Friday, 9 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

10. அரசுகளின் நிலையறிவோம்!
இடம் விட்டு இடம் பெயர்வதில்
பாதுகாப்புக் கருதி குழுக் குழுவாக
பயணம் மேற்கொண்டனர்!
இணைந்த உணர்வுகளால்
இனக் குழுக்கள் தோன்றின!
குழுக்கள் பயணத்தில்
குலங்கள் மலர்ந்தன!
இயற்கையின் ஆற்றலை அதிகம்
ஈர்த்தவன் குலத்தின், குழுவின்
தலைவன் ஆனான்!
உடல் வலிவும் குரல் வளமும்
தலைவனின் தகுதியானது!
காலம் செல்லச் செல்ல மனிதர்க்கு
கலையறிவு மலர்ந்தது வளர்ந்தது!
பகுத்தறிவில் பண்பாடு பலமிழந்து
சூழ்ச்சிகள் சூல் கொண்டது!
திறமையாளனை தேர்ந்தது போய்
திறன் குறைந்தோறும் வரும் நிலை கண்டது
வழி வழித் தலைவனெனும் வழக்கம் வந்தது!
பகுத்தறிவு காட்டிய பல்வேறு வளர்ச்சி
அரசுகள் அமையும் சூழல் தோன்றியது!
வல்லான் வகுத்ததே வாய்க்கால் ஆனது!
அதிகாரத் தோரணைகள் ஆர்ப்பரித்தது!
அறிவின் துணையோடு ஆதிக்கம் சூழ்ந்தது!
ஆளும் வர்க்கமும் அடிமை மனங்களும்தோன்றின!
அரச குலங்கள் உருவாகி நிலைத்தது!
பிறவியில் அரசன் என்ற நிலைகளும் மலிந்தது
நிலமெல்லாம் அரசர்க்கென்ற நிலை நிலைத்தது!
வளைத்த நிலத்தின் அளவுக்கு வளம் பெற்றனர்!
வழி வழி அரச குலம் வலுப் பெற்றது!
கலை வளர்ச்சி கண்ட பின்னர்
நகரங்கள் வளரத் தொடங்கியது!
நகரங்கள் பின் ஒரு நாடானது!
கிரேக்கத்தில் பல கீர்த்திமிக்க நகரங்கள்
நாடாக வளர்ந்து நாகரீகம் கண்டது!
ஆதன்ஸ் ஸ்பார்ட்டா ட்ராய் நகரங்கள்
நாடுகளாகத் திகழ்ந்தன!
மதுரை, வஞ்சி, கொற்கை, புகார் என்று
இங்கும் அரசுகள் தோன்றின!
ரோம சாம்ராஜ்ஜியம் பீடு புகழ் கொண்டது!
சிறுபகுதிகளில் ஆண்ட அரசுகள் செரு முனையில்
வென்று வாகை சூடியதில் விரிவடைந்தது!
பழைய பாரசீகம் மொசபடமியா, பாபிலோனியா
சிரியா மற்றும் சீர்மிகு நாடுகளின் அரசுகள்!
மாசிடோனியாவின் மாமன்னன் பிலிப்
அவன் பிடித்த பகுதிதான் பிலிப்பைன்ஸ்!
அலெக்சாண்டர் வென்றதின் நினைவு தான்
அழகிய அலெக்சாண்டரியா நகரம்!
துருக்கியின் கஜினி முகமது அரசு!
தாஸ்கண்ட்டின் பாபர் கண்ட பேரரசு!
வடபுல வரலாற்றில் வாழ்ந்து சிறந்த
நந்தவம்சப் பேரரசு! - அதை
நாசம் செய்த மௌரியப் பேரரசு!
குப்தர்கள் குசாணர்கள் கங்கர்கள்!
சோழ சேர பாண்டியர்கள் சுங்கர்கள்!
களப்பிரர் பல்லவர்கள் கோசலர்கள்!
சிற்றரசு பேரரசு என்று எங்கும் அரசுகள்!
இதில் தென்னரசு போல் நல்லரசுகளும்!
தோன்றி மக்களுக்குத் துணை செய்தது!
மூவேந்தர்களில் நிறையப் பேர்
நயன்மை நடுவம் சார்ந்த நல்லவராயினர்!
கலை மொழிக் காவலராயினர்!
கண்ணியம் கெடாத கடமையாளராயினர்!
இதயத் தூய்மை கொண்ட எளியராயினர்!
உலகிலுள்ள அரசுகள் அனைத்துமே
ஒன்றின் மீது ஒன்று பகை கொண்டு
படையெடுத்து போர் தொடுத்தது!
அடுத்தடுத்து அழிவுகளை ஏற்படுத்தியது!
இரக்க உணர்வின்றி உயிர்களைப் பறித்தது!
இதயமற்றோர் ஈனர்கள் எல்லாம்
இந்த அரசுகளின் பின்னே இயங்கினர்!
இறைவனின் தோற்றமென்றும்
எல்லாமே இவர்தான் என்றும்
அரசனுக்கு ஆலவட்டம் சுற்றினர்!
உளவியல் வித்தையறிந்தோர்
உத்திகள் பலவற்றை உருவாக்கினர்!
மதம், மந்திரம் என மவுடீக முறைகளை
மன்னனுக்குள் புகுத்தி மக்களை ஏய்த்தனர்!
ஆண்டாண்டு காலமாகவே
அரசுகளின் கொடுமை அதிகரித்தது!
இம் என்றால் சிறைவாசம்!
