13.
விண்ணில் விளையாடு!
வளர்நிலாப் பேரொளியே!
வளரும் தலைமுறையே!
வள்ளுவன் குறளமுதே!
வரலாற்று வளர்நிலையே!
வள்ளல் வழிப் பெரும் புகழே!
வைரத்தின் ஒளிச்சுடரே!
வாழ்த்துகிறேன் வாழ்க!
வான்வெளியில் தோன்றுகின்ற
வடிவழகின் எழில் சொல்வேன்
கோடான கோடி கோடி கோடியாய்
குவிந்திருக்கும் விண்மீன் கூட்டம்
கோடி பல கோடி கோடி கூடி நிற்கும்
கோள்களின் வட்டம்!
ஒன்றையொன்று இணைப்பதற்கு
ஒடி ஒடி வருவதுதான் ஒளியின் நாட்டம்
வான வில்லும், வளர் நிலாவும்
எழிலூட்டும் இளம் பரிதியும்
இதயத்தைத் தழுவி நிற்கும் இனிய காட்சிகள்!
நிலவைப் பாடாத கவிஞன் இல்லை!
நேசம் கொள்ளாத மனிதர் இல்லை!
நெஞ்சினிக்காத உயிர்கள் இல்லை!
விண்வெளியைப் பார்த்தபோது
வியப்புத்தான் தோன்றுகிறது!
எப்படி இது ஆனது என்று
ஏதொன்றும் விளங்கவில்லை!
விந்தையான காட்சி என்று
விழி பிதுங்க பார்த்தது உலகு!
சூரியனின் இளம் சூடும்
சுட்டெரிக்கும் வெப்பமும்
விந்தையெனப் பட்டது!
விளக்கமில்லா உலகத்திற்கு!
இரவில் கண் சிமிட்டும் இனிய
நட்சத்திரக் கூட்டமும்
ஈடற்ற பேரொளியால்
இதயத்தை அள்ளும் வெண்மதியும்
இனிப்பூட்டி மகிழ்வித்தன!
இடி மழை மின்னலெல்லாம்
அச்சத்தால் உலகை ஆள வைத்தன!
கண் சிவக்கும் நிறமெடுத்து
காட்டுகின்ற கிழக்கின் ஒளி
எழுச்சியின் வடிவமென்று
இலக்கியங்கள் பேசுகின்றன!
மாலை நேர மஞ்சள் வெயில்
மனமகிழ்ச்சியூட்டுகின்ற
மகத்தான கலைத் தோட்டம் என்று
மாசறு கவிதை மனம் வாழ்த்துகின்றன!
கொத்துக் கொத்தாய் விண்மீன்கள்!
கூட்டம் கூட்டமாய் விண்கோள்கள்!
எண்ணிப் பார்த்தால் இதயமெல்லாம்
இனிக்குதய்யா மணக்குதய்யா!
வியாழன் என்றும் வெள்ளி என்றும்
புதன் செவ்வாய் சனி என்றும்
பூமி என்றும் புளூட்டோ என்றும்
துணைக்கோள்களாய் நிலாக்கள் என்றும்
சுற்றுவது சூரிய குடும்பம் என்றும்
உரைத்தனர் அறிஞர்கள் உணர்த்தினர்!
சூரியன் ஒரு நால் சோர்ந்து போகும்!
சுடரொளி வீசி வியாழன் சூரியன் ஆகும்!
தாத்தா தந்தை மகன் பேரன் போல
வானுலகிலும் வழங்குகின்ற
குடும்ப முறை வாழ்கின்றதாம்!
என்னரும் இனிய நண்பர்!
பாலு எனும் பண்புசேர் மேதையவர்!
எத்தனையோ படித்தவர்!
படித்ததை ஆய்ந்தெடுப்பவர்!
எடுத்ததை எனக்கும் சொன்னார்!
விடுகதை போல் சொன்ன அவர்
விளக்கமாகவும் விரித்துரைத்தார்!
எண்ணியல் மாற்றங்கள்
பண்பியல் மாற்றங்களை
தோற்றுவிக்கும் தொடராகும்!
திடப்பொருளாய் திரவப் பொருளாய்
ஆவிப் பொருளாய் எங்கும்
அழகுடன் நிறைந்திருக்கும்!
வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே
என்றும் இருந்து கொண்டே
இருக்கும் என்றார்! அதுதான்
பல்வேறு உலகங்களாய்
மாறும் மறையும் தோன்றும் என்றார்!
விளங்காது நான் விழித்தபோது
விளக்கமும் தந்தார் வியப்பூட்டினார்!
அறிவின் வெளிச்சம் காட்டினார்!
