Monday, 26 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

22. எழில் வாழும் கலைக்கூடம்
உயிர் தந்த உறவே!
உறவாக வந்த மகிழ்வே!
உருவில் ஒளிரும் நிலவே!
உலகு செழிக்க வந்த அருளே!
உண்மைக்கு நிழல் தரும் தருவே!
உலகம் வளர உன் அறிவு
உவந்து செழிக்கட்டும்!
வாழ்த்துகிறேன் உன்னை
வளமனைத்தும் சிறந்திட
உயிர் தந்த உறவின் நிகழ்வில்
உளம் குளிரப் பார்த்த உன்னை
ஒரு திங்கள் கழித்தே
கோவையில் உனைப் பார்த்தோம்
முகத்தில் ஒளிரும் முறுவலின் தோற்றம்
முறுக்கும் உடலில் முகிழ்திடும் உறுதி
பார்த்திடும்போதே பரவசமடைந்தோம்
திரவ உணவில் தித்தித்த நீ
திட உணவுண்ணும் பேரழகு கண்டோம்
திறம்பெற்று வளர்ந்திட வாழ்த்தினோம்
வளம் சிறந்து நீ வளர்ந்திடும்
வாசமிகு இல்லத்தை
வட்டமிட்டு நோக்கியது மனம்
அருமைமிகு அறிவியல் தந்த
ஆக்கமிகு பொருள்களை
அடைத்து வைத்த கூடு கண்டோம்.
அறிவூட்டும் நூல்களின் பேழை கண்டோம்.
அறைகளில் நிறைந்த ஆடைகளும்
ஆற்றமிகு கணினி கண்டோம்.
சுவைமிகு உணவு தரும்
தூய சமையல் அறை
உண்பதற்கும் ஒரு மேசை இருக்கைகள்
உறங்குதற்கோ கட்டில் மெத்தையுடன்
குளிர்தரும் புதுமைக் கருவி
எழில் வாழும் கலைக் கூடம்
இதயத்திற்கு இனிப்பூட்டியது.
காலையில் நீ விழித்த போது
கண் மலரில் கதிரொளி விரிந்தது.
கையசைவில் கலைகளின்
கவின்தோற்றம் தெரிந்தது.
தூக்கி உனைக் கொஞ்சும் போது
துள்ளி மிதித்த கால் மலர்கள்
துன்பத்தைப் போக்கியது
வில்லிலிருந்து விடுபட்டு
வெற்றி குவிக்கும் கணை போல
வேகம் உடலில் வெளிப்பட்டது.
உயர் கல்வி கற்றவர்கள்
உனதினிய அன்னை தந்தை
அறிவின் வகை கூறும் பொருளியல்
ஆக்கம்தரும் வணிகம் பொறியியலில்
ஆளுமைப் பட்டம் பெற்றவர்கள்
உலகை உணர்ந்துவக்கும்
உயர் அறிவின் உறவினர்கள்
உனை வளர்க்கும் வழிதனை
உறுத்தாகவே கற்றிருப்பர்.
உலகில் உன்னை உயர்த்துவதற்கு
ஒவ்வொரு நொடியும் உழைத்திடுவர்
ஓரோராயிரம் செய்திகளை
உன்னிலே பதிவு செய்வர்.
விந்தை நிறை விஞ்ஞானம்
விழைத்திட்ட நன்மைகளை
விளங்க வைத்து உயரச் செய்வர்.
நாளும் நாளும் விளைகின்ற
நலம் தரும் கருத்து கருவிகளை
கண்களிலே நிறுத்தி வைத்து களித்திருப்பர்.
உன் உயர்வா? உறவுகளா? என்றால்
உறவுகளை உதறிவிட்டு
உன் உயர்வில் கண் பதிப்பர்.
கண்களில் கலை எழில் தோன்றுதற்கு
