Thursday, 29 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

24. நடை பழக கண்டோம்
வீசுகின்ற விண் விளக்காய் விழிபடைத்த வேந்தே!
வீரர்களின் உறுதியைக் காட்டும் தோள்வலிமைத் தளபதியே!
உன் உடல் பலத்தின் வலிமை கண்டு வியந்திருக்கிறேன்.
பிஞ்சுக் காலால் உதைத்தபோதே வலிமை வளர்ந்து விட்டது.
நாட்கள் நகர நகர உன் உள்ள உணர்வு புரிந்தது.
உருண்டாய் புரண்டாய் உந்தி எழ முயன்றாய்
நகர்ந்தாய் சிறப்புடன் பின் தவழ்ந்தாய்
எழுந்தாய் நிமிர்ந்தாய் இனிதாய் நடக்க
எத்தனித்தாய் முயற்சித்தாய் நடந்தாய்
நடந்தாய் வாழி காவேரி என்று
நாடகப் பேராசிரியன் இளங்கோவடிகள்
காவிய வரிகள் உன்நடை கண்ட போது இனித்தது
உடைகள் பல அணிந்து உன்னழகு கண்டாலும்
நடையழகு கண்டபோதே எங்களின்
நாடி நரம்பெல்லாம் குளிர்ந்தது!
ஓடி வந்து உனையணைத்து
ஒருகோடி முத்தம் தந்தோம்
நடை கண்ட பிறகே நலன்கள் வந்து
நாளும் நாளும் குவியத் தொடங்கும்
கைவீசி நடந்தாலே கால்கள் உறுதி பெறும்
நடை என்ற சொல்லுக்கு நானாவித பொருளுண்டு
நடப்பில் நடக்கும் செயல்களுக்கு
நடைமுறை என்று சொல்வதுண்டு!
அண்ணாவின் பேச்சு நடையை
அருமைத் தலைவர் கலைஞரவர்கள்
எப்படியெல்லாம் எழில் படுத்துகிறார் பார்
சிங்கநடையும் சிங்கார தென்றல் நடையும்
பொங்குகடல் நடையும் புரட்சிக்கவி
நடையும்
தம் உரைநடையில் கண்ட பூமான்
பூமிப் பந்தில் தமிழர்கள்
எங்கெல்லாம்
வாழ்கிறார்களோ அங்கெல்லாம்
அவர் தம் இதயமெல்லாம்
தங்கச் சிம்மாசனம் போட்டு
கொலுவீற்றிருக்கும் கொள்கைக் கோமான்
என்று இன்னும் அழகாக எழுதிச் செல்கிறார்
அண்ணாவின் எழுத்துப் பேச்சை
அழகு நடையில் சொல்லும் கலைஞரின்
ஆற்றமிகு நடையை அறிந்திடுவோம்
எழிலே!
புதுமை ஏற்படுத்திய வேலைக்காரியை பின்பற்றி
பராசக்தியில் ஏழையை பேச
வைக்கிறார் பார்
பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை
என் வாழ்க்கைப் பாதையிலே
படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன!
தென்றலைத் தீண்டியதில்லை நான்
தீயைத் தாண்டியிருக்கிறேன்
வறுமைப் பட்டவனின் வாயில் கூட
கலைஞரின் வளமான தமிழ்ச் சொற்கள்!
தீட்டிய வாளும் தினவெடுத்தத் தோள்களில்
தாங்கிய ஈட்டியும் மட்டும் போதாது
இளைஞர்களே!
அறிவு அது அனைத்துலக அணையா சோதி
அதை எங்கிருந்தாலும் பெற வேண்டும்
கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல
அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறலை
மறைப்பது புண்ணுக்கு புணுகுதடவுவது
போன்றது.
அவர் சொன்னார் இவர் சொன்னார்
என்றெல்லாம் அறிவிழந்து தடுமாற்றம்
அடைய வேண்டாம்.
எவர் சொன்ன சொல்லானாலும்
உந்தன் இயல்பான பகுத்தறிவால்
எண்ணிப்பார் எதையும் ஏன்
எதற்கென்று கேள்
அப்படி கேட்டதால்தான்
இந்த சிலைவடிக்கும் சிற்பி,
சிந்தனைச் சிற்பியாக மாறினேன்
என்று சாக்ரடீஸ் பேசுவதாக
காட்டுகிறார் கலைஞர்
அண்ணா நடை, அழகு நடை, அரிமா நடை
ஆற்றல்மிகு படையணி நடை
அறிவாளர் வழிச்செல்லும் அன்பு நடை
வேகநடை வீர நடை வெற்றி நடை
என்றெல்லாம் மனம் எண்ணிப் பார்க்கிறது
எழில் எப்படியெல்லாம் நடப்பார்
என்று எண்ணி இதயம் மகிழ்கிறது!
கண்ணன் கண்மணிக் கோசலையின்
குருசாமி மல்லிகாவின்
குணம் சிறந்த குலவழிப் பேரனாக
உதயமாறன் தமிழ்ச்செல்வியின்
உருவம் தாங்கிய உயிர் எழில்!
ஆற்றலைப் பெருக்கி அரிமா நடை நடப்பார்
அறிவு வழியில் நடைபோட்டு நலம் பெறுவார்
அன்பு நெறியில் நடந்து ஆக்கம் தந்திடுவார்
தன் இனம் மொழி பண்பாட்டை ஏற்று நடப்பார்
மேதைகளின் வழிநடந்து மேன்மை பெறுவார்
மேதனி போற்றிட வாழ்ந்திடுவார் என்று
மனதிற்குள் எண்ணுகிறேன் வாழ்த்துகிறேன்!
உனது தந்தை உதயமாறனும்
இளைய தந்தை இதயமாறனும்
இளவயதாய் இருந்த போது என்
மனதில் ஓர் ஆசை மலர்ந்திருந்தது
இருவரும் இணைந்து இனிய புகழ் பெற வேண்டும்
உலகளாவிய நிலையில் உயர வேண்டும்
வானளாவிய அளவில் வாழ்த்துகள் குவிய வேண்டும்
என்று மனம் எண்ணி மகிழ்ந்ததுண்டு
உன்னோடு இன்னும் கொஞ்ச நாளில்
துணையாக ஓருவர் வரப்போகிறார்
இதயமாறன் மைதிலியின் குழந்தை இவ்வுலக வரவாகும்
இனிய நாள் வரப்போகிறது
இருவரும் இணைந்து ஏறுபோல் நடந்து
என் ஆசையை நிறைவு செய்வீர்களென
எண்ணுகிறேன் மகிழ்கிறேன் வாழ்த்துகிறேன்
இடர்பாடு நிறைந்த உடலோடு வாழ்கிறேன்
இனிதாய் நலம் கண்டால் இன்னும் எழுதுவேன்

வாழ்க! எழில் வாழ்க நலம்.

No comments:

Post a Comment