Friday, 6 January 2017

புத்துலகம் கண்ட புது மனிதன் அணிந்துரை - பரிந்துரை - அறிமுகம்

அணிந்துரை
வை. கோபால்சாமி, எம்.ஏ., பி.எல்.,
நெல்லை.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
,
தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர்.
நம் உயிர் இயக்கும் சுவைப்பாட்டாம், கழகத்தின் மீது கரையற்ற பற்றுதலும், நம் உணர்வியக்கும் செந்தமிழாம் தலைவர் கலைஞர் அவர்கள் மீது எல்லையில்லா பாசமும் கொண்ட, என் நேசத்திற்குரிய நண்பர் திரு. சங்கீதா இரா.கண்ணன் அவர்கள், தன்னால் கழகத்திற்கு மேலும், மேலும் வளர்ச்சி கிட்ட வேண்டுமென்கிற தனிப்பரிய உணர்ச்சி மேலீட்டால் இந்நூலைப் படைத்துள்ளார்.
சொல்லுக்குச் சொல் சுவை கூட்டி, வரிக்கு வரி இலட்சிய பண்மீட்டி, அவர் தீட்டியுள்ள புத்துலகம் கண்ட புது மனிதன் கற்பனைப்படைப்பு என்றாலும், அற்புதப் படைப்பு!
ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பள்ளியின் நிழலில் பயின்றவர் கண்ணன் என்று இந்நூலைப் படித்தோரிடம் சொன்னால் நம்ப மறுப்பர்! ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் என்ன சாதித்துவிட்டது என்று ஏளனம் மொழிவோரும், அழித்து விடலாம் கழகத்தை என்று ஆர்ப்பரிப்பவரும், பேச்சிழந்து, மூச்சறுந்து போகும் ஆச்சரித்தை இந்நூல் மூலம் கண்ணன் அளித்துள்ளார்.
பயணிகளுக்கு சுவைமிக்க உணவைப் படைத்தளிக்கும் சங்கீதா உணவகத்தின் உரிமையாளர் தோழர் கண்ணன் படைத்துள்ள சுவைமிக்க இப்பயண நூல், பயண நூல்கள் எழுதும் பல மேட்டுக்குடி எழுத்தாளர்களின் நூல்களோடு போட்டியிட்டால், முதல்பரிசு எய்தும் அளவு, பல நுட்பமான செய்திகளின் செறிவால் சிறப்புற்று விளங்குகிறது.
கறவையினங்கள் மயங்கும் வண்ணம், புல்லாங்குழலிசைத்த ஆயக்குலக் கண்ணனைப் போல், கழக செயல்வீரர் கண்ணன் தம் பேனாவின் ஆற்றலால் நம்மை மயங்கச் செய்யவில்லை. மாறாக, மயங்கிக் கிடக்கும் தமிழனம் மயக்கத்தை போக்கி எழுச்சியூட்டும் மருந்தினை அளித்துள்ளார்.
நம் ஆருயிர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் எழுத்துக்களைப் படித்து, ஏற்றம்மிக்க இலட்சியங்கலை இதயத்தில் ஏந்திய வண்ணம், ஆற்றல்மிக்க பணிபுரியும் கண்ணனைப் போன்ற படைப்பாளிகள், நாம் போற்றி வளர்த்துப் புகழ் மகுடம் சூட்டவேண்டிய தகுதிக்கு உரியவர்கள்.
கண்ணன் உலகம் சுற்றிய வாலிபர் அல்லர்! ஆனால் உலகத்தைப் பற்றிய செய்திகள் எண்ணற்றவற்றை, அவர் கற்ற நூல்கள் வழியாகவும் உற்ற நண்பர்கள் மூலமும் பெற்றிருக்கிறார்; தான் அறிந்தவற்றைத் தமிழர் அனைவரும் அறிய இந்நூலை அவர் தந்துள்ளார்.
சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டிப் பூகபம்மாய் புறப்பட்ட புலித்தேவரின் சீமையில் பிறந்தவர், இவர் என்பதால், உரிமைகளை பெறவேண்டிய நேரத்தில் தமிழர்கள் உறக்கத்தில் இருக்கிறார்களே என்று நொந்து கொண்டுள்ளார். எனினும் நல்ல தமிழகம் நாளை மலரும் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்.
நண்பர் கண்ணனின் புதுமனிதன் தான் மட்டும் உலகை வலம் வரவில்லை விசா இல்லாமலே நம்மையும் அழைத்துச் சென்று, நிகழ்காலத்தை மட்டுமல்ல, கடந்த காலத்தையும் காட்டுகின்றார்; கணக்கற்ற செய்திகளைச் சொல்லி எதிர்காலம் குறித்து நம்பிக்கையையும் ஊட்டுகின்றார்.
வரலாற்று ஆசிரியர்கள் கூட சொல்லித் தராத கோணத்தில், சில செய்திகளை சுட்டி காட்டுகிறார். இந்திய வரலாற்றில் இரு துருவங்களாக விளங்கி சுதந்திரம் நாடிப் போராடிய, காந்திஜிக்கும், நேதாஜிக்கும், தோள்கொடுத்து தியாகம் செய்வர்கள் தமிழர்கள் என்பதை பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
அறியாமையும், வறுமையும் எதியோப்பியப் மக்களைத் திராவிடர்களுக்கு நெருங்கிய உறவினர்களாக்கி காணும்போதும், கண்ணன் தென்னவர் நிலை எண்ணிக் கலங்குவது புரிகிறது.
