26.
மற்றொரு இதிகாசக் காப்பியம் மகாபாரதம். இதை எழுதிய வியாசன் பிறப்பே மிகவும் வெட்கச் கேடானது என்பர் ஆய்வாளர்கள்.
சின்னஞ்சிறு நிகழ்வை பூதாகரமாக புனைந்தனர்.
சூதும் சூழ்ச்சியும் வஞ்சமுமே நிறைந்த செய்திகளின் சாசனமாகவே விளங்குகிறது. இதில் பெண்களை மிகவும் இழிவு படுத்துகின்றனர்.
கண்ணவிந்த திருதராஷ்டன் மனைவியும்
கண்ணைக் கொண்டு வாழ்ந்தாள் என்கின்றனர்.
குந்தி என்ற ஒரு பெண் கூடா ஒழுக்கத்தால்
குழந்தைகளை பெற்றதாக சொல்கிறார்கள்.
அவளோடு அவளது சக்களத்தியும் இணைந்தாளாம்.
ஆக இருவருக்கும் அய்ந்தாறு பிள்ளைகளாம்.
அவர்களில் ஒருவன் ஒரு போட்டியில் வென்று
பெண் ஒருத்தியை அழைத்து வந்தானாம்
அதை அவள் அம்மாவிடம் சொன்னானாம்
அவளோ அவன் அண்ணன் தம்பிகளோடு
பகிர்ந்து கொள்ளச் சொன்னளாம்
அன்னையின் பேச்சை அப்படியே கேட்டானாம்
பஞ்சபாண்டவர்க்கு பாஞ்சாலி மனைவியானது
இப்படித்தான் என்கின்றது மகாபாரதம்.
என்ன கொடுமை இது என்றுதான் எண்ணம் எழுகிறது!
கட்டிய மனைவியை சூதாட்டத்திலே
அய்வரும் தோற்ற அவமானமும் பாரதத்திலேதான்
அய்வருக்கும் குட்டி பஞ்ச பாண்டவரை
பாஞ்சாலி பெற்றதும் இதில்தான்
சூதாட்டத்தில் பாஞ்சாலியை வென்றவன்
துணியவிழ்த்து ரசித்தான் என்றும் நவில்கிறது
தருமன் பீமன் அர்ச்சுணன் நகுலன் சகாதேவன்
ஆகிய அய்வரோடு ஆறாவதாக கர்ணனையும்
நெஞ்சில் வைத்து கணவனாக நேசித்ததாக
பாஞ்சாலியை பேச வைக்கிறது பாரதம்.
வேறொரு வடமொழிக் காவியத்தில்
வேதனை தரும் செய்தியொன்று
நளாயினி என்றொரு நல்லதொரு பெண் திலகம்
அவள் கணவனோ தொழுநோயாளன்
தொலைவில் இருப்போரைக் கூட
துர்நாற்றம் உயிரை கொடுமை செய்யும்
அருகிருந்து காத்தாள் அவள்
ஆயினும் அவனுக்கு ஓர் ஆசைநாயகி
அவன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல
ஆணையிட்டான் அத்தொழு நோயாளி
நடப்பதற்கு காலில்லா அந்த கயவனை
கூடையில் அள்ளிவைத்து தலையில்
தூக்கிச் செல்லச் சொன்னான்
தூக்கினாள் கொண்டு சென்றாள் அதோடு
கொடுமை மையும் சுமந்து சென்றாள்
இதற்குமேல் நளாயினியை சொல்வதற்கு
நாகரீகம் தடுக்கிறது.
நாக்கூச்சம் கொள்கிறது
நளன் - தமயந்தி, சத்தியவான் - சாவித்திரி,
துஷ்யந்தன் - சகுந்தலை என்றெல்லாம்
புராண இதிகாசப் புனைவிகளில் சாபம்
சாபவிமோசம் என்றெல்லாம் அறிவிக்கும்
நடைமுறைச் சாத்தியப்பாடுகளுக்கும்
ஒவ்வாத நிலைகளுக்கெல்லாம் உரைக்கப்படுகிறது
பெண்களை இழிவு படுத்தும் நிகழ்வுகள்
நிறைய நிறைய சொல்லப்படுகின்றது.
உதயமாறன் பெற்ற மைந்தன்
உயிரணைய உறவுப் பேரன்!
இதயத்தில் அன்புச் சுடரேற்றும்
எழில் கோமனின் இனிய தங்கையே!
மகிழ்வுக்கு உயிரூட்டும் மதிமலரே வாழ்க!
******
தமிழ்க்காவியத் தலைவிகள்
கோமதி இராமையாவின் கொள்ளுப் பேத்தி
கண்ணன் கண்மணிக்கோசலையின் எழிலார்ந்த
இளையமகன் இதயமாறனின் காதல் மனைவி
மைதிலிபெற்றெடுத்த கலைமலரே!
வண்ணத்தமிழ் பேசி மகிழ்விக்கும் வாசப்பூவே!
வளர்நிலா ஒளிபோல் வாழ்வின் நலம் பெறுக!
சங்ககாலத்தை ஒட்டிய நாட்களில்தான்
தமிழரின் வாழ்வியற் பண்பாட்டுத் தொகுப்பாக!
திருக்குறள்தோன்றி தித்திப்பூட்டியது!
உலகப்பொதுமறையாகவும் ஒப்பற்று விளங்குகிறது!
அடுத்து ஓரிரு நூற்றாண்டுகளில்தான்
இரட்டைக் காப்பியமாய் போற்றப்படும்
சிந்தைமணக்கும் சிலப்பதிகாரமும்
சீர்நிறைந்த மணிமேகலையும் மலர்ந்தன!
அரசகுலத்தினர் மட்டுமே காவியத்
தலைவிகளாக வரைந்த அந்தக் காலத்தில்
குடிமக்கள் இருவரை காவியத்தலைவிகளாக
உருவாக்கும் உலகப் புதுமையைச் செய்தனர் தமிழர்கள்
மன்னர்குல மரபுகளுக்கு மாறாக மாசுநிறைந்த
தன் நெஞ்சக் கருத்துகளை சொன்ன நிமித்திகன்
சொல்லைப் பொய்யாக்கவே துறவு பூண்டான்
சேரத்து இளவரசன் செந்தமிழ்வித்தகர்
இதயமெல்லாம் மணம் வீசும் இளங்கோஅடிகள்
மன்னர் வழி இளவரசன் மறைவடிக்கும்
எடுத்துலக சிற்பியாக இலக்கியம் வடித்தார்
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன் சொன்ன
பூம்புகார் வணிகன் கோவலன் அவன் மனைவி
கற்பின்கனல் கண்ணகிபற்றி தெரிந்த செய்திகளை
சிந்தையள்ளும் சிலப்பதிகாரக் காவியமாக்கினார்
தன்காவியத்தின் கருப்பொருள் என்ன என்று
வரையறை செய்து வடித்தளித்தார்
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாவதும்
உரைசால் பத்தினியை உயர்தேத்துவதும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுவதும்
என்று உருவாக்கிதன் உன்னத காவியத்தில்
கலை இசை கற்பின் வலிமை காவிரிநாடனின்
புகழ் வீரம் பூம்புகாரின் அழகு மதுரையின் பெருமை
வஞ்சியின் மாட்சி என்று தமிழ் நிலத்தின் எழில் சொல்லி
மூவேந்தரின் நிலங்களை முழுத் தமிழகமாக
இணைத்துக் காட்டி இலக்கியம் வடித்தவர் இளங்கோ!
