Thursday, 8 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

9. ஆற்றுவழி அறிந்திடுவோம்!
அறிவாளர் பெற்றெடுத்த
கலை அரும்பே!
அன்புள்ளம் கண்ட
தமிழ்க் கரும்பே!
தங்க நிலவே! சங்கப் பலகையே!
திங்களின் ஒளியே!
தென்னவர் மொழியே!
பண்பார்ந்து பல்லாண்டு வாழ்க!
ஆதிமனிதன் கதை சொல்லும்
ஆற்றுவழி நாம் நடப்போம்!
அறிஞர் மொழி கேட்டிடுவோம்!
தமிழர்களின் கல்வி நிலை
தளர்ந்திருந்த காலங்களில்
அருந்தமிழர் நலன் காக்க
கொடை மனம் கொண்ட தமிழர்!
அள்ளித் தந்தார் வெள்ளிப் பணம்!
அதன் விளைவால் ஆனதையா
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்!
வறுமையுற்ற தமிழரெல்லாம்
வாழ்வுயர்ந்தார் அங்கு படித்ததாலே!
தமிழ் மொழி சிறப்பதற்காக
தழைத்ததய்யா பல செயல்கள்
தமிழிசை மன்றம் எல்லாம்
தொடங்கி தொண்டு செய்ததய்யா!
அறிவார்ந்த மொழி மறுக்கும்
ஆரியத்தை எதிர்ப்போரெல்லாம்
அங்கேதான் பணியாற்றினார்!
தமிழ் மீது அன்பு கொண்டோர்!
தனித்திறன் பெற்று வளர்ந்தார்!
அன்னை மொழி மீது பாசம் கொண்டோர்
அறிஞர்களை அழைத்து வந்து
அடிக்கடி கூட்டம் போட்டார்!
ஆய கலைகள் அனைத்துமே
ஆய்வு செய்யும் நிலை கண்டார்!
சிந்தனையில் கூரேற்ற
சீரிய செயல் புரிந்தார்!
பேராளர் வரிசையிலே
பேச வந்தார் ஒரு பேரறிஞர்
தமிழகத்தின் பெருந்தலைவன்
தனித்திறன் பெற்ற போர் மறவன்!
மாணவர்கள் மத்தியிலே பேசவந்த
மாலைத் தென்றலும்
மயங்கும் பொழிவாளன்!
கோடையிடியென பேசும் பேச்சாளன்!
இளைஞர்களை தன் இதயக் கூட்டில்
இணைத்து வைத்த எழிலரசன்!
மேன்மைதரும் கருத்துக்களைத் தர
மேடையிலே ஏறி நின்றான்!
அப்போது அங்கே சில குரல்கள்
ஆத்துக்குப் போ ஆத்துக்குப் போ என்றன!
அந்தக் குரல்களின் பொருல் புரிந்த
புத்துலகின் அறிவு ஆசான்!
தந்த தலைப்பை விட்டு விட்டு
ஆற்றோரம் என்ற அரிய தலைப்பில்
ஆற்றினார் சொற்பொழிவு, அசர வைத்தார்!
ஆறுகளின் கதை கூறி ஆர்ப்பரித்தார்!
அண்ணாமலைக் கலைக் கழகத்தில்
அண்ணா ஆற்றிய உரையில் உள்ள
ஆற்றோரக் கதைகளெல்லாம் நீ
அருங்கலைகள் கற்கும்போது
படித்திடுவாய் பயன் பெறுவாய்
நிலத்தில் நில்லாது கீழ் நோக்கி ஓடிவரும்
நீரலைகள் மேவுகின்ற ஆறுகளில்
சிலவற்றைக் கண்டிடுவோம்!
ஆறுகளை நதியென்றும் அழைத்திடுவர் சிலர்
ஆறுகளின் ஓரத்திலேதான்
ஆதிமக்கள் குடியிருந்தனர்!
நீரின்றி அமையாது உலகு என்று
நெஞ்சம் நிறை வள்ளுவன் சொன்னான்!
வள்ளுவன் வாய்மொழியின்
வழியில் தான்
வாழ்க்கைத் தேர் ஓடியது!
அமெரிக்காவில் ஒடுகின்ற அழகிய
அமோசான் ஆறுகளில் நீளமானது!
அருந்தமிழர் கலைகள் அங்கும் பரவியது!
வால்காவிலிருந்து கங்கை வரையென்ற
வாசமிகு நூல் ஒன்றை வரைந்து
வரலாற்றில் இடம் பெற்றான்!
சித்தார்த்தனை தன் சிந்தையில் சுமந்த
புத்தனின் பற்றாளன் புதுமை எழுத்தாளன்
இராகுல சாங்குருத்தியாயன்!
ஆதிமனிதன் உறவு முறை சொன்னான்!
அடுத்து வந்த நிலை சொன்னான்!
வால்காவையும், கங்கையையும்,
வரலாற்றின் பொறித்து வைத்தான்!
எகிப்தில் ஓடுகின்ற
எழில் கொஞ்சும் இனிய நதி!
நைல் நதி என்ற வரலாற்றுப் பேராறு!
எழிலரசி கிளியோபாட்ரா வாழ்ந்த