நண்பர் கண்ணன் எழுதியுள்ள இச்சின்னஞ்சிறு நூல், அவருடைய விரிந்த பொது அறிவை, பரந்த உள்ளத்தை, ஆழ்ந்த கொள்கைத் தெளிவை மட்டுமின்றி அவர் எழுத்தாற்றலையும் புலப்படுத்துகிறது.
கண்ணனின் ஆற்றிலில் இன்னும்
எண்ணிலா நூல்கள் உருவாகட்டும்!
அவை காலமெலாம் நின்று
நிலவியக் கலைஞரின் புகழ் பாடட்டும்!
நம் பாசறை வீரர்களின் பணிகளுக்கு
அவை கவசமாகட்டும்!
என மனதார வாழ்த்துகிறேன்.



டாக்டர் கா. காளிமுத்து, எம்.ஏ., பி.எச்.டி.,
(முன்னாள் அமைச்சர்)
அணிந்துரை

புத்துலகம் கண்ட புது மனிதன் - நாவல் வரலாற்றில் ஒரு புதிய முயற்சி. அறிவியலையும் வரலாற்றையும் இணைத்து சுவை குன்றாமல், அருமையான கதை ஒன்றைத் தந்திருக்கிறார் எனது அருமைச் சகோதரர் சங்கீதா இரா.கண்ணன் அவர்கள்.
கதையின் துவக்கம் முதல் நிறைவு வரை ஆசிரியரின் எழுதில் மொழிப்பற்று, இனப்பற்று, தமிழனின் வீர வரலாறு ஆங்காங்கே எடுத்துச் சொல்லப்பட்டிருப்பதைப் படித்து பெருமிதம் கொள்கிறோம்.
மரக்கட்டையும், தகடும் பறக்கின்ற போது மனிதன் பறக்க முடியாதா? முயன்றால் முடியும். மனிதன் பறக்கும் காலம் வரும் என்று தந்தை பெரியார், விடுதலை நாளேட்டில் எழுதிய அறிவியல் கட்டுரையொன்றில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் கிராமத்து இளைஞன் ஒருவன், மூலிகைகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் செய்து பறக்கும் ஆற்றலைப் பெறுகிறான். அவன் நினைக்கிற செய்திகள், கண்முன்னே படமாகத் தோன்றுகிற ஆற்றலையும் பெறுகிறான். அவன் உடல் கணிப்பொறித் தேகமாகிறது என்று துவக்கி, கதை முழுவதையும் விறுவிறுப்பாக்கித் தந்திருக்கிறார்.
அந்த இளைஞன் - சூப்பர்மேன் சுந்தரலிங்கம் அண்டார்டிகாவில் பயணத்தைத் துவக்குகிறான். உலகம் முழுவதற்கும் குளிர் வழங்கும் மாபெரும் ஏர் கண்டிசன் யந்திரம் என்று அண்டார்டிகா கண்டத்தை அற்புதமாக வர்ணிக்கிறார். தமிழனக்கு மட்டுமல்லாது உலக மக்களின் பூர்வீகத் தாயகமான குமரிக் கண்டத்தின் எஞ்சிய பகுதியே இன்றைய இலங்கைத்தீவு என்பதை எடுத்துக் காட்டுகிறார்.
சுந்தரலிங்கத்தின் மனக் கண்ணில் பண்டைய பாண்டிய மண்டலம், சோழ மண்டலம் இவற்றின் சிறப்பெல்லாம் தோன்றுவதாகச் சொல்லி அந்த வரலாறுகளை எல்லாம் நமக்கும் நினைவூட்டுகிறார், ஆசிரியர் கண்ணன் அவர்கள். தமிழர்களாகப் பிறந்தவர்கள் தான் பின்னாளில் ஆந்திரர்கள் என்றும், கேரளத்தவர் என்றும் கன்னடர்கள் என்றும் காலப்போக்கில் மாறிப்போனார்கள் என்பதை சுந்தரலிங்கத்தின் மூலமாக காட்டுகிறார்.
சிங்கப்பூர், மலேயா, பர்மா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு தமிழர்கள் நல்கிய உழைப்பைப் பெருமிதத்தோடு எடுத்துக் காட்டுகிறார் ஆசிரியர் கண்ணன்.
உழைப்பால் உயர்ந்த ஐப்பான் நாட்டுக்கு உதயசூரியன் நாடு என்று பெயர் என நமக்கு உதயசூரியனின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறார். மொழிப் பற்றுக்கு அண்ணல் காந்தியடிகள் நல்ல உதாரணம், அவர் உலக உத்தமர் என்றாலும், இந்திய மக்களின் தந்தை என்றாலும், மகாத்மா என்று புகழப்பட்டாலும் தாய் மொழிப்பற்று மிக்கவர் காந்தியடிகள். அவரே தன் சுயசரிதையை குஜராத் மொழியில் பதிப்பித்திருக்கிறார் என்பதை எல்லோருக்கும் விளக்குகிறார் ஆசிரியர்.