தன்னைப் பிரிந்த கணவனின் பிரிவைத் தாங்கிய கண்ணகி
தன் கணவனைக் கொன்ற பாண்டிய மன்னனை
குற்றத்தை உணரவைத்து அவன் தலைநகர்
மாமதுரையையும் எரித்து மண்ணாக்கினாள்
கலைமகள்(மாதவி) கோவலனோடு வாழ்ந்து
குழந்தை ஒன்றையும் தந்துவிட்டு அவன் மறைந்தவுடன்
துறவு பூண்டு தொண்டு செய்யும் தூயவளானாள்
மாதவியும் கோவலனும் பெற்ற மாசில்லா திருமகள்
மணிமேகலையை சீத்தலைச் சாத்தனார்
ஓர் அறச்செல்வியா அறிவுமலராக காட்டி
உறுபசி கொண்டோர்க்கு உணவளித்து
உயிர் கொடுக்கும் அன்புத் தாயாக மாற்றினார்
ஈடில்லா இந்த இருகாப்பியங்களும்
தமிழர் வாழ்ந்த பல்வேறு உயர்நிலைகளை
தரணிக்கு உணர்த்துகின்ற தனிநூலாகும்
பெண்மையின் சிறப்பையும் சீர்மைகளையும்
கணிகைக்குலம் என்றாலும் கற்பின் பெருமையை
ஓங்கி உரைக்கின்ற உன்னத வடிவங்களாகும்
இதயத்திற்கு இனிமை தரும் இன்னொரு காவியம்
கள்வன்தான் அவன் என்றாலும் கட்டழகன்
வடிவழகுகொண்ட அந்தப்பாவை அவனை நேசித்தாள்
சிறையிருந்தவனை மீட்டு வந்து மணமுடித்தாள்
ஊரைக் கொள்ளையடித்தவனை
உத்தமனாக்க முயன்று பார்த்தாள்
திருடன் திருந்துவதாகத் தெரியவில்லை
கள்வனான கணவனை கடிந்து கொண்டார்
நேர்மையாய் வாழச் சொன்னவளை
கொன்றுவிட திட்டம் தீட்டினாள்
மலைவளம் காணச் செல்வோம் என,
வாழ்க்கைத் துணைவியை மன உச்சிக்கு
கூட்டிச் சென்று கொன்றுவிட முடிவுசெய்தான்
ஆனால் அவனை வலம் வந்தாள் மலையுச்சிலிருந்து
அவன் அறியாத போது தள்ளிவிட்டாள்
நாட்டுக்கு கேடு செல்பவனை கொன்றாள்
பெண்களின் மன உறுதிக்கு ஓர்பாட்டு
சீறிவரும் புலியதனை முறத்தினாலே
சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே
என்று வீராங்கணைகள் வாழ்ந்த நாடு இது!
வடமொழி காவியங்களில் மகளிரை
வழுப்படுத்து நிகழ்ச்சிகளைக் காணலாம்
தமிழ்க் காவியங்களில் பெண்களை
தகுதி நிறைத் தாயகவே போற்றினர்
கோசலைக் கண்மணியின் பேத்தியாய்
கொடிமலர் உறவாய் மலர்ந்த
தென்னவர் மூவேந்தரின்
தேன்மொழி தமிழ்பேசி வளரும்
சித்திரமே முத்திரைப் பசும்பொன்னே
சிந்தனைச் சுரங்கமாய் சிறந்து வாழ்க!
உனக்கொரு பெண்மணியை!
உலகோர் போற்றும் திருமகளை!
உயரில் நிறைந்த பெருமகளை!
உழைப்பின் பெருமை சொன்ன!
உத்தமனின் உள்ளத்தில் உறைந்த
ஒப்பிலாத் தியாகத் திருவிளக்கை!
ஒளியேற்றி உன்முன் காட்டுகிறேன்!
சிந்தையெல்லாம் அறிவைத்தேக்கிய
சிந்தனையின் வடிவான பேராளன்!
உழைப்பின் பெருமை சொன்ன
உயர்ந்த பேரறிவாளன்
உழைப்பையும் மூலதனத்தையும்
ஒப்பிட்டுப் பார்த்து ஒரு பெரு உருவகங்கள்
உள்ளஅளவு எதுவென்று ஆய்ந்து
உழைப்பே உயர்ந்த தென்றான்
மூலதனமே கூட ஒருவகை உழைப்பே என
முழங்கிய உலகின் முதல் பேராசான்
காபிடல் என்றதொரு பொருளியலின்
பெருமை சொல்லும் நூல் தந்த
நுண்மான் நுழைபுலம் கண்ட
நுட்பம் நிறைந்த பேரறிஞன்
காரல்மார்க்சைக் காதலித்து
கரம்பிடித்து அந்தப் பெருமகனின்
உயிராக உறைந்திருந்த பெண்ணவள்!
செல்வம் நிறைந்த வீட்டில்
செல்லமாய் வளர்ந்தமகள்
கணவனின் இன்ப துன்பம் ஆகிய
எல்லா நிலைகளிலும் இணைந்திருந்தாள்
நேசித்து மணந்த நேர்மையாளனோடு
நெஞ்சம் மணக்க வாழ்ந்த அவள்
நிறையவே குழந்தைகள் பெற்றாள்
வளம் நிறைந்த சூழலில் வளர்ந்து
வாழ்ந்த அந்தமாசில்லா நல்லமகள்
கணவனோடு வறுமையில் வாடினாள்
பொது நலத்தைச் சிந்தித்து எழுதியவனுக்கு
போதிய வருவாய் கிடைக்கவில்லை!
கோடி செல்வம் கொண்ட அந்தப் பெருமகள்
குழந்தைகளுக்கு மருந்தில்லாச் சூழலின்
கொடுமைகளைச் சந்தித்தாள்!
உலகின் உயர்விற்கு புதுப் பொருள்சொன்ன
உழைப்பிற்கு மரியாதை ஏற்படுத்திய
உயர் பேரறிஞனைக் காதலித்தாள்!
கைப்பிடித்த கணவனோடு
துயர் சூழ்ந்த பாதையிலேயே பயணித்தாள்!
துன்பங்களை தூசென்று நினைத்தவாறு!
