் பதினான்கு சந்திரன்களும் சுற்றிலும் வாயுக்களின் வளையத்துடன் சுற்றிவரும் சனிக்கோளும் செந்நிறக் கோளுமாய் சுற்றிவந்து கண்ணுக்க குளுமைதரும் செவ்வாய்க் கிரகமும் சாம்பல் நிறத்தில் தள்ளாடி தள்ளாடி நடக்கும் புதனும், தூரத்தே தெரிகின்ற நெப்டியூனும் புளூட்டோவும், திடப் பொருளாக, திரவப் பொருளாக ஆவி நிலைப் பொருளாக உருண்டபடியே வாழ்வதைக் கண்டான். எல்லாக் கிரகங்களின் இயக்கத்தையும் ஒரே இடத்தில் இருந்து காணும் வாய்ப்பு அவன் உள்ளத்தில் உவகையை பெருக்கெடுக்க வைத்தது. சூரியக் குடும்பக் கோள்கள் மட்டுமின்றி தொலை தூரத்தில் இருந்து ஒளிவீசும்  கோடிக்கணக்கான விண்மீன்களின் பேரொளியில் மனம் பறி கொடுத்தான். நெப்டியூனைத் தாண்டிச் செல்ல நினைத்தவன் ஏனோ அதன் எதிர் திக்கில் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
இரவு பகல் என்றெல்லாம் அந்த விண்ணின் விரிவானத்தில் ஏதும் தெரியவில்லை. காலை மாலை என்று நேரங்கள் பிரிக்கப்படவில்லை. பொன்னிறக் கதிர்களை அள்ளிவீசும் தன்னொலி விண்மீன்களும் அந்த விண்மீன்களிடம் இருந்து தானமாகப் பெற்று குளுரூட்டி ஒளி வழங்கும் துணைக் கோள்களும் அவன் கண்ணிலிருந்து மறையாமல் தண்ணொளி காட்டி நின்றன. வியாழன் சூரியனாக மாறிவரும் விந்தையும் அவன் கண்ணுக்குத் தெரிந்தது. ஆம் பூமியில் தாத்தா - தந்தை - மகன் - பேரன் என்பது போல் ஒருவரின் ஆற்றல் குறைகின்ற போது, மற்றொருவர் அந்த இடத்தை நிறைவது செய்வது போல விண்வெளியிலும் நிகழ்கிறது. சூரியனின் ஆற்றலை வியாழன் பெற்று சூரியனாக மாறி வருவைதக் கண்டான். சூரியன் முழுமையாகத் தன் ஆற்றலை இழக்கின்றபோது வியாழன் சூரியன் செய்கின்ற வேலையை மேற்கொள்ளும் என அறிந்தான். அது மட்டுமின்றி தூசியின் வடிவில் உயிர்ப் பொருட்கள் அண்டவெளியில் முழுவதும் பயணம் செய்த வண்ணம் இருப்பதைக் கண்டான். விண்வெளியில் பறந்து கொண்டே இருந்தால் உடல் முதுமையடைவதில்லை எனும் உண்மையும் புரிந்தது. எங்கும் ஏகவெளியாய் தெரிந்த விண்பரப்பில் உருண்டபடியே உயிர் வாழ்கின்ற விண்மீன்களையும் கோள்களையும் தூசிகளையும் தவிர வேறெதுவும் தெரியவில்லை அந்த கம்ப்யூட்டர் கண்ணுக்கு. பூமியில் புராணங்களில் சொல்லப்படும் வாசமிகு வைகுந்தமோ, கானமிகு கைலாயமோ, சீர் நிறைந்த திரிசங்கு சொர்க்கமோ, எமலோகமோ இருப்பதாக தெரியவில்லை.