திராவிட இயக்கத்தையும், சீக்கிய மதத்தையும் ஒப்பிட்டுக் காட்ட வந்த ஆசிரியர், திராவிட இயக்கத்தை பகுத்தறிவு இயக்கமாக இல்லாது ஒரு மத அமைப்பாக மாற்றியிருந்தால் அப்பகுதியின் உரிமைக் கொடி உயர்ந்து பறந்திருக்கும் என்று கதாநாயகந் எண்ணுவதாக கூறுகிறார். குமரி முதல் இமயம் வரை ஒன்று என்று கூறுவோர் இந்திக்காரர்களுக்கு மட்டும் முதலிடம் முதல் மரியாதை என்பது நீதியாகுமா என்று சுந்தரலிங்கத்தின் மூலம் கேட்கிறார் கண்ணன். நியாயம்தானே.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகிய தலைவர்களின் சிறப்பினை ஆங்காங்கே நமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிய சுந்தரலிங்கம் புதிய உலகம் ஒன்றைக் காணுகிறான். அங்குள்ள மனிதர்களுக்கு மூன்று விழிகள்; கார்களுக்கு சக்கரம் இல்லை; மதங்கள் இல்லை; மடமையைப் பரப்பும் கோயில்கள் இல்லை; கயவர்கள் இல்லாத காரணத்தால் காவல் துறை இல்லை; குற்றங்கள் இல்லாத காரணத்தால் கோர்ட்டுகளும் இல்லை; பகை இல்லாத காரணத்தால் படையமைப்புகள் இல்லை; அச்சம் இல்லாத அந்த உலகில் ஆயுதங்கள் இல்லை. ஆரியர் இல்லாததால் சாதிகள் இல்லை; வேதியர்கள் இல்லாததால் மூட சாஸ்திரங்கள் இல்லை என்று புதிய உலகத்தின் சிறப்புகளை எல்லாம் சொல்கிறார். அங்கே பேசப்படும் மொழிகள் தமிழும், கிரேக்கமும் இன்னும் சில மொழிகளும் தான் என்று தமிழுக்கு முன்னுரிமை தருகிறார்.
சிறந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு கதையாக - காவியமாக - ஆக்கித் தந்திருக்கிறார் சகோதரர் கண்ணன். இந்தக் கதையின் மூலம் தமிழுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்; தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது. நல்லதொரு கதையைத் தந்த சூப்பர்மேன் கண்ணனை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
கா. காளிமுத்து.



புகழ் சேர்க்கும் தமிழனுக்காக ஒரு பரிந்துரை
ச. அமுதன், எம்.ஏ.,
செயலாளர்,
மாநில தி.மு.க. இலக்கிய அணி
கற்பனையே விஞ்ஞானிகள் கருவறையாகும்
,
எதிர்வரும் செயல்களுக்கு இவையே ஏணிப்படிகளாகும்.
எழுத்துலகின் படைப்புகள் மனிதனைச் சிந்திக்கவும். செயலூக்கம் கொள்ளவும், செய்திடுமாயின் சமூக விஞ்ஞானத்தின் வெற்றியை மனித இனம் பெற முடியும்.
இவ்வாறு பெறுவதற்கான பயணத்தில் புத்துலகம் கண்ட புது மனிதன் என்னும் அகல் விளக்கினை ஏற்றியுள்ளார். சிந்தனைச் செறிவு மிக்க எழுத்தாளர் தோழர் சங்கீதா இரா. கண்ணன் எழுத்து, வாணிபமாக்கப்பட்டுவிட்ட தமிழ் எழுத்துத் துறையில் - எழுதி, தானே வெளியிடுகிற வேள்வியில் இறங்கிய தோழர் கண்ணனின் சிந்தனை வேகமும் எழுத்தித் திறமும், வெளியிடும் முயற்சி ஆர்வமும் சிரமம் உணர்ந்த சிந்தனை மனிதர்கள் பாராட்டியே தீர வேண்டும்.
குறைந்தது ஆயிரம் பக்கங்களில் பதிக்க வேண்டிய இந்தப் படைப்பினை, காலத்தின் அருமை கருதியும், வளரும் விஞ்ஞானயுகத்தில் கண்பதிப்போர் கவனம் கருதியும் நூறு பக்கங்களுக்குள் தருகிறார் கண்ணன். செயற்கரிய செயல் இது. முழுவதும் கருத்தூன்றிப் படித்தேன்.
வனப்புமிக்க எளிய கொஞ்ச தமிழ் நடையும் வளமிக்கக் கருத்துக் கோவையும் பண்பாட்டு அருமை பெருமைகளை உலகளாவிய விதத்தில் எடுத்தியம்பிடும் வரலாற்றுப் பாங்கும் ஆசிரியர் வானளாவச் சிந்தித்துக் கொண்டிருக்கிற நுண்மான் நுழைபுலத்தைத் தெளிவுறக் காட்டுகிறது.
புனைகதை என்றாலும் நிகழும் என்கிற உறுதிப் பாட்டினைக் கட்டியம் கூறவைக்கும் பகுத்திறிவுப் படையல் என இதனைக் கொள்ளலாம்.
அனுபவம், ஆற்றல், அறிவின் எழுச்சி - இவை, ஆசிரியரின் உள்ளக் கிடக்கை!
