Tuesday, 27 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

23. சிரித்தால் வையம் செழிக்க வேண்டும்.
முழு நிலவின் ஒளி அழகே!
முகில் வழங்கும் குளிர் மழையே!
முதிர்வில் பூத்த கருத்து மலரே!
மொழிகளில் சிறந்த முத்தமிழே!
கண்களில் ஒளிரும் ஓவியப் பூவே!
கவிஞர்களின் கற்பனைப் பேழையே!
கவிதைச் சுவையே கலை காட்டும் எழிலே!
காலமெல்லாம் வாழ்க! வளர்க!
முத்துப்பல் வரிசையென்றும்
முல்லைச் சிரிப்பென்னும்
மோகனப் புன்னகையென்றும்
மொழிந்து மகிழ்ந்திடுவர் கவிஞர்கள்!
ஒரு திங்கள் இடைவெளியில்
உனைப் பார்க்க வந்தோம்.
உன் வீட்டில் ஒரு திங்கள்
உறைந்து மகிழ்ந்திருந்தோம்
பரவசமூட்டும் பல்லில்லா
பவழ வாய்ச் சிரிப்பினிலே
பச்சரிசி போல் இரண்டு
பற்கள் பளிச்சிடக் கண்டேன்.
கன்றுக்கு பல் போட்டால்
காளை என்று சொல்வார்கள்.
காளையாய் நீ வளர்வதற்கு
கால்கோல் பற்கள் தானே!
பல் முளைத்த வாய் பார்க்க
பழச் சுவையாய் இனிக்கிறது
பல்லுக்கு உடல் முழுவதும்
பாசமிகு தொடர்பு உண்டு
பல் வளர்ந்த பின்னேதான்
சொல்லமுது சுவை கூட்டும்
பல் முளைத்த பின்னால்தான்
பார்ப்பதற்கு முகம் அழகொளிரும்.
பல்லில் நஞ்சு கொண்ட
பாவிகளும் இங்குண்டு.
பல்லிளித்து அடிமையாகும்
பல மனிதர் இருப்பதுண்டு.
பல் கொண்ட பல உயிரும்
பாரெங்கும் நிறைந்திருக்கும்
மெல்லுதற்கே பல் என்றாலும்
மேவும் புன்னகை அதற்குண்டு
பல் விழுந்து பல் முளைத்தால்
பலம் அதற்கு மிகுவாகும்.
வட்டமில்லா வளை வடிவில்
வாய்க்குள் பல் விரிந்திருக்கும்.
சிரிக்கின்ற போதெல்லாம் நம்
சிந்தையை அள்ளிச் செல்லும்.
சிரிப்பினில் பல வகை கூறி
சீராளர் நம் கலைவாணர்
திரையுலகை ஆண்டு வந்தார்.
சிந்தனைச் சிரிப்பு! சிங்காரச் சிரிப்பு!
அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு!
அடங்கி நடப்பவனின் அசட்டு சிரிப்பு!
நயவஞ்சகரின் நமட்டுச் சிரிப்பு!
சதிகாரர்களின் சாகசச் சிரிப்பு!
இது சங்கீதச் சிரிப்பு
என்றெல்லாம் இசை பாடி
எழுச்சியூட்டினார் கலைவாணர்.
சிரித்திட மின்னுகின்ற
சிங்காரப் பற்களை
சிறை வைத்தவரும் உண்டு.
சிரித்துப் பலரை சீரழித்தவரும் உண்டு.
சிரிப்பதனால் வையம் செழிப்புற வேண்டும்.
சிந்தனை மலர்கள் பூத்திட வேண்டும்.
பற்கள் அதற்குப் பயன்பட வேண்டும்.
பல் முளைத்த உனைப் பார்த்த போது
படர்ந்த எண்ணம் என்னுள்
பசுமையாய் ஒளிர்கிறது.

No comments:

Post a Comment