Wednesday, 7 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

8. காற்றின் பயன்பாடு
செந்தமிழே செஞ்சுடரே!
சிந்தை இனிக்கும் தீங்கனியே!
செம்மை மறவர் வழி வந்த
சீர் மரபே! பூந்தளிரே!
செம்பவழ இதழ்விரித்து
சிந்தையள்ளும் பேரழகே!
சிந்தனைச் சுரங்கமே!
சித்திரக் கூடமே!
வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு!
ஒளிபற்றி அறிந்ததை உரைத்தேன்!
காற்றின் ஆற்றலை கழறுவேன் கேளாய்!
ஒளிதான் பொருட்களின்
ஊற்றுக்கண் என்றாலும்
உயிரூட்டுவது காற்றுத்தான்!
காற்றின் வடிவம் பலவாகும்!
மெள்ளத் தழுவி சுகம் தரும் தென்றல்!
அள்ளி அடித்து அலைமோதி
அலங்கோலம் செய்யும் புயல்!
சுற்றிச் சுற்றி அடித்து தூசி கிளப்பும்
சூறையெனும் கொடுமை காற்று!
வடக்கிலிருந்து வந்து வந்து
வருந்தச் செய்யும் வாடைக் காற்று!
கிழக்கிலிருந்து மழை தரும் சீர்காற்று கொண்டல்!
மேற்கிலிருந்து போர் தொடுக்கும் கோடை!
தெற்கிலிருந்த வரும் தென்றலென
காற்றுக்கும் பெயரிட்டு களிப்புற்றான் தமிழன்
கடலில் தோன்றும் காற்று தான்
கலை வடிவ மூச்சுக் காற்றாகிறது!
உள்ளிழுத்து வெளியில் விடும்
உயிர்க்காற்று உண்மையாகும்!
மழை கொண்டு வருவதும் காற்று தான்!
மனிதர் முதல் அனைத்தையும்
வாழ வைப்பதும் காற்று தான்!
பறவைகள் பறப்பதற்கு
பயன்படுத்துவதும் காற்று தான்!
தீயின் ஆற்றலை தெரிவிப்பதும்
காற்று தான்!
செழுமை தருவதும் காற்று தான்!
ஓசை, ஒலி, இசை, பாடல்
எல்லாமே காற்று தான்!
ஒளிபோல ஓயாது பணியாற்ற
காற்றையும் ஏவியது இயற்கை!
எங்கெங்கும் நிறைந்து எழில் தந்தது காற்று!
காற்றில்லையென்றால் சூட்டில்
கருகி விடும் பொருட்கள்!
தென்றலெனும் மென் காற்று
தென் தமிழர் சொத்தாகும்!
தமிழர் மண்ணில்தான் அது கருவாகிறது!
அண்டார்டிகா அருகிலிருக்கும்
இலமூரியாவில் தான் தழைக்கிறது!
பனியின் குளிரெடுத்து பாரெல்லாம்
பரவி நலமளிக்கிறது தென்றல்!
காற்றில்லையென்றால் கண்மணியே
இசையில்லை, கலையில்லை!
இதய இயக்கமே இல்லையென்பேன்!
புதுமை சமைக்கும் தனிமங்களை
பொருள்களில் புகச் செய்வதும் காற்றுதான்!
காற்றைத் தூது விட்டான் ஒரு கவிஞன்!
கவிதையில் பெருமை சொன்னான் இன்னொருவன்!
மூச்சிழுப்போர் முகவரியே காற்றுதான்!
கோடை காலத்தின் கொடுமைகளில்
குளுமையூட்டி கொஞ்சுவதும் காற்றுதான்!
கடுங்கோடையில் காலைக் காற்று குளிர் கொடுக்கும்!
மாலைத் தென்றல் மனதிற்கு மகிழ்வூட்டும்!
கடும் புழுக்கத்தில் கண் விழித்து
காத்திருப்போர் கடற்காற்று இரவில் வர
கண் துஞ்சி களித்திருப்பர்!
காற்று தன் கரம் நீட்டி மேகத்தைத் தழுவி
கன மழையை பிரசவித்து பெருமை கொள்கிறது!
உலகை உலா வரும் காற்று
ஒளிக்கும், மழைக்கும் உறுதுணையாகிறது!
அலைகளில் தவழும் காற்று அருமையானது!
மரங்களில் இழையும் காற்று மாசற்றது!
இயற்கைக்கு இனிமையூட்டும் இசைக்காற்றை
எழில்மிகு ஏற்றத்திற்கு இசைய வைக்க
எழுந்தனர் ஆற்றல்மிகு அறிஞர்கள்!
ஆங்காங்கே ஆய்வுகள் தொடங்கின!
அருமைமிகு இந்த இனிய ஆய்வை
அய்ரோப்பிய அறிவாளரும்!
அமெரிக்க அறிஞர்களுமே செய்தனர்!
காற்றின் அசைவை, இயல்பை!
கண்ணுங்கருத்துமாய் கவனித்தனர்!
இதயத்தை இயங்கச் செய்யும்
இனிய காற்றை இன்னும்
பயன்தரும் வகையில் பயன்படுத்த ஆய்ந்தனர்!
காற்றின் ஆற்றலை, வேகத்தை
கணித்து செயல்புரியத் தொடங்கினர்!
இயற்கை எத்தனை வகைகளில்