வளமிகு மண்ணில் ஓடும் நதி!
உலகப் புகழ் சீசருடனும், அந்தோணியுடனும்
உயிர் கலந்து உறவு கண்ட கிளியோ
கால் நனைத்து முகம் பார்த்த அழகு நதி!
பல்வேறு பண்பாடுகளைக் கண்ட நதி!
பாரோ மன்னர்களின் பிரமிடுகளை பார்த்த நதி!
டைக்கரடிஸ் யூப்ரடிஸ் எனும் நதிகள்
மொசடபோமியாவில் ஓடும் அழகிய நதிகள்!
மங்கோலிய பேரினத்தின் வண்ணம் மஞ்சள்!
மஞ்சளின் பேரால் மாபெரும் நதி ஒடும்
அடிக்கடி அழிவுகளை ஏற்படுத்தும் சோக நதி!
சீனாவின் சோகமென்றே சொல்லும் மஞ்ஞளாறு நதி!
வரலாற்றில் பின் தோன்றிய புது நாடு
வலிமைமிக்க வல்லரசு நாடு
சூரியன் தோன்றுவதும் மறைவதும்
தங்களின் ஆளுமையில்தான் என்று
தம்பட்டம் அடித்த நாடு!
இங்கிலாந்து என்று பெயர் கொண்ட
இனிய தீவின் தலைநகர் இலண்டன்!
இலண்டனின் நடுவில் ஓடும் தேம்ஸ் நதி!
வியத்தகு பாலங்களின் கீழ் விரைந்தோடும்
வேகம் காட்டிய சாதனைகள் கவர்ந்ததுண்டு
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் பெற
சங்க நாதம் ஒலித்த சாதனைத் திருநாடு!
புரட்சியின் வழியாக புதுமை படைத்த நாடு!
பிரான்ஸில் ஒடும் தான்யூப் பேராறு!
அமெரிக்கா, கனடா இடையே
ஓடும் அழகு நிறைந்த அருமை நதி!
அகிலம் வியக்கும் அருவியோடு
ஆவலைத் தூண்டும் நயாகரா நதி!
இந்தியத் துணைக் கண்டத்தில் ஓடும்
பேராறுகளின் பெருமை பல உண்டு!
புனித ஆறு என்று புகழப்படுவதுண்டு!
புண்ணிய ஆறு என்று போற்றப்படுவதுண்டு!
உண்மைதானா என்றால் ஒன்றும் புரிவதில்லை!
கங்கையாறு புனிதம் என்றால் அதில்
செத்த பிணங்கள் மிதந்து வரலாமா?
இமய மலை பனி உருகி ஏற்படும் வெள்ளத்தில்
நீர் நிறைந்து வரும் ஆறுகள் நினைவில் தோன்றும்!
கங்கை யமுனை சரஸ்வதி பிரம்மபுத்திரா
சிந்து சட்லெஜ், ராவி என்று
ஆறுகள் பல ஓடி வளம் பெருக்கும்!
தென்னிந்தியாவில் ஆறுகள் பல உண்டு!
தேனாய் இனிக்கும் நதிகள் சிலவுண்டு!
மகா நதி, கோதவரி, கிருஷ்ணா
கனித் தமிழ் நாட்டில் ஓடும் நதிகள்!
காவிரி தென்பண்ணை பாலாறு
வைகை பொருணையென
ஓடும் நதிகள்!
ஆறுகளைப் பாடியவர்கள் அதிகமுண்டு!
அருந்தமிழில் பாடியதைக் காண்போம்!
வைகையெனும் பொய்யாக் குலக்கொடியை
பரிபாடலும் பிறவும் வாழ்த்துகின்றது!
நடந்தாய் வாழி காவிரி என்றும்
வான் பொய்த்தாலும் தான் பொய்யா
வற்றாக் கருணையென்றும்!
இளங்கோ இனிக்கப் பாடுகிறார்!
காவிரித் தென்பண்ணை பாலாறு
தமிழ்க் கண்டதோர் வையை பொருணை நதி
சீரிய ஆறுகள் பல ஓடி மேனி
செழித்த நல் தமிழ்நாடு என்று
பாரதி பெருமிதம் கொள்கிறார்!
காவிரி மணலிலும் பலவாக
வையை மணல் எண்ணிக்கையிலம் மிகுவாக
வாழ்கவென்றும் வாழ்த்தினார்கள்!
ஆறுகளின் தேவைகளை நாமறிவோம்!
ஆறு தரும் நீரின் நிலை நன்கு அறிவோம்!
ஆற்றோரம் வாழ்ந்திருந்த
அருமைப் பண்பாடுகளைப் புரிந்திடுவோம்!
அண்ணாவின் கருத்தில் கண் பதிப்போம்!
இதயத்தில் பூத்திருக்கும் இனியவனே!
எண்ணத்தில் நிறைந்திருக்கும் ஒளிச் சுடரே!
எங்கும் மணங்கமழுகின்ற எழில்மலரே!
ஆறுகளை ஒருங்கிணைத்து ஆக்கம் பெற
அறிவியல் துணையோடு அணி வகுப்போம்!
செயல் முடிப்போம்! செழுமை பெறுவோம்!

No comments:

Post a Comment