இந்தக் கிடக்கை கிளர்ந்தெழுந்து - புத்துலகம் கண்ட புதுமனிதனைக் கண்டெடுத்துள்ளது.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதற்கொப்ப கண்ணனின் கனவு இந்நூல் மூலமாக,
தமிழுக்காக, தமிழனுக்காக, தமிழ்ச் செல்வங்களுக்காக, தமிழ் தவழும் மண்ணுக்காக
பிறந்திருப்பது நம்மவர் சிந்தனையும் அக்கரையும் மெய்சிலிர்த்தும் சிறகடித்தும் பறந்து விரிவதற்காகவே. தமிழறிந்தோர் இல்லங்கள் தோறும் இளைஞர் தம் இதயங்கள் தோறும் இந்நூல் பவனிவர வேண்டும்.
இஃது என் கடுமையான பரிந்துரை.
கண்ணன் என்ற நற்றமிழன் கண்ட கனவில் பூத்திட்ட இப்படைப்பு இனிவரும் நாளில் விரிவான தாக்கப்படுதல் எதிர்பார்க்கப்படுகிறது.
கைமண்ணை எடுத்துக்கொண்டு உலகளவு சுற்றிவந்த சிந்தனை கண்ணனின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் ஓர் அடித்தளம்.
கைப்பொருள் கொட்டி மெய்ப்பொருள் காட்டிடும் விண்வெளிப் பாய்ச்சலில் இந்த எழுது கோலார் - துணிகரம் காட்டியுள்ளார்.
இவரது எழுதுகோல் மேலும்பல புதுமைப் பிறப்புகளுக்குத் தாயாக வேண்டுமென்பது கால வெள்ளத்தினை நீந்திடும் எழுத்தின் அருமையறிந்த என் போன்றவர்களின் ஆவல் சுந்தரலிங்கம் எனும் புத்துலகம் கண்ட புதுமனிதன் மூலம் தமிழ் எழுத்துலகில் புகழ் சேர்க்கும் தமிழன் என் இனிய சகோதரர் இரா. கண்ணன் அவர்களை நெஞ்சக் கலந்த அன்புடனும் உரிமையுடனும் வாழ்த்துகிறேன்.
அன்பன்,
ச. அமுதன்,
தந்தை பெரியார் இல்லம்,
135,
தெற்குதர வீதி,
திருவில்லிபுத்தூர்-626125.



T.கார்த்திகேய பாண்டியன், எம்.ஏ., எம்.எட்.,
பள்ளித் துணை ஆய்வாளர்,
தென்காசி.
ஆற்றல்மிகு எழுத்தாளர் தோழர் சங்கீதா இரா.கண்ணன் அவர்கள் வரைந்த புத்துலகம் கண்ட புதுமனிதன் உள்ளிட்ட அரிய படைப்புகள் அனைத்தையும் படித்து அளவிலா களிப்பெய்தினேன்.
தோழர் கண்ணன் அவர்கள் பள்ளிப்படிப்பை ஒன்னரை ஆண்டுடன் நிறுத்திவிட்டு, தன் தலையில் வறுமை கூடுகட்டியதை கலைக்க வாழ்க்கை போராட்டத்தை துவக்கி, அதில் வெற்றியும் பெற்று, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பூமியே புத்தகம், புத்தியே - போதகன் என்று தன்னையும் தன் அறிவையும் வளர்த்து அதனை தமிழ்ச்சமுதாயம் அறிவியல் பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், எழுத்துப் பணியை நெஞ்சத்தில் ஏற்றி ஏழு படிகளில் (ஏழு நூல்கள்) ஏறி நின்று வெற்றி வாகை சூடியது கண்டு உண்மையிலே அகமகிழ்கிறேன்.
முந்தைய தமிழ் சமுதாயத்தின் பெருமையை பேசும்பொழுதே இன்றைய தமிழ்ச் சமுதாயத்திற்கும் சமுதாய பணியாளர்களுக்கும் சொல்ல வேண்டியதை சொல்லி தமிழ் சமுதாயம் ஏற்றம் பெற, எழில்பெற என்ன என்ன வழிகள் உண்டு என்று வகைப்படுத்தும் பாங்கு என்னைக் கவர்ந்தது. கடிதச் சிலைகள் நூலில் ஓ தமிழ் இளைஞனே! என்று விளித்த முறையில் அவரை ஓர் சாக்ரடீஸாக பார்க்கிறேன்! வறுமையை எதிர்த்துப் போராடி பின் அறிவியல் பணியில் வெற்றி கண்டான் பெஞ்சமின் பிராங்க்ளின். வறுமையை எதிர்த்து வெற்றி பெற்றபின்  எழுத்துப் பணியில் ஈடுபடுத்திக் கொண்ட இவரை ஓர் பெஞ்சமினாக பார்க்கிறேன்! புகழ்ச்சிக்காக சொல்லவில்லை. எழுத்துக்களை மட்டும் கற்று இரண்டாம் வகுப்பை இடையில் விட்டுவிட்ட அவர் - எழுத்துக்களுக்கு எழுச்சியூட்டி - சத்தான வார்த்தைகளை சரியான இடத்திலிட்டு சமூக குற்றவாளிகளை சாடும் விதமும், சாத்திரங்கள் - சழக்கர்களால் எப்பஐ உருவாக்கி பயன்படுத்தப்பட்டன என விவரிக்கும் விதமும் - தமிழ் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று தனியாத ஆசையுடன் அவருடைய பேனாவின் அதிகபட்ச வேகம் அய்யாவை நினைவூட்டுகிறது. கடவுளுக்கு மறுப்பு சொன்ன பெர்னாட்ஷா தன் முகவுரையில் முழுமையாக மூழ்கி முத்தான கருத்துக்களை கூறி அதிக பக்கங்களை ஆக்கிரமித்து கொள்வார் இவருடைய முதற் படைப்பான கடித மலர்களில் முகவுரையில் தமிழ் தமுதாயத்தின் வரலாற்றை மூவாயிரம் புத்தகத்தின் முழுக் கருத்துக்களையும் கூறி பெர்னாட்சா ஆகிவிட்டார். விஞ்ஞானம் நடைமுறையில் வெற்றி பெறுவதற்கு முன்னர் பலரது உள்ளதில் கற்பனையாக இருந்தது. சிலர் படைப்புகளாக வெளிப்படுத்தினர்.