வேதி நிலையில் இருக்கின்ற
வியப்பூட்டும் உயிர்ப் பொருட்கள்
பல்வேறு நிலைகாட்டும் வளரச் செய்யும்
மகிழ்வூட்டும் தெளிவூட்டும்!
சீராளர் பாலுவின் உணர்வுகள்
சிந்தையில் நிறைந்ததாலே
நூல் ஒன்று நான் வடித்தேன்!
பள்ளி சென்று படிக்காதவன்!
பார்ப்பதற்கு பாமரன்தான் நான்
ஏழ்மை வறுமை இல்லாமைகள்
ஏறி மிதித்த ஏழைதான் நான்
இருப்பினும் எழுத்தாளன் ஆனேன்!
இலக்கிய சோலையாய் வாழ்ந்த
இமயமாய் எழுதிக் குவித்த
ஏழையருக்கு ஏற்றமளித்த
சாமானியன் எனச் சொல்லி
சாதனையை அடுக்கி வைத்த
அண்ணாவின் நூல் படித்ததால்
ஆன நிலை இதுவாகும்!
மூலிகையில் சாறெடுத்து
முன் செல்லும் முறை வகுத்து
மனிதனுக்கு மருந்தூட்டி
வான்பரப்பில் பறக்கின்ற
வகை சொல்லி நூல் வடித்தேன்!
விண்வெளியில் உலவுகின்ற
வேற்றுலகைக் கண்டு அங்கே
விளைந்திருக்கும் நலன் சொன்னேன்!
ஒளி வலைக்குள் உருளுகின்ற
ஒவ்வொரு கோளையும் மீனையும்
காணுகின்ற கனவு கண்டேன்!
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர் என
திருமூலர் சொன்னதுதான்
தெளிவென்று புரிந்து கொண்டேன்!
உருளுகின்ற பூமியின் மேல்
ஒட்டியிருக்கும் மனிதன் அண்ணாந்துதான் பார்த்தான்
ஆகாய வெளியிலிருந்து
பூமியின் அழகைக் காண
ஆர்வம் கொண்ட அறிஞர்கள்
ஆய்வுகளை மேற்கொண்டனர்
வானூர்தி மேலமர்ந்து பூமியின்
வடிவழகைக் கண்டாலும்
குறிப்பிட்ட உயரத்திற்கு
கொண்டு செல்ல முடியவில்லை!
மேலே மேலே செல்வதற்கு
மேலான முயற்சிகள் தொடர்ந்தன!
மூளை பலமுள்ள முத்தான இரசியர்கள்!
முதல் ஸ்புட்னிக்கை பறக்க வைத்தனர்!
வானில் வலம் வந்து
நிலத்தைப் படம் பிடித்தனர்!
தொடர்ந்து வந்த ஆய்வுகள்
தொல்லைகள் இல்லா வழி கண்டன!
வானைச் சுற்றி வரும் செயற்கைக்கோளில்
வலம் வந்த முதல் மனிதன் யூரி ககாரின்!
ஆய்வுகள் தொடர்ந்தன
அண்டவெளிப் புதுமைகள்
அருகில் வரத் தொடங்கின!
நிலவுக்குச் செல்லுகின்ற
நேர்த்திமிகு ஆய்வுகளில்
முடிவு கண்டு முன்னேறத் தொடங்கினர்!
ஆளில்லா விண்கலத்தை
அழகு நிலவில் இறக்கி வைத்து
நெஞ்சில் இனிப்பூட்டினர்!
லூனா எனும் செயர்கைக்கோள்
நிலவில் இறங்கி ஆய்வு செய்தது
மனித குல வரலாற்றில்
மகத்தான அறிவுப் புரட்சி தோன்றியது!
நீல வானில் ஒளிருகின்ற
நிலாவில் ஓரிடத்தில்
நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தார்!
நிலாவைப் பாம்பு விழுங்கியது என்று
வீண் வதந்தி கிளப்புகின்ற
சோதிடர்களின் சிறையில் இருந்து
சொலிக்கும் நிலாவை மீட்டெடுத்தார்!
விண்வெளியின் வெற்றிடத்தில்
விஞ்ஞான விண்கலன்கள் ஆய்வில்
வெற்றிகளைக் குவிக்கின்றனர்!
வெளிச்சத்தால் கருவிகளை இயங்க வைத்து
வேலைகள் நடக்கின்றன
அருகிலுள்ள கோள்களுக்குச் செல்ல
ஆயத்தங்கள் நடக்கின்றன!
விண்வெளி அறிøவ் பண்படுத்துவோம்!
வியத்தகு வளத்தை நிலைப்படுத்துவோம்!
விண்வெளியில் விளையாடுவாய்!
வெற்றிகளைக் குவித்திடுவாய்!
No comments:
Post a Comment