கணவரோடு நடந்த தூயமகள்
ஜென்னி எனும் பெயர் கொண்ட பெருமாட்டி
செங்கொடிப் புரட்சிக்கு பொருள் தந்த
சிந்தையெல்லாம் நிறைந்திருக்கும்
கார்ல்மார்க்சின் துணைவியாவார்
மார்க்சுக்கு முன்னிருந்த உலகம்
மதவாதிகளின் மடமைக் கருத்துக்கு
உள்ளாகி இருந்த உயிரற்ற உலகம்
உழைப்பது அடிமைகளுக்கே உரியதுஎன்று
இதயத்தில் எண்ணியிருந்த இழிந்த உலகம்
ஆண்டவனின் விதி இது வென்று மூளையில்
மூடக்கருத்தை ஏற்றி ஆற்றலை முடக்கியகாலம்
முன்னேற்றத்தை தடுத்திருந்த நாட்கள்
அறிஞன் மார்க்கின் கொள்கைவலிமை
அடியோடு உலகை மாற்றிப் போட்டது
அழகோவியமாய் விளங்கிய சென்னியின்
அன்புக் கணவர் மார்க்சின் கருத்துக்களால்
மாபெரும் புரட்சி விளைந்து பாட்டாளி வர்க்கத்தின்
மாசில்லா சோவியத் நாடுமலர்ந்தது
அடிமைகளின் பூமி என்ற இரசிய பூமியில்
ஆதிக்கவாதிகளை எதிர்க்கும் ஆற்றல் விளைந்தது
அறிவியல் புதுமைகள் அணிவகுக்கத் தொடங்கியது
புதுப்புது அறிவாற்றல் பூத்துத் குலுங்கியது
அறிவியல் ஆய்வுகளில் ஆணும் பெண்ணும்
ஆற்றலைக் காட்டி அற்புதங்கள் செய்தனர்
சென்னி கணவன் மார்க்ஸ் கொள்கைகள்
சிவப்புநிறம் பெற்று உலகைச் செழிக்க வைத்ததை
உழைப்பே உயர்வென்ற உண்மையை
உலகம் ஒத்துக்கொண்டு உயர்ந்தது
ஒடுக்கப்பட்டோர் உரிமைகள் உயிர்பெற்றன்
உலகை நோக்கி ஒளி பரவியது
சிந்தனையாளன் மார்க்சின் உயர்வுக்கு
சென்னிதான் முழுப்பொருள் என்றால் மிகையல்ல
சங்ககால பெண்கவிஞர் பெருமக்கள்
சங்ககாலம் தமிழர் சரித்திரத்தில் பொற்காலம்
அகம்-புறம் அறம் பொருள் இன்பம், இனிய
இயல் இசை கூத்து, அறநெறி அரசுகள்
ஆற்றலுள்ள அரசர்கள், மரபுகளை உருவாக்கும்
மாவீரர்கள், மானத்தை நிலைநாட்டும் போர்க்களங்கள்!
இனிய கவிஞர்கள். இயற்கை ஆர்வலர்கள்
ஈடில்லா புகழ் பெற்ற புலவர் பெருமக்கள்
கலை, மொழி, கல்வி, கருணை, கொடை காவியம்
தத்துவ சித்தாந்த ஆய்வுகள் விவாதங்கள்
மதக் குறிகளற்ற மார்க்கக் கோட்பாடுகள்
விளைநிலம் அதில் வேளாண்மை பெருக்கம்
உள்நாட்டு - வெளிநாட்டு வணிகவளம்
பொருள்தேடும் வேட்கை அதைபகிர்ந்துண்ணும் பண்பு
ஏற்றதாழ்வற்ற எல்லோருக்கும் பொதுநீதி
பிறவியில் மேல்கீழ் கட்டுகளில்லா சமநிலை
உளமொன்றில் இருவர் இணைந்து இல்லறம் பேண
இடையூறு தடைகளுமில்லா இன்பச்சூழல்
நிலத்தை அய்ந்தாக வகுத்த அறிவியல் முறை
காலங்கள் தோறும் தோன்றும் இயற்கையின் நிகழ்வுகள்
கணக்கொடுத்து பெயர் குறித்த ஆய்வு நிலை
அறுபதுநாள் ஒருபருவம் என ஆண்டுக்கு ஆறுபருவம்
அறுபதாண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வின் நிலை
சொல்லும் நெஞ்சை அள்ளும் நெறிமுறை
மனித உறவுகளில் கூட தலைவன் தோழன்
மாண்புநிலை மகளிர் தலைவி தோழி
தாய், செவிலித்தாய் என்னும் வகையோடு
அரசன் அமைச்சர் என்றிருந்தாலும்
சமத்துவத்திற்கு தீங்கில்லா நல்லதோர்
உறவுகளை செழிக்கச் செய்தநிலை இருந்தது
ஏழை என்றாலும் ஏந்தல் என்றாலும்
எல்லார்க்கும் எல்லாம் என்ற இனிதான சூழல்
அன்றிருந்த உலகத்தில் எங்குமில்லா
எழிலாற்ந்த நிலை தமிழகத்தில் இருந்தது
உலகத் தரத்திற்கு மேலாக மிகமிக
உச்சநிலையில் உயர்வுகள் நிறைந்திருந்தது
உணர்வுகளின் நிலையிலும் உலகநடப்பிலும்
ஒழுக்க நெறிகள் உயிரோட்டமாயிருந்தன
ஒப்பில இலக்கணம் தந்த ஒல்காப்புகழ்
தொல்காப்பியருக்கு முந்தை காலத்திலேயே
பலநூறு இலக்கியங்கள் இருந்ததை
தூயவர் தொல்காப்பியரே தெரிவிக்கிறார்!
ஆயினும் அவையெல்லாம் அழிந்து விட்டதாம்!
தொல்காப்பியத்தோடு சங்க இலக்கியங்கள்
எட்டுத்தொகை பத்துப்பாட்டு அதையொட்டி
அய்ம்பெரும் காப்பியங்கள் என அழகிய
வடிவங்கள் தமிழருக்கு எழிலூட்டுகின்றன!
சங்க இலக்கியங்களின் கருத்துச் செறிவால்
உள்ளம் உவந்து மனம் ஊக்கப்பட்டு உயிர் உரம் பெறுகிறது.
சங்ககாலத்து அறிவார்ந்த புலவர்கள்
அய்நூறுக்கும் மேற்பட்டோர் வாழந்தனர்
அவர்களில் அய்ம்பதுபேர் மகளிர்களாகும்
அவர்களில் நானறிந்தவர்களை கூறுகிறேன்
அரசர்களுக்கு நெறிமுறை கூறி
அறம் சார்ந்த கருத்துக்களை வழங்கி
அன்னையர்குலம் தந்த அவ்வையார்!
அறிவார்ந்த அள்ளூர் நச்செல்லையார்!
ஆடற்கலையறிந்த ஆதிமந்தியார்!
ஒப்பற்ற ஒக்கூர்மாசாத்தியார்!
உள்ளம் நிறைந்த ஓரம் போகியார்!
கண்ணில் நிறைந்த கச்சிப்பட்டு நன்னாகையார்!
