Saturday, 10 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

11. புவியின் புகழ்பாடுவோம்!
கொள்கை வழிக் குடும்பத்தில்
தோன்றிய கொற்கை முத்தே!
கொடி கொண்டு இமயம் வென்ற
கொற்றவர் ஆண்ட மண்ணின்
வற்றாத வளர்நிதியே!
தென்பொதிகை தமிழ் வளத்தின்
குறள்நெறியே குன்றாப் புகழே!
வாழ்த்துகிறேன் அய்யா
வாழ்க நலம்!
பூரிப்பில் புது மலராய்
பூத்து நிற்கும் பூமியின்
புதுமை காண்போம்!
புகழ் பாடுவோம்!
அண்டவெளிக் கோள்களிலே
அற்புதக் கோள் பூமியாகும்!
எங்கெங்கு தேடினாலும்
இது போன்ற இனிய கோள் கிடைக்காது!
பூமியைச் சுற்றுகின்ற எழில் மேகங்கள்
பொழிவு  கண்டு மலர்ந்திருக்கும்
பூ முகங்கள்!
கருக் கொண்டு மழை நீரைப்
பொழிந்துவக்கும்!
காவியங்கள் தோன்றுகின்ற
காட்சி தரும்!
வான் மழையில் மகிழ்ந்திருக்கும்
பூமி மகள்
வாசனையில் திளைத்திருக்கும் ஆசை மகள்!
வான் மழை தந்த வசந்தங்கள்
மனதை மகிழ்விக்கின்றன!
விண்வெளியைச் சுற்றி வந்த
விழிநிறைந்த தித்தோவ எனும் வீரர்
வரைந்தளித்த வாசமிகு நூல் ஒன்றை
எனது நீலப் புவிக்கோலம் என்று
நெஞ்சினிக்க வெளியிட்டார்!
 உலகைச் சுற்றி வரும்போது பார்த்த
 உன்னதக் காட்சிகளை உவந்து சொன்னார்!
என்னஅழகு! எத்தனை எழில்!
இதயத்தை ஈர்க்கும் இனிய காட்சிகள்!
பச்சை பட்டாடை போல் பூமியின் மேனி
பல வண்ணப் புள்ளிகளும் கோடுகளும்
பார்ப்பதற்கு அழகூட்டி பரவசம் தரும்!
ஆறுகளும், ஓடைகளும் அடர்ந்த காடுகளும்
அகம் நிறைந்த காட்சிகளாய் சுகமளிக்கும்!
கடல்களும், தீவுகளின் கண்கவர் காட்சிகளும்
உள்ளத்தை எழில்படுத்தி உவகையில்
ஆட வைக்கும்!
தீபகற்பம் தரும் சிங்காரப் பேரழகு
சிந்தையைக் கொள்ளை கொள்ளும்!
பூமியின் மேலே தொங்கும்
முகில் கூட்டம் தரும் அழகு
பஞ்சோவியமாய் பார்ப்பதற்கு மகிழ்வூட்டும்!
நிலம் செழிக்க நீரிறைக்கும் முகில்கூட்ட
நேர்த்தி கண்டு நெஞ்சம் வியந்து நிற்கும்!
தனிமங்கள் இரண்டு இணைந்தால்தான்
தண்ணீர் எனும் திரவம் பிறக்கிறதாம்!
ஆக்சிசன், øஹ்ட்ரசன் இணைந்ததால்தான்
தண்ணீர் பிள்ளை தவழ்கிறதாம்!
இணைந்தால் ஒன்று பிரிந்தால் ஒன்று
இனிமை இங்கன்றி எங்கே உண்டு!
எக்கோளிலும் இல்லாத இனிய சூழல்
இங்கு மட்டும் என்பது விந்தைதானே!
கடல்கள் ஏழு, கண்டங்கள் ஏழு,
எங்கும் வளர்ந்தோங்கிய மரக் கூட்டங்கள்
நூறு வகைப் பறவைகள், விலங்குகள்
கோடி வகைப் பூமலர்கள்!
ஆங்காங்கே ஆறுகள், தேக்கங்கள்!
எங்கெங்கும் எழில்சிந்தும் பொழில்கள்!
தென்துருவம், வட துருவம் என
பனி படர்ந்தடர்ந்த பசுமை நிலம்!
பனி நிலத்தில் வாழ்கின்ற
பல உயிர்கள்!
பார்ப்பதற்கு இனிப்பூட்டும்
பெங்குயின்கள்!
அடர்ந்து அழகு தரும் அமெரிக்க ரஷ்ய
ஆப்பிரிக்க பெருங்காடுகள்!
காடுகளில் வாழ்கின்ற கலை வடிவ
பறவைகள், விலங்குகள், மலர்கள்!
பார்ப்பதற்கு எழிலூட்டும், மகிழ்வூட்டும்!
பல்சுவை உணர்வு தந்து பரவசம் காட்டும்!
பாசமிகு உணர்வுகளும் பந்தங்களும்
பகை உணர்வும் பயந்த கிலியுணர்வும்
இயற்கையின் இரு வேறு நிலைகள்
எங்கெங்கும் ஆட்சி செய்கின்றன!
இடம் விட்டு இடம் சென்று இரை தேடும்
இடர்பாடும் வேதனையும்!
உயிர் வாழ்வுக்கு உணவு தேடும் சூழலில்
உயிரை விடும் சோகக் காட்சிகள்!
இனிமையும், கடுமையுங் கொண்ட
இயற்கையின் தட்ப வெப்பம்