காட்டும் பொருள்களில் கவனம் வைப்பர்.
அழகொளிரும் பொருட்களையும்
அறிவூட்டும் பொறிகளையும்
அருகினிலே குவித்து வைப்பர்.
வளர்ந்து வரும் நாட்களிலே
வளமான நிலை காண
வழிகாட்டி மனம் மகிழ்வர்
வற்றாத பொருள் வளத்தை
வழி வழியாய்ப் பெறுவதற்கு
வகை கூறி வாழ்த்திடுவர்!
எழிலே! நீ ஏற்றம் பெற
எண்ண வேண்டுமென்று
எந்நாளும் நினைத்திருப்பர்.
விழிகளிலே நிறைந்திருக்கும்
விஞ்ஞானம் நமக்களித்த
நேசமிகு நல் நிலைகளை
நெஞ்சிலே பதிய வைப்பர்
கொஞ்சும் எழிற்தமிழை
குருதியிலே நிறைத்து வைத்து
கொள்கை வழி நடத்திடுவர்.
எல்லாமே உன் இல்லத்தில்
எந்நாளும் நிறைந்திருக்கும்
எழிலே! இருப்பினும் ஓர் காட்சி
இதயத்தை அழுத்துதய்யா!
இல்லத்தில் ஓரிடத்தில் வழிபடும் இடம் ஒன்று
வண்ண ஒளி காட்டுதய்யா!
வழிபடும் உருவங்களில்
கோரக் காட்சிகள் தோன்றுதய்யா!
மனித உடல் யானைத் தலை
மயக்கத்தை ஊட்டுதய்யா!
நாகரீக உருவத்துக்கு
நான்கு கைகள் உள்ளதய்யா!
நடிகைகள் தோற்றத்தில்
தெய்வங்கள் தெரியுதய்யா!
ஆடை அணிகலன்கள்
ஆரவாரம் காட்டுதய்யா!
நலிந்தோருக்கு அருள்சுரக்கும்
நல்ல தெய்வங்களிடம்
நகைக் கடைகள் தெரியுதய்யா!
அறிவு, ஆய்வுக்கு எதிரான
ஆரிய வழிக் கடவுளெல்லாம்
அறிவாளர் வீட்டில் இருக்குதய்யா!
பகுத்தறிவு நெறி சார்ந்த
பண்பாளர்தான் உன் தந்தை
ஆய்வு நெறிகளிலே மனத்தை
ஆழப் பதித்தவர்தாம்.
பெரியார் உணர்வுகளில்
பேரன்பு கொண்டவர்தாம்.
மாசற்ற கருத்துகளின்
மறுபதிப்பு உன் தந்தை.
இருப்பினும் இதிகாசக் கடவுளரை
இல்லத்தில் அனுமதித்தார்
உன் அன்னை மனம் விரும்பியதால்,
கணவனைப் பிரிந்த கண்ணகி
துயருற்ற நேரத்திலும்
அருள் தேடி ஆலயம் செல்லவில்லை.
துன்பங்கள் அகல துணை தேடி
அம்மன்களை வணங்கவில்லை.
கணவன் இருக்க கடவுளை வேண்டுவது
கற்புக்கு பீடு அன்று என்று உரைத்தாள்.
பெண்ணினத்தின் கற்புக்கு
பெருமை சேர்த்தால் கண்ணகி.
கனல் மூட்டி கொடுமையை எரித்து
பத்தினித் தெய்வமானாள்.
தமிழ் நிலத்தில் உறைந்திருக்கும்
தலைசிறந்த பெண் தெய்வங்கள்
கண்ணகியின் வடிவங்கள்தான்.
எதிர்காலத் தமிழ் அன்னையர்கள்
கண்ணகியின் வழி நடப்பர்
கற்பின் பெருமை சொல்லி
கனித்தமிழ் போற்றிடுவர்
காவிய நெறி உணர்ந்து
காலத்தை வென்றிடுவர்.

No comments:

Post a Comment