கருத்து நிறைந்த கழாக் கீர எயிற்றியார்!
கவிதைமகள் காக்கைப்பாடினி நச்செள்ளையார்
கற்புநிரை காவற்பெண்டு!
கலைமண காமக்கண்ணி நப்பசலையார்
குற்றமில்லா குறமகள் இளவெயினியார்
குவளை மலர்க்கண் குறமகள் குறிஎயினியார்!
குமிழிஞாழலார் நப்பசலையார்!
நல்லமகள் நக்கண்ணையார்!
நெஞ்சம் நிறை நெடும் பல்லியத்தை
பண்புசேர் பக்குடுக்கை நன்கனியார்!
புகழ்நிலை பூங்கண் உத்திரையார்!
பூதப்பாண்டியன்தேவி பெருங்கோப்பெண்டு!
பெருமைமிகு பேரெயில்முறுவலார்!
பெண்குலத்துப் பெருமாட்டி பேயார்!
பெருஞ்சிறப்பின் பேய்மகள் இளவெயினியார்!
பொன்னெழில் பொதுப்பில் புல்லாளங்கண்ணியார்!
போற்றுதலுக்குரிய பொன் முடியார்!
மதுரை ஒலைக்கடையத்தார் நல்வெள்ளையார்!
பெருமைமிகு பெருங்கோழியூர் மாசாத்தியார்
மாசிலாதமிழ்மகளே. வாஞ்சைநிறை மதிமலரே!
அகம்புறம் என வாழ்வு நெறி வகுத்து
மானத்துடன் வாழ்ந்திருந்த தமிழ்க்குலத்தின்
சங்ககால இலக்கியச் சூழலும் புதுமைப் பயனும்
என்றென்றும் தமிழரோடு இணைந்திருக்க வாழ்த்துகிறேன்.
*
பத்தினிப்பெண் சொல்லும்
பழந்தமிழ் இலக்கியங்கள்
வழிகாட்டும் வாழ்வு நெறியில்
வரலாறு சமைத்த இனத்தின்
வாசமிகு பூந்தென்றலே வாழ்க!
*
இருவிழியால் இணைந்த காதல் பெண்கள்
இருவரின் பெயர் சொன்னால்
இதயத்தில் மகிழ்வு சொட்டும்
இணைந்த இணைகளின் பெயர்களை
எந்நாளும் போற்றுகிறது உலகம்
காதலித்து இணைந்தவர்களையும்
மாய்ந்து வரலாறு படைத்தவர்களையும்
வாழ்ந்து சரித்திரம் சமைத்தவர்களையும்
வாய்மணக்க புகழ்கிறது உலகமே
லைலாமஜினு என்று ஓருயிராய்
சிந்தையில் எண்ணி சித்தம் கலங்கியவர்களை
சிறப்பாகவே உலகம் போற்றுகிறது
இன்னொரு இனிய இணையர்கள்
ரோமியோ ஜீலியட் என்ற
ஒருவரில் ஒருவர் உயிராய் இருந்த
இருவரையும் உலகம் உயர்ந்தேத்துகிறது
காதல் வீரம் மானம் என்ற உணர்வுகளில்
உயிரைப் புதைத்த தமிழகத்திலும்
உயர்ந்த காதல் இணையொன்று
காவியமாய் வாழ்கிறது
மன்னர் குலோத்துக்களின் அன்புமகள்
கவிகம்பன் பெற்றெடுத்த கவியரசன்
அமராவதியும் அம்பிகாபதியும்
இரண்டறக் கலந்த இதயங்களாயினர்
இருப்பினும் மன்னன் தன் அன்புமகளை
ஏழைக் கவியோடு இணைந்து வைப்பானா?
இருப்பினும் குலோத்துங்கள் மற்ற நாட்டு
மன்னர்களைப் போல் கொடுங்கோலனில்லை
இறைவன்மீதும் இசைமீதும் ஈடுபாடு கொண்டவர்
இறைவனைப் போற்றி நூறுபாடல்
இசையோடு பாட வேண்டும் இல்லையெனில்
இருக்காது உன் உயிர் உடலில் என்றான்
ஆரிய இராமனை அவதாரமாக்கிய
காவியக் கவிஞர் கம்பரின் மகனல்லவா
ஆகட்டும் என்று ஆயத்தமானான் அம்பிகாபதி
இறைவன் புகழ் பாடும் இசைப் பாட்டைப் பாடினான்
பாட்டொன்று முடிய முடிய அதைப் பூப்போட்டு
எண்ணினாள் பூம்பாவை அமராவதி
எல்லாவற்றிலும் பிச்சைக்கு கேட்கும்
இறைவனுக்கு இந்தப் பாட்டுப் போட்டியிலும்
பிச்சைப் போடும் வழக்கம் அன்று இருந்தது
ஆனால் ஆசையில் துஞ்சிய அமராவதிக்கு
முதல்பாட்டு கடவுளுக்கு என்று இருந்ததை
எண்ண மறந்து நூறு பாட்டு முடிந்ததென்று
நேசித்த அம்பிகாபதியின் நேரில் தோன்றினான்
பாவையைப் பார்த்த கவிஞன் பாடலை மாற்றினான்
பாவையின் பேரழகைப் பாடிப் பூரித்தான்
கடவுளுக்கு போக மீதம் நூற்றில் ஒன்று
குறைந்த தென்று கூறி கம்பர்மகன்
கொலைக் களத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்
கொல்லப்பட்ட கவிஞனோடு அமராவதியும்
சாவூரில் இணைந்த சரித்திரம் ஆனாள்.
ஆடற்கலை அரசி அழகோவியம் அனார்கலி
அக்பரின் மகன் சலீமை உள்ளத்தில் குடிவைத்தாள்
அரசகுலத்தின் ஆதிக்க உணர்வுகள்
ஏழையானப் பெண்ணின் காதலை ஏற்குமா?
