Saturday, 17 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

16. வரலாறு
வழி கடந்த நிகழ்வெல்லாம்
வரலாறு என்கின்றனர்!
வரலாற்றில் வளமும் வறுமையும் உண்டு!
வாய்மையும், பொய்மையும் உண்டு!
வானம் சார்ந்த வரலாறும் உண்டு!
வழுக்கிச் சரிந்ததும் உண்டு!
பொய்மையும் புனை சுருட்டும்
நிறைந்தது நிலவுலக வரலாறு!
ஒவ்வொரு என் அசைவும்
புது வரலாறு படைக்கும் என்றான்
போரில் புலியெனப் பாய்ந்த
புகழ்வீரன் நெப்போலியன்!
ஒரு தனி மனிதனுக்கும் வரலாறு உண்டு!
ஒவ்வொரு துறைகளுக்கும்
வரலாறு உண்டு!
ஊர் நாடு உலகுக்கும் வரலாறு உண்டு!
உள்ளூரின் தெருவிலிருந்து
உலக உச்சி வரை வரலாறு உண்டு!
வரலாற்றைத் திரித்து வடிப்பதும் உண்டு!
வாழும் முறையால் வரலாறு
படைப்பதுண்டு!
சாதனை படைப்பதெல்லாம் சரித்திரத்தில் பதிவதுண்டு!
மன்னர்கள் வரலாறு மலர்ந்திருக்கிறது!
மாண்புநிறை மனிதர்களுக்கும்
மாசற்ற அறிஞர் பெருமக்களுக்கும்
மகத்தான வரலாறு வரையப்பட்டிருக்கிறது!
கலையின் வரலாறு, மொழியின் வரலாறு!
ஓர் இனத்தின் இனிய வரலாறு!
ஏற்றமும் இறக்கமும் கண்டதை
எழுதி வெளியிட்டவர்களும் உண்டு!
வரலாறுகளை வரிசைப்படுத்தி
வகைப்படுத்தினால் வாழ்நாள்
முடிந்து விடும்!
எனக்குத் தெரிந்தததை எழுதிய நான்
இதை சொல்லும் போது இனிக்கிறது!
ஆம்! அண்ணாவை நினைத்து அன்புடன் கூறுகின்றேன்!
ஆர்தெழுந்து பல நிலைகளில்
அருமை வரலாறு கண்ட தமிழர்கள்
அப்பாவியாய் அறியாமையில்
ஆழ்ந்திருந்த நிலை கண்டார் அண்ணா!
அற்புத நூல் ஒன்றைப் படைத்தார்
பணத்தோட்டம் எனும் தலைப்பில்
பண்பட்ட நூலில் பல செய்திகளில்
பயன்பாட்டு வழிகள் சொன்னார்!
மண்ணில் மனிதன் வாழும் வரை
பொருளே ஆதாரம் என்று
புரிய வைத்தார் பேரறிஞர் அண்ணா!
புகழ் வாழ்வில் நிலைத்து நின்றார்!
புது உலகில் பூத்திருக்கும் புகழ் மலரே!
புறப்பாட்டாய் மேவி வரும் புத்தறிவே!
பொருல் வளத்தின் நிறை அறிவாய்!
புதிய உலகில் நீ வளர்ந்து புகழ் செறிவாய்!
வாழ்வாங்கு வாழ்க!

வளம் செறிந்து வாழ்க!

No comments:

Post a Comment