எரிதனலாய் கொடுநிலை காட்டும்
தீயிலிருந்து விடுபட திசை மாறிச் சென்றால்
கொடுமழையும் பேராறுகளும்
கொல்வதற்கு முனையும்!
ஈதென்ன கொடுமையென்று
எதிர்த் திசையில் சென்றால்
குளிர்பனி கொடூரம் காட்டும்
எழிலார்ந்த இனிய மண்ணில்
இத்தகைய கடும் நிலைகள்
இருப்பினும் இயற்கையின் இயக்கம்
இனிமை தரும் அன்பினை விதைத்தது!
எழிலும், அழகும் காட்டி
இன்பத்தை பயிர் செய்தது!
உயிரியக்கம் உடல்களில் பலவாக
உணர்வுகள் வேறு வேறாக
உயர்வகைக் கலை போல ஒளியூட்டியது!
இரவென்றும், பகலென்றும்
இயற்கையின் எதிர்வினைகளும்!
இளமதி, வளர்மதி, முழு மதி என
இரவில் ஒளிகூட்டும் இனிய நிலா!
இளங்காலை இனிய பரிதியும்
மாலை மஞ்சள் மதியமும்
வளர்ச்சிக்கு வலிவூட்டும் பகல் ஒளியும்
நாளும் பூமியை நலம்பெறச் செய்யும்!
நயத்தகு செயல் வடிவக் காட்சிகள்!
புவியகத்தின் புரியாப் புதிர்கள் என்ற
புவியின் இயற்கை நிலை சொல்லும்
இனிய நூலொன்று இதயத்தில்
இன்றும் எழிலூட்டி மகிழ்விக்கின்றது
பூமிக்கடியில் நிகழ்வது என்னவென்று
புரிய வைத்து மகிழ்வூட்டும் புதுமை நூல்!
நாம் வாழும் நல்ல பூமியின் கீழ்
நாளெல்லாம் தீ எரிந்து கொண்டிருக்கும்!
தீயின் நடுவில் மின்காந்த அலைகள் மோதுகிறது!
இரு துருவங்களுக்கிடையில் நீண்டு
நின்று வினையாற்றி வியப்பூட்டுகின்றது!
வானத்தில் மின்னல் ஒளிர்ந்திட
வழி செய்வதும் இந்த மின் காந்த அலைகள்தான்!
பூமியில் மேல் ஒடு, உள் ஓடு என்று
வட்ட வடிவத் தட்டுகள் சுழல்கின்றன!
வட்ட வடிவத் தட்டுகள்
வலம் வரும் போது
ஏற்படும் இடர்ப்பாடுகளால்தான்!
நில நடுக்கம் குலை நடுங்கச் செய்கிறது
நெஞ்சில்லா சுனாமிகள்
நிலைகுலையச் செய்கிறது!
இத்தனைக்கும் இடையில் பூமியில்
எழில் மிளிர்கிறது - இனிக்கிறது!
காணும் இடங்கள் கலை வடிவம் காட்டுகிறது!
கடுங்குளிர், கடும் வெயில் நிலை கூட
கண்ணுக்கு விருந்தளிக்கிறது!
காட்சியாய் எழிலூட்டுகிறது!
நூற்றுக்கும் மேற்பட்ட பெருகி வரும்
பேராறுகள் பேருவகை அளிக்கிறது!
நானூறு கோடி ஆண்டுகள் முன்னே!
சூரிய உதிர்ப்பிலே பூமி உருவம் கண்டது!
நெடுநாள் நெருப்புக் கோளமாகவே
நின்று நிலவித் தன் நிலை மாற்றியது!
உயிர்கள் வாழ்வதற்கு உகந்ததானது!
ஒன்று பலவாக உயிர்ப்பித்தது!
ஒளிச் சேர்க்கையால் பொருள்களில்
உயிர்த்துடிப்பு தோன்றி உலா வந்தது!
உலகம் ஒளிரும் ஓவியமானது!
உருவ அழகு ஒன்றையொன்று ஈர்த்தது!
வியப்புக்குறிகள் வினோதம் காட்டியது!
பற்பல வடிவங்கள் பல்கிப் பெருகி பயன் தந்தன!
எழிலே! அழகே! இதய இனிமையே!
பூமியைப் புதுமை என்றான் ஒரு புலவன்
பூமியைத் தாய் என்றான் இன்னொருவன்!
பூமியைப் புனிதம் என்றான் வேறொருவன்!
புனிதம் என்பதற்கு புளுகு மொழிகள் உண்டு!
பொருள் தெரியாது சொல்வோரும் உண்டு!
உயர்வு என்ற பொருளை நாம் கொள்வோம்!
பூமி தோன்றிய நாளிலிருந்து
புதுமைகளைப் பூண்டு மகிழ்கிறது!
உலகமென உருண்டு வரும் பூமி!
உயிர்தோன்றும் உன்னத நிலம்தானே!
ஈரேழு உலகம் என்றும் இன்னும் பலர்
இனிய கொடிய உலகமென்றெல்லாம்
உளறுவார் கழறுவார் ஊருக்க உரைப்பார்!
உண்மையென ஓராயிரம் சொல்வார்!
அறிவால் ஆய்ந்திடுவோம்!
பூமி இதுவொன்று புரிந்திடுவோம்!
புதுமைகள் செழிப்பதற்கு பணிபுரிவோம்!

பூமியின் புகழ் பாடுவோம்

No comments:

Post a Comment