Wednesday, 18 January 2017

15. புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி…

15. புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி…
அமெரிக்கா
அமெரிக்கக் கண்டம் வட அமெரிக்கா, தென் அமெரிக்க என பிரித்துக் கூறப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தைப் போலவே இங்கும் வடக்கு வளர்ந்து வளம் கொழிக்கவும், தெற்கு தேய்ந்து திக்கு முக்காடவும் ஆன நிலை தெரிகிறது. தென் அமெரிக்காவில் மக்கள் தொகை பெருக்கம், அறியாமை, அதனால் அரசியல் குழப்பம் ஆகியவற்றால் அலைக்கழிக்கப்படுகிறது. அர்ஜென்டினா, பிரேசில், பெரு, சிலி, கிரேனடா என்ற நாடுகளையெல்லாம் கண்டான். மெக்சிகோவின் பழைய வரலாறு, அவற்றின் அழகுமிகு வரலாற்று சின்னங்கள், ஸ்பானியர்களிடம் அவர்கள் பட்ட சித்ரவதைகள் என்றெல்லாம் காட்சிகள் அவன் கண்ணில் தெரிந்தது.
உலக கால்பந்தின் சாம்பியன்களான பிரேசில் பீலே, அர்ஜெண்டினா மாரடோனா, ஆகிய வல்லமை சாலிகள் அவன் விழியில் முகம் காட்டினர். கனடாவின் வான்பரப்பில் நீந்தியவாறு அதன் வளமிகு பகுதிகளை கண்டான். நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுகளித்த பின் அப்பெரு நதியைக் கடந்து அய்க்கிய அமெரிக்க நாட்டில் தன் பயணத்தைத் தொடர்ந்தான் சுந்தரலிங்கம். கொலம்பஸின் குறிப்புகளால் மக்கள் குடியேறியது அக்கண்டம் என்று சொன்னாலும் அதற்கு முன்னரே அங்கு சென்ற அமெரிக்கன் வெஸ்புடின் என்பாருடைய பெயரால் அது அழைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே அங்கு குடியேறிய திராவிட மூதாதையரின் பெயர் சூட்டப்படவில்லை என்று அறிந்து வருந்தினான்.
அமெரிக்கக் கண்டத்தில் தங்கமும் பிறமணிகளம் நிறையக் கிடைக்கின்றன என்று அறிந்து அய்ரோப்பியர்கள் கூட்டம் கூட்டமாக குடியேறினார்கள்.
மிகுதியாக பிரிட்டானியர்களும் அய்ரிசுக்காரர்களும், ஸ்பானியர்களும், பிரெஞ்சு மக்களும், பிற அய்ரோப்பிய சமுதாயத்தினரும் தங்கள் குடும்பங்களுடன் அக்கண்டம் முழுவதையும் தங்கள் இருப்பிடமாக்கினர். அங்கு வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள் பலரை மண்ணுக்குல் புதைத்தனர். கால ஓட்டத்தில் பல்வேறு பிரிவினர்கள் ஒன்றாகி ஒரு புதி சமுதாயமாக உருவெடுத்தனர். அறியாமையில் உழன்ற ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர். வேலைகளுக்காக அழைத்துச் சென்றவர்களை இனவெறி நிறவெறி காரணமாக வேதனைப் படுத்தினர். கறுப்பர்களை அடிமையாக கருதிய அவர்கள் தந்தை என்றாலும் தன்னை அடிமைப்படுத்த நினைக்காத உணர்வோடு ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடினர். முன்னணி தளகர்த்தராக விளங்கிய ஜார்ஜ் வாஷிங்டன், முதன் குடியரசுத் தலைவராக அமர்ந்தார். அவருக்கு துணை செய்த பெஞ்சமின் பிராங்க்ளின் செப்பர்சன் போன்றோர் அமெரிக்க மண்ணை வளப்படுத்த உழைத்தனர். வழிவழியாக பல மாமனிதர்கள் அமெரிக்காவை உயர்வின் உச்சிக்கு அழைத்துச் சென்றனர். ஆபிரகாம் லிங்கன், ஒரு உள்நாட்டுப் போரையே சந்தித்து கறுப்பின மக்களுக்கு உயர்வினை உரிமைகளை வழங்கினார்.  தன் இன ஆதிக்கத்தையே எதிர்த்த அமெரிக்கர்கள் உலகம் முழுவதும் தன் ஆதிக்கத்தில் கொண்டுவர முயன்படி இருக்கும் உணர்வைத் தவிர மற்றபடி அமெரிக்கா உலகிற்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது என்பதை உணர்ந்தான் சுந்தரலிங்கம். ஆங்கில மொழியின் உச்சரிப்பைத் தவிர மற்றபடி அய்ரோப்பியரை ஒத்திருக்கும் அமெரிக்கா அறிவியல் வளர்ச்சியில் வானோக்கி வளர்த்திருக்கிறது. கற்பனையில் உலவிய எண்ணங்கள், செய்திகளையெல்லாம் நடைமுறைக்கு உகந்ததாக்கி வாழ்விற்கு வளம் சேர்த்திருக்கிறது... சேர்த்து வருகிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் முன்னேற்றம் அதனால் ஏற்பட்டுள்ள அறிவியல் வளர்ச்சி, அந்த வளர்ச்சி தரும் அதிசய அற்புத கருவிகள் ஆகிய அனைத்தும் அய்ரோப்பாவை சார்ந்ததே - மக்களாட்சி மாண்பு, மாமேதைகளின் திறம், அம் மனிதர்களின் உழைப்பால் ஏற்படும் மகிழ்ச்சிமிகு இனியசூழல் இலக்கியச் செல்வங்கள், எண்ணற்றக் கருத்துக் கருவூலங்கள், அமெரிகாவின் எந்தப் பகுதியும், எழில் நிறைந்ததாகவே தெரிந்தது இனியவன் சுந்தரலிங்கத்திற்கு. உலகில் உயர்வாழ்வினைப் பெற்றிருக்கின்ற அந்த ஒப்பற்ற நாட்டின் ஒவ்வொரு பகுதியும் அவன் உள்ளத்திற்கு மகிழ்வூட்டியது.
அறிவியல் துறையில் அய்ரோப்பாவை மிஞ்சிய நிலையில் அமெரிக்கா விளங்குவதைக் கண்டான். நாளும் புதுப்புது கருவிகளை கண்டுபிடித்து மனித குலத்தை வாழ்விக்கவும், பயமுறுத்தவும் செய்கிறது அமெரிக்கா என்பதை அறிந்தான் சுந்தரலிங்கம். ஒன்றிணைந்த நாடுகளின் ஒவ்வொரு நகரமும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சியை குவித்த வண்ணம் இருந்தது. நியூயார்க் நகரம் உலகில் சிறந்த ஒன்றாகத் திகழ்வதைக் கண்டான்.
உயர்ந்த கட்டடங்களும், வானை முட்டுகின்ற வகையில் எப்போதும் பறந்த வண்ணம் செல்லுகின்ற வானூர்திகளும், சாலையில் செல்லுகின்ற வகையில் அழகிய வண்டிகளும் அவனை மகிழ்வித்த வண்ணம் இருந்தன. நியூயார்க்கில் அமைந்துள்ல சுதந்திரதேவி சிலை அவன் சிந்தைக்கு இனிப்பூட்டியது.