அதிகாரவெறி கொண்ட அக்பரின் அரசு
அழகெழில் வாய்ந்த அனார்கலியை
கல்லறைக்குள் அடைத்து கொன்று விட்டது
ஆயினும் ஆண்மகன் சலீம் பெயரை
ஜகாங்கீர் என்று மாற்றிக்கொண்டு
நூர்ஜகானை மணமுடித்து வாழ்ந்தான்
நூர்ஜகான் ஒரு துணிந்த பெண்மணி
போர்க்களப் பாசறையில் புலிபோல
உலவும் தீரமிகு பெண்மணியாவார்
நிறைவோடு வாழ்ந்த நூர்ஜகானும்
நிறையவே குழந்தைகளைப் பெற்றாள்
அவள் பெற்ற மைந்தன்தான் அருமை ஜாசகான்
ஜாசகானின் அன்பு மனைவியான மும்தாஜ்
மும்தாஜ் நினைவாக ஒரு நினைவுச் சின்னம்தான்
ஆக்ராவில் குடிகொண்ட தாஜ்மஹால்
இருபதாண்டுகள் பூமியில் எழுதிய
ஓவியமாய் அந்த அழகு மாளிகையை
கட்டி முடித்தான் அற்புத மனிதன் சாசகான்
உலக விழிப்புணர்வுக்கு உந்து சக்தியாய்
உருவான புரட்சிதான் பிரஞ்சுப் புரட்சி
சமத்துவம் சுதந்திரம்,
சகோதரத்துவம் எனும்
சான்றோன் ரூசோவின் முழக்கமும்
வாளின்முனையை விட பேனாவின் முறை
கூர்மையானது என்ற வைரநெஞ்சம்வால்டேரின்
வைர எழுத்துகளும் ஏற்படுத்திய
பிரஞ்சுப் புரட்சிக்கு முன்னரே பிரஞ்சின் மீது
மேலாண்மை செலுத்திய ஆதிக்கவாதிகளை
எதிர்த்து ஜோன் ஆப் ஆர்க்கு எனும்
சின்ன வயது பெண் ஒருத்தி சிங்கமென
சீறிச்சிலிர்த்து எழுத்து போர் முழக்கமிட்டாள்
உரிமைக்கு போரிட்ட அந்தப் பெண்ணை
பாலியல் கொடுமையால் பந்தாடினர் பாவிகள்
உரிமைப் போராளிகளின் உயிராய்த்திகழ்ந்த
ஜோன் ஆல் ஆர்க்கை உயிரோடு எரித்தனர்
ஆயினும் அவளின் தியாகம் வீண் போகவில்லை
வளர்பிறை வடிவே வானவில் வண்ணமே
வசந்தப் பூமலரே வரலாற்று புகழ்ச்சிகரமே!
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு
பின்னாளில் பிரஞ்சுப்புரட்சி வெடித்தது
பசித்தவரின் கூட்டம் பிரபுகளின் தலைகளை
கில்லட்டின் எனும் வெட்டுப் பாறையில்
முட்டவைத்து உரிமைகளை மீட்டது
பிரஞ்சுப்புரட்சிக்குப்பின் ஏற்பட்ட
அரசில் குழப்பத்தால் நெப்போலியன்
ஆருமைப் பிரதிநிதியானான்
இருபதாண்டுகள் அய்ரோப்பாவை
இரத்தத்தில் நீராட்டினான் நெப்போலியன்
போரில் இழந்த கைவாளைப் பெறுவதற்காக
பெண்னொருத்தி அவளிடம் வந்தாள்
அவள்பெயர்தான் அழகி ஜோசபைன்!
மகனோடு வந்த அவளை நெப்போலியன்
நெஞ்சத்தில் குடிவைத்தான்
நெப்போலியன் வரலாற்றில்
நீங்காத இடத்தைப் பெற்றாள் ஜோசபைன்
ஆயினும் நெப்போலியனின் நெஞ்சில் தோன்றிய
மாமன்னன் ஆக வேண்டும் என்று ஆசையில்
ஆஸ்திரிய இளவரசியை மணந்து கொண்டான்
ஜோசபைன் இருந்தபோது கிடைத்த வெற்றிகள்
இளவரசியை மணந்து பின் இழந்தவன்தான்
இறுதியில் எல்பாதீவில் ஏதிலியாய் இறந்தான்
நெப்போலியன் ஜோசபைனை நேசித்தபோது
வெற்றிகள் அவனுக்கு மாலைசூடி வாழ்த்தியது
உலகறிந்த பெண்கள்
அன்பில் விளைந்த அறிவுச் சுடரே!
அருள்வடிவான கருணைமலரே!
புத்துலகின் உணர்வறிந்த பாச்சரமே!
புதுமைகள் பொங்கிவரும் பூங்கடலே!
போற்றுவோம் உந்தன் புகழ் சிறக்க!
அரசியலில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தி
அரசாண்ட உலகில் பெண்களும்
பெரும் புகழ்பெற்று பணியாற்றினார்களே
புராண இதிகாசக் கற்பனைகளில்
அல்லிராணி ஆரவல்லி மீனாட்சி என்று
பெண்ணாட்சி நடந்ததாக போற்றினாலும்
ஆண்டுகள் பலவாக அன்னைகுலம்
அரசியலில் நிலைபெற்ற வரலாற்றில்
உலகில் சனநாயகம் மலர்ந்த பின்னர் தான்
பெரும் பதவிகளில் பெண்கள் வரும் வாய்ப்பு
பேரளவுக்கு இல்லையென்றாலும்,
ஓரளவு
உயர் பதவிகளில் அமர்ந்தார்கள்
சனநாயக வரலாற்றில் முதல்முதலில்
இலங்கைநாட்டில்தான் ஒருபெண்
முதன்மைப் பதவியில் அமர்ந்த நிலை உருவானது!
கணவர் இழந்த நிலையிலும் போட்டியிட்டு
பிரதமர் பதவியை அடைந்தார் திருமதி பண்டாரநாயகா!
அடுத்தொரு நாட்டின் பெண்மணி ஒருவர்
இஸ்ரேல் கோல்டமேயல் பிரதமரானார்
நேருவின் நேர்த்திமிகு பெண்மணி
இந்திராகாந்தி இந்தியப் பிரதமர் ஆனார்
பின்னர்தான் உலகையே தன் கைப்பிடியில் வைத்திருந்த
பிரிட்டனின் பிரதமராக மார்கரட் தாட்சர் வந்தார்
ஆனால் பலநாடுகளில் ஆண்வாரிசு இல்லையென்ற போது
பெண்கள் அந்த நாட்டின் அரசிகளாக ஆனார்கள்
இங்கிலாந்தின் விட்டோரியாவும்
எலிசபெத்தும் மகாராணிகள் ஆனார்கள்
வேறுபல நாடுகளிலும் ராணிகளாக இருந்துவருண்டு
சாலமன் மன்னனின் மனைவி ஷீபாவும், புகழ் பெற்றவர்
இராணிகள் என்ற போது அண்ணாவின்
உரோமபுரி இராணிகளும் நினைவுக்கு வருவார்கள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
அரசியல் கலையில் தேர்ந்தவர்கள் உண்டு
கவர்ச்சிகாட்டி அதிகாரத்தை பெற
முயன்றவர்கள் அனேகம் பேர் அங்கிருந்தனர்
மேடம் கியூரி
சிந்தனைச்செறிவு சிந்தையில் அலைமேவும்
செந்தமிழ் கொஞ்சும் எங்கள் செல்வமே!
உணர்வூட்டும் உரமே ஒளிரும் முத்தே
சொக்கத் தங்கமாய் சிறக்க வாழ்க!
உலகில் விஞ்ஞானம் வளர்ந்தபோது
உழைத்தவர்கள் ஏராளம் ஏராளம்
புதுப்புதுப் பொருள்களை உருவாக்க
இயற்கையில் உள்ள தனிமங்களை
கண்டு வளப்படுத்தவர்களில் ஒருவர்
ரேடியம் எனும் தனிமத்தை கண்டுபிடித்த
மேடம் கியூரியை உலகம் என்றும் மறக்காது.