ஏன் என்றால் வனவாசம்!
உரிமை கேட்டால்
உள்ளதைச் சொன்னால்
உயிர் பறிக்கும் கொடூரம் என்றே
அரசுகள் இயங்கின!
அறம் இறந்தன!
ரோமாபுரியில் ஓர் அரச குலத்தார்!
உல்லாச வேட்கை கொண்டவர்கள்!
மகத்தான் மனித உயிரை மதிக்காதவர்கள்
குற்றமிழைத்தவர்களாகச் சித்தரித்து
மனிதர்களைக் கைதியாகப் பிடித்து வைத்து
ஆழமாக அமைந்த குழிக்குள்
அந்தக் கைதிகளை இறக்கி விட்டு
அகோரப் பசி கொண்ட சிங்கத்தை அவனுடன்
மோதவிட்டு மாடத்திலிருந்து
சாவதை வேடிக்கை பார்ப்பதென்பது
அரச குலத்தின் வழக்கமாகியது!
ஆர்ப்பரிக்கும் சிங்கத்தோடு மோதினான்
ஸ்பார்ட்டக்ஸ் எனும் மரண தண்டனைக் கைதி
இரும்பனைய மனம் உடல் படைத்தவன்
சிங்கத்தை வீழ்த்தி மேலேறி
வேடிக்கை பார்த்தோரை வெட்டினான்!
அரசு குலத்தை எதிர்த்து
உரிமைப் போர் தொடங்கியது!
உரிமை உணர்வை
ஊட்டி வளர்த்தனர் பலர்!
உரிமைப் போரில் பலர்
உயிரிழந்தனர்!
உலகெங்கும் உரிமை உணர்வு
வளர்ந்தது!
ஆதிக்க அரசுகளை எதிர்த்து
ஆர்ப்பரித்தனர்!
ஆயினும் உரிமை நிலை உயர்ந்து வளர
ஓராயிரம் ஆண்டுகளாயின!
பிரெஞ்ச் மன்னனை எதிர்த்து
ஏழைகள் கூட்டம் போரிட்டது
சமத்துவம் கோரி சமர் நடத்தினர்!
புரட்சியெனும் புதுமை தோன்றியது!
சாமானியர்களால் அரச குலம்
சவக் குழிக்குள் புதைக்கப்பட்டது!
வெட்டுப் பாறையில் பல தலைகள்
வீசப்பட்டன!
உரிமை அலைகள் உலகெங்கும் தொட்டு உயர்ந்தது!
பிரெஞ்ச் புரட்சிக்குப் பின் உரிமைப் போர்
உலகெங்கும் படர்ந்தது பரவியது!
உலகம் முழுவதும் ஒரு குடைக்குள்
ஆண்ட
இங்கிலாந்து நாட்டின் இரும்புப் பிடியில்
இருந்து
அமெரிக்கா தன்னை விடுவித்தது!
அரசு குல முறையிலிருந்தும்
வெளி வந்தது!
மக்களாட்சி ஆட்சி முறை மலர்ந்தது!
ஆண்டவன் படைத்தது என்ற அரசுகள்
ஆடிக்காற்றுப் பஞ்சாகப் பறந்தது!
அரசு குலத்தின் பிடி தளர்ந்த போதும்
வேறொரு வடிவத்தில் அது தோன்றியது!
முதலாளித்துவ அரசாக உருவெடுத்தது!
உழைத்தவன் இளைத்தான்!
வலுத்தவன் கொழுத்தான்!
அறிவாளிகள் உருவாக்கிய
அனைவருக்குமான பொருள் வளம்
வல்லான் கைவசப் பட்டன!
உழைப்பவன் உரிமைக்காக
உயர்குண அறிவாளர்கள்
ஓயாது போரிட்டனர்!
கடின உழைப்பின் பெருமை பற்றி
கவிதை பாடி சிறப்பித்தனர்!
உரிமை உயர்வு பற்றி
ஊருராய் பரப்பினர்!
உழைப்பின் சிறப்பைச் சொல்ல
உயர் சித்தாந்தம் ஒன்றை
உலகிற்கே வழங்கினான்
செர்மானிய சிந்தனையாளன்
செந்தமிழ் காட்டும் சீரிய உணர்வாளன்!
கார்ல் மார்க்ஸ் வடித்தளித்த
புதுக் கருத்து புரட்சியின் மூலம்
சோவியத்தில் நிலை நாட்டப்பட்டது
பொதுவுடைமை அரசு என்று
புத்தரசு தோன்றியது!
ஜார் மன்னன் ஒழிக்கப்பட்டு
சமத்துவம் ஆட்சி பீடம் ஏறியது
உலகில் புதிய முறை ஒளி ஒன்று
எங்கும் பரவி எழிலூட்டியது!
எங்கெங்கும் உரிமைக் கொடி
உயர்ந்து பரந்து ஒளிர்ந்தது!
தொடரும் போராட்டங்களால்
தோன்றிய புதிய அரசாங்கங்கள்
மக்களால் உருவாக்கப்பட்டு
மக்களுக்கான அரசுகளாக
மலர்ந்தன வளர்ந்தன!
மன்னர்கள் மறைந்த பின்னும்
மமதை மொழி மாறாது வளர்கிறது!
குடியாட்சிக் கோமான்களாக
கொட்டமடிப்போர் பெருகுகின்றார்!
கண்மணியே, கலைநிதியே!
பொன்னொளியே! பூமணமே!
பொது நிலை கருதுவோர்
போர்க்கோலம் பூணுவோர்
கெடுநிலை மாறப் போரிடுவோர்

கேடில்லா நிலை காணுவோம்!

No comments:

Post a Comment