எச். ஜி.வெல்ஸ் சூல்ஸ்வெயின் ஆகியோரின் படைப்புக்கள் விஞ்ஞான வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்திருக்கிறது. அந்த வகையில் தோழர் கண்ணன் அவர்களின் புத்துலகம் கண்ட புதுமனிதன் எனும் இந்த நூல் வளரும் வானியல் விஞ்ஞான முடிவுகளை எதிர்நோக்கி நிற்கிறது. வளரும் விஞ்ஞானம் கண்ணனின் கற்பனையை நடைமுறைக்கு உகந்ததாக மாற்றட்டும். நல்லதொரு தமிழ்ச் சமுதாயம் பிறிதொரு உலகில் உருவாகியிருப்பதை அறிந்து தமிழர்கள் மகிழ்ச்சியில் திழைக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
அறிமுகம்
உலகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு, வாழ்வில் பல மாற்றங்களை கண்டு வளமான இடத்தில் வந்து நிற்கிறது. எத்தனையோ நாடுகள் தங்கள் வரலாற்றை செழுமை மிகுந்ததாக மாற்றியிருக்கிறது. பல்வேறு வகையில் சீர்மைகள் நிலை பெற்றிருக்கிறது. சீரிய தலைமை, சிறந்த திட்டங்கள், செம்மையான செயல்பாடு, குழப்பங்களற்ற கூர்மையான சிந்தனை, வளர்ச்சியில் கண்ணுங் கருத்துமாக இருந்த கவனமுடன் செயல்பட்டு பல்வேறு கருவிகள் கண்டு கணக்கற்ற வகையில் பொருள்குவித்து, விஞ்ஞானத்தை விவேகமாக வளர்த்து வானவெளியில் வெகுதொலைவில் சுழலும் விண்மீன்களையும் சுற்றும் கோள்களையும் ஆராய்ந்து மனித ஆற்றலை - திறத்தை வெளிப்படுத்தும் நாடுகளை என்மனம் வாழ்த்திய வண்ணம் இருக்கிறது. மனிதகுலம் என்றும் மாய்ந்து விடாது இருக்க இயற்கையையே எதிர்த்துப் போராடும் அறிவியல் மேதைகளை எண்ணி என் உள்ளம் மிகுந்த மகிழ்வில் திழைக்கிறது.
ஒருங்கிணைந்த பண்பாட்டு உணர்வுகளோடு உரிமையும் உயர்வையும் பெற்று செழுமையான வாழ்வினையும் அடைந்து, சீரிய பல செயல்களோடு விண்வெளியிலும் வெற்றி காணும் நாடுகளை நினைத்து மகிழும் என் நெஞ்சம் நான் பிறந்த தமிழ் நிலத்தை எண்ணி கண்ணீர் வடிக்கிறது. சீரிய பல இலக்கிய செல்வங்களுக்கு சொந்தம் கொண்டாடும் தமிழினம் ஏனோ வளர்ச்சியை கண்ணெடுத்து பார்க்கவும் மறுக்கிறது.
இலட்சியப் பற்றாளர்கள், இலக்கிய ஆய்வாளர்கள், ஏற்றமிகு அறிஞர்கள், ஆற்றலாளர்கள் ஆகியோர் கூறுவதையெல்லாம் கருத்தில் கொள்ள மறுக்கிறது தமிழகம், சிந்தனைக் குருடர்களுக்கும் செப்படி வித்தை காட்டுவோருக்கும் தன் செவி சாய்த்து கண்பதித்து சிந்தையைக் கெடுத்துக் கொள்ளும் தமிழர்களை நினைத்து வேதனைப் படாமல் இருக்க முடியவில்லை. அதற்காக அவர்களை வெறுக்கவும் முடியவில்லை.
செந்தமிழ் நாட்டை சீர்படுத்த!
சித்தர்களும் ஞானிகளும்!
எத்தனையோ சொன்னாங்க!
எழுதியும் வச்சாங்க!
எல்லாந்தான் படிச்சாங்க!
என்ன செஞ்சு கிழிச்சாங்க!