இந்திர லோகமோ, அங்கு ஆளுமை செய்யும் இந்திரனோ, அவனுக்கு முன் ஆடும் மயிலாய் அழகு காட்டும் அரம்பையோ, ஊர்வசியோ, மேனகை திலோத்தமையோ யாரும் இல்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள். நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகள் அவர்களின் அழகு மிகுந்த ரிஷிபத்தினிகள், கின்னரர், கிம்புருடர், அஷ்டத்திற்கு பாலகர்கள், அசரீரிக்குரல்கள் எதையுமே காணவில்லை அந்த ஏகப் பெரு வெளியில், ஓம் எனும் பிரணவமந்திரத்தின் ஓங்காரக்குரல் எதுவும் கேட்கவில்லை அவனுக்கு. மூச்சுக்கு ஒருதடவை நாராயண எனும் நாமம் தொனிக்க நாவசைத்து கானம் பாடும் நாரத மாமுனியைக்கூட காணவில்லை.
அண்டசாரசரமெங்கும் ஆட்சி புரிகிறாள் என்று கதை அளக்கப்படும்
ஆதிபராசக்தியாவது தெரிகிறாளா என்று பார்த்தான் எங்கும் அவளைக் காணோம். மணம் முடிக்காமல் மாங்கல்யம் சூடாமல் அழகுமிகுந்த பெண்களை அள்ளிச்சென்று உடலின்பம் பெறுகின்ற கரிநாவர்களையும் காணவில்லை.
பரமண்டல ராஜ்ஜியமோ, பரமபிதாவோ, பரிசுத்த ஆவியோ அங்கு இல்லை. புராணங்களில் சொல்லி வைக்கப்பட்டதெல்லாம் வெறும் பொய்கள், புளுகுமூட்டைகள், புனைக் கதைகள் என்று புரிந்து கொண்டான். புதுமனிதன் சுந்தரலிங்கம். உழைப்பவர்களின் பொருளை உறிஞ்சி வாழ்வதற்காக உழைக்காத எத்தர்கள் செய்த ஏமாற்று மொழிகள் அவை என்று எளிதாக அவன் உள்ளத்தில் பதிந்தது.
கண் முன்னே காணும் உலகில் கஷ்டங்கள் இருந்தாலும் கவலைப் படாதீர்கள். பொய்யான இவ்வுலகில் சுகம் இல்லை என்று சோதிக்காதீர்கள். இவ்வுடல் மறைந்த உடன் வானுலகில் மங்காத நலம் கிடைக்கும். மனம் களிக்கும் என்றெல்லாம் எவ்வளவு நயமாக மக்களை ஏமாற்றி வாழ்கிறார்கள் எத்தர்கள் என்றெல்லாம் எண்ணிக் கொண்டான்.
சூரிய குடும்பத்தின் கிரகமான புளுட்டோவைக் கடந்து அவன் பயணம் செய்த வண்ணம் இருந்தான். நெடுந்தொலைவுப் பயணம் செய்தவன் வியப்பூட்டும் ஒரு காட்சியைக் கண்டான். பூமியிலிருந்து புறப்பட்டு புவியின் ஈர்ப்பு நிலையைத் தாண்டி வெற்றிடத்தில் பயணம் செய்த போது இடைப்பட்ட கோள்களைப் போல இங்கும் பல்வேறு கோள்கள் சுற்றிவருவதைக் கண்டான். ஆம், அவன் மற்றொரு சூரிய குடும்பத்தின் எல்லைக்கு வந்து விட்டான் என்பதை உணர்ந்து கொண்டான். புளுட்டோ கிரகத்தை தாண்டியவுடன் அவன் கண்ட முதல் கிரகம் நெப்டியூனைப் போல இருந்தது. அதையும் கடந்து நெடுஞ் தொலைவுப் பயணம் செய்த பின்னர் ஒரு கிரகத்தின் முகில் வளையத்திற்குள் நுழைந்தான். என்ன ஆச்சர்யம் அவன் நிலவுலகில் பார்த்தது போன்ற காட்சிகள் அவன் கண்ணில் தோன்றியது.

No comments:

Post a Comment