அந்த நகரில் அமைந்துள்ள உலக மாமன்றமான அய்க்கிய நாடுகள் சபையை கண்டுகளித்தான். உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டது. அம்மன்றம் என்பது அறிந்து உவகை கொண்டான். போர்களற்ற புத்துலகை உருவாக்க உருவான அய்க்கிய நாடுகளின் அமைப்பு நேரிய நிலையில் நெஞ்சுயர்த்தி நடைபோடும் நிலையில் இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தான். நாட்டுப்புற பஞ்சாயத்தைப் போல் வல்லமைமிக்க சில நாடுகளுக்காக அது வாழ்தாகக் கூடத் தோன்றியது அவனுக்கு. ஆயுதங்களை அழித்திட அனைத்து நாடுகளுக்கும் ஆணையிடும் நிலையில் அது இருப்பதாகத் தோன்றவில்லை. வலிவுள்ள சில நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் இருப்பது நியாயந்தானா? என்று தோன்றியது. பாலத்தீனத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டு இஸ்ரேலிடமிருந்து அதை மீட்காத ஐ.நா. தென் ஆப்பிரிக்காவிற்கு வெறும் வாய் மொழித்தடையை மட்டும் அறிவித்து விட்டு ஈராக்கிற்கு எதிராக மட்டும் பன்னாட்டுப் படைகளை ஏவி விடுவது எந்த வகையில் நியாயம் என்று தோன்றியது சுந்தரலிங்கத்திற்கு, அழிவினை ஏற்படுத்தும் அனைத்து போர்க் கருவிகளைக் கொண்டு ஈராக்கை அழித்து அடி பணியவைக்க முயலும். ஐ.நாவை எண்ணி வருந்தினான். அவன் ஒரு காட்சியைக் கண்டு நெடுநேரம் அந்த இடத்திலேயே தன் பார்வையை நிறுத்தி வைத்தான்.
யேல் பல்கலைக் கழக வளாகம் தான் அது. தமிழ்த்தாய் வயிற்றிலுதித்த தங்கமகன் அண்ணாவின் நினைவுகளை அவனுக்கு வழங்கியது தமிழகத்து பருத்தியில் வந்த பணத்தில் உருவான அந்தப் பள்ளி பல்கலைக் கழகமாக உருவெடுத்ததை எண்ணி உளம் களித்தான். சென்னை கவர்னர் எலிகுயேலின் பெயரில் வளர்ந்த அந்தக் கல்விப் பெருமனை அவனை களிப்பில் ஆழ்த்தியது. ஓய்வே கிடைக்காத பொதுநல உழைப்பாளிகளை அழைத்து தன் மாணவர்களுடன் சில நாட்கள் வாழச் செய்தது அந்தப் பல்கலைக் கழக பணிகளில் ஒன்று. அந்த வகையில் உலகில் ஆறாவது தலைவராக அண்ணா அழைக்கப் பெற்று மதிக்கப்பட்டார். அந்த மாணவர்களுடன் அந்த அரும்பெரும் அற்புதத் தலைவன் சில நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்தார். அந்த இனிய காட்சிகள் அவனுள் தோன்றி இனிப்பூட்டியபடியே இருந்தது. அந்த இனிய நினைவுகளோடு வாஷிங்டனுக்கு பறந்து சென்றான்.