என்று ஒரு கவிஞர் சலிப்படைந்ததுபோல் சலித்துக் கொள்ளவும் முடியவில்லை. தெளிவான செய்திகளை சொல்லிச் செல்வோம் எதிர்காலத் தமிழர்களாவது ஏற்று ஏற்றம் காணட்டும். நெறி சார்ந்த கருத்துக்களை ஏற்று நெஞ்சுரம் கொள்ளட்டும் எனும் உணர்வுகள் மேலோங்க இத்தகைய முயற்சிகளில் நான் ஈடுபடுகிறேன்.
வானியல் அறிவு வளர்ந்த இந்த நாட்களில் எதையாவது படைப்பதற்கு அறிவின் ஆதாரமோ அதிகாரமோ தமிழர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. ஆகவே அறிவியல் வழியாக ஏதாவது ஒன்றைச் சொல்வோம் என்ற உணர்வுக்கு ஆட்பட்டு இந்த நூலை உருவாக்க முனைந்தேன். மூலிகை மருத்துவம் சிறப்புற்ற தமிழகத்தில் மேலும் மேலும் அந்த மருத்துவத்தை முன்னுக்கு கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை. பாவேந்தர் தன்னுடைய சஞ்சீவி பர்வதச்சாரலில் மூலிகையில் மூலம் புது ஆற்றல் பெறுவதாக காட்டினார். அவரைப் பின்பற்றி மூலிகையின் வாயிலாக ஒரு மனிதனை பறக்கவிட்டு இந்த உலகம் முழுவதும் மட்டுமல்லாது விண்வெளியிலும் நெடுந்தொலைவு பறந்து நாம் வாழும் உலகைப்போல் இன்னொரு உலகத்தையும் காட்சி அங்கும் தமிழ் இருப்பதாக சொல்லி, அந்த உலகின் சிறப்புகளையெல்லாம் சொல்லியிருக்கிறேன். நான் நிரம்பப் படித்தவன் அல்ல. குறிப்பெடுத்து நூல் வடிக்கும் அளவுக்கு என் சூழல் ஒத்துழைப்பதில்லை. தவறுகள் பல இருக்கலாம் என் கவனத்தை மீறி எழுத்துக்கள் மாறியிருக்கலாம் அச்சகத் தொழில் நண்பர்களாலும் அவை நிகழ்ந்திருக்கலாம். அவைகளை பெரிதாகக் கொள்ளாமல் நூல் தரும் கருத்துக்களில் மனம் பதிக்க வேண்டுகிறேன்.
இந்த நூலில் காட்டப்படுகின்ற உலகத்தில் உள்ள மூன்று கண் மனிதர்களைப் போல் பிறிதொரு பூமியில் வளரும் விஞ்ஞானம் ஒருவேளை கண்டுபிடித்து அந்த உலக நடைமுறையும் இந்த நூல் கூறுவதுபோல் இருந்துவிட்டால்... என் கற்பனையும், சிந்தனையும் சரியாக இருந்திருக்கிறது என்று எதிர்காலம் என்னை பாராட்டலாம். எப்படியோ அறிவார்ந்த வழியில் சில செய்திகளை ஒரு பொருளை விளக்கியதில் எனக்கு முழு நிறைவு!
கண்முன் காணும் பொருளை அடிப்படையாகக் கொண்டு பொருள்முதல்வாத சிந்தனையாளர்களும், நினைப்பதை... அதாவது எண்ணத்தை அடிப்படையாக கொண்டு கருத்து முதல்வாத சிந்தனை வாதிகளும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எண்ணற்ற நூல்களைப் படைத்திருக்கிறார்கள். பின் பொருள்முதல் வாதம் வெற்றி பெற்று அறிவியல் வளர்ந்து பொருள்களுக்குப் பலவாறாக உருவகம் கொடுக்கப்பட்டு வாழ்க்கை வளமுடையதாக ஆக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் எண்ண முதல்வாதச் சிந்தனைகள் சிரம் தாழ்ந்து விட்டன என்றாலும் இன்னும் அது செத்து விடவில்லை. அவ்வப்போது அது மனிதர்களின் சிந்தையில் ஆதிக்கம் செலுத்த முனைகிறது. அறிவியல் சாதனங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் தயங்குவதில்லை. இந்த நிலையில் அறிவார்ந்த செய்திகளை முடிந்தவரை ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வழியில் எடுத்துச் சொல்லியவண்ணம் இருக்க வேண்டும் எனும் உணர்வில் உருவானதே இந்த நூல்,
வானியலை இடையில் தமிழர்கள் முழுமையான அறியாத காரணத்தாலேயேதான் மூட நம்பிக்கையில் முற்றாக மூழ்கிக் கிடந்தார்கள். தங்கள் முன்னோர் வரலாற்றை மூடி வைத்தார்கள். வானுலக அமுதம் வீடுபேறு என்று இல்லாததை நினைத்து நடைமுறையில் உள்ல நலனை - சுகத்தை நாடாது நலிந்தார்கள். இந்த நூல் வானியலையும் வரலாற்றையும் முடிந்தவரை தொட்டுக் காட்டும் என்று கருதுகிறேன்.
