Thursday, 15 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

15. மொழிகள்
மற்ற உயிரினங்களிலிருந்து
மாந்தனை மேம்படுத்துவது மொழி
ஊமையனாய் இருந்தவனை
உயர்த்தியது பேசும் மொழி
அகிலமெங்கும் பேசும் மொழி
ஆறாயிரத்திற்கும் அதிகமாகும்.
அன்னை வழி பதியும் மொழி
அனைவருக்கும் தாய்மொழியாகும்
மொழி என்பது மனித வாழ்வில்
விழி போன்றது என்று மொழிந்தனர்
இருக்கின்ற மொழிகளிலே
எழுத்தில்லா மொழிகளே ஏராளம்
எழுத்துள்ள இலக்கணம் படைத்த மொழி
எண்ணிக்கையில் குறைவேயாகும்
அனைத்து இயல்களையும்
அறிவார்ந்து இயக்கும் மொழி
ஆற்றலை வளர்க்கும் மொழி
ஆங்காங்கே உலகில் சிலவுண்டு.
மொழி தோன்றிய பின்னரே தான்
முன்னேற்றம் தொடங்கியது
மொழி கண்ட பின்னர்தான்
முறைகள் வகுக்கப்பட்டது
மூளையின் சிறப்பிடமே
மொழியாளும் பகுதிதான்
ஆதிநாள் மனிதர்களுக்கு
அதிகம் மகிழ்வளித்தது மொழிகள்
கீர்த்திமிகு கிரேக்க மொழி
ஆலயமொழிகளான ஆரியமும், இலத்தீனும்
பழைய பாரசீகம் பேசிய மொழி
அரேபியாவில் வழங்கிய அரபு மொழி
எபிரேயர் பேசிய ஹிப்ரு மொழி
சிந்தனையாளர்கள் வளர்த்த சீன மொழி
இனிப்பின் தொகுப்பாக விளங்கி
இலக்கண இலக்கியம் படைத்த எழிற்தமிழ் நமது மொழி
படையெடுப்புகள் விளைவாக
பல மொழிகள் ஒருங்கிணைப்பில்
பயன்களும் விளைந்ததுண்டு
காட்டு மனிதனாக இருந்தவனை
கலை மனிதனாக ஆக்கியது மொழி
பழமொழிகள் பல மொழிகளிலும் உண்டு
பல மொழிக் கூட்டணியால் மலர்ந்த
பயன் தரும் ஆங்கில மொழி
பழக் கூட்டாய் சுவை தந்த மொழி
அறிவியல் புரட்சிக்கு
ஆக்கம் தந்த அழகு மொழி
ஆற்றல் நிறை அறிஞர்களின்
அகம் நிரம்பிய அறிவு மொழி
உலகத்தை ஒருங்கிணைத்து
உயர்த்திய உன்னத மொழி
பிரஞ்சு, ஜெர்மன் என
மேதைகளால் வாழ்த்தும் மொழி
தமிழோடு தொடர்பு கொண்ட
தங்கமான ஜப்பான் மொழி
உழைப்பால் உயர்ந்தோரின்
உண்மை மொழிகள் பலவுண்டு
உறுதிமொழி உளறல் மொழியுண்டு
ஸ்பானிய மொழி ஆதிக்கத்தால்
தென் அமெரிக்க நாடுகளின்
தேன்மொழிகள் உரிமையிழந்தன
மொழியிழந்த அம்மக்களுக்கு
முழுயுரிமை கிடைக்கவில்லை
ஆகாத கருத்தெல்லாம் தந்து
ஆற்றலை அழித்த மொழிகளும் உண்டு
அகிலத்தையே இணைத்து வைத்து
ஆக்கம் தந்த ஆங்கில மொழி
அதன் அருமை உணர்தல் வேண்டும்!
நாட்டுப்புற மொழிகளிலும்
நாகரிகம் விளைந்ததுண்டு
இசைக்கு மொழியில்லைதான்
மொழிக்கொரு இசையுண்டு
இயல் இசை கூத்து என்று தமிழில்
இனம் மூன்றில் இசையிடையில் வரும்
இசைய வைக்கும் எழில் சமைக்கும்
அகிலமெங்கும் பரவி நிற்கும்
ஆறாயிரம் மொழிகளிலே
அனேகம் அழிந்து விடுமாம்
அனைத்து மொழிகளுக்கும்
அடித்தளம் எதுவென்று
ஆய்வறிஞர் பாவாணர்
பல்லாண்டு ஆய்வு செய்தார்
ஆறாயிரம் மொழிகளுக்கும்
ஆறேழு மொழிகளே அடித்தளமாம்
ஆறேழு மொழிகளுக்கும்
தாய்மொழி தமிழே என்றார்
உலகின் முதற்றாய் மொழி
உன்னதத் தமிழே என்றார்
மொழியின் கொடி வழி காட்டி
புகழ் குன்றேறி நிற்கின்றார்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
உலகை ஒன்றாக்கி உறவு கொண்ட தமிழ்
உனது தாய் மொழி உவகை பூப்பாய்
உணர்வுக்கு உகந்தவாறு உருவம் தரும்
நிலைகளுக்கு தகுந்தவாறு
நெஞ்சை தாலாட்டும்
நேசமிகு பாச மொழி
வரலாறு பல படைத்த வண்ண மொழி
அண்ணாவின் நெஞ்சில் படர்ந்த மொழி
கலைஞரின் கையில் தவழ்ந்த கலைமொழி
கைக்குழந்தை பேசுகின்ற மழலை மொழி
கட்டழகில் இழைந்தோடும் காதல் மொழி
அறிஞர் மனம் ஆளுகின்ற
ஆற்றொழுக்க கவிதை மொழி
அன்பின் ஊற்றாய் இன்ப நதியாய் ஆன தமிழ்
அறிவியல் மொழியாக ஆக வேண்டும்
ஆக்கம் தரும் கலைகள் காண வேண்டும்
தாய்மொழி காப்பதற்கு தணலில்
தலைகொடுத்து உருகிய தங்கங்களை
வழிபடும் உணர்வுகளில் வாழ வைப்போம்
சீர்மொழி செழுமை கொஞ்சும்
செம்மொழி செந்தமிழை சிந்தையில்
நிறுத்தி வைத்து நிறைவு கொள்வோம்
ஆனிப் பொன்னே ஆழ்கடல் முத்தே
வாழும் தமிழே வளமூட்டும் குறளே
வாழ்வளிக்கும் உயிர்ப் பொருளே
வாழ்வுரிமைப் போர் நடத்தும்
வறியவர் நிலையோங்குதற்கு
தமிழ் உனக்கு வாளாகட்டும்
தமிழர் நிலை மேலோங்கட்டும்

வாழ்க தமிழ்!

No comments:

Post a Comment