அமெரிக்காவின் தலைநகராக விளங்கும் அந்த இனிய நகரத்தில் அந்நாட்டு குடியரசுத் தலைவரின் வெள்ளை மாளிகை அவன் விழியில் பதிவாகியது. எத்தனையோ நன்மைகளுக்கு ஊக்கமூட்டும் அந்த வளமனை பல துயரங்களுக்கம் வழி அமைக்கிறது என்று எண்ணினான். சீரிய முறையில் சில நூற்றாண்டு காலம் மக்களாட்சி மாண்புகளை காத்துவரும் பண்பினை வாழ்த்தினான். உலக மக்களை அழைத்து உயர் மேதைகளாக்கி தன்னுடைய நாட்டிலேயே வைத்துக் கொள்ளும் உயர் மனதைப் பாராட்டினான். வாஷிங்டனிலிருந்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கும பறந்து சென்றான். சீர்மிகுந்த சிகாகோ நகரம், சான்பிரான்சிஸ்கோ, உலக மக்களை கவர்ந்த கென்னடியின் உயிர் பிரிந்த டல்லாஸ் ஆகிய நகரங்களை கண்டான். பிளாரிடா முனையில் விண்வெளிக் கலங்களை செலுத்தும் நிலையத்தை கண்டு மகிழ்ந்தான். கற்பனையில், கருத்துக்களில் இருந்த விஞ்ஞானம், கலிலியோவால் பரிசோதனைக்குக் கொண்டு வரப்பட்டு அய்சக் நியூட்டனின் முயற்சியால் ராயல் அறிவியல் கழகம் தொடங்கப் பெற்று அய்சக் நியூட்டனின் விதிகளைப் பின்பற்றி வளர்ந்து அறிவு விரிந்து விண்வெளியை வெற்றிகொள்ளும் அளவுக்கு விரைந்தோங்கி நிற்கிறது. வானில் கலம் செலுத்திய ரைட் சகோதர்களை நினைத்து நெஞ்சம் மகிழ்ந்த சுந்தரலிங்கம் வான்வீதியில் முதல் ஸ்புட்னிக்கையும் முதல் மனிதன் காகரினையும் பறக்க விட்ட ரஷ்யர்களையும் நெஞ்சில் கொண்டு வந்து போற்றினான். ஜப்பானியர்களின் குண்டுகளால் இரண்டாவது உலகப் போரில் தாக்கப்பட்ட பெர்ல் துரைமுகத்தைப் பார்த்து கண் கலங்கினான்.
உலகில் முதல் தரமான கடற்கரை எனப்படும் மியாமியைப் பார்த்தபோது சென்னைக் கடற்கரையின் மணற்பரப்பு நினைவுக்கு வந்தது. வெப்பத்தில் வாடும் மக்களுக்கு குளிர்தரும் கடற்காற்றை வாழ்த்தினான். வளமிகு மனிதர்கள் ஆண்டில் பெரும் பகுதியை இங்கே களிப்பதைக் கண்டான். கடற்காற்றை சுவாசித்து சன்பாத் எனும் கதிரொளியில் குளித்து சுகம்காணும் உல்லாசிகளை உவகையோடு பார்த்தான். அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள அந்த கடல்பரப்பு இதுவரை எத்தனையோ வானூர்திகளையும் கப்பல்களையும் விழுங்கியிருக்கிறது. அப்படி விழுங்குவதற்கு காரணம் என்ன என்பது இதுவரையில் விளங்காத ஒன்றாக இருக்கிறது. ஆனால் சுந்தரலிங்கத்தை ஏதும் செய்யாததது அவனுக்கு வியப்பாக இருந்தது. அமெரிக்காவை சுற்றி வந்த சுந்தரலிங்கம் அமெரிக்காவின் இனிய பகுதியான லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு வந்தான். அங்கு அமைந்துள்ள தாரகைகள் மின்னும் ஹாலிவுட்டுக்கு சென்றான்.
ஹாலிவுட்... எண்ணுகின்ற போதே இனிமையில் மிதக்க வைக்கும் இனிய உலகம், திரைப்படத்துறையில் ஒளிவீசும் சொர்க்கம், ஆல்வா எடிசன் கண்டுபிடித்த திரைப்படக் கருவியின் மூலம் உலக மக்களை மகிழ்விக்கும் மகோன்னதமான கலைநகர். காவியங்களையும், கலை மிளிரும் ஓவியங்களையும் ஒளியுமிழும் திரைவாயிலாக உலகோர் நெஞ்சில் பதித்த உன்னத திருவிடம், ஆம் ஹாலிவுட்டே நினைக்கும்போதே கண்ணில் ஒளி தோன்றி நெஞ்சில் நினைவுகள் தித்திக்க தொடங்கி விடும். எத்தனை எத்தனை நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் பட நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், மலைக்க வைக்கும் படப்பிடிப்பு நிலையங்கள், கடலையே கண்ணாடிப் பேழைக்குள் காட்டும் கலைநயம், ஒரு நகரையோ உருவாக்கிக் காட்டுகின்ற திறம், புதுப்புதுச் சிந்தனைகளை காட்சிகளாக்கி மனித குலத்துக்கு மட்டுமின்றி மற்ற உயிரினங்களுக்கும் உயர்வூட்டும் முயற்சி ஆகிய அனைத்தும் சுந்தரலிங்கத்தை குதூகலப்படுத்தியது. வியப்பூட்டும் விஞ்ஞானத்தை விரிவுரையாற்ற விளங்க வைக்கும் பேராசிரியராக ஹாலிவுட் திகழ்வதை எண்ணி மகிழ்ச்சியில் திழைத்தான்.
ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் என்று எதிர்வரும் விஞ்ஞானத்தை விளக்கும் படங்கள், பென்ஹர், பத்துக் கட்டளைகள், ஏசுவின் பெருமைகளை விளக்கும் படங்கள். ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் வீரத்தையும், வில்லத்தனத்தையும் விவரிச்து சிக்கல்களை களைந்து சீர்மிகு நிலைகளைத் தோற்றுவிக்கும் படங்கள் எல்லாம் அவனை மகிழ்வித்தது.
பொருளை ஒரு பொருட்டாகக் கருதாமல் நெஞ்சம் நினைக்கின்ற கருத்துக்களை காட்சிகளாக்கிக் காட்டும் பாங்கு அவன் கவனத்தில் பதிந்தது. கிளியோபாட்ரா போன்ற வரலாற்றுப் படங்கள் புதிய உலகிற்கு ஒரு பாடமாக காட்டப்பட்டது. காண் அவன் மனம் களிப்பில் ஆழ்ந்தது. மனித ஆற்றலை - வீரத்தை விளக்கிக் காட்டும் பல படங்கள் அவனை வியப்பில் ஆழ்த்தியது. தேனீக்கள், விட்டில்கள் வேறு பல இயற்கைத் தொந்தரவுகளால், தீப்பற்றினால் ஏற்படும் வேதனைகளால் பாதிக்கப்படும் மனித குலத்தை மீட்பது எப்படி எனும் படங்கள் அவனுக்கு களிப்பையூட்டியது. போரினால் ஏற்படும் அழிவுகள், சிதைவுகள், சீரழிவுகள் ஒரு சிலரின் முடிவுகளால், முரட்டுக் குணங்களால் ஏற்படும் அவலங்களை அழகுபட, அதே நேரம் உணர்ச்சி மயமாய் சித்தரிக்கும் படங்கள். குறிப்பாக இரண்டாவது உலகப் போரைப் பற்றிய படங்கள் அவனை உருக வைத்தது. ஹாலிவுட்டைச் சுற்றி வரும் போது அவன் எண்ணங்கள் சென்னையைச் சுற்றி வந்தது. ஆலிவுட்டைப் போலவே சென்னையிலும் ஸ்டூடியோக்கள் நிறைந்த காட்சி அவன் நெஞ்சில் நிழலாடியது. ஆலிவுட்டின் தயாரிப்பாளர்களைப் போல், சென்னையிலும் பெரிய நிறுவனங்கள் இருந்தன. வால்ட்டிஸ்ஸியையும், ஆல்பர்ட் ஹிச்சாக்கையும், சாண்டோ சின்னப்பாத்தேவர் நினைவு படுத்துகிறார்.