இந்த அளவிற்கு செய்திகளை சேகரித்து நூல் வடிக்கும் ஆற்றலை எனக்கு வழங்கியது தி.முக. கழகம் தான். படிக்கின்ற உணர்வை - வரலாற்று அறிவை ஊட்டி வளர்த்ததும் தி.மு. கழகம் தான். மாலை நேரக் கல்லூரியாக மகத்தான வரலாறுகளை போதிக்கும் பலகலைக் கழகமாக விளங்கும் தி.மு.க. தான் நான் கற்ற கல்விக்கூடம். அந்த மகோன்னதமான கலைக்கூடத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், அவருடைய தம்பியரும் தான் எனக்கு ஆசிரியர்கள்.
எனையீன்ற தாய் தந்தையர்க்கும்
இனமீன்ற தமிழ் நாடு தனக்கும்
சிறிதேனும் தொண்டு செய்தால்
செத்தொழியும் நாள் திருநாளாகும்.
என்ற புரட்சிக் கவிஞரின் பொறுப்பு மிகுந்த பாடல்வரிகளை
என்போன்றோர் நெஞ்சில் பதித்ததும் தி.மு.க. வின் தலைவர்கள்தான் தமிழ் - தமிழர்- தமிழ் இலக்கியம் - தமிழ்ப் பண்பாடு - தமிழர் வரலாறு - தமிழர் நலன் - தமிழின் இனிமை - தமிழரின் வளர்ச்சி - வளரும் அறிவியல் உலகில் தமிழரின் வாழ்வு - தாழ்ந்த தமிழகத்தின் நிலை மாற்றும் மார்க்கம் என்றெல்லாம் இந்த இதயம் இறுதிவரை எண்ணிக் கிடந்துமாள வேண்டும். பெரும்பாலான தமிழர் நெஞ்சில் உறைந்து கிடக்கின்ற சீரற்ற கொள்கைகளை சிதைத்து சீரிய பல உணர்வுகளை சிலைகளாக தமிழர் மனத்தில் பதிக்க வேண்டும் என்னும் உணர்வுகளையும் உறுதிப் பாட்டினையும் என் போன்றோர் உள்ளத்தில் பதித்த திராவிட இயக்கத்தின் அடிநாள் தொண்டர் - தி.மு. கழகத்தின் இன்றைய தலைவர் என் இதயத்தை ஆட்கொண்ட சிந்தனைச் சக்கரவர்த்தி - செந்தமிழ் வித்தகர் திரு. டாக்டர் கலைஞர் அவர்களிடம் முயன்று அணிந்துரை பெற்றிருந்தால் அது என் வாழ்வில் நான் பெற்ற இனிய - பெரிய செல்வமாக இருந்திருக்கும்.
இந்த இனமான இயக்கத்தின் இளைஞர்களை உணர்ச்சி மயமாக்கி ஆர்ப்பரித்து ஆவேசம் கொள்ளச் செய்கின்ற ஆற்றலினைப் பெற்ற கழகத்தின் போர் முரசும், தலைவர் கலைஞர் அவர்களை தன் இதயச் சுவரில் சித்திரமாக பதித்துக் கொண்ட வை.கோபால்சாமி, எம்.ஏ., பி.எல்., எம்.பி. அவர்கள் தந்த அணிந்துரை, எதிரிகளின் படை வரிசையை இடிப்பொடித்து போட்டு எக்காளமிடும் போர்முனைத் தளபதியின் உணர்வுக்கு சமமாகும்.
அறுபத்தைந்து மொழிப்போரில் களம் கண்ட வேங்கை, விழுப்புண் பெற்ற வீரன் அருவி நடை பேச்சாளர் அண்ணன், டாக்டர் கா. காளிமுத்து அவர்கள் தந்த அணிந்துரை என்றென்றும் மகிழ்வூட்டக் கூடியதாகும்.
கழக இலக்கிய அணிச் செயலர் இனியவர் ச.அமுதன், எம்.ஏ, அவர்கள் தந்த அணிந்துரை ஆராய்ச்சி அறிஞரின் திறத்திற்கு ஒப்பாகும்.
குருதி வழி உறவாலும் கொள்கைத் தொடர் பாலும் என் மீது நேசம் கொண்ட தி.கா. பாண்டியன், எம்.ஏ., எம்.எட்., அவர்களின் அணிந்துரை என் இதயத்திற்கு இதமானதாகும்.
உலகளாவிய உணர்வுகளை தன்னகத்தே கொண்ட சங்ககால இலக்கிய சூழலில் இன்றையப் புதுமைப் பயனும் தமிழர்களை தழுவி வாழ்வில் வற்றாத வளம் சேர்க்க வேண்டும் என்ன எண்ணம் கொண்ட என்மீது அன்பு காட்டி என்னுடைய இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்த இவர்களுக்கு என் இதயமார்ந்த நன்றியை படைத்து இந்த நூலை அச்சடித்து சிறப்பித்த வெற்றிவேல் அச்சக நண்பர்கள் ராசா, கணேசன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றிகூறி நான் படைத்த புதுமனிதனையும், அவன் கண்ட புத்துலகத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதோடு உலக விஞ்ஞானிகளுக்கு ஓர் வேண்டுகோளையும் முன் வைக்கிறேன்.