நெஞ்சில் நிறைந்தவர்கள்
தமிழ்ச்செல்வி
உதயமாறனின் தங்கமகன் எழில் அழகின்
இன்மை கொண்ட இளைய தங்கையே!
என்றும் வாழ்க நீ வளமோடு
ஏசுவைப் பெற்ற கன்னிமேரி
லியோர்டோனா டாவின்சியின்
ஓவியப்பெண் மோனோலிசா
டாவின்சியின் மற்றொரு ஓவியமங்கை
மகதலேனா, பிரிட்டிஷ் இளவரசி டயான!
போராட்ட மங்கை ரசியாசுல்தான்
சித்தூர் ராணி பத்மினி, ராணிசம்யுக்தா
போரில் காயம்பட்டவர்களுக்கு
காலமெல்லாம் தொண்டாற்றிய
பிளாரன்ஸ் நைட்டிங் கேல்
ஜான் கென்னடியின் புகழ்பெற்ற மனைவி
ஜாக்குலின் ஒனாசியஸ்
வானில் பறந்த வாலென்டினா
வான்வெளியில் பறந்து
வாழ்வை முடித்துக் கொண்ட கல்பனாசாவ்லா!
மதுரையை ஆண்ட மங்கயர்க்கரசி
காந்தியோடு தென் ஆப்ரிக்காவில்
போராடி மடிந்த தில்லையாடி வள்ளியம்மை!
தங்கமங்கை உசா, பளுதூக்கும் மல்லேஸ்வரி
காவல்துறை அதிகாரியாய் புகழ்மிகு
சாதனைபடைத்த கிரேன்பேடி,
டென்னிஸ் உலகில்புகழ் பெற்ற
நவரத்தினலோவ கிறிஸ்ட்ஏவர்
ஸ்டெப்பிகிராப், மோனிகாசெலஸ்
இந்தியாவின் சானியா மிர்சா
கருப்பு வானத்தில் பூத்த பொன்னொளிர்
வில்லியம் சகோதரிகள்
ஆங்கிலபட உலகமறக்கமுடியாத
எலிசபெத் டெய்லர் மர்லின்மன்றோ
கவிக்குயில் சரோசினி நாயுடு
அயர்லாந்தில் பிறந்ததாலும் இந்திய
அரசியலில் மிளிர்ந்த அன்னிபெசண்ட்
பல்லாண்டுகள் சிறையில் வாடிய
மியான்மர் ஆப்சாய் சூயி
கதையென்றாலும் கண்ணிய மனத்திலும்
உயிரோட்டமாய் உலவி வாழும்
அண்ணாவின் கலிங்கராணி பார்வதி பி.ஏ.
கல்கியின் சிவகாமி, பொன்னியின் செல்வன், நந்தினி
நாபாவின் மணிபல்லவம் நாயகி - மற்றும் முல்லை,
செகசிற்பியனின் நாயகி நற்சோனை
சாண்டியல்யனின் நிறைய கதைநாயகிகள்
நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும்
யவணராணி, பூவழகி அல்லி
கடல்புறாவின் காஞ்சனமாலை
- மஞ்சளழகி
சேவற்கொடியோனின் சீதா - அகிலா
பாரதியின் கண்ணம்மா, அகிலனின்
பாவைவிளக்கு - சினேகிதியின் தலைவிகள்
கலைஞரின் படைப்பில் உருவான
மகளிர்குல மணிவிளக்குகள்
கல்யாணி - பத்மாவதி பிரேமா போன்ற
நிறைய நிறைய இலட்சிய மங்கைகள்
இந்தித்திரை வானின் இசைக்குயில்கள்
லதாமங்கேஸ்கர் ஆசாபோன்ஸ்லே
உசா மங்கேஸ்கர், உசா உதுப்
இந்தியாவில் ள்ள சமாஸ்தானங்களில்
அரசிகளாக இருந்தவர்கள் பலர்
அரசியலிலும் ஒளி வீசினார்கள்
குவாலியர் அரசி காயத்ரிதேவி
இராஸ்தான் முதல்வராயிருந்தவர் சுந்தரராஜேஸ்
பண்டித நேருவின் தங்கைகளுள்
விசயலட்சுமி பண்டிட், கிருஷ்ணாவும்
அரசியலில் நடைபோட்டனர்.
போர்க்கள வீராங்கணைகள்
மாசில்லாமகன் பெற்ற மகள்
அறிவியல் சிந்தனைகளில் மனதை
ஆழப்புதைத்த அருமைச் செல்வன்
இதயமாறன் எமக்களித்த
இனமானத் தோன்றல் - இனிமையில் பூத்த மலரே!
எழில்சிறக்க வாழ்க எந்நாளும்
தனியரசு தனிப்படை கண்டு வாழ்ந்த தமிழிகள்
பல்லாண்டுகளாக பற்பல இனத்தவருக்கு
அடிமையாகி அல்லலை சுமந்தனர்
பல்வேறு படையெடுப்புகளை எதிர்த்து
போர்புரிந்த மாண்டோர் ஏராளம்
சேதுபதி மன்னரின் செல்வப் புதல்வி
சிவகெங்கைச் சீமையின் அரசியானார்
போர்களத்தில் நின்றாள் வேலுநாச்சியார்
மருது சகோதரர்களின் துணையோடு
எட்டு ஆண்டுகள் போர்புரிந்தார்
அந்தப் போர் நடந்த நேரத்தில்
புரட்சி மங்கை வெள்ளையர் ஆயுதக் கிடங்கில்
உடலில் எண்ணெயை ஊற்றி தீவைத்து
குதித்து அந்த ஆயுதக்கிடங்கை அழித்தார்
குமிலி என்ற வீராங்கனையை.
குவலயம் மறந்திடக்கூடுமோ?
மதுரையை அல்லி ஆண்டதாக கருதி
அவளது ஆட்சிச் சிறப்பை போற்றி
பாமாலை ஒன்று நம்மை பரவசப்படுத்துகிறது
அத்தோடு மதுரை இராணிமங்காம்மாளின்
மகத்தான புகழும் பேசப்படுகிறது.
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கரும்பு இளநீரும் கண்திறந்து மடைபாயும்
கட்டுவங்களங்காணு கதிர் உழக்கு நெல்காணும்
அரிதாள் அறுத்து வரமனுதாள் பயிராகும்!
அரிதாளின்கீழ் அய்ங்கலத்தேன் கட்டும் கட்டும்
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது
ஆனைகட்டி போரடிக்கும் அழகான தென்மதுரை
என்று பெண் ஆட்சியில் பெருமை பாடப்படுகிறது
பெண்குலப் பெருஞ்சிறப்பே!
பேரன்புப் பெட்டகமே!
பெரியார்வழிநடத்த பேரழகே!