வார்னர் பிரதர்ஸ், எம்.ஜி.எம். 20வது செஞ்சுரி பாக்ஸ் ஆகியவற்றைப் போல் செமினி வாசன், வாஹினி நாகிரெட்டி, ஏவி. மெய்யப்பன், சூபிடர் சோமு, நாராயணன், கோவை பட்சிராஜா, சீராமுலுநாயுடு, சேலம் மாடர்ன் தியேட்டர் சுந்தரம், எம்.ஏ.வி.வேணு ஆகியவர்களும் நிறுவனங்களும் அவன் நினைவில் தோன்றிக் களிப்பூட்டியது. ஏர்லால் பிளைனை எம்.ஜி.ஆர். நினைவு படுத்துகிறார். மார்லன் பிராண்டோ சிவாஜியைப் போல் நடிக்கிறார். எலிசபெத் டெய்லரை பானுமதியும், மர்லின் மன்றோவை பத்மினியும், சோபியாலாரனை சாவித்திரியும் ஒத்திருப்பதாகத் தோன்றியது. சார்லி சாப்ளின் கலைவாணராகவும், செர்ரிலூயிஸ் சந்திரபாபு ஆகவும் அவனுக்குத் தோன்றினர். மற்றும் தமிழ்த் திரையுலகில் சாதனைகள் புரிந்த பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கவிஞர்கள் கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றவர்கள் அவன் கண்ணில் தோன்றி களிபேருவகை கொள்ளச் செய்தனர்.
மற்றும் லாரல்ஹார்டி ஆகியோரின் நகைச் சுவையில் அவன் சிரிச்து மகிழ்ந்தான். தமிழ்த் திரையுலகில் ஒளிவீசிய தாரகைகள் பலர் அவன் மனதில் தோன்றினர். தியாகராச பாகவதர், பி.யூ.சின்னப்பா குணசித்திர நடிகர்கள் நடிகவேள் ராதா, எஸ்.வி.சகஸ்ரநாம், வி.நாகையா, கண்ணாம்பா, ராசம்மா, தங்கவேலு போன்றோரும் தற்கால நடிகர் நடிகைகளும் அவனில் தோன்றினர். பின் பாரமவுண்ட் ஸ்டூடியோவை பார்த்துக் களித்தவாறு, வால்ட்டிஸ்னியின் படைப்பான் கலையும் விஞ்ஞானமும் கலந்து காட்சி தரும். டிஸ்னிலாண்டை பார்த்த குளிர்மிகு கண்களோடு கிரீன்லாந்த் வழியாக ஆர்டிக் பகுதியைப் பார்க்கப் பறந்தான் சுந்தரலிங்கம்.
ஆர்டிக்
ஆர்டிக்.. - அண்டார்டிக்காவைப் போல் பனி பாறைகள் நிறைந்த பகுதி என்றாலும்  அங்கு மனிதர்கள் வாழ்வதற்கு உகந்ததாக இருக்கக் கண்டான். எஸ்க்கிமோக்கள் பனிக் கட்டியில் வீடு கட்டி வாழ்ந்து வாரிசுகளை உருவாக்குவதைக் கண்டான்.
நாய் வண்டிகளில் சென்று மீன்களை பிடித்து உணவாக்கி பனிக் கரடியின் தோல் மற்றும் ரோமங்களில் ஆடைகள் செய்து ஆனந்த வாழ்வு வாழ்வதைக் கண்டான். அந்த நிலப் பகுதியில் இருந்து வானைப் பார்த்தவாறு அண்டார்டிக்காவை நினைத்தான். தென்துருவ அண்டார்டிகாவிற்கும், வட துருவ ஆர்டிக்கிற்கும் இடையே உள்ள காந்தப்புலன் அலைகளின் செயல் அவனுக்கு வியப்பூட்டியது. நிலவுலகை உருள வைப்பதும் ஒரு குறிப்பிட தூரத்திற்குள் உள்ள பொருள்களை ஈர்த்துக் கொள்வதும் அவனுக்கு ஒரு புதிய உணர்வை ஊட்டியது. வானத்தில் மின்னல் வண்ணக் கோலங்கள் போடுவதற்கு இந்த காந்த விட்டமே காரணம் என்று அறிந்து கொண்டான். தன் கண்களை மூடி இந்த உலகை மனத்திரையில் போட்டுப் பார்த்தான்.

No comments:

Post a Comment