அன்பன்
சங்கீதா இரா. கண்ணன்
உலக விஞ்ஞானிக்கோர் வேண்டுகோள்:

உலக மக்களுக்கு உயர் வாழ்வை அளிக்கின்ற உயிரியல் விஞ்ஞானிகளே! புதுப்புது மருந்தளித்து மனிதனின் வாழ்நாளை கூட்டுகின்ற அறிவியல் மேதைகளே! சாக்காட்டை நோக்கித் தளர் நடை போடுவோரை புது மனிதராக்கி வாழ்வில் வேக நடைபோட வைக்கும் சாதனைச் சிற்பிகளே! உங்கள் தாள் பணிந்து ஒரு வேண்டுகோளை, ஒரு விண்ணபத்தை முன் வைக்கிறேன்.

உலக மாந்தர்க்கு தாயகம் தமிழகம் உலக கலைகளுக்கு விளைநிலம் தமிழகம். உலக மொழிகளுக்கு வேரும், அதன் விதையும் தமிழகம். அறிவியல் உணர்வோட்டங்களுக்கு பாதை அமைத்தது தமிழகம். தமிழ் இலக்கிய நூல்களில் அதற்கு ஆதாரம் நிறைய உண்டு.

அறிவியல் உலகம் அண்ட வெளியில் தன் ஆய்வுகளை நிகழ்த்தி சாதனை படைத்தாலும் வாழ்வியல் துறைகளில் வழிகாட்டும் இலக்கியம் இன்று வரை தமிழகத்திலேயே மிகுந்து இருக்கிறது.

உளநிறைவு, உயிர் மகிழ்வு, உணர்வு நயம் ஆகியவற்றை அளிக்கின்ற ஒப்பற்ற கருத்துக் கருவூலங்கள் தமிழில் மிகவுண்டு. இத்தகைய பெருமைக்குரிய தமிழர்கள் எப்படியோ ஏமாந்து இழிவுப் படுகுழியில் வீழ்ந்து எழ முடியாது தவித்தனர். யாரையும் நம்பி இரக்கம் காட்டி தன் செல்வங்களை இழந்து நலிந்தனர். அவர்களை கைதூக்கிவிட தமிழர் தலைநிமிர்ந்திட நல்லோர் சிலரால் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவானது. பின் திராவிட இயக்கமாக, பரிணமித்தது. தந்தை பெரியாரால் தமிழர்கள் உயர்நிலை பெற்றனர். பேரறிஞர் அண்ணாவால் மேலும் ஊக்கம் பெற்றனர்.

தந்தை பெரியார் அவர்கள் தன் முழு ஆற்றலையும் தமிழருக்குச் செலவிட்டு நிறை வாழ்வு வாழ்ந்து தன் உடலை மறைத்துக் கொண்டார். ஓயாத உழைப்பால் தன் உடலை நோயிடம் கொடுத்து பேரறிஞர் அண்ணா அவர்கள் தன் உலக வாழ்வை முடித்துக் கொண்டார். அவர்கள்

இருவராலும் வார்த்தளிக்கப்பட்ட கலைஞர் அவர்கள், தன் உழைப்பு, ஊக்கம், உயர் சிந்தனை, உண்மை, வாய்மை, நேர்மை, நெளிவு, சுழிவு, தெளிவு, தியாகம், தீரம், அஞ்சா நெஞ்சம், அரிமா நோக்கு அயராது போராடும் ஆற்றல் ஆகிய அனைத்துத் திறனோடு தமிழ்ப் பகைவர்களிடமிருந்து தமிழர்களை கவசம் போல் நின்று காத்து வருகின்றார். அவருக்கு வயது அதிகமாகிறது என்கிறார்கள். வயது கூடுவது காரணமாக அவர் சோர்ந்துவிடவில்லை என்றாலும், ஒரு இளைஞனைப் போல் உழைக்கிறார் என்றாலும், எதிர்காலத்தில் முதுமையின் காரணமாக, சோர்வு தென்படலாம். சலிப்பு தோன்றலாம், அதன் மூலம் தமிழர் முன்னேற்றம் தடைபடலாம். அப்படியொரு நிலை உருவானால், தமிழர்களுக்கு உழைத்திட அறுபது ஆண்டுகள் தேடி திரட்டிய அறிவும் திறனும் அளப்பரிய ஆற்றலும் வாய்ந்த ஒருவர் எனக்குத் தெரிய தமிழர்களில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே உலக விஞ்ஞானிகளே! உயிரியல் மேதைகளே! உங்கள் ஆராய்ச்சித் திறனைப் பயன்படுத்தி ஒரு புது மருந்தை உருவாக்கி எங்கள் கலைஞருக்குத் தந்து அவரை இளமைப்படுத்துங்கள். அவருடைய உழைப்பு இன்னும் முப்பது ஆண்டுகள் தமிழர்களுக்கு கூடுதலாக கிடைக்க வழி காணுங்கள். வாய்ப்புத் தாருங்கள். உலகின் முதல் மனிதன் தமிழன் தலைநிமிர்ந்து வாழ்ந்தால் உங்களுக்கும் பெருமை தானே! தமிழன் நல்வாழ்வு வாழ, கலைஞர் நலமோடு நெடுநாள் வாழ வேண்டும். ஆகவே அவர் இளமையோடு என்றும் வாழ்வதற்கு மருந்தொன்று தாருங்கள். தமிழினம் வாழ்த்தும்.

No comments:

Post a Comment