பிரியாத செல்வத்துடன் வாழ்க!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
அன்னைத் தமிழகத்தில் ஓர் ஆற்றலாதன்
சோழமண்டலத்தின் ஒளிரும் சுடராய்
வரலாற்றின் மணிமுடியில் இடம் பெற்றான்
வியத்தகு தஞ்சை பெரிய கோயிலை
படைத்து பாரில் புகழடைந்த இராசராசன்
அந்த அருமையாளன் மிக இளைஞனானபோது
அரசியல் சதிகள் அங்கே அரங்கேறின
ஆரியப்பார்ப்பனர்களால் இளவரசன்
ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான்
அடுத்ததாக இராசராசனுக்கும் குறிவைத்தார்கள்
அப்போதுதான் சோழர் குலத்தின் சொக்கத் தங்கம்
சோர்விலாப்பெண் புலியாய் சோழநாட்டின்
அரசியலின் பல்வேறு நிலையை ஆராய்ந்தார்
குந்தவை எனும் பெயர்கொண்ட குலமகள்
இளைய சகோதரன் இராசராசனை
இலங்கையில் மறைத்து வைத்தாள்
நாட்டிலுள்ள நல்லறிவாளர் வீரர்களுக்கு
ஆய்வுரைகள் வழங்கி அரசியல் நடத்தினார்
இளவரசன் இராச இராசன் இரும்பனைய
இதயத்தோடும் ஏற்றமிகு அரசியல் திறத்தோடும்
அரசுக் கட்டிலில் அமர்ந்த பின்னும்
அரசியல் அறிவுரைகள் வழங்கிவந்தாள்
வல்லமைமிக்க வந்தியத்தேவரை
காதலித்து மணமுடித்த குந்தவை நாச்சியார்
சோழர்குல வரலாற்றில் மறையாத
சுடரொளியாய் என்றும் பிரகாசிப்பார்
பொதுஉடைமைத் தோழியர்கள்
வீரர்குலத் தோன்றலே வீசும் தமிழ்த் தென்றலே
மானம் காக்கும் மறக்குலத்தின்
மாண்பு நிறை மதிமலரே!
வாழ்க பல்லாண்டு!
இல்லாதோர் இயலாதார்க்கு ஏற்றம் தரும்
இனிய கொள்கைபொதுஉடமை கொள்கை
ஏனோ ஏழை இந்தியாவில் எடுபடாது போனது
ஆயினும் அந்தக் கொள்கைக்காக பலர்
போராடினார் பொல்லாதநிலை நீக்க!
கேரளத்து வீராங்கனை கவுரி தாமல்!
தமிழகத்து மதுரை ஜானகியம்மாள்
பாசமிகு பாப்பா உமாநாத்
சகோதரி சக்திகோதண்டம்
தலைமறைவு இயக்கத்திற்கு உதவிய
பல்வேறு மகளிர் திலகங்கள்
பார்முழுக்க நிறைந்திருந்தனர்
பிற பிற அரசியல் கட்சிகளில் பணியாற்றிய
அருமைத்தாய் மார்களையும் மறக்கமுடியாது
அன்புநீறை அனந்தநாயகி ஜோதியம்மாள்
சோழவந்தாள் பொன்னம்மாள் லூர்தம்மாள்
குடியரசு தலைவராக வீற்றிருக்கும்
பிரதீபா பட்டீல், சபாநாயகர் மீராகுமார்
இதயத்தில் நிறைந்த இனியவர்கள் இவர்கள்
திராவிட இயக்க மங்கையர்
ஈரோடு எழுமாத்தூர் இளவரசி மைதிலியும்
போர்மறவர் குலத்தின் புடம் போட்ட தங்கம்
பொன்னொளிர் புதுமைச் செல்வன்
இனியவர் இதயமாறனும் இணைந்தபெற்ற
ஈடில்லாச் செல்வமே மதிமலரே வாழ்க!
மனிதகுல வரலாற்றில் மாண்புகள் தழைக்கவும்
மனபதை சிறந்து வாழ்வில் நலம் நிலைக்கவும்
தமிழும் தமிழர்களும் ஆற்றிய பங்கு மகத்தானது
காதல், மானம், வீரம், கருணை கொண்ட
அறநெறிச்சாரம் அன்பு, உரிமை
அரசு ஆணை ஆள் அம்பு, அருள் உரிமை
என்றெல்லாம் எழிலோடு வாழந்த தமிழன்
அன்னியச் சிந்தனைக்கு ஆட்பட்டு
இருந்த நிலை யிழந்தான் இடர்பட்டான்
பகுத்தறிவு சார்ந்து பண்பட்ட தமிழன்
சமயச் சங்கடங்களில் சிக்கி சீர் கெட்டான்
தனியரசை தமிழன் இழந்து பலநூறு
ஆண்டுகள் ஆனது என்றாலும் உள்ளம் கெட்டு
இரண்டாயிரம் ஆண்டுகள் ஆன தென்பேன்
தள்ளாடி தவித்துக் கிடந்த தமிழனித்திற்கு
வழிகாட்வாழ்வழிக்கத் தொடங்கியதுதான்
தென்னந்திய நலஉரிமைச் சங்கம் என்ற
திராவிடர் இயக்கம் எனும் பேரொளி
அந்த அருமையான இயக்கத்தில்
உழைத்த தாய்க்குலத்தின் பெருமைசொல்வேன்
ஆகாத உணர்வுகளையும் கருத்துக்களையும்
உள்ளத்தில் கொண்டிருந்த மனிதர்களை
மாற்றுகின்ற பெருமுயற்சியோடு
பேருழைப்பை நல்கினர் பல மேதைகள்
ஆண்டாண்டு காலமாக மண்டிக் கிடங்க
மதவாதக் குப்பைகளை அகற்றிட
ஆன்றோர்பலர் முயற்சித்தனர்
மூடநம்பிக்கையின் மூடை நாற்றத்தில்
முழுமையும் மூழ்கியுள்ள சமூகத்தை
மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு
ஈரோட்டுப் பெரியார் ஈ.வெ.ரா. முரசறைந்தார்
மனிதகுல மேன்மைக்கு தடைபோல் உணர்வுகளை
தகர்த்தெறிய அறிவுத்தடியெடுத்தார்
உலகில் எங்கும் தோன்றாத செயல்திட்டத்தை
முன்வைத்தார் உழைப்பை முன் நிறுத்தினார்
உன்னை நீ தாழ்வாக எண்ணாதே
சுயமரியாதை உணர்வை உள்ளத்தில்வை
உன்னை மதிக்காத எதையும் தூக்கிஎறி
ஊர்வாழ உன் உழைப்பைக் கொடு
கடவுள், மதம், சாதி, சாஸ்திரம் மற்றும்
அது சார்ந்தவையெல்லாம்
உன்னைத் தாழ்த்துமே யதனால்
அவற்றை உதறிவிட அணியமாகு.
