20. உயிர்தந்த உறவின் நிகழ்வு!
உயிர் தந்த உறவே!
ஒளி தரும் சுடரே!
உலகில் தமிழ் செழிக்க
உழைக்க வந்த உணர்ச்சி வடிவே!
உலகம் போற்றும் தமிழின்
ஒலிச் சிறப்பே! கனிச் சுவையே!
தமிழரின் நிலை உயர்த்த வந்த
தங்க மொழியே! சிங்கக் குருளையே!
வரலாற்றை வளம் பெறச் செய்யும்
வண்ணக் கனவே! வானத்து நிலவே!
வாழ்க பல்லாண்டு! வாழ்க! வாழ்க!
அருகிருந்து உனைப் பார்க்கும்
ஆசை ஆர்வம் இருந்தாலும்
அவ்வப்போதே பார்க்கும் நிலை வாய்க்கிறது
ஒரு நிகழ்வின் வழியாக
உனைப் பார்க்கும் நிலை கண்டேன்!
உனதினிய சிறிய தந்தை
உளம் நிறைந்த இதயமாறன்
உருவாக்கிய இனிய நிலை காண
ஓடி வந்தாய் உன் அன்னையுடன்!
ஒளி வீசும் முகம் கண்டு
உவகையில் பூத்திருந்தோம்!
அருள் வழங்கும் விழி கண்டு!
அக மகிழ்வில் ஆழ்ந்திருந்தோம்!
இனியவர் நம் இதயமாறன் தன்
இல்லத் துணைவியை காதலால்
ஈர்த்து வந்து இனிமை தந்தார்
இணைந்திருந்த காட்சி தந்தார்
வாராது வந்த மாமணி போல்
மைதிலியும் வந்தார்
உன் சிற்றன்னையாக!
நிரல்களில்லா நிகழ்வுகளால்
நெருக்கடிகள் தோன்றுவது
இயல்பு தானே!
இதயமாறன் தரப்பினிலே
இடையூறு ஏதுமில்லை.
மைதிலியின் தாய், தந்தையர்
மகிழ்வுடன் இதை ஏற்கவில்லை.
ஆயினும் அவர்களை
வரவேற்று வாழ்த்தும் நிகழ்வு
சீருடன் நிறைவேறி சிறப்புற்றது
சிந்தை மகிழ்ந்தது!
அழைப்பிதழை ஏற்று வந்து
ஆயிரம் பேர் வாழ்த்தினர்.
ஆன்றோர் சான்றோர்
அருமைப் பெரியோரும்
அன்புத் தாய்க்குலமும் வாழ்த்தியது!
கலப்பு மணம் என்று கரித்துக் கொட்டவில்லை
கலி காலம் இதுவென்று யாரும் கூறவில்லை
கலப்பு மணம் இயல்பு என்று
கனிச் சுவையாய் வாழ்த்தினர்
மகிழ்வித்த வரவேற்பால்
மணமக்களும் மகிழ்ந்தனர்
ஊரார் கூடி வந்து பாராட்டினர்
உற்றார் சுற்றம் உறவுகள் வாழ்த்தினர்
நண்பர்கள் நல்வாழ்த்து சொன்னார்கள்
அரங்கில் நிறைந்திருந்த ஆணும் பெண்ணும்
விழியொளியால் வாழ்த்தினர்
மேடையில் வீற்றிருந்தோர்
விழிமொழி தமிழால் வாழ்த்தினர்
அடிநாள் கழகத் தொண்டர்
ஆற்றல்மிகு எழுத்தாளர்
ஆசைகளில்லா அன்புவாணர்
என்றும் தொண்டரான தியாகி
இனியவர் அமுதன் தலைமையேற்று
இயக்கச் செய்திகளை அள்ளி இறைத்தார்
எங்களின் இலட்சிய வாழ்க்கையை
எடுத்துரைத்து சிறப்பித்தார்.
மேடைகளில் வீரக்கனல்
மெல்லிய இதயத்தில் ஈரப்புனல்
மேன்மைசேர் கழகத் தொண்டன்
தென்றல் நடைப் பேச்சாளர்
சீரிய செயல்வீரர்
திசையெங்கும் புகழ் சூடிய
சிறந்த சொற்பொழிவாளர்
மாற்றுக் கட்சித் தோழர்களின்
மனத்திலும் மணப்பவர்
விழி நிறைந்த வி.பி.இராசன்
முன்னிலையேற்று முத்தான தமிழில்
இயக்க வரலாறு சொன்னார்.
நலிந்த மக்கள் நலம் தேடுபவர்
ஒடுக்கப்பட்டோர் உரிமை கேட்பவர்
துணிச்சல் கொண்ட உள்ளம் கொண்டவர்
சகோதரர் தனுஷ்கோடி அவர்கள்
உயிர்தந்த உறவு எனும்
விழா மலரை வெளியிட்டு வாழ்த்தினர்
மைதிலியின் பெற்றோர் மனத்தின்
வருத்தத்தை மாற்றும் முயற்சியில்
மாசற்று ஈடுபட்ட மாமனிதன்
குருதிவழி உறவினர்
கொள்கை வழி நடந்த தோழர்
தொலைநோக்குப் பார்வையால்
ஓங்கி உயர்ந்த உழைப்பாளி
தித்திப்பாய் திகழும் தி.கா. பாண்டியன்
மலர் பெற்று மணமக்களை வாழ்த்தினார்
நல்லவர் காளிமுத்து நன்றி கூற
இனிதாய் நிறைந்தது வாழ்த்தரங்கம்
நேரம் காலத்தின் பேதம் பார்க்காத
பெரியார் உணர்வைப் பெற்ற
பெருமைக்குரிய இதயமாறன்
செவ்வாய்க் கிழமை அன்று தன்
திருமணத்தை நடத்திக் கொண்டார்
நெஞ்சில் மகிழ்வு கொண்டார்
வரவேற்பு விழா அன்று
விருந்தில் பிரியாணியும்,
கோழியும்
வழங்கி மகிழ்வித்தார்
வெள்ளிக் கிழமை அன்று
படைத்த கோழிக் கறியை
விரும்பியே உண்டனர் மக்கள்
விருந்தோடு விடைபெற்றனர்
வாழ்க மணமக்கள் மகிழ்வோடு என்று
அன்னையோடு நீயும் வந்து
அழகு விழியால் வாழ்த்தினாய்
பிரிந்த உறவுகள் மீண்டும்
பேதமின்றி இணைய வேண்டும்
இனிப்பையும் வெல்லுகின்ற
இதயமாறன் மைதிலியின்
இல்வாழ்க்கை நிகழ்வுகள்
இதயத்தை மகிழ்வித்தன!
சுட்டும் விழிச்சுடரே!
சுவை தரும் தேன் கனியே!
எழிலே! எங்கள் உயிரே வாழ்க!
No comments:
Post a Comment