இயக்கிக் காற்றை எழில்படுத்துகிறது!
பேய்க்காற்று, பெருங்காற்று, பேதமில்லா
மென்காற்று, வடகாற்று, வாடைக் காற்று!
வாசமிகு பூங்காற்று, ஊளையிடும் ஊதக்காற்று
பூமியைச் சுற்றி வரும் புதுக்காற்று!
காற்றை அளந்து நிறுத்து
கருவிகளுக்குள் புக வைத்து
தேவையை நிறைவு செய்யும்
தேனான நிலை கண்டனர்!
அறிவியல் மேதைகளின்
ஆய்வக முடிவுகளில்
அற்புத நிலை தோன்றியது!
பயணம் செய்வதற்கு பல காலம்
விலங்குகள் மீதேறி விரைந்தனர்!
உருண்டோடும் வண்டிகளில்
ஊர்களுக்குச் சென்று வந்தனர்
உருளைக்குள் காற்றடைத்து ஓடுகின்ற
முறை காண உழைத்தனர் அறிஞர்கள்!
நெகிழ்வான பொருளுக்குள்
நேர்த்தியான காற்றடைத்து
கடினமான பொருளுக்குள்
காற்றுப் பையை பொருத்தி வைத்து
ஓடுகின்ற முறை கண்டு
உலகத்தை மகிழ்வித்தனர்!
காற்றால் இயங்கும் கருவிகளையும்
காற்றை இயக்கும் பொறிகளையும்
கண்டார்கள் காலத்தை வென்றவர்கள்!
விஞ்ஞான வளர்ச்சியிலே
விதவிதமான கருவிகளால்
விரைந்தோடும் நிலை கண்டனர்!
பேருந்து சரக்குந்து மகிழுந்து
மூடுந்து, துள்ளுந்து, சீருந்து, சிற்றுந்து,
தானி என்று வண்டிகள் பெருகி
வளமூட்டுகின்றன!
காற்றைப் பயன்படுத்தும் கன ரக வாகனங்கள்
கவலையை மாற்றுகின்ற
கலை வடிவங்கள்!
வெப்பக் காற்று!
வீசுகின்ற குளிர் காற்று!
வேகமான காற்றையெல்லாம்
தேவைக்குப் பணி செய்யும்
தேர்ந்த நிலை கண்டனர்!
காற்றில் கலந்திருக்கும்
கடும் வெப்பத்தைப் பிரித்தனர்
கவினுறு ஏர்கண்டிஷன் கண்டனர்!
வெப்பத்தை விரட்டுவதற்கு
விசிறிகளைப் படைத்தனர்!
வானத்தில் பறப்பதற்கும்
வளமூட்டும் காற்றெடுத்து
வாகனங்கள் செய்தனர்!
வானூர்திகளில் வகை பல கண்டனர்!
காற்றையும் விஞ்சுகின்ற
வானூர்திகள் வலம் வந்தன!
வட்டமிடும் பறவைகள் போல்
வாகனங்கள் பறந்தன வானில்!
சீதனங்கள் ஆகி செம்மை தந்தன!
காற்றில் இயங்குகின்ற பல வகை
கலைப் பொருட்கள் குவித்தனர்!
உலா வந்து உலகத்தை வாழ்விக்கும்
உன்னத் திருக்காற்றை,
தனக்கு உழைப்பதற்கு ஆணையிட்டனர்!
அறிவின் எழுச்சியால், ஆய்வின் வளர்ச்சியால்
அற்புத நிலை கண்டான் மனிதன்!
எழிலோடு இருப்பதற்கும்
குளிரோடு கலப்பதற்கும்
இயந்திரங்கள் கண்டான் மனிதன்!
காற்றுள்ள போது தூற்று என்ற
கவின்தமிழ்ப் பழமொழியை
நிலைநாட்டினார்கள், மகிழ்வூட்டினார்கள்!
சீரோடு இருப்பதற்கும், சிறப்போடு
வாழ்வதற்கும் செழுமை கண்டான் மனிதன்!
அறிவின் வழி நின்று
ஆய்வக முறை கண்டு
அருமைக் கருவிகளை ஆக்கி
வைத்தான் மனிதன்!
கற்பனைக்கு வடிவம் தந்து
கலைகளுக்கு ஆக்கம் தந்து
கருவிகளைக் கண்டளித்தான்!
உயர்ந்த உயிர் காற்றை
உழைப்பதற்கு உத்தரவிட்டான்!
எஜமானனை ஏவலாளியாக்கும்
புதுப்புரட்சி கண்டதாலே
பூரித்து நிற்கின்றான்!
காற்றையும் கடந்து செல்லும்
கருவிகள் கண்டதாலே
களிப்புற்று மகிழ்கின்றான்!
இயந்திரப் புரட்சியினால்
ஏற்றம் கண்டது உலகம்!
எழில் வாழ்வை பெற்றது உலகம்!
மாசற்ற அறிஞர்களால்
மணம் சூழும் வளர்ச்சி கண்டது!
இருப்பினும் இயந்திர உலகில் கேடுகளும்
இணைந்தே வளர்ந்தன!
இது இயற்கையின் நிலை என்றாலும்
இதயம் ஏற்கும் நிலை அல்ல
மாசறு பொன்னாய் மலர்ந்த
மாண்புறு தென்னவனே!
நெல்லும் உயிரென்றே
நீரும் உயிரன்றே!
மன்னன் உயிர்த்தே
மலர்தலை உலகமென்ற!
மங்காச் சங்கக் கவிதை
உன் காலத்தில் நிலை பெற
ஊறு இல்லா நிலை காணட்டும்!

உலகம் தழைக்கட்டும்!

No comments:

Post a Comment