இயங்குகின்ற மனிதனை நினைநேசி
இல்லாத கடவுளை எண்ணாதே மற
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பாரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி
இவர்களை மதியாதே மனம் மாறு
எங்கெங்கும் இதுபோல் முழக்கமிட்டார்
பெரியாரின் கருத்தை ஏற்ற பெண்குலம்
அவருக்கு பெரியார் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது
எரிமலையாய் சுடுதழலாய் இயற்கைச் சீற்றமாய்
ஆழிப்பேரலையாய் ஆர்ப்பரிக்கும் புயலாய்
இங்கர்சாலாய் எப்பொழுதும் பேசுகின்ற
ஏதன்ஸ் சாக்ரடீசாய் வைர நெஞ்ச
வால்டேர் பெருமகனாய்
நாத்திகத் திருமகனாக நாடெங்கும்
நற்கருத்தைப் பரப்பி வந்தார் பெரியார்
பெண்ணடிமை தீருவதற்கு பெரும்பாடுபட்டார்
பெண்களின் பிள்ளைப்பேறு அவளை அடிமை
ஆக்குவை அறிந்த பெரியார் முதன்முதலில்
குழாய்க் குழந்தை சிந்தனையை வெளியிட்டார்
அய்யாவைப் பின்பற்றி அன்னைக்குலத்தார்
ஆர்த்தெழுந்து பணியாற்றினார்
அந்தநாளில் பெண் பெரியார் என்று
பேசப்பட்ட மூவலூர் மூதாட்டி
இராமாமிர்த அம்மையார் அவர்கள்
பொட்டுக் கட்டப்பட்டு மிகவும் புண்பட்டவர்
மதக்கொடுமையால் மனம் நொந்தவுடன்
தாசிகளின் மோகவலை அல்லது
மதிபெற்ற மைனர் என்று ஒரு
எழுச்சிமிக்க நூலை எழுதினார்
அதற்கு அணிந்துரை நல்கி செலவையும்
ஏற்றவர்யார் என்பதை மறக்க முடியாது
வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்து
சிவகிரி வீர மகளிர் வழி வந்த
வெள்ளைத்துரச்சிநாச்சியார்!
பெரியாரின் மனைவியாக நாகம்மை
பெரியாரின் தங்கை கண்ணம்மாள்
காந்தியாரின் பாராட்டைப் பெற்ற
கடமைமறவாத வீரங்கனைகள்
பின்னாளில் பெரியாரின் துணைவியான
மணியம்மை தன்னைத் தியாகம் செய்து
பெரியாரின் உடல்நலம் பேணி
தொடர்ந்து தொண்டாற்றி வந்தார்
பெரியாரின் மறைவுக்குப்பின்
பெரியாரின் கொள்கையை நிலைநாட்ட
போர்க் களத்தில் நின்று பணியாற்றினார்
காவல்துறையின் கடுமைக்கு ஆனாளார்
காவலர்கள் வாகனத்திற்குள் அவரை
தூக்கி வீசிக்கொடுமை செய்தனர்
மக்களுக்கு உடன்பாடான கருத்துக்களுக்காக
போராடிய பெண்கள் பலர் இருந்தனர்
மக்களுக்கு உடன்பாடில்லாத கருத்தை
எடுத்துச் சொல்லி ஏற்றம்பெற
போராடிய வீராங்கனை மணியம்மைதான்
ஈட்டிமுனை எழுத்தாளர் குருசாமியின்
அன்புத்துணைவி குஞ்சிதமும்
நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தில்
முதல் கலப்பு மணம் புரிந்த மஞ்சுளாபாயும்
பெரியார் கொள்கையோடு தமிழ் செம்மொழி
தகுதிபெற உழைத்த பெருமாட்டி
சாவிலி இளந்திரையேனும் உழைத்தனர்
பெரியாரைப் பிரிந்தபின் அண்ணாவின்
பெரும் படையில் பணியாற்றிவர்களின்
பெருமை மிகு பணிகள் ஏராளம்
சத்தியவாணிமுத்து வெற்றிச்செல்வி அன்பழகன்
அருள்மொழி வேலூர் வேலம்மையார்
சற்குணபாண்டியன் புதுக்கோட்டை தமிழரசி விசயா!
ஜெசிந்தா கனிமொழி
தமிழச்சி தங்கப்பாண்டியன்
என மகளிர் பட்டாளம் திராவிட
இயக்கக் கருத்துக்களை எவரும் பரப்பினர்
தாய்மார்கள்
மாலையில் தோன்றும் மஞ்சள் வெயில்
மலையருவியில் உண்டாகும் குளிர்
மணத்தை சுமந்துவரும் மந்தமாருதம்!
மழலை மொழிபேசி மகிழ்விக்கும் மதிமலரே வாழ்க!
தாய்க்குலம்
உலகறிந்த பெண்களையெல்லாம்
உன்முன் நிறுத்தினேன் மகிழ்வோடு
உலகம் முழுவதும் உள்ள தாய்மார்கள்
எவருக்கும் குறைந்தவர்கள் அல்ல!
காலை எழுந்து கதவைத் திறந்து
வாசல் பெருக்கி சாணம் தெளித்து
வண்ணக்கோலமிட்டு பின் குளித்து
குளிர்முகம் துலக்கி அடும்பினை
பற்றவைத்து வட்டநிலா இட்லி சுட்டு
சட்டினி கூட்டி சுவைநீர் ஆக்கி
கணவனுக்கும் குழந்தைக்கும்
படைத்து அன்பு காட்டி அலுவலகத்திற்கு
பள்ளிக்கு அனுப்பிவைத்து விட்டு
மீண்டும் அடுப்படியில் மதியத்திற்கு
உணவை ஆக்கிவைத்து அனுப்பி வைத்து
மாலையில் கணவனையும் குழந்தைகளையும்
வரவேற்று பாசம் காட்டி
ஆடைமாற்றி அழகூட்டி
பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி
இரவு உணவளித்து உறங்கச் செய்து
தானும் கணவனோடு உண்டுமகிழ்ந்து
கணவனோடு கட்டிலறைக் கவிபாடும்
கன்னித்தமிழ் பெண்னை குடும்பவிளக்கென்று
பாவேந்தர் பாடி உளம் மகிழ்ந்தார்
பிறிதொரு கவிஞன் சொன்னார்
ஓவியத்திற்கு முன்னோடிகள்
வாசலில் கோலமிடும் தமிழ்ப்பெண்களே என்று
உனது தாயும் எனது தாயும் தாயின் தாயும்,
உனதந்தையின் தாயும் போலவே
உலகம் முழுவதும் உள்ளதாய்களும்
சிறந்து விளங்கி மனிதகுலத்தை
வாழ்வித்து வளமூட்டுகிறார்கள்
தாயாய் தங்கையாய் தமக்கையாய்
மனைவியாய் மற்றமற்ற உறவுகளோடு
வாழ்கின்ற மகளிர் அனைவரும்
குடும்ப விளக்குகள் தான்
திரு.வி.க. சொல்வது போல்
பெண்ணின் பெருமையை பேசி மகிழ்வோம்.
*****
புதிய தலைமுறை புத்தெழில் மலர் முற்றும்
